இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1257நாண்என ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1257)

பொழிப்பு: நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால், நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமலிருப்போம்.

மணக்குடவர் உரை: நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின்.
அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.

பரிமேலழகர் உரை: (பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணியார் காமத்தாற் பெட்பசெயின் - நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்; நாண் என ஒன்றோ அறியலம் - நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்.
('பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.)

சி இலக்குவனார் உரை: நம்மால் விரும்பப்பட்ட காதலர் காதலால் நாம் விரும்பியவற்றைச் செய்யின் நாண் என்ற ஒன்றை அறியமாட்டோமாய் இருந்தோம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமத்தால் பேணியார் பெட்ப செயின் நாண்என ஒன்றோ அறியலம் .


நாண்என ஒன்றோ அறியலம்:
பதவுரை: நாண்-வெட்கம்; என-என்ற; ஒன்றோ-ஒன்றோ; அறியலம்-அறிய மாட்டோமாயிருந்தோம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ['அறியலர்' என்பது பாடம்] நாணென்பதொன்று அறியார் மகளிர்;
பரிப்பெருமாள்: ['அறியலர்' என்பது பாடம்] நாணென்பதொன்று அறியார்கள் மகளிர்;
பரிதி: நாணமுடைமை உண்டாகில் காமம் வெளிப்படாது;
காலிங்கர்: தோழீ! அவ்விடத்து ஒப்பிறந்த நாணினையும் ஒரு பெரிதும் அறியலாம்;
பரிமேலழகர்: (பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிவாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது.) நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்.
பரிமேலழகர் குறிப்புரை: நாண் - பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணுதல். 'ஒன்று' என்பது ஈண்டுச் 'சிறிது' என்னும் பொருட்டு. இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'அறியலர்' எனப் பாடம் கொண்டமையால் 'நாணென்பதொன்று அறியார் மகளிர்' என உரை பகன்றனர். பரிதி உரை கருத்துப் பொருளாகிறது. காலிங்கர் 'ஒப்பிறந்த நாணினையும் ஒரு பெரிதும் அறியலாம்' என்றார். பரிமேலழகர் 'நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்' என்றபடி இப்பகுதிக்கு உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணம் என்ற உணர்ச்சி நமக்குத் தெரியாது', 'நாணென்று சொல்லப்பட்ட ஒன்றையும் நாம் அறியாதிருந்தோம்', 'எனக்கு நாணம் ஒன்றுமட்டுமா மறந்து போகிறது? ( பெண்மைக்கான மற்ற மடமை, அச்சம், பயிர்ப்பு என்ற எல்லாமே மறந்து போகின்றன)', 'அவர்பாலுள்ள காதலால் வெட்கமென்ற ஒன்றினை யறியமாட்டோம். அதனால் அவரோடு பிணங்க முடியவில்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வெட்கமென்ற ஒன்றினை யறியமாட்டோம் என்பது இப்பகுதியின் பொருள்.

காமத்தால் பேணியார் பெட்ப செயின்:
பதவுரை: காமத்தால்-காதலால்; பேணியார்-விரும்பப்பட்டவர்; பெட்ப-விரும்பியவை; செயின்-செய்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ['பெட்பச்' பாடம்] காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு.
பரிப்பெருமாள்: ['பெட்பச்' பாடம்] காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவர் விரும்புமாறு செய்தமையாலே நாணமுண்டாகாது என்றவாறாயிற்று. விரும்புமாறு செய்தலாவது, தலைமகன் தனது அன்பு தோன்ற நிற்றலும் தலைமகள் வேட்டன செய்தல் வன்மையும். 'பிரிந்து வந்தவனோடு புலவாது கூடுதல் நாணம் ஆகாதோ'என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: ஆகவே காமம் உடையார்க்கு நாணம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: ['வரின்' என்பது பாடமாகலாம்] முன் நம்மை விரும்பார் ஆகிய காதலர் யாம் விரும்பவே தாம் வருவாராயின்.
காலிங்கர் குறிப்புரை: எனவே அவரிடத்தில் அவாப்பெறில் வந்தாங்கே எமது ஆவல் தீரும்படி அவரைப் 'பணிந்தும் எழுந்தும் பரிவுற மகிழ்ந்தும் நோக்கி ஊடியும் நுணுக நகைத்தும் நீக்கிய நாணொடு நிற்பேன்' என்றவாறு.
பரிமேலழகர்: நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பேணியார்' எனச் செயப்படுபொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது. விரும்பியன - வேட்கை மிகலினாற் கருதியிருந்த கலவிகள். நிறையழிவான் அறியாது கூடிய தன் குற்றம் நோக்கி, அவளையும் உளப்படுத்தாள்.

"காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'காமம் உடையார்க்கு நாணம் இல்லை' என்பது பரிதியின் உரை. 'யாம் விரும்பவே தாம் வருவாராயின்' என காலிங்கர் உரைக்க 'நம்மால் விரும்பப்பட்டவர் வந்து காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்யுமளவில்' என்று பரிமேலழகர் இப்பகுதிக்கு உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் காமத்தோடு நாம் விரும்பியன செய்யின்', 'நம்மால் காப்பாற்றப்பெறும் காதலர், காமத்தால் நாம் விரும்பியவற்றைச் செய்வாராயின்', 'என் காதலர் தாமும் என்னைப் போலக் காம ஆசை கொண்டவராக நான் மிகவும் ஆசைப்படுகிற கலவி செய்யும்போது', 'தலைவர் நாம் விரும்பத் தக்கவைகளைச் செய்தால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விரும்பப்பட்டவர் நாம் விரும்பியவற்றைச் செய்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நம்மால் விரும்பப்பட்டவர் நாம் விரும்பியவற்றைச் செய்தால் அக்காதலால் நாணம் என்னும் ஒன்றைப் பற்றி நாம் அறியமாட்டோம்.

காதலர் நாம் விரும்பியவற்றைச் செய்தால் வெட்கமென்ற ஒன்றினை அறியலம் என்பது பாடலின் பொருள்.
'அறியலம்' குறிப்பது என்ன?

நாண்என ஒன்றோ என்ற தொடர்க்கு நாண் எனப்படும் ஒன்றனை என்பது பொருள்.
காமத்தால் என்ற சொல் காதலால் என்ற பொருள் தரும்.
பேணியார் என்ற சொல்லுக்கு விரும்பப்பட்டவர் என்று பொருள்.
பெட்ப செய்யின் என்ற தொடர் விரும்பியனவற்றைச் செய்தால் என்ற பொருளது.

நம்மால் விரும்பப்பட்டவர், காதல் உணர்வுடன், நாம் விரும்பியதைச் செய்தால் நாணம் என்ற உணர்வே நம்மிடம் இருக்காது. காமம் வெட்கமறியாது.

தொழில் முறையில் அயல் சென்றுள்ள தலைவன் வரவு நீட்டிக்கிறது. அவனையே நினைத்துக் காதல்வேட்கை மிக துயருற்றிருக்கிறாள் காதலி. காதலனை எப்பொழுது நேரில் கண்டு அவனுடன் சேர்ந்திருக்கப் போகிறோம் என ஏக்கத்துடன் காத்திருக்கிறாள். இப்பொழுது, மனதில் அடக்கி வைத்திருந்த தன் காதல் விருப்பங்களை வெளியில் சொல்லத் தொடங்குகிறாள். அவனது பிரிவுக்கு முன் நிகழ்ந்தவை அவள் நினைவுக்கு வருகின்றன. அப்பொழுது சொல்கிறாள்: 'என்னால் விரும்பப்படும் என் கணவர், காதலால் நான் விரும்பும்வகை செய்தால், நாண் என ஒன்று இருப்பதாக அறியமாட்டோம்' என்கிறாள். பரிதி உரையில் சொல்லப்பட்டதுபோல் 'நாணமுடைமை உண்டாகில் காமம் வெளிப்படாது; ஆகவே காமம் உடையார்க்கு நாணம் இல்லை' என்கிறாள். மனத்தில் உள்ள எண்ணங்கள் இவ்விதம் வெளிப்பட்டதால் அவளுடைய நிறைகுணம் கெடுவதாயிற்று.

