இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1258பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1258)

பொழிப்பு: நம்முடைய பெண்மையின் நிறையை அழிக்கும் படையாக இருப்பது, பலமாயங்களில் வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அல்லவா?மணக்குடவர் உரை: பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ நமது பெண்மையை அழிக்குங் கருவி?
இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?
(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பல பொய்மொழிகள் பேசுவதில் வல்ல காதல் கள்வனின் பணிவான இனிய மொழியன்றோ நம் பெண்மையிற் சிறந்த மனத்திண்மையுடைய (நிறையை) உடைத்தெறியும் படைக்கருவியாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நம் பெண்மை உடைக்கும் படை பல் மாயக் கள்வன் பணிமொழியன்றோ?


பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ:
பதவுரை: பன்மாய-பல வேடங்கள் புனைய வல்ல; கள்வன்-திருடன்; பணிமொழி-தாழ்ந்த சொல்; அன்றோ-இல்லையா.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலபொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ;
பரிப்பெருமாள்: பலபொய்களையும் வல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ;
பரிதியார்: பலபல மாயத்தை உள்ள கள்ளனின் மெத்தென்ற வார்த்தையன்றோ;
காலிங்கர்: தோழி நின்மாட்டு அன்பு பெரிது உடையேன்; அருளும் நீங்கேன்; நின்னிற் பிரியேன்; பிரியேனும் ஆற்றேன்; புறத்து உடம்பு இரண்டு அல்லது அகத்து உயிர் ஒன்றென வஞ்சனை பலவும் வகுத்து உடன்படுத்து எம்கவின் திறம் முழுதும் கவர்ந்த கள்வன் பண்புற மொழிந்த பணிமொழி அன்றோ;
பரிமேலழகர்: (இதுவும் அது.) பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?
பரிமேலழகர் குறிப்புரை: 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக்கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக்கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பன்மாயக்கள்வன' என்றாள். பணிமொழி - தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள்.

'பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'பணிமொழி' என்றதற்குத் 'தாழ்ந்த மொழி' என்று மணக்குடவரும் 'மெத்தென்ற வார்த்தை' என்று பரிதியாரும் 'பண்புற மொழிந்த பணிமொழி' என்று காலிங்கரும் 'தாழ்ந்த சொற்கள்' எனப் பரிமேலழகரும் பொருள் தந்தனர். இதற்குத் தனது சிறப்புரையில் 'தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள்' என்று பரிமேலழகர் விளக்கம் தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பசப்புடைய காதலனது தாழ்ந்த மொழியன்றோ', 'மிக்க ஓரவஞ்சகனாக (மறைந்து நின்று பாணம் விடும்) கள்ளானாகிய மன்மதனுடைய கட்டளையல்லவா', 'பல சூழ்ச்சிகளையுடைய உள்ளங்கவர் தலைவனுடைய பணிவான இனியமொழி', 'பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பசப்புடைய உள்ளங்கவர் கள்வரான காதலரின் மென்மையான இனிய சொற்கள் அல்லவா என்பது இப்பகுதியின் பொருள்.

நம் பெண்மை உடைக்கும் படை:
பதவுரை: நம்-நமது; பெண்மை-பெண்தன்மை; உடைக்கும்-கெடுக்கும்; படை-கருவி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நமது பெண்மையை அழிக்குங் கருவி?
மணக்குடவர் குறிப்புரை: இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: நமது பெண்மையை அழிக்குங் கருவி?
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது 'அன்பில்லாதானை நினைத்து யான் சொன்ன மாற்றத்திற்கு மாறுபடக் கூறுதல் பெண்மையல்ல' என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது.
பரிதியார்: என் பெண்மைப் படையை ஓடவெட்டும் படை என்றவாறு.
காலிங்கர்: நம் பெண்மையை உடைக்கும் கருவி என்றவாறு.
பரிமேலழகர்: நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை;
பரிமேலழகர் குறிப்புரை: பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாயது ஒழியுமோ'? என்பதாம்.

நமது பெண்மையை அழிக்குங் கருவி என மற்ற தொல்லாசிரியர்கள் கூற பரிமேலழகர் நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை என்று உரை எழுதினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்பெண்மைக் கதவைத் தகர்க்கும் படை', 'என்னுடைய நிறையை உடைக்கும் (கோடாரி) ஆயுதம்?', 'நம்முடைய நிறையைத் தகர்க்கும் ஆயுதமாக இருக்கின்றதல்லவா?', 'நம் பெண்மைத் தன்மையைக் கெடுக்கும் கருவி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நமது பெண்மையின் மன உறுதியை அழிக்குங் கருவி என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
பலவேடங்கள் புனையவல்ல உள்ளங்கவர் கள்வரின் இனிய மொழி அல்லவா நம் பெண்மையை உடைக்கின்ற கருவியாயிற்று.

