இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1250துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்

(அதிகாரம்:நெஞ்சொடு கிளத்தல் குறள் எண்:1250)

பொழிப்பு: நம்மோடு பொருந்தியிருக்காமல் கைவிட்டுச் சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது, இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.

மணக்குடவர் உரை: மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின் முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்;
ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) துன்னாத துறந்தாரை நெஞ்சத்து உடையேமா - நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக; இன்னும் கவின் இழத்தும் - முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம்.
('குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது. 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன மெய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.

வ சுப மாணிக்கம் உரை: வாராது துறந்தவரை நெஞ்சில் வைத்திருக்கவும் இன்னும் அழகை இழக்கின்றோம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் கவின் இழத்தும்.


துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா:
பதவுரை: துன்னா- தொடர்ந்து உடனிராமல்; துறந்தாரை-நீங்கிப் போனவரை; நெஞ்சத்து-உள்ளத்தில்; உடையேமா-அடைந்துள்ளோமா.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனமே! நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்;
பரிப்பெருமாள்: மேன்மேல் நம்மோடு செறியாராய்த் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்;
பரிதி: கூடாமல் பிரிந்தவரை நெஞ்சத்திலே கொண்டிருந்து;
காலிங்கர்: நெஞ்சே! இன்றியமையாமை அறிந்தும் நம்மோடு கூடி வாழாருமாய்ப் பின்னை நினைந்து அருளாலும் இன்றிப் பெரிதும் துறந்தே ஒழிந்தாரை நாம் மற்று உடையேம்;
பரிமேலழகர்: (அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்பதுபடச் சொல்லியது.) நம்மைக் கூடாவண்ணம் துறந்துபோயினாரை நாம் அகத்து உடையேமாக;
பரிமேலழகர் குறிப்புரை: 'குன்றின், நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல்' (குறுந்.கடவுள்வாழ்த்து) என்புழிப்போல் 'நெஞ்சு' என்பது ஈண்டும் அகப் பொருட்டாய் நின்றது.

'நம்மோடு கூடி வாழாராய் துறந்து போனவரை நெஞ்சகத்தே யுடையோமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்மோடு கூடாமல் விட்டுப் பிரிந்த காதலரை நாம் நம் நெஞ்சகத்தே வைத்துள்ளோம்', 'நெருங்காமல் நீங்கியவரை (வேற்றூர் போயிருக்கிற காதலரை) மனதில் வைத்துக் கொண்டே (ஏங்கி) இருந்தால்', 'நம்மைக்கூட நினையாது பிரிந்து போனவரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின்', 'நம்மைக் கூடாவண்ணம் துறந்து போயினாரை நாம் நெஞ்சில் உடையேமாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உடனிராமல் நீங்கிச் சென்றாரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

இன்னும் இழத்தும் கவின்:
பதவுரை: இன்னும்-மற்றும், பின்னும்; இழந்தும்-இழப்போம்; கவின் -அழகு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்;
மணக்குடவர் குறிப்புரை: ஆதலான் மறத்தலே கருமம். ஈண்டு நெஞ்சென்றது மனத்துடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.
பரிப்பெருமாள்: முன்னம் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம்; ஆதலான் மறத்தலே கருமம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஈண்டு நெஞ்சம் என்றது மனத்தினுடைய தானத்தை. இது நினைக்கின்றதனால் பயனில்லை யென்று கூறியது.
பரிதி: மேன்மேலும் அழகை இழக்க வேண்டா என்றவாறு.
காலிங்கர்: ஆதலால் முன்பு இழந்த கவினே அன்றி மற்று இன்னமும் கவின் இழப்பேம்; எனவே, இறந்துபாடும் இயையும் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அவர் நம்மைத் துன்னாமல் துறந்தார் ஆகவும். நாம் அவரை மறத்தல் மாட்டேமாகவும், போன மெய்க்கவினே அன்றி நின்ற நிறையும் இழப்பேம்' என்பதாம்.

