இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1246கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சோடுகிளத்தல் குறள் எண்:1246)

பொழிப்பு: என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணரமாட்டாய்! பொய்யான சினங்கொண்டு காய்கின்றாய்.

மணக்குடவர் உரை: என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.

பரிமேலழகர் உரை: (தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக.
('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: புலவியைக் கலவியால் நீக்கும் காதலரைக் கண்டால் நீ புலந்து கூறமாட்டாய்; அவரை முன்னரே சென்று கூடுவாய். அவ்வியல்பு உடைய நீ, அவரைக் கண்டு இப்பொழுது கொடியரென ஏன் பொய்யாகச் சினங்கொள்கின்றாய்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
என் நெஞ்சு! கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்தி.


கலந்துணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய்:
பதவுரை: கலந்து-ஒன்றுசேர்தல்; உணர்த்தும்-புலவியை நீக்கும்; காதலர்-காதலையுடையவர்; கண்டால்-பார்த்தால்; புலந்து-பிணங்கி; உணராய்-நீங்கமாட்டாய்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை:
பரிப்பெருமாள்: காதலர் கொடுமையை உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை:
பரிதி: கூடின நேரத்திலே அன்பு சொல்லும் நாயகர் பிரிந்தபோது காய்வை;
காலிங்கர்: நம் விதி வாய்ப்பாய் நீங்கும் காதலரைக் காணப்பெற்றால் உட்கலந்து உணர்ந்து வைத்தும் புறத்து உடன்று ஊடிப் பின்னும் ஆவம் என்று கருதாய்,
பரிமேலழகர்: (தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்;
பரிமேலழகர் குறிப்புரை: 'கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி, அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல்.

'காதலர் கொடுமையை அறிந்தும் அவரைக் கண்டால் புலக்காமல் கலப்பாய்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடியுணர்த்தும் அவரைக்கண்டால் வெறுக்காய்', 'புணர்ந்து இன்பமூட்டும் காதலரைக் கண்டுவிட்டால் பிணங்குவதே அறியாத நீ', 'அவர் நம்மோடு கலந்து ஊடலை நீக்குதல் காலத்திலே ஒருதரமாவது பிணங்கி விடாத நீ', 'நம்மோடு கூடி நம் புலவியைத் தீர்க்கும் நம் காதலரைக் கண்டால் புலவியுற்று அறியாய்!', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒன்றுசேர்ந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் பிணங்கி விடாத நீ என்பது இப்பகுதியின் பொருள்.

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு:
பதவுரை: பொய்-மெய் அல்லாதது; காய்வு-வெறுப்பு; காய்தி-வெகுள்கின்றாய்; என்-எனது; நெஞ்சு-உள்ளமே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய் என்நெஞ்சே! .
பரிப்பெருமாள்: இப்பொழுது பொய்யே காயாநின்றாய் நெஞ்சே!.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது 'கண்டால் புலக்க மாட்டாத நீ காணாவிடத்து வெறுக்கின்றது எற்றுக்கு?" என்று கூறியது. காட்சி-கனவின்கண் கண்ட காட்சிபோலும். முன்பு ஒருகாலத்துப் பிரிந்த தலைமகனைக் கண்ட காட்சி என்னும் அமையும்.
பரிதி: அவர் கூடியிருக்கிற இடத்தில் காயாய் நீ ஏன்? நெஞ்சே! என்றவாறு.
காலிங்கர்: கேளாய், என் நெஞ்சமே! வறிதே ஒரு பொய்க்காய்வு காய்க்கடவை, அவர் புடைப்பு அறிய என்றவாறு.
பரிமேலழகர்: என் நெஞ்சே, அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக.
பரிமேலழகர் குறிப்புரை: பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.

'அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய் என் நெஞ்சே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! இப்போது பொய்யாக வெறுக்கிறாய்', 'மனமே!(இப்போது) எதற்காக இந்தப் பொய்ப் பிணக்கம் பிணங்குகிறாய்?', 'இப்போது அவரிடத்தில் பொய்யான வெறுப்புக் கொள்ளுகின்றாய்! இதனாற் பயன் என்ன?', 'என் நெஞ்சே! பொய்யாக வெறுக்கின்றாய்!' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் நெஞ்சே! இப்போது அவரைப் பொய்யாக வெறுக்கின்றாய்! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! கூடி ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் அவரைப் பிணங்குவதில்லை; இப்பொழுது அவரைப் பொய்யாகச் சினந்துரைக்கின்றாய்.

என் நெஞ்சே! ஒன்றுசேர்ந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் பிணங்கி விடாத நீ, இப்போது அவரைப் பொய்யாக வெறுக்கின்றாய்! என்பது பாடலின் பொருள்.
'கலந்துணர்த்தும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

காதலர்க் கண்டால் என்ற தொடர்க்குக் காதலரைப் பார்த்தால் என்பது பொருள்.
புலந்து என்ற சொல் பொய்யாக ஊடல் கொண்டு என்ற பொருள் தரும்.
உணராய் என்றது (பின்னர்த்) தெளிய மாட்டாய் குறித்தது.
பொய்க்காய்வு என்ற தொடர்க்குப் பொய்யாகக் கொள்ளும் வெறுப்பினையுடையாய் என்று பொருள்.
காய்தி என்ற சொல் சினந்துகொள்கின்றாய் என்ற பொருளது.
என் நெஞ்சு என்றது 'எனது நெஞ்சே!' என தன் உள்ளத்தை விளிப்பது. 'எதற்காக நெஞ்சே' என்றும் பொருள் கொண்டனர்.