பசப்புடைய உள்ளங்கவர் கள்வரான காதலரின் மென்மையான இனிய சொற்கள் அல்லவா நமது பெண்தன்மையை அழிக்குங் கருவி என்பது பாடலின் பொருள்.
'பன்மாயக் கள்வன்' யார்?

பணிமொழி என்ற சொல்லுக்குப் பணிந்து கூறும் இன் சொற்கள் என்பது பொருள்.
அன்றோ என்ற சொல் அல்லவா என்ற பொருள் தரும்.
நம் பெண்மை என்ற தொடர் நமது பெண்தன்மை எனப்பொருள்படும்.
உடைக்கும் படை என்ற தொடர்க்கு அழிக்கும் கருவி என்று பெயர்.

கள்வர் அவர்! எத்தனை நாடகம் ஆடுகிறார்! கொஞ்சிப் பேசும் அவரது பணிவு மொழி என்ற கருவி அல்லவா நம் நாண்கொண்ட பெண்தன்மையைத் தகர்த்தெறிவது ?

அயல் சென்றிருந்த தலைவன் நெடுங்காலம் ஆகியும் இன்னும் திரும்பி வரவில்லை. பிரிவின் வேதனை தாங்கமாட்டாமல் காதலி துயருறுகிறாள். அது சமயம் பிரிவிற்கு முன்னர் நிகழ்ந்த புலவிக் காட்சிகள் அவள் நினைவுக்கு வருகின்றன. காதலனுடன் பிணங்கியிருக்கும் சமயங்களில் வழக்கமாக தலைவி 'அவன் வந்தால் புலக்கவேண்டும்; அவனோடு பேசவும் மாட்டேன்; அவன் முகத்தைப் பார்க்கவும் மாட்டேன்; யார் வந்து யாது கூறினும் அதனைக் கேட்கவும் மாட்டேன்; அவன் என்ன சொல்லினும், எது செய்யினும் புலவி நீங்கேன்' என்று எண்ணிக் காத்திருப்பாள். காதலன் அவள் முன்வந்து தோன்றுவான். தன்மீது பிணக்கம் கொண்டுள்ளாள் என்பதறிந்து அவளை ஆட்கொள்ளும் நோக்கில், காதற்பெண்ணிடம் தன் ஆண்மையை ஒப்படைத்துவிட்டான் போல நடந்துகொள்கிறான். வஞ்சனை பலவும் வகுத்து அவள் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் வித்தகனாகிறான். மண்டியிடுகிறான்; அவளினும் தான் அன்பு மிகுதியுடையான் போலக் குழைந்து பல இனியமொழி பேசுகிறான். பணிந்து கெஞ்சும் நோக்கில் அவளை மகிழ்விக்கிறதான மெய்யானதும் பொய்யானதுமான செய்திகளைச் சொல்கிறான். இப்பொழுது காட்சி மாறுகிறது. அவள் சினம் மறைகிறது. நாணமுள்ள அவளது பெண்தன்மை காமத்துக்கு அடிமையாகிறது. தலைவி அவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுகிறாள்.
அவன் வஞ்சகமாக நடந்து கொண்டவற்றையும் அவன் பேசிய பணிமொழியையும் தான் பெண்தன்மை இழந்ததையும் வெளியே சொல்கிறாள். இவ்வாறாக தலைவி தன் நிறை இழக்கிறாள்.

தன்னிடம் ஊடல்கொண்டு காதலி விலகிநிற்கும்போது காதலன் எதிர்த்து அடக்கி வெல்ல முயல்வதில்லை; ஆனால் பணிந்து தோற்க முன்வருவான். ஆனால் தலைவி நாண்கொண்ட தன் பெண்தன்மையை இழந்து அவனிடம் அடைக்கலமாகிவிடுவாள். குற்றம் கண்டு ஊடிய காதலியின் நெஞ்சமே கசிந்து உருகுகின்றது காதலனுக்காகப் பல வகையில் தளர்ந்து நெகிழ்ச்சியுறுவுதே அவள் இயல்பாகும். அதுவேளை பெண்மையின் நாணத்தைத் தகர்த்து வென்று விடுகின்றான்.

