இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1242காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதமை வாழிஎன் நெஞ்சு

(அதிகாரம்:நெஞ்சோடுகிளத்தல் குறள் எண்:1242)

பொழிப்பு: என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவதும் உன் அறியாமையே.

மணக்குடவர் உரை: அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை.
இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: (தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை.
('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய், இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நம்மேல் காதல் இவருக்கு இல்லாதபோது நீ வருந்துவது நெஞ்சே! மடமை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழிஎன் நெஞ்சு.


காதல் அவரிலர் ஆகநீ நோவது:
பதவுரை: காதல்-காதல்; அவர்-அவர்; இலர்-இல்லாதார்; ஆக-ஆகியிருக்க; நீ-நீ; நோவது-வருந்த்துதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் நம்மேற் காதலிலராக, நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது;
பரிப்பெருமாள்: அவர் நம்மேற் காதலிலராக, நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது;
பரிதி: ஆசை அவரிடத்திலே இல்லாதபோது நாயகரை நோவது; .
காலிங்கர்: நம்மைப் பிரிந்தார் ஒரு கால் நினைந்து வந்து அருளுவதோர் காதல் என்பது ஒன்று அவர் இலார்; விருப்பாயின் இனி நோவது;
பரிமேலழகர்: (தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது;
பரிமேலழகர் குறிப்புரை: 'நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய்.

'அவர் நம்மேற் காதல் இல்லாதபோது, நீ கூட்டத்தைக் கருதி/வரவு நோக்கி வருந்துகின்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் நம்மிடம் காதல் கொள்ளாதவராக இருக்க, நீ அவரை எதிர்நோக்கி வருந்துதற்குக் காரணம்', 'அவர் நம் மீது உண்மையான அன்புடையவர் அல்ல( என்பது நன்றாகத் தெரிகிறது): அதற்காக நான அவரைக் கொடியவர் என்றால் நீ வருத்தமடைவது', 'காதல் வைப்பவர் இங்கே இல்லாதிருக்க, நீ அவரைக் கருதி வருந்துவது', 'அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துவது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காதலர் இங்கே இல்லாதிருக்க நீ அவரை நினைந்து வருந்துவது என்பது இப்பகுதியின் பொருள்.

பேதமை வாழிஎன் நெஞ்சு:
பதவுரை: பேதமை-அறியாமை; வாழி-வாழ்வாயாக; என்-எனது; நெஞ்சு-உள்ளமே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என் நெஞ்சே! பேதைமை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.
பரிப்பெருமாள்: என் நெஞ்சே! பேதைமை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.
பரிதி: மிகவும் பேதைமை என்றவாறு.
காலிங்கர்: கேளாய் என்னுடைய நெஞ்சமே! நின் அறியாமை அல்லது பிறிது ஒன்று இல்லை என்பது என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வாழி என்பது அசைச்சொல் என்று அறிக.
பரிமேலழகர்: (தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சே, வாழ்வாயாக; நின் பேதைமையே, பிறிதில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.

'என் நெஞ்சே, வாழ்வாயாக; நின் பேதைமையே, பிறிதில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் நெஞ்சே! வாழ்வாயாக. நின் அறியாமையே', 'என்னுடைய மனமே! மூடத்தனம்; உன்னை வாழ்த்துகிறேன் வருந்தாதே', நெஞ்சே! நீ வாழ்வாயாக; நின் அறியாமையே', 'என் நெஞ்சே வாழ்வாயாக! அறியாமையாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

என் நெஞ்சே வாழ்வாயாக! அறியாமையாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் நெஞ்சே! நீ வாழ்வாயாக! காதலராகிய அவர் எம்மொடு இல்லாதவராக இருக்க நீ அவரை எண்ணி வருந்திக் கொண்டிருப்பது அறியாமையாகும்.

என் நெஞ்சே வாழ்வாயாக! காதலவரிலர் ஆக நீ அவரை நினைந்து வருந்துவது அறியாமையாகும் என்பது பாடலின் பொருள்.
'காதலவரிலர் ஆக' என்ற தொடரின் பொருள் என்ன?

நீ நோவது என்ற தொடர்க்கு நீ வருந்துவது என்று பொருள்.
பேதமை என்ற் சொல் அறியாமை என்ற பொருள் தரும்.
வாழி என்றது வாழ்வாயாக குறித்தது.
என் நெஞ்சு என்ற தொடர் என் மனமே என்ற பொருளது.

நெஞ்சமே! இது என்ன அறியாத்தனம்? அவர்தான் நம்மோடு இல்லையே பின் ஏன் அவரை நினைத்து வருந்துகிறாய்?

கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள தலைமகன் விரைந்து மீளாமையாலும் அவரிடமிருந்து எந்தவித செய்தியும் வராததாலும் தலைவி ஆற்றாளாகிறாள். அவளது மனது அவரையே எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறது. அப்பொழுது சலிப்புடன் நெஞ்சை நோக்கிச் சொல்கிறாள்; 'அவர்தம் நம்மிடையே இல்லையே. பின் ஏன அவரையே நினைந்து வருந்துகின்றாய். இது உன் மடத்தனம். நன்றாக் இரு!' என்கிறாள். 'வாழி' என்பதை இகழ்ச்சியாகக் கூறுகிறாள்.

'காதலவரிலர் ