இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1244கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்காணல் உற்று

(அதிகாரம்:நெஞ்சோடுகிளத்தல் குறள் எண்:1244)

பொழிப்பு: நெஞ்சே! நீ அவரிடம் செல்லும் போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன.
கொள - பார்க்க.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நெஞ்சே, கண்ணும் கொளச் சேறி - நெஞ்சே நீ அவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; இவை அவர்க் காணல் உற்று என்னைத் தின்னும் - அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும்.
('கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது. தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம். என்றது, தான் சேறல் குறித்து.)

சி இலக்குவனார் உரை: நெஞ்சே! நீ அவர்பால் சென்றாயானால் இக் கண்களையும் உடன் கொண்டு செல்க. இல்லையேல் அவரைக் காண்டல் விரும்பி 'நீ காட்டு' என்று என்னைத் தின்னும் ( அழிக்கும்).


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சே! கண்ணும் கொளச்சேறி; இவை அவர்காணல் உற்று என்னைத் தின்னும் .


கண்ணும் கொளச்சேறி நெஞ்சே:
பதவுரை: கண்ணும்-கண்ணும்; கொள-உடன்கொண்டு; சேறி-செல்லுவாய்; நெஞ்சே-உள்ளமே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக;
மணக்குடவர் குறிப்புரை: கொள - பார்க்க.
பரிப்பெருமாள்: நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களும் அவரைக்காணும்படி கொண்டு செல்வாயாக;
பரிப்பெருமாள் குறிப்புரை: 'கொள' என்பது பார்க்க என்றவாறு.
பரிதி: கண்ணையும் கூட்டிக்கொண்டு போய் நாயகரைக் காண்டியாயோ, நெஞ்சே!
காலிங்கர்: நெஞ்சே! அவரிடத்து நீயே எப்பொழுதும் செல்கின்றாய்; எம் கண்ணினையும் கூடக்கொண்டு செல்வாயாக;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நெஞ்சே நீ அவர்பாற் சேறலுற்றாயாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக;
பரிமேலழகர் குறிப்புரை: 'கொண்டு' என்பது, 'கொள' எனத் திரிந்து நின்றது.

'நெஞ்சே! நீ அவர்மாட்டுச் செல்லுவையாயின் இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெஞ்சே! கண்களையும் அழைத்துக் கொண்டு போ', 'நெஞ்சே! நீ அவரிடத்தே செல்லக் கருதின், இக்கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக', 'மனமே! (நீ என் காதலரிடம் போகும்போது) இந்த என் கண்களையும் கூட்டிக் கொண்டு போ', 'நெஞ்சே! நீ அவரிடஞ் செல்வையாயின் இக்கண்களையும் உடனழைத்துக் கொண்டு போவாயாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நெஞ்சே! நீ அவரிடம் செல்வாயானால் இக்கண்களையும் உடன் கொண்டு போ என்பது இப்பகுதியின் பொருள்.

இவையென்னைத் தின்னும் அவர்காணல் உற்று:
பதவுரை: இவை-இவை; என்னை-என்னை; தின்னும்-தின்பன போன்று நலியா நிற்கும்; அவர்-அவர்; காணல்-பார்த்தல்; உற்று-வேண்டி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன.
பரிப்பெருமாள்: அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன.
பரிப்பெருமாள் குறிப்புரை: காட்சிப் பொருண்மேல் வருதலிற் காட்சியாயிற்று. இது காண்டல் வேட்கையால் கூறியது.
பரிதி: என்னை நித்திரைகொள்ள விடுகின்றதில்லை என்றவாறு.
காலிங்கர்: ஏன் எனில் மற்று இவை அவரைக் காண்டல் விருப்புற்று எம்மை ஒறுக்கும் ஒறுப்பு யாம் ஆற்றேம்; எனவே இன்று எம் கண் எதிரேவரின் உய்வம் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அன்றி நீயே சேறியாயின், இவைதாம் காட்சி விதுப்பினால் அவரைக் காண்டல்வேண்டி நீ காட்டு என்று என்னைத் தின்பன போன்று நலியா நிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: தின்னும் என்பது இலக்கணைக் குறிப்பு. அந்நலிவு தீர்க்க வேண்டும் என்பதாம். என்றது, தான் சேறல் குறித்து.

'அவரைக் காணலுற்று இவை என்னைத் தின்பனபோல நலியாநின்றன' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரைக் காண விரும்பி என்னைத் தின்னும்', 'ஏனெனில், அவை அவரைக் காணும் வேட்கை மிகுந்து என்னைப் பச்சையாகப் பிடுங்கித் தின்னும்', '(இல்லாவிடில் நீ போனபிறகு) இவைகள் அவரைப் பார்க்க வேண்டுமென்று என்னை மென்று தின்றுவிடும் போல் துன்பப்படுத்தும்', 'அவரைக் காட்டென்று என்னைத் தின்பதுபோல இவைகள் என்னை வருத்துகின்றன' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

'அவரைக் காட்டு' என்று என்னைத் தின்பதுபோல இவைகள் என்னை வருத்துகின்றன என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சே! காதலரைக் காணச் செல்லுங்கால் இக்கண்களையும் உடன்கொண்டு போ; ஏனெனில் அவரைக் காட்டு என்று இவைகள் என்னை வாட்டி வதைக்கின்றன.