இப்பாடலிலுள்ள ‘பெண்மை’ என்ற சொல்லுக்கு நிறையுடைமை எனப் பொருள்கொண்டு 'பெண்மைக்கு பெருமை தருவது நிறை; அதை உடைக்கும் கருவி மாயங்கள் செய்து தலைவியை மயக்கிய தலைவனது இனிய சொற்கள்' என இக்குறட்கு உரை கூறினர். ஆனால் உரிமையுள்ள கணவனிடம் எப்படி ஒரு பெண் நிறை இழக்க முடியும்? இவ்வதிகாரத்துள்ள நிறையழிதல் என்பதற்கு 'நிறையழிதலாவது வேட்கை மிகுதியால் தன் நிலை யழிந்து தலைமகள் கூறுதல்' என்று மணக்குடவரும் 'தலைமகள் மனத்து அடக்கற்பாலனவற்றை வேட்கை மிகுதியான் அடக்க மாட்டாது வாய்விடுதல்' என்று பரிமேலழகரும் அதிகாரவிளக்கத்தில் கூறியுள்ளனர். அதாவது தலைவி வெளிஉலகத்து மாந்தரிடம் தனது காதல் செய்திகளைக் கூறுதலே நிறையழியதலாம். ஆதலால் பெண்மை என்றதற்கு நிறையுடமை எனக் கொள்ளாமல் இங்கு பெண்தன்மை எனப் பொருள் கொள்ளப்பெற்றது.

'இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் நம் பெண்மையைக் கெடுக்கின்றது: அல்லது கெடாதென்று தலைமகள் கூறியது' என்று மணக்குடவர் காட்சிப் பின்னணி கூறினார்.
இப்பாடலுக்கும் மற்றும் இவ்வதிகாரத்து மூன்று குறட்பாக்களுக்கும் (1257,1259,1260) பரிமேலழகர் 'பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிதலாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது' என்று தலைவன் பரத்தை இல்லிலிருந்து வருவதாகச் சூழல் அமைக்கிறார். பரத்தையர் பிரிவு குறளில் எங்கும் கூறப்படவில்லை என்பதால் இவரது உரை ஏற்கக்கூடியதல்ல.

'பன்மாயக் கள்வன்' யார்?

'பன்மாயக் கள்வன்' என்ற தொடர்க்கு பலபொய்களையும் பேசவல்ல கள்வன், பலபொய்களையும் வல்ல கள்வன், பலபல மாயத்தை உள்ள கள்ளன், வஞ்சனை பலவும் வகுத்து உடன்படுத்து எம்கவின் திறம் முழுதும் கவர்ந்த கள்வன், பல பொய்களை வல்ல கள்வன், பலவிதமான மாயங்களைச் செய்து மயக்கும் காதலன், பசப்புடைய காதலன், பல பொய்மொழிகள் பேசுவதில் வல்ல காதல் கள்வன், மிகுந்த மாயக்காரத் திருடன், பலவகை மயக்கச் செயல்களைச் செய்யவல்ல காதலராம் கள்வன், பல சூழ்ச்சிகளையுடைய உள்ளங்கவர் தலைவன், பல பொய்களை வல்ல கள்வன், பல நடிப்புச் செயல்களில் வல்ல கள்வராகிய நம் காதலர், மாயக் கள்வன், பல பொய்த்தனமைகளைக் கொண்ட திருடனுடைய என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

'பன்மாயக் கள்வன்' என்றதற்குப் பலவகையிலும் ஏமாற்றித் திருட்டுத்தனம் செய்பவன் என்பது பொருள். மற்ற எதற்கும் இளகாது கணவனது நயந்து பேசும் பணிமொழிக்கு மயங்கி அவனுக்காட்படுவது பெண்ணின் இயல்பு. பல வஞ்சகச் செயல்களைச் செய்து தலைவியின் ஊடல் நீக்கப் போராடும் அவள் கணவனே பன்மாயக் கள்வன்.

பலவிதமான மாயங்களைச் செய்து மயக்கும் காதலனது மென்மையான இனிய சொற்களல்லவா பெண்தன்மையை உடைக்கும் கருவி? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலனது படுக்கையறைப் பணிமொழிகளை வெளியில் கூறியதால் நிறையழிதல் உண்டாயிற்று.

பொழிப்பு

அந்த பசப்புக் கள்வனின் மென்மை மொழிதானே நம் நிறையைத் தகர்க்கும் கருவி.