இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1247காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு

(அதிகாரம்:நெஞ்சோடுகிளத்தல் குறள் எண்:1247)

பொழிப்பு: நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது

மணக்குடவர் உரை: எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது.
இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: (நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல் நெஞ்சே - நல்ல நெஞ்சே; ஒன்று காமம் விடு - ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; (ஒன்று) நாண் விடு - ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு; இவ்விரண்டு யானோ பொறேன் - அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன்.
('யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.)

சி இலக்குவனார் உரை: நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தைவிடு. அல்லது நாணத்தை விட்டுவிடு. இவ்விரண்டினையும் உடன் தாங்கும் வலிமை எனக்கு இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன் இவ்விரண்டு.


காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே:
பதவுரை: காமம்-காதல்; விடு-ஒழி; ஒன்றோ-(ஒன்று காமம் விடு, ஒன்று நாண்விடு) நாண்-வெட்கம்; விடு-விட்டுவிடு; நல்-நல்ல; நெஞ்சே-உள்ளமே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எனக்கு நல்லநெஞ்சே! ஒன்றிற் காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்;
பரிப்பெருமாள்: எனக்கு நல்லநெஞ்சே! ஒன்று காமத்தை விடுதல் வேண்டும்: ஒன்றில் நாணத்தை விடுதல் வேண்டும்;
பரிதி: ஒன்றோ காமத்தை விடு; அல்லது நாணத்தை விடு; நெஞ்சே என்றவாறு.
காலிங்கர்: நல்வழி அறியும் நெஞ்சமே! ஒன்றேயாம் அவர்வயின் உற்ற காம நோய்ப் பாரத்தைக் கைவிடுவாயாக; இனி ஒன்றோ இதனால் வரூஉம் அலர் நாணுகின்ற நாண்பாரத்தைக் கைவிடுவாயாக;
பரிமேலழகர்: (நாண் தடுத்தலின், அச்செலவு ஒழிவாள் சொல்லியது.) நல்ல நெஞ்சே; ஒன்றின் நாண் விடமாட்டாயாயின் காம வேட்கையை விடு; ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு;

'நல்ல நெஞ்சே; ஒன்றின் காம வேட்கையை விடு; ஒன்றின் அது விடமாட்டாயாயின் நாணினை விடு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமத்தை விடு அல்லது நாணத்தை விடு; நெஞ்சே!', 'நல்ல நெஞ்சே! ஆதலால் நீ காமத்தை விடுக. அல்லது நாணத்தை விடுக', '(என் நன்மையைக் கருதவேண்டிய) நல்ல மனமே! ஒன்று காம ஆசையை விட்டுவிட்டு (சும்மா இரு): இல்லையானால் (பிணங்குகிற உன்) நாணத்தை விட்டுவிட்டு (அவரிடம் போ)', 'நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது வெட்கத்தை விட்டுவிடு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு என்பது இப்பகுதியின் பொருள்.

யானோ பொறேன்இவ் விரண்டு:
பதவுரை: யானோ-நானோ; பொறேன்-தாங்கும் ஆற்றல் இல்லாதேன்; இவ்விரண்டு-இந்த இரண்டு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.
பரிப்பெருமாள்: என்னால் அவ்விரண்டும் கூடப் பொறுத்தலரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிரிவிடையாற்றாளாய்த் தலைமகனிருந்துழிச் செல்லக் கருதிய தலைமகள் நாணம் தடுத்தமை கண்டு கூறியது.
பரிதி: யான் இரண்டையும் சுமக்கமாட்டேன், நெஞ்சே என்றவாறு.
காலிங்கர்: அல்லது மற்று யான் இவ்விரண்டு பாரமும்கூடப் பொறுக்கல் ஆற்றேன் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே கணவன் மாட்டுக் காதலும் பிறர்மாட்டு நாணமும் பெண்டிர்க்கு இயல்பு. ஆதலால் ஒழித்தற்கு அருமையின் உறுகின்ற உள்ளுறு துயரம் உணர்த்தியவாறாயிற்றே என அறிக.
பரிமேலழகர்: அன்றியே இரண்டும் விடாமை நின் கருத்தாயின், ஒன்றற்கொன்று மறுதலையாய இவ்விரண்டனையும் உடன் தாங்கும் மதுகை யான் இலன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'யானோ' என்னும் பிரிநிலை, 'நீ பொறுப்பினும்' என்பதுபட நின்றது. 'நல்நெஞ்சே' என்றது, இரண்டையும் விடாது பெண்மையை நிலைபெறுத்தலின், 'நல்லை' என்னும் குறிப்பிற்று. 'அது நன்றே எனினும் என் உயிருண்டாதல் சாலாமையின், அதற்கு ஆகின்றிலேன', என்பதாம். முற்று உம்மை விகாரத்தால் தொக்கது.