நெஞ்சே! நீ அவரிடம் செல்வாயானால் இக்கண்களையும் உடன் கொண்டு போ; காதலரைக் காண விரும்பி 'அவரைக் காட்டு' என்று என்னைத் தின்னும் என்பது பாடலின் பொருள்.
'என்னைத் தின்னும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

கண்ணும் என்ற சொல்லுக்கு கண்களையும் என்பது பொருள்.
கொள என்ற சொல் கொண்டு என்ற பொருள் தரும்.
சேறி என்ற சொல்லுக்குச் செல்வாய் என்று பொருள்.
நெஞ்சே என்ற சொல் உள்ளத்தை விளித்தது.
இவை என்ற சொல் இப்பொருள்கள் எனப் பொருள்படும். இங்கு கண்களைக் குறிக்கும்.
அவர்காணல் என்ற தொடர் அவரைக் காணவேண்டும் என்று என்ற பொருள் தருவது.
உற்று என்ற சொல் விருப்பம அடைந்து என்ற பொருளது.

நெஞ்சமே! அவரைப் பார்க்கப் போகும்போது, இந்தக் கண்களையும் உடன் கொண்டு போ. அவரைக் காணவேண்டுமென்று இக்கண்கள் என்னை நச்சரித்துத் தின்னுகின்றன.

காதலன் கடமை காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறான். நாட்கள் பல சென்றும் இன்னும் அவன் திரும்பி வரவில்லை. பிரிவைத் தாங்கமுடியாமல் தலைவி அல்லலுறுகிறாள். தூக்கம் தொலைந்தது. உடல் உறுப்புகள் நலமழிந்தன. நாட்கள் செல்லச் செல்ல அவனைக் காணவேண்டும் என்ற வேட்கை கூடிக் கொண்டே செல்கிறது. தன் குறைகளைத் தன் மனத்திடம் சொல்லி ஆறுதல் தேட நினைக்கிறாள். இப்பொழுது தன் நெஞ்சைப் பார்த்து அவள் பேசுகிறாள்: 'உள்ளமே! அவரிடத்து நீதான் அடிக்கடி செல்கின்றாயே; அடுத்த முறை என்னுடைய கண்களையும் கூட்டிக்கொண்டு செல்வாய்; ஏன் எனில் இவை அவரைக் காண விருப்புற்று 'அவரைக் காட்டு' 'அவரைக் காட்டு'என்று என்னைக் கொல்லாத குறையாக நச்சரித்துக் கொண்டிருக்கின்றன. ஆற்றமுடியவில்லை' என்கிறாள். காதலனை விரைவில் காண வேண்டும் என்ற விருப்பத்தைத் தலைவி இவ்வாறு வெளியிடுகின்றாள்.
எதையாவது பார்க்க அல்லது கேட்டு அடம் பிடிக்கும் குழந்தையைத் தாய் சமாளிக்கமுடியாமல் மூத்த பிள்ளையிடம் அக்குழந்தையைக் கொடுத்து 'இது என் உயிரை வாங்குகிறது. நீ போய் அது கேட்பதை வாங்கிக் கொடு' என்று நாம் நம் குடும்பங்களில் அடிக்கடி காணும் காட்சியை நினைவு படுத்துதல் போல் உள்ளது இப்பாடலில் உள்ளது இது.

'என்னைத் தின்னும்' என்ற தொடர் குறிப்பது என்ன?

இத்தொடர்க்கு என்னைப் பிடுங்கித் தின்கின்றன, என்னை நித்திரைகொள்ள விடுகின்றதில்லை, என்னைக் கொத்தித் தின்னுகின்றன, என்னைத் தின்பதுபோல வருத்துகின்றன, என்னைத் தின்று தீர்க்கும், என்னைப் பிய்த்துத் தின்றுவிடும் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தின்னுதல் என்பது தின்பதுபோல அரித்து எடுப்பதைக் குறிக்கும். ‘தின்னும்’ என்பதற்கு நலியும் எனப் பரிமேலழகரும் ஒறுக்கும் எனக் காலிங்கரும் பொருள் கூறினர்.
இதில் தின்னும் என்பது நலியா நிற்கும் என்கிற பொருளில் வந்ததால் இலக்கணைக் குறிப்பு என்றும் தின்னும் என்னும் ஒருபொருளின் (வாயின்) தொழில் பிறிதொரு பொருளின் (கண்ணின்)மேல் ஏற்றி உரைத்திருத்தலின், 'தின்னும்' என்றது இலக்கணைக் குறிப்பு ஆகும் என்றும் இலக்கண விளக்கம் தருவர்.
உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டனபோல் கூறியதற்கு இக்குறளை மேற்கோள் காட்டுவார் இளம்பூரணர் (தொல்.பொருள். 240).

நெஞ்சே! நீ அவரிடம் செல்வாயானால் இக்கண்களையும் உடன் கொண்டு போ; 'அவரைக் காட்டு' என்று என்னைத் தின்பதுபோல இவைகள் என்னை வருத்துகின்றன என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தலைவியின் கண்கள் அவரைக் காணத்துடித்து அவளையே தின்னுகின்றன என்று நெஞ்சிடம் அவள் முறையிடும் நெஞ்சோடுகிளத்தல் பாடல்.

பொழிப்பு

நெஞ்சே! இக்கண்களையும் உடன் கொண்டு போ. ஏனெனில், அவை அவரைக் காண விரும்பி என்னைத் தின்னும்.