தலைவியின் நிறையழிந்த பேச்சுக்கு இது நல்ல காட்டாக அமைகிறது.
'நான் விரும்பும் காதலர் காமத்தால் தான் விரும்புகின்றவற்றைச் செய்தால், தடுக்காமல் ஏற்றுக் கொள்பவள் நான். இடை நின்று தடுக்க வேண்டிய நாணமும் மறைந்து விடும். காதல் முன்னே நாணம் நிற்றல் இல்லை. ஆகவே, அவர் செய்கின்றவற்றுக்கு ஆட்பட்டு விடுவேன்' என்பது காதலி சொல்வது. ‘நாணென ஒன்றோ அறியலம்’ என்னும் பகுதிக்குக் காலிங்கர் உரையில் 'எமது ஆவல் தீரும்படி அவரைப் பணிந்தும் எழுந்தும் பரிவுற மகிழ்ந்தும் நோக்கி ஊடியும் நுணுக நகைத்தும் நீக்கிய நாணொடு நிற்பேன்' என்பார். நாமக்கல் இராமலிங்கம் இப்பகுதிக்கு 'நாண் மட்டுமா? மற்ற என் பெண்மைக் குணங்களாகிய மடமை, அச்சம், பயிர்ப்பு முதலிய எல்லாவற்றையும் மறந்துவிடுகிறேன்' என்று பொருள் செய்தார்.

பரிப்பெருமாள் 'பிரிந்து வந்தவனோடு புலவாது கூடுதல் நாணம் ஆகாதோ' என்று தோழிக்குத் தலைமகள் கூறியது எனக் காட்சி பின்புலம் கூறினார்.
இப்பாடலுக்கும் இதைத் தொடர்ந்துவரும் மூன்று குறட்பாக்களுக்கும் பரிமேலழகர் 'பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனோடு நிறையழிதலாற் கூடிய தலைமகள் 'நீ புலவாமைக்குக் காரணம் யாது?' என்ற தோழிக்குச் சொல்லியது' என்று தலைவன் பரத்தை இல்லிலிருந்து வருவதாகச் சூழல் அமைக்கிறார். மேலும் பரத்தையர் தோய்ந்த மார்பைத் தோய்தற்கு நாணினாள் என்ற பொருளிலும் இக்குறளுக்கு உரை வரைந்துள்ளார். பரத்தையர் பிரிவுக்குக் குறளில் இடமில்லையாதலாலும் பரத்தையிற் பிரிவுநேர்ந்த பொழுதுதான் நாணம் எழுவதென்பது இல்லை என்பதாலும் இவர் உரை முற்றிலும் பொருந்தாது.

'அறியலம்' குறிப்பது என்ன?

'அறியலம்' என்ற சொல்லுக்கு அறியார், அறியலாம், அறிய மாட்டேமாயிருந்தோம், அறியாதவராவோம், தெரியாது, அறியாதிருந்தோம், உணர்வதில்லை, அறியவும் விரும்ப மாட்டோம், அறியமாட்டோம், அறியமாட்டோமாய் இருந்தோம், உணர்வே இருக்காது, இல்லாது போய்விடுகிறது என உரைகாரர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'அறியலர்' எனப் பாடங்கொண்டதால் 'நாணென்பதொன்று அறியார் மகளிர்' என உரை வரைந்தார். பரிமேலழகர் பாடம் 'அறியலம்' என்பதால் அவர் உரை 'நாண் என்றொன்றையும் அறிய மாட்டேமாயிருந்தோம்' என்றமைந்தது.
பரிப்பெருமாள் சிறப்புரை 'அறியலம்' என்பதற்கு விரிவுரையாகவும் உள்ளது: அவர் விரும்புமாறு செய்தமையாலே நாணமுண்டாகாது என்றவாறாயிற்று. விரும்புமாறு செய்தலாவது, தலைமகன் தனது அன்பு தோன்ற நிற்றலும் தலைமகள் வேட்டன செய்தல் வன்மையும்.


நம்மால் விரும்பப்பட்டவர் நாம் விரும்பியவற்றைச் செய்தால் காதல் உணர்வால் வெட்கமென்ற ஒன்றினை யறியமாட்டோம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தான் துய்த்த களியாடலைத் தலைவி சொல்லும் நிறையழிதல் பாடல்.

பொழிப்பு

தலைவர் நாம் விரும்பியவற்றைச் செய்யின், காதல் உணர்வால் நாணென்று சொல்லப்பட்ட ஒன்று நமக்குத் தெரியாது.