இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1251



காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு

(அதிகாரம்:நிறையழிதல் குறள் எண்:1251)

பொழிப்பு (மு வரதராசன்): நாணம் என்னும் தாழ்ப்பாள் பொருந்திய நிறை என்று சொல்லப்படும் கதவைக் காமம் ஆகிய கோடரி உடைத்து விடுகின்றது.

மணக்குடவர் உரை: காமமாகிய மழு உடையாநின்றது: நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை.
இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு - நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை; காமக் கணிச்சி உடைக்கும் - காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை.
(கணிச்சி - குந்தாலி. நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும், வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள்.)

வ சுப மாணிக்கம் உரை: நாணத் தாழ்ப்பாள் இட்ட உறுதிக் கதவைக் காமக் கோடாலி தகர்த்து விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாணுத்தாழ் வீழ்த்த நிறை என்னும் கதவு காமக் கணிச்சி உடைக்கும்.

பதவுரை: காம-காமம்(ஆகிய); கணிச்சி-கோடாலி, குந்தாலி; உடைக்கும்-முறிக்கும், உடைத்தெறியும்; நிறை-மனஉறுதி, மறை பிறர்அறியாமை; என்னும்-என்கின்ற; நாணு-நாணம், வெட்கம்; தாழ்-தாழ்ப்பாள்; வீழ்த்த-கோத்த/போட்ட; கதவு-கதவு.


காமக் கணிச்சி உடைக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமமாகிய மழு உடையாநின்றது;
பரிப்பெருமாள்: காமமாகிய மழு உடையாநின்றது;
பரிதி: வெட்டும் காமமாகிய மழு என்றவாறு.
காலிங்கர்: தோழீ! அவர் பிரிவின்கண் யான் உறுகின்ற காமநோயாகிய கனத்த கோடாலியானது உடைத்து விடுமே;
பரிமேலழகர்: (நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) காம வேட்கையாகிய கணிச்சி முரியாநின்றது, இனி அவை நிற்றலும் இல்லை, யான் ஆற்றலும் இல்லை. [அவை-நாணும் நிறையும்]
பரிமேலழகர் குறிப்புரை: கணிச்சி - குந்தாலி. [குந்தாலி-கோடரி (கோடாலி)];

'காமநோயாகிய கோடாலியானது உடைத்து விடுமே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காம வேட்கை என்னும் குந்தாலி (கோடரி) உடைத்தெறியும்', 'காமமாகிய கோடாலி உடைத்துவிடும்', 'காமமென்னுங் கூந்தாலியானது தகர்த்தெறிகின்றது', 'காதல் விருப்பம் என்ற கூரிய கருவி உடைக்கும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காமம் என்ற கோடாலி உடைத்துவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('அறிவென்னும்' பாடம்): நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள் ('அறிவென்னும்' பாடம்): நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: பயிர்ப்பாகிய வீட்டில், அச்சம் என்னும் நிலையில் மடம் என்னும் கதவில் இட்ட, நாணம் என்னும் தாளை.
காலிங்கர் ('அறிவென்னும்' பாடம்): யாதினை எனில், நாணம் என்கிற அகத்தாழினைத் தன்மீது விழவிட்டு அடைத்த எனது அறிவென்னும் அகக் கதவினை.
காலிங்கர் குறிப்புரை: எனவே இங்ஙனம் என் நெஞ்சினை யான் ஆற்றி நிறுப்பவும் நிறையழிந்து செல்லின் என் செய்வேன் என்றவாறு.
பரிமேலழகர்: நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை. [தாழ்-தாழ்ப்பாள்]
பரிமேலழகர் குறிப்புரை: நாணுள்ள துணையும் நிறையழியாதாகலின் அதனைத் தாழாக்கியும், அகத்துக் கிடந்தன பிறர் கொள்ளாமற் காத்தலின் நிறையைக் கதவாக்கியும் , வலியவாய்த் தாமாக நீங்காத அவ்விரண்டனையும் ஒருங்கு நீக்கலின், தன் காம வேட்கையைக் கணிச்சியாக்கியும் கூறினாள். [அதனை- நாணை; வலியவாய்-உறுதியுடையனயாய்; அவ்விரண்டனையும்- நாண், நிறை என்னும் அவ்விரண்டனையும்]