'முன்பு இழந்த கவினே அன்றி மற்று இன்னமும் கவின் இழப்பேம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதலால் முன் இழந்த உடலழகேயன்றி இன்னும் அக அழகையும் (நிறை, நாணம்) இழப்போம்', '(இதுவரை அதனால் உறுப்பு நலனழிந்ததற்கு மேல்) இன்னும் அதிகமாக உடல் நலங்களையும் இழந்துவிடுவோம்', 'நாம் இன்னும் அழகை யிழந்தொழிவோம்', 'இன்னும் அழகினை இழப்போம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாம் இன்னும் அழகை இழப்போம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நம்முடன் வாழாமல் நீங்கிச் சென்றவரை நெஞ்சத்தில் உடையவராய் இருப்போமானால் யாம் அழகை மேலும் இழக்க்கத்தான் போகிறோம்.

உடனிராமல் நீங்கிச் சென்றாரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின் நாம் இன்னும் அழகை இழப்போம் என்பது பாடலின் பொருள்.
காதலர் நெஞ்சிலிருந்தால் அழகு கூடத்தானே வேண்டும். ஏன் இழக்கவேண்டும்?

துன்னா என்ற சொல்லுக்கு உடன் இராமல் என்பது பொருள்.
துறந்தாரை என்ற சொல் நீங்கினவரை என்ற பொருள் தரும்.
நெஞ்சத்து என்ற சொல்லுக்கு உள்ளத்தின்கண் என்று பொருள்.
உடையேமா என்ற சொல் பெற்றுள்ளேமாக என்ற பொருள் தருவது.
இன்னும் என்ற சொல் மேலும் எனப்பொருள்படும்.
இழத்தும் என்ற சொல் இழப்போம் குறித்தது.
கவின் என்ற சொல் அழகு என்ற பொருள்படுவது.

'உடன்வாழாமல் அகன்று சென்றவரை நெஞ்சில் இருத்தியிருக்கிறோம்; அதனால் மேலும் அழகு குலைகிறது நமக்கு' என்கிறாள் தலைவி.

பணி காரணமாகப் பிரிந்து சென்ற கணவர் இன்னும் திரும்பவில்லை. எப்பொழுது வருவார் என்பதற்கான செய்தியும் இல்லை. தலைவிக்கு அவரது பிரிவு தாங்கமுடியாததாக இருக்கிறது. அவர் நினைவால் ஊன் உறக்கம் இல்லாததால் அவளது உடல் சீர் குலைகிறது. உறுப்பு நலன் அழிகிறது. தன்னைத் தானே ஆற்றிக் கொள்வதற்காகத் தன் உள்ளுணர்வுகளைச் சில சமயங்களில் தன் நெஞ்சுடன் பேசிப் பகிர்ந்து கொள்கிறாள். இப்பொழுது அவள் தன் நெஞ்சுடன் பேசுவது: 'நம்மோடு கூடி வாழ்தலின் இன்றியமையாமை அறிந்தும், பிரிந்தால் நாம் உறும் துன்பங்களைத் தெரிந்தும், நம்மை விட்டு நீங்கினாரை நெஞ்சிலே கொண்டு நினைத்துருகுகிறோம். ஏற்கனவே அழகு சீர் குலைந்துவிட்டது. இன்னும் அவர் நினைவாகவே அவரை நெஞ்சில் சுமந்தால் நம் அழகு மேலும் கெட்டுத்தான் போகும்' என்கிறாள். இவ்வாறாக 'அவரை நினைந்து வாழ அழகு எல்லாம் குறைந்து விட்டது. இன்னும் எஞ்சியுள்ள அழகும் போனாலும் போகட்டும். அவரை நினைந்து கொண்டே அழிவோம்' என அவள் வெற்று நிலையில் தன் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துகிறாள்.
ஆதலான் அவரை மறத்தலே கருமம் என்றும், அவரை மறந்து ஆற்றல் வேண்டும் என்றும், இறந்துபாடும் இயையும் என்றும் காம ஆசையினால் காதலர் வரவில்லை என்பதையே நினைத்துக் கொண்டிருப்பாயானால் நம் உடலின் அழகும் சுகமும் மிகவும் கெட்டுப் போவதால் காம ஆசையை அடக்குவோம் என்றும் உரையாரியர்கள் விரித்துரைத்தனர்.