'யான் இவ்விரண்டினையுங்கூடப் பொறுத்தலரிது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரண்டையும் நான் தாங்கேன்', 'நானோ காமம், நாணம் என்னும் இரண்டையும் தாங்கும் ஆற்றல் இலேன்', 'நான் இந்த இரண்டு துன்பங்களையும் (சேர்ந்தாற் போல்) சகிக்க முடியாது', 'ஒன்றுக்கொன்று மாறுபட்ட அவ்விரண்டினையும் நான் ஒருங்கே தாங்கமாட்டேன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நானோ இவ்விரண்டினையும் ஒருங்கே பொறுத்துக் கொள்ளேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு. என்னாலோ இவை இரண்டையும் ஒருங்கே தாங்கமுடியாது.

நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; நானோ இவ்விரண்டினையும் ஒருங்கே பொறேன் என்பது பாடலின் பொருள்.
'பொறேன்' என்றால் என்ன?

காமம் என்ற சொல்லுக்குக் காதல் விருப்பம் என்பது பொருள்.
விடு என்ற சொல் ஒழி அல்லது விட்டுவிடு என்ற பொருள் தரும்.
ஒன்றோ என்றது ஒன்று அதாவது மாறுபட்ட பொருள்களில் ஒன்று இது அல்லது அது எனப்பொருள்படுவது.
நன்னெஞ்சே என்றது நல்ல நெஞ்சமே! என்று தன் உள்ளத்தை விளிப்பது.
யானோ என்ற சொல்லுக்கு நானோ என்று பொருள்.
இவ்விரண்டு என்ற தொடர் இவை இரண்டு என்ற பொருள் தருவது.

நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விடு. அல்லது நாணத்தை விட்டுவிடு. இரண்டையும் ஒன்றாக என்னால் தாங்க இயலாது.

பணி காரணமாகத் தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். காதலி அப்பிரிவை ஆற்றமுடியாதவளாய் இருக்கிறாள். அவனையே எந்த நேரமும் நினைத்து உறக்கம் தொலைத்து உடல் மெலிகிறாள். அவன் திரும்பி வருவது பற்றி எந்தச் செய்தியும் இல்லை. அவனை எப்படியாவது நேரில் பார்க்கவேண்டும் என்று துடிக்கிறாள். எப்படிப் பார்ப்பது? அவனைத் தேடித்தான் செல்லவேண்டும். அப்படிச் செல்வது அவள் நாணுக்கு இழுக்காகுமே. காதல் நோய் ஒருபுறம். நாண் ஒருபுறம் பாரமாக இருக்கின்றன. அப்பொழுது தன் உள்ளத்தை நோக்கிக் கூறுகின்றாள்: 'நன்நெஞ்சே! என்னால் இந்த இரண்டு சுமைகளையும் ஒருசேரத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. ஒன்று காதல் சிந்தனையை ஒழித்துக்கட்டு; அல்லது நாணை விட்டுவிடு' .

'நன்னெஞ்சே' என்றது, இன்பத்தையும் பெண்மையையும் ஒருங்கே நிலைபெறுத்தலால் நல்ல நெஞ்சு என்று பாராட்டியவாறாம்.
முன்னரும் காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து (படர்மெலிந்து இரங்கல் 1163 பொருள்: துன்பத்தைப் பொறுக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் காதலுணர்வும் நாண் குணமும் சுமைகளாக உயிர் என்னும் காத்தண்டின் இருபுறமும் தொங்குகின்றன.) என்று காமத்தையும் நாணத்தையும் சமன் நிலையில் வைத்து உயிர் காக்கப் போராடுகிறேன் என்று சொல்லியிருக்கிறாள் தலைவி. அந்தப் பிரிவுநிலை இன்னும் முடியவில்லை. எனவே போராட்டம் தொடர்ந்து இப்பொழுது வேகம் எடுக்கிறது. தலைவி நாணத்திற்கும், காமத்திற்கும் நடுநின்று வேதனையுறுகிறாள். நாண் என்பது பெண்ணுக்கியற்கையாக அமைந்துள்ள உயரிய பண்பாகும். காதல் உயிர் போன்றதாகும். காதலுக்காக நாணத்தை விட்டு அவர்பால் செல்ல வேண்டும். நாணம் இருக்க வேண்டுமென்றால் அவரிடம் செல்லுதல் இயலாது. காலிங்கர் 'எனவே கணவன் மாட்டுக் காதலும் பிறர்மாட்டு நாணமும் பெண்டிர்க்கு இயல்பு. ஆதலால் ஒழித்தற்கு அருமையின் உறுகின்ற உள்ளுறு துயரம் உணர்த்தியவாறாயிற்றே என அறிக' என இரண்டுமே ஒழித்தற்கு அருமை என உரைத்தார்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் பெண்ணின் நாணமே வெல்லும் அதாவது காதலர் வரும்வரையில் காதல் சிந்தனையை பெண்கள் விட்டுவிடுவர்.

