இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1245



செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்

(அதிகாரம்:நெஞ்சொடுகிளத்தல் குறள் எண்:1245)

பொழிப்பு (மு வரதராசன்): நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று எண்ணிக் கை விட முடியுமோ?

மணக்குடவர் உரை: நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர் செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?
உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நெஞ்சே - நெஞ்சே; யாம் உற்றால் உறாஅதவர் - யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை; செற்றாரெனக் கைவிடல் உண்டோ - வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை.
(உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நாம் துன்புற்றாலும் வராதவர் நெஞ்சே! நம்மைக் கைவிட்டாரென விட முடியுமா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே! யாம் உற்றால் உறாஅதவர் செற்றார் எனக் கைவிடல் உண்டோ.

பதவுரை: செற்றார்-சினந்துவெறுத்தார்; என-என்று கருதி; கைவிடல்-ஏற்காதொழிதல், விட்டுவிடல்; உண்டோ-உளதோ; நெஞ்சே-உள்ளமே; யாம்-நாம்; உற்றால்-(அன்பு)பட்டால்; உறாஅதவர்-படாதவர் (அன்புடையராகாதவர்), துன்புறாதவர்.


செற்றார் எனக்கை விடல்உண்டோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ?
பரிப்பெருமாள்: செறுத்தாரென்று கைவிடுதல் இயல்போ?
பரிதி: நம்மைப் பிரிந்தார்ப்போலப் பிரிந்து விடுவாரோ;
காலிங்கர்: இங்ஙனம் நம்மைச் செறுத்தனர் எனக்கொண்டு நாமும் கைவிடுதற் கடன் உண்டோ;
பரிமேலழகர்: (இதுவும் அது.) வெறுத்தார் என்று கருதிப் புலந்து கைவிட்டிருக்கும் வலி நமக்குண்டோ? இல்லை. [புலந்து - பிணங்கி].

'செறுத்தாரென்று அவரைக் கைவிடுதல் இயல்போ? / கடன் உண்டோ?/ வலி நமக்குண்டோ?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நம்மை வெறுத்தார் என்று நாமும் அவரை வெறுத்து நீங்கி வாழும் வன்மை நமக்கு உண்டோ?', 'அவர் நம்மை வெறுத்துவிட்டார் என்றெண்ணிக் கைவிட்டுவிடுவது தகுமா? (தகாது)', 'அவர் நம்மை வெறுத்தாரென்று கைவிட்டிருக்கும் வலிமை நமக்குண்டோ?', 'வெறுத்தார் எனக் கருதிக் கை விட்டிருக்கும் வலிமை நமக்கு உண்டோ?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நம்மை வெறுத்தாரென்று கைவிட்டு விடுதல் ஆகுமா? என்பது இப்பகுதியின் பொருள்.

நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர்.
மணக்குடவர் குறிப்புரை: உறுதல்- விரைந்துறுதல். தலைமகள் தலைமகன் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: நெஞ்சே! யாம் உற்றபின்பு உறாது போனவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உறுதல்- விரைந்துறுதல். 'நாம் உறுவதன் முன்பு தாம் உற்று வருந்தினர்; நாம் உற்ற பின்பு தாம் உறார் ஆயினார்; யாம செய்ததனையே அவரும் செய்தார்; ஆயின் அவரை விடுதல் ஆகுமோ?" என்று தலைமகன் கொடுமையை உட்கொண்டு நெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: நாம் அன்பு வைக்கவும் தாம் அன்பு வையாத நாயகர், நெஞ்சமே! சொல்லாய் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! நாம் இங்ஙனம் பிரிவுத்துயர் உற்ற இடத்துத் தாமும் அஃது உறாதவர். காலிங்கர் குறிப்புரை: எனவே கணவர் பிரிவின் கற்புடையாட்டியர் கடுந்துயர் உறினும் கருத்து ஒழியார் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: நெஞ்சே; யாம் தம்மையுறத் தாம் உறாத நம் காதலரை.
பரிமேலழகர் குறிப்புரை: உறுதல் - அன்பு படுதல். 'அவ்வலி யின்மையின் அவர்பால் செல்வதே நமக்குத் தகுவது' என்பதாம். [அவ்வலி - நம் காதலரை வெறுத்தார் என்று கருதிப் பிணங்கிக் கைவிட்டிருக்கும் வலிமை]

'நெஞ்சே! நாம் இங்ஙனம் பிரிவுத்துயர் உற்ற இடத்துத் தாமும் அஃது உறாதவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் எய்தினால் அது கண்டு துன்புறாத காதலர்', 'மனமே! நாம் விரும்பினபோது காதலர் வராததற்காக', 'நாம் விரும்பினால் நம்மை விரும்பாதவரை', 'நெஞ்சே! நாம் அடைந்தால் நம்மை அடையாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் உற்றது கண்டு தாம் துன்புறாத காதலர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் உற்றது கண்டு தாம் உறாத காதலர் நம்மை வெறுத்தாரென்று கைவிட்டு விடுதல் ஆகுமோ? என்பது பாடலின் பொருள்.
'உற்றால்' என்பதன் பொருள் என்ன?

நான் ஒருத்தி இங்கு பேதையாய் அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் என்னிடம் அன்புறுகிறார் என்பதற்குச் செய்தி ஒன்றுமே இல்லையே!

நெஞ்சமே! நாம் துன்பத்தில் உள்ளோம் என்று அறிந்தும் அருள் காட்டாமல் இருப்பவர் நம்மை வெறுத்துவிட்டார் என்று நாமும் கைவிடல் முடியுமோ?
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்ற கணவன் எப்பொழுது திரும்புவான் என்பது பற்றி எந்தச் செய்தியும் தலைவியிடம் இல்லை; பிரிவு ஆற்றாமையால் என்ன செய்வது என்று தெரியாமல் தனக்குத் தன் நெஞ்சே துணையாக உதவும் என எண்ணி தனது உள்ளத்து உணர்வுகளை மனதுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் அவள். மனத்தின் போக்கு ஒன்றாகவும், அவளுடைய போக்கு வேறாகவும் இருக்கின்றன. 'நினைத்து ஒன்று சொல்லாயோ?' 'நீ நோவது பேதைமை', 'இருந்துள்ளி பரிதல் என்?' 'கண்ணும் கொளச்சேறி நெஞ்சே' என வினாக்களாகத் தொடுத்தும் இரங்கற் குறிப்புகளாகவும் அவளைவிட்டு தனிமைப்பட்ட நெஞ்சுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
'நான் இங்கே அவரையே நினைத்துக் கலங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதுபோல் அவரும் வருந்துவதுபோலத் தெரியவில்லையே. இதற்கு என்ன பொருள்? என்னை அவர் வெறுக்கிறார் என்றுதானே கொள்ளமுடியும்? அப்படி அவர் நம்மைப் புறக்கணிக்கிறார் என்றால் நாமும் அவரை கைவிடவேண்டியதுதானா? என்னைப்போல் நிலையில் உள்ள மற்றவர்களும் அப்படித்தான் செய்வார்களா?' இவ்வாறாக அவளது எண்ண ஓட்டங்கள் செல்கின்றன. தலைமகள் கணவனின் கொடுமையை உட்கொண்ட நெஞ்சிற்குச் சொல்லியது என்றாலும் காதலரைக் கைவிடும் ஆற்றல் தனக்கு இல்லை என்பதைத்தான் தன் உள்ளத்தோடு உரையாடுதல்வழி தெரிவிக்கிறாள்.
கணவன் விரைந்து மீளவில்லையே என்று அவன்மீது வெறுப்புக் கொண்டு காயவேண்டும் என்று காதலி எண்ணுகின்றாள். ஆனால் அது அவளால் முடியாததாக இருக்கிறது. அவள் தனது உள்ளத்து நெகிழ்ச்சியையும் உணர்கிறாள். அவருக்கு நம்மீது இரக்கம் இல்லை; பின் ஏன் அவருக்காக வருந்துகிறாய்? என முதலில் கேட்கிறாள். பின்னர் 'எம்மை வெறுத்தார்' என்று அவரைக் கைவிடுதலும் ஆகுமோ? எனத் தெளிவு பெற்றவள்போல் பேசுகிறாள். .

மற்றவர்கள் எல்லாம் 'நாம் தலைவனைக் கைவிடுதல் உண்டோ' எனத் தலைவி கூறுவதாக உரைசெய்ய, 'நம்மைத் தலைவர் கைவிடல் உண்டோ' எனத் தலைவன் கூறுவதாகப் பரிதி எழுதினார். அவ்வுரை இங்கு பொருந்தாது. இக்குறளுக்கான சிறப்புரையில் காலிங்கர் 'கணவர் பிரிவின் கற்புடையாட்டியர் கடுந்துயர் உறினும் கருத்து ஒழியார் என்பது பொருள் என்றவாறு' எனக் குறித்துள்ளார்.

'உற்றால்' என்பதன் பொருள் என்ன?

'உற்றால்' என்பதற்கு விரைந்துறுதல், அன்பு வைத்தல், துயர் உற்ற இடத்து, அன்பு படுதல், அனபு செய்யவும், துன்புற்றால், பிரிவுத்துன்பம் எய்தினால், ஆசையுற்றபோது, விரும்பினாலும், அடைந்தால், அன்பு பாராட்டினால், அன்பாற் பொருந்துதல் என உரையாசிரியரகள் பொருள் கூறினர்.

"‘உறுதல்’ என்பதற்கு அன்புபடுதல், விரைந்துறுதல், பிரிவுத்துயருறுதல் எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர். ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் (புறம்.183:1) ....ஒன்றுற்றக் கால் விற்றற்குரியர் விரைந்து (குறள்: 1080) என்னுமிடங்கள் போல ‘உற்றால்’ என்பதற்கும் துன்பமுற்றால் எனப் பொருள்கோடலே இயல்பானது. அங்ஙனம் கொண்டெழுதிய காலிங்கர் உரை ஒக்கும்" (இரா சாரங்கபாணி).

'உற்றால்' என்றது துன்புற்றால் என்ற பொருள் பொருந்தும்.

நெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் உற்றது கண்டு தாம் உறாத காதலர் நம்மை வெறுத்தாரென்று கைவிட்டு விடுதல் ஆகுமோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விரைந்து வரவில்லை என்பதற்காக அவரை விட்டுவிடும் ஆற்றல் எனக்கிருக்கிறதா? எனத் தலைவி தன் நெஞ்சொடுகிளத்தல்.

பொழிப்பு

நெஞ்சே! நாம் பிரிவுத்துன்பம் எய்தினால் அது கண்டு துன்புறாதவர் நம்மை வெறுத்தார் என்று நாம் கைவிடுதல் ஆகுமா?