'நம்மோடு நெருங்காமல் நீங்கிச் சென்ற துணைவரை நெஞ்சத்தில் உடையவராய் இருப்போமாக அதற்காக யாம் மேலும் எம் அழகை இழப்போம்' என்று இளங்குமரனாரும் 'நம்மைக் கூடாவண்ணம் துறந்து போயினாரை நாம் நெஞ்சில் உடையேமாக; இன்னும் அழகினை இழப்போம்' என்று சி இலக்குவனாரும் வேறுபாடான பொருள் கூறினர். இவையும் சிறப்பாக உள்ளன.

காதலர் நெஞ்சிலிருந்தால் அழகு கூடத்தானே வேண்டும். ஏன் இழக்கவேண்டும்?

'இன்னும் இழத்தும் கவின்' என்ற தொடர்க்கு முன் இழந்த புறக்கவினேயன்றி நின்ற அகக்கவினும் இழப்பேம், முன்னும் இழந்த கவினொழிய இன்னமுமுள்ள கவினை இழப்போம், மேலும் மேலும் நாம்தான் நம் அழகை இழக்கப்போகின்றோம், இன்னும் அழகை இழக்கின்றோம், முன் இழந்த உடலழகேயன்றி இன்னும் அக அழகையும் (நிறை, நாணம்) இழப்போம், (இதுவரை அதனால் உறுப்பு நலனழிந்ததற்கு மேல்) இன்னும் அதிகமாக உடல் நலங்களையும் இழந்துவிடுவோம், இன்னும் அழகை யிழந்தொழிவோம், போன மேனியழகேயன்றி நின்ற நிறையும் இழப்பேம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். பழைய உரை ஒன்று 'முன் கூடியிருந்த உடம்பினழகு அவர் பிரியப் பிரிந்தது; நெஞ்சத்துக் கூடினவர் பிரிந்தால் நெஞ்சின் அழகும் பிரியும் என்றது. நெஞ்சின் அழகு நிறையும் நாணமும் எனக் கூறுவர்' என்கிறது.

இவற்றில் அக அழகையும் அதாவது நாண், நிறை போன்றவற்றையும் இழக்கப்போகின்றோம் என்ற உரை நன்றாக இல்லை. எஞ்சியுள்ள அழகை இழப்போம் என்பது பொருத்தம்.
காதலர் வரவு நீட்டிப்பதால் ஏற்கனவே அவர் நினைவால வாடியுள்ள தலைவியின் அழகு மேலும் தேயும் என்பதால் இன்னும் கவின் இழப்பேம் எனப்பட்டது. இங்கு உடல் அழகுதான் குறையும் எனப்பட்டது. அது உணவு, உறக்கம் முறையாகக் கொள்ளாமையால் உண்டானது. அவர் வாராமை தொடர்ந்தால் அவர் நினைவாலேயே இன்னும் அழகு குறையும் என்கிறாள் தலைவி. கணவர் வரும் வரையில் அவர் நினைவாகவே இருக்கப் போகிறாள் என்பது கருத்து.

உடனிராமல் நீங்கிச் சென்றாரை நம்முடைய நெஞ்சத்திலே வைத்திருப்போமாயின் நாம் இன்னும் அழகை இழப்போம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலர் வரும்வரை அவரை என் நெஞ்சிலே உடையேம் என்று தலைவி உறுதி காட்டும் நெஞ்சொடு கிளத்தல் பாடல்.

பொழிப்பு

உடன் வாழாது நீங்கிச் சென்றவரை நெஞ்சில் வைத்திருக்கவும் இன்னும் அழகை இழக்கின்றோம்.