'நிறையென்னும்' என்பதற்கு 'அறிவென்னும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் காலிங்கரும் பாடம் கொண்டதால் 'நாணமாகிய தாழில் அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை' என்று இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பயிப்பாகிய வீட்டில், அச்சம் என்னும் நிலையில் மடம் என்னும் கதவில் இட்ட, நாணம் என்னும் தாளை' எனப் புதுமையான உரை கூறினார். பரிமேலழகர் 'நாணாகிய தாழினைக் கோத்த நிறை என்னும் கதவினை' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாணமாகிய தாழ்ப்பாள் போட்ட மன உறுதிப்பாடு என்னும் கதவினை', 'நாணமாகிய தாழ்ப்பாளினால் அடைக்கப்பட்டிருக்கிற (காமத்தை அடக்கும் தன்மையான) நிறை என்னும் கதவை', 'வெட்கமென்னுந் தாழிட்ட மன அடக்கமென்னுங் கதவை', 'நாணம் என்ற தாழ்ப்பாள் இட்ட கதவினை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாணத் தாழ்ப்பாள் இட்ட மன உறுதிப்பாடு என்னும் கதவினை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நாணத் தாழ்ப்பாள் இட்ட மன உறுதிப்பாடு என்னும் கதவினை காமம் என்ற கோடாலி உடைத்துவிடும் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

தாழோடு சேர்த்துக் கதவு உடைபடும்போது என் செய்வது?

நாணம் என்னும் தாழ்பொருந்திய நிறை என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடரியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள தலைவன் வரவிற்காகத் தலைமகள் காத்திருக்கிறாள். அவன் வரவு நீட்டிப்பதால் ஆற்றமாட்டாத தலைவி அவன்மீது வெறுப்புக் கொண்டு காயவேண்டும் என்று எண்ணுகின்றாள். 'அவர் கூட வரும்போது பிணக்கம் ஏதும் காட்டுவதில்லை; இப்பொழுது ஏன் பொய்யாக அவர்மீது காய்கிறாய்' என அவள் உள்மனது கூறுகிறது. பின்னர், காமம், நாணம் என இரண்டையும் ஒரே சமயத்தில் தாங்கும் சக்தி எனக்கில்லை எனத் தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். அவனை உடனே காணவேண்டும் என விழைகிறாள். அவன் எங்கிருக்கிறானோ? அவனைச் சென்றடைவது எப்படி? கடமையில் சென்றவனைக் அங்குபோய்க் காண நினைப்பது நாண் நீங்கிய செயல் அல்லவா? காதல் மிகுதியால் பொறுக்க மாட்டாது அவனைச் சந்திக்க நினைப்பது நிறை குறைந்ததுதானே? இவைபற்றியெல்லாம் சிந்திக்காமல் அவனைக் காணவேண்டும்; அவனுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்பனவற்றை மட்டுமே தலைவி எண்ணிக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
கணவனது பிரிவில் தலைவி நாணம் என்ற தாழ்ப்பாள் போட்ட நிறை அதாவது மனஉறுதி என்னும் கதவால் தற்கட்டுப்பாடுடன், காதல் நினைவுகள் வந்து உள்ளத்தைக் கலக்காமல், காத்து வருகிறாள். ஆனாலும் காமமே வெல்வதாக உள்ளது. இதைக் காமக்கணிச்சி தாழோடு சேர்த்துக் கதவையும் தகர்த்து எறிந்து விடுகிறது எனச் சொல்கிறாள்.
கணிச்சி என்பது கோடாலி என வழங்கும் கருவி. இதைக் கோடரி என்றும் சொல்வர். இது மரம் போன்ற கடினமான பொருள்களை வெட்டுவதற்குப் பயன்படுத்துவர். தலைவியின் காதல் எண்ணங்களை மறைத்த நாணத்தையும் நிறையையும் காமம் என்ற வலிமையான கணிச்சி, மரத்தைப் பிளப்பதுபோல், உடைத்தெறிந்து விட்டது எனக் கூறப்பட்டது. காமத்துக்கு முன் நாண், நிறை என்னும் எவ்வித அடைப்புகளும் நில்லா.
உள்ளத்தை நிறுத்தும் தன்மை கதவாகவும், நாணம் தாழ்ப்பாளாகவும், காதல் வேட்கை கதவை உடைக்கும் கோடரியாகவும் பொருட் செறிவோடு அழகுற உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து சேமத் திரை வீழ்த்துச் சென்று, அமளி சேர்குவோர் (பரிபாடல் 10:33-4 பொருள்: காமக் கணிச்சி உடைத்தலால் ஊடல் தீர்ந்து திரை வீழ்த்துப் படுக்கையிற் சேர்ந்தனர்} என்ற சங்கப்பாடலில் காமக் கணிச்சி என்ற தொடர் பயின்று வந்தது.
இக்குறள் நடையை ஒட்டி அதே அணிபடச் சீதையின் கன்னி மாமதிலை இராமன் அழித்தான் என்று கம்பர் பாடுகின்றார்:
பிறந்துடை நலம் நிறை பிணித்த எந்திரம்
கறங்குபு திரியும் என் கன்னி மா மதில்
எறிந்த அக் குமரனை. இன்னும். கண்ணிற் கண்டு
அறிந்து. உயிர் இழக்கவும் ஆகுமேகொலாம்?
(கம்ப இராமாயணம் மிதிலைக் காட்சிப்படலம் 59) (பொருள்: (என்) உடன் பிறந்து எனக்கு உடைமையாயுள்ள நல்ல மனவுறுதி ஆகிய கட்டமைந்த இயந்திரம் சுழன்று திரிதற்கு இடமான (காவல் புரியும்) மதிலின் மேல் பொருத்தப்பெற்றுப் பிறரை அணுகவிடாது காக்கும் எனது கன்னித் தன்மையாகிய பெரிய மதிலை அழித்துச் சென்ற அந்தக் குமரனை மற்றொருமுறை கண்களால் கண்டு அவனை (இன்னான் இத்தகையவன் என) அறிந்து (அதன் பின்பு) எனது உயிரை இழக்கவாயினும் கூடுமோ?)

'இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யாரென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது' என்று மணக்குடவரும் 'நாணும் நிறையும் அழியாமை நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது' என்று பரிமேலழகரும் சூழல் அமைத்தனர்.
மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் ‘அறிவென்னும்’ என்று பாடங்கொள்ள பரிமேலழகர் ‘நிறையென்னும்’ எனப் பாடம் கொண்டார். அதிகாரம் நோக்க பரிமேலழகர் பாடம் மற்றவரினும் பொருத்தமாகிறது.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இதுகாறும் இயல்பாக அமைந்த நாண் குணத்தால் தன் உள்ளத்தை அடக்கிக் காதல் வேட்கையைப் பிறர்க்கு அறிவிக்காது இருந்தாள் தலைவி; காதலன் திரும்பி வரும்வரை ஆற்றியிருக்கவேண்டும் என்று அவள் தன் மனத்தினுள் உறுதியோடு இருந்தாள். ஆனால் காமம் அவளுடைய உறுதியைக் குலைக்கிறது. இப்பொழுது வேட்கை மிகுதியாகவே தன் மனத்தில் அடக்கி வைத்திருந்தவற்றை வாய் விட்டுக் கூறத் தொடங்கிவிட்டாள். அவளது நாண் நீங்கியது; நிறை அழியத் தொடங்கிவிட்டது என்கிறாள். பெண்டிர்க்கு நிறைகாப்பதுதான் கதவு போன்ற பாதுகாப்பு. அந்த அகக்கதவும் நாண் என்ற தாழ்ப்பாளால் இன்னும் இறுக்கப்பெறுகிறது. நாணுள்ளவும் நிறையழியாது. ஆயினும் என்ன பயன்? அவளது காதல்வேட்கை அவை இரண்டையும் கோடாலி கொண்டு உடைத்துப் பிளப்பதுபோல் காவலைத் தகர்ந்து எறிகிறதே. நான் ஆற்றி நிறுத்த முயல்கின்றேன், அப்படியும் நிறையழிந்து செல்கிறது. அதைத் தடுக்க இயலாதவனாய் உள்ளேன் எனத் தலைவி கூறுகிறாள்.

நாணும் நிறையும் அழியாமையைத் தலைவி ஆற்றல் வேண்டும் என்பது இக்குறள் கூறும் செய்தி.

நாணத் தாழ்ப்பாள் இட்ட மன உறுதிப்பாடு என்னும் கதவினை காமம் என்ற கோடாலி உடைத்துவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவியின் நிறையும் நாணும் காமத்தொடு போராடி நிறையழிதல்.

பொழிப்பு

நாணத் தாழ்ப்பாள் இட்ட மன உறுதிப்பாடு என்னும் கதவினைக் காதல் என்னும் கோடாலி உடைக்கும்.