கம்பரும் இப்படிப்பட்ட போராட்டத்தை எதிர்கொண்ட தலைவி பற்றிப் பாடுகிறார். வள்ளுவரின் தலைவி தன் நெஞ்சிற்குச் சொல்வதைத் தோழிக்குச் சொல்வதாக கம்பர் காட்டுகிறார்:
மெல்லியல் ஒருத்தி. தான் விரும்பும் சேடியை
புல்லிய கையினள். ‘போதி தூது’ எனச்
சொல்லுவான் உறும்; உற. நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து. விம்மினாள்
(கம்ப இராமாயணம், பால காண்டம், உண்டாட்டுப் படலம், 1007 பொருள்: மென்மைத் தன்மைபொருந்திய ஒருத்தி தன் விருப்பத்திற்குரிய ஒருதோழியை தழுவிய கையினையுடையவளாய் (எனக்காகக் கணவனிடம்) தூது போவாயாக எனச் சொல்ல வருவாள்; அப்படிச் சொல்லவருமிடத்து நாணம் வந்து தடுக்கும். அதனாற் சொல்லமாட்டாள். (இவ்வாறு அவள் காதலால் சொல்ல நினைப்பதும். நாணத்தால் சொல்லாமல் விடுவதுமாக) அளவில்லாத காலம் முழுவதும் (வீணே கழித்து வெறிதே) இருந்து புலம்பினாள்.) தலைவரிடம் தூது போய்வா என்று சொல்ல முடியாமல் தலைவி நின்றுகொண்டே இருக்கிறாள். அவளுக்கு நாணத்தால் வார்த்தை வெளிவரவில்லையாம். இரவு முழுதும் இருந்து அழுதே கழித்தாளாம் பொழுதை.

'பொறேன்' என்றால் என்ன?

'பொறேன்' என்றதற்கு பொறுத்தலரிது, சுமக்கமாட்டேன், பாரமும்கூடப் பொறுக்கல் ஆற்றேன், உடன் தாங்கும் மதுகை இலன் [மதுகை-வலிமை/திறமை], தாங்கும் ஆற்றல்இல்லை, தாங்கேன், தாங்கும் ஆற்றல் இலேன், சேர்த்துச் சகிக்க முடியாது, தாங்கமாட்டேன், தாங்கும் வலிமை இல்லை, பொறுக்க மாட்டேன், தாங்க முடியாது, சமாளிக்க முடியவில்லை என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
‘பொறேன்’ என்ற சொல் இருப்பதால் காலிங்கர் காம நோய்ப் பாரம் என்றும் அலர் நாணுகின்ற நாண்பாரம் எனப் பாரமாகக் கொண்டு உரை வரைந்தார்.

'பொறேன்' என்றதற்குத் தாங்கமாட்டேன் என்பது பொருள்.

நல்ல நெஞ்சே! ஒன்று காதல் விருப்பத்தை விடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; நானோ இவ்விரண்டினையும் ஒருங்கே பொறுத்துக் கொள்ளேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதல் அல்லது நாண் ஏதாவது ஒன்றைமட்டும்தான் ஒருநேரத்தில் என்னால் ஆளமுடியும் என்று நெஞ்சிடம் தலைவி கூறுவதைச் சொல்லும் நெஞ்சோடுகிளத்தல் பாடல்.

பொழிப்பு

ஒன்று காதல் விருப்பத்தை விடு அல்லது நாணத்தை விட்டு விடு; நல்ல நெஞ்சே! இரண்டையும் நான் தாங்கமாட்டேன்.