மனமே! கூடிப் பிணக்கத்தை நீக்கும் காதலரைக் கண்டவுடன் ஊடல் கூடச் செய்யமாட்டாய். இப்போது பொய்யாக அவரிடம் சினங்கொள்கின்றாய். இது ஏன்?

தொழில் காரணமாகப் பிரிந்து சென்ற கணவன் இன்னும் திரும்பி வரவில்லை. காதலிக்குப் பிரிவுத் துயரம் தாங்கமுடியவில்லை. உறக்கம் இழந்து உறுப்புநலன் அழிகிறாள். விரைந்து மீளாத காதலனுடைய கொடுமையை நினைத்து அவன்மீது சினம் கொள்கிறாள். அதுசமயம் தன் நெஞ்சை விளித்து தன்னுள்ளத்தை வெளிப்படுத்துகிறாள். அவள் நெஞ்சுடன் பேசுவது: 'நெஞ்சே! முன்பெல்லாம அவர் கூடி ஊடலைத் தீர்க்க முயலும்போது நீ பிணங்காமலே அவர் கூடலுக்கு முன்நின்றாய். இப்போது காதலர் வராததை நினைத்து அவர்மீது வெறுப்புக் காட்டுகிறாய். இது பொய்யான காய்வு'.

காதலர் பிரிவுக்கு முன் நிகழ்ந்துள்ள காட்சிகள் அவள் நினைவுக்கு வருகின்றன. அந்த நேரங்களிலும் ஏதோ காரணத்திற்காக தலைவி காதலன் மேல் வெறுப்பாய் இருப்பாள். 'அவர் வரட்டும். பார்த்துக்கொள்கிறேன்' என்று அவன் மீது காய்வதற்கு ஆயத்தமாவாள். இவள் ஊடுவாள் என எதிர்பார்த்து அவனும் இவளது மனநிலை உணர்ந்து அமைதிப்படுத்த எண்ணுவான். ஆனால் அவள் ஊடினாளா? இல்லை. அவனைக் கண்டவுடன் பிணக்க எண்ணத்தை விட்டுவிட்டு அவனுடன் ஒன்றுபட்டு விடுவாள். இது போன்ற பல முன்னைய நிகழ்வுகளையெல்லாம் நினைத்துத் தலைவி 'அவர் திரும்ப வரும்போது அவருடன் ஊடாமலே கூடி விடுவாய். இப்பொழுதுள்ள உன் கோபம் பொய்க் கோபம்' எனத் தன் நெஞ்சுடன் கொஞ்சுகிறாள். பரிப்பெருமாள் இக்குறட்கருத்தைக் 'கண்டால் புலக்க மாட்டாத நீ காணாவிடத்து வெறுக்கின்றது எற்றுக்கு?" என்று கூறியது' என விளக்கினார்.

மற்ற உரையாசிரியரகள் எல்லாம் ‘என் நெஞ்சு’ என்பதை 'எனது நெஞ்சே' என்று கொள்ள, நாமக்கல் இராமலிங்கம் 'என் பொய்க்காய்வு காய்தி' அதாவது எதற்காகப் பொய்க்காய்வு காய்தி? என இயைத்து வினாப் பொருள் கொள்கிறார்.

'கலந்துணர்த்தும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'கலந்துணர்த்தும்' என்ற தொடர்க்கு அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும், கூடின நேரத்திலே அன்பு சொல்லும், உட்கலந்து உணர்ந்து வைத்தும், கலவிதன்னானே நீக்கவல்ல, கூடலின்ப ஆசை காட்டி நீக்கவல்ல, கூடியுணர்த்தும், புலவியைக் கலவியால் நீக்கும், புணர்ந்து இன்ப உணர்ச்சி தருகின்ற, கூடிக் கலந்து ஊடி உணர்த்தும், கலந்து ஊடலை நீக்குதல் காலத்திலே, நம் புலவியைத் தீர்க்கும் என்று உரையாசிரியரகள் பொருள் கூறினர்.

"'கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது; அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி, அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல்" என்பது பரிமேலழகர் விளக்கவுரை. கலந்துணர்த்தலென்றது கலவியின்ப ஆசை காட்டி அதனாற் புலவியை நீக்குதல் என்பது இவர் உரையின் கருத்து. இங்குள்ள 'கலந்துணர்த்தும்' என்பதற்கு 'கூடி ஊடல் நீக்கித் தெளிவித்தல்' என்பது பொருள்.

என் நெஞ்சே! ஒன்றுசேர்ந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் பிணங்கி விடாத நீ, இப்போது அவரைப் பொய்யாக வெறுக்கின்றாய்! என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலரைக் கண்டால் ஒருவாறாகவும் காணாதவிடத்து வேறாகாவும் நடந்துகொள்கிறாயே நெஞ்சே எனத் தலைவி சொல்லும் நெஞ்சோடுகிளத்தல் பாடல்.

பொழிப்பு

காதலர் கூடவரும்போது புலக்கக்கூட மாட்டாய்; இப்பொழுது பொய்யாக அவரிடம் சினங்கொள்கின்றாய், என் நெஞ்சே!