இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1255செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1255)

பொழிப்பு: தம்மை வெறுத்து நீங்கியவரின்பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.

மணக்குடவர் உரை: தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று.
இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை - தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று.
(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.)

குழந்தை உரை: தம்மைப் பிரிந்து சென்றார்பின் செல்லாத நிறையுடைமை காமநோய் உற்றவரால் அறியப்படுவது ஒன்றன்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று.


செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை:
பதவுரை: செற்றார்பின்-அகன்று சென்றவர் பின்; செல்லா-போகாத; பெருந்தகைமை-கெழுதகைமை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை;
பரிப்பெருமாள்: தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை;
பரிதி: மாற்றாரைப் பின் செல்வோம் என்ற மேம்பாடு;
காலிங்கர்: தோழீ! 'அன்பிலாதார் பின்பு செல்லேன்' என்னும் முதுசொல்படியே நம்மைச் செற்றார்பின் சென்று நில்லாமையாகின்ற பெரிய தகைமைப்பாடு ஆகின்றது;
பரிமேலழகர்: (நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது.) தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை;
பரிமேலழகர் குறிப்புரை: இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர்.

'இகழ்ந்தார்பின் செல்லாத பெரிய தகைமை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற, பரிதி 'மாற்றார் பின் செல்வோம் என்ற மேம்பாடு' என்றார். காலிங்கர் 'அன்பிலாதார் பின் சென்று நில்லாமையாகின்ற பெரிய தகைமைப்பாடு' என்றும் பரிமேலழகர் 'அகன்று சென்றார்பின் செல்லாத நிறையுடைமை' என்றும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெறுத்தவர்பின் செல்லாத மானவுணர்ச்சி', 'நம்மை வெறுத்த காதலர் பின் செல்லாத நிறையுடைமை (மனத்திண்மை) என்னும் சிறந்த பண்பு', 'நமக்குத் தீமை செய்துவிட்ட ஒருவரிடத்திற்கே போய் (அத்தீமையைத் தீர்த்துக்கொள்ள)- அவரை வணங்கக் கூடாது என்ற பெரிய நியாயம்', 'தம்மை வெறுத்தார் பின்னே செல்லாது இருக்கும் பெருங்குணம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அகன்று சென்றார்பின் செல்லாத பெருங்குணம் என்பது இப்பகுதியின் பொருள்.

காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று:
பதவுரை: காமநோய்-காமமாகிய பிணி; உற்றார்-அடைந்தவர்; அறிவது-தெரிவது; ஒன்று-ஒன்று; அன்று-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: காமம் மேற்கொண்டார்க்கு இல்லை என்றவாறு.
காலிங்கர்: காம நோய் உற்றவர் அறியும் கடப்பாடு உடையது ஒன்று அன்று என்றவாறு.
பரிமேலழகர்: காமநோயினை உறாதார் அறிவதொன்று அன்றி உற்றார் அறிவதொன்று அன்று.
பரிமேலழகர் குறிப்புரை: காம நோய் உறாதார் - மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று' என்பதாம்.

'காமநோயினை உற்றார் அறிவதொன்று அன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமநோயாளிக்குத் தெரியக் கூடியதன்று', 'காமநோய் உற்றவரால் அறியப்படாத ஒன்றாகும்', 'காம நோய் கொண்டுவிட்ட (மனைவி) அறிய வேண்டிய ஒரு நீதியல்ல', 'காதல் நோய் அடைந்தார் அறிவது ஒன்றன்று' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காதல் நோய் கொண்டார் அறியக்கூடிய ஒன்றன்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பற்று நீங்கின காதலரின் பின் செல்லாத பெருங்குணம் காதல்நோய் கொண்டவரிடம் இராது.

செற்றார் பின்செல்லாத பெருங்குணம் காதல் நோய் கொண்டார் அறியக்கூடிய ஒன்றன்று என்பது பாடலின் பொருள்.
'செற்றார்' என்ற சொல்லின் பொருள் என்ன?

பின் செல்லா என்ற தொடர்க்குப் பின்னே செல்லாத என்பது பொருள்.
பெருந்தகைமை என்றது பெருமைப் பண்பு குறித்தது. நிறையுடமை என்றும் கொள்வர்.
காமநோய் என்ற தொடர் காதல் துன்பம் என்ற பொருள் தருவது.
உற்றார் என்ற சொல்லுக்கு அடைந்தார் என்று பொருள்.
அறிவதொன்று அன்று என்ற தொடர் அறியக்கூடிய ஒன்று அல்ல என்ற பொருளது.

அன்பில்லாமல் நீங்கிப் போனவர் பின் செல்லாத பெருஞ்சிறப்பு காதல்நோய் கொண்டவரிடம் இல்லை; சென்றவரைத் தேடிச் செல்லவும் விரும்புவர்.

பணி காரணமாகத் தலைவியிடம் விடைபெற்றுத்தான் காதலன் சென்றிருக்கிறான். அவன் பிரிவை அவளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. எப்பொழுது திரும்பி வருவான் என்று ஏங்கித் தவித்துக் கொன்டிருக்கிறாள். சொல்லிவிட்டுத்தான் சென்றான். ஆனால் அவன் அனபற்றுச் சென்றுவிட்டானே என அவள் உள்ளம் குமுறுகிறது. 'பகை கொண்டுவிட்டவர் போல் அன்பில்லாமல் என்னை விட்டு அகன்றவர் பின் செல்வது நிறைகுணம் கொண்ட பெண்டிர்க்கு அழகல்ல. எனினும் அதையும் நான் செய்வதாக உள்ளேன்' என்கிறாள். நம்மைத்தான் பிரிந்துபோனாரே, அவர் பின்னேயே ஏன் அவரை நாடிச் செல்ல வேண்டும்? நாமும் அவரை மறந்திருப்போம் என்றால் முடிகிறதா? நன்றாயிருக்கிறது! நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் என்று மாதவி கூறும் சிலப்பதிகார வரிகளைச் சொல்வது தலைவியின் பெருங்குணாமாகிறது. தனக்குத் தீங்கிழைத்த தலைவனை தன்னால் நினையாது இருக்க முடியவில்லையே என்கிறாள் தலைவி. காம மிகுதியால் காதலியின் மனம் அமைதி பெறாது பிரிந்த தலைவர்பால் செல்ல அலையும். அவரைத் தேடிச் சென்று நேரடியாகச் சந்திக்கவும் எண்ணும். இது நிறையழிந்த தன்மை என்றாலும் காதல் நோயுற்ற தலைவி அதையும் மேற்கொள்வாளாம். காதல் உடையார்க்கு பகை என்பது இல்லை. தலைவி தான் ஏன் அருள் செய்யாத தலைவன் பின் செல்கிறாள் என்றதைப் பொதுவியல்பாகக் கூறி உலகியலை வெளிப்படுத்துகின்றாள்.

'இது தம்மை யிகழ்ந்து போனவர்பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது' என்று மணக்குடவரும் 'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம் என்றாட்குச் சொல்லியது' என்று பரிமேலழகரும் சூழல் அமைப்பு தருவர்.

'செற்றார்' என்ற சொல்லின் பொருள் என்ன?

'செற்றார்' எனர சொல்லுக்கு இகழ்ந்தார், மாற்றார், அன்பிலாதார், அகன்று சென்றார், வெறுத்துச் சென்று வருத்தியவர், வெறுத்தவர், வெறுத்த காதலர், பகைவர், தீங்கிழைப்பவர், வெறுப்புற்று நீங்கின துணைவர், வெறுத்த காதலர், வெறுத்தார், தள்ளிவைத்துப் போனவர், பிரிந்து சென்றார், துன்புறுத்திப் பிரிந்துசென்றார், துறந்துவிட்டுப்போன தீயவர், விரும்பாதவர், பகைத்தாற்போல் விட்டுச் சென்றார் என உரைகாரர்கள் பொருள் கூறினர்.

செற்றார் என்ற் சொல்லுக்கு நேர்பொருள் பகைவர் அல்லது மாற்றார் என்பது. இங்கு பரிமேலழகர் இச்சொல்லுக்கு அகன்று சென்றார் என்று பொருள் கூறி 'இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள்' என விளக்குவார். இச்சொல்லுக்கு அன்பிலாதார் என்பது பொருத்தமான பொருள் ஆகும்.

அகன்று சென்றார் பின்செல்லாத பெருங்குணம் காதல் நோய் கொண்டார் அறியக்கூடிய ஒன்றன்று என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நிறையழிதல் ஒரு பொருட்டல்ல; அது கருதி காதலரை நினையாமல் இருக்கமாட்டேன் என்கிறாள் தலைவி.

பொழிப்பு

அன்பில்லாமல் நீங்கிச் சென்றவர் பின் செல்லாத மனத்திண்மை என்னும் சிறந்த பண்பு காதல்நோய் கொண்டவர் அறியமாட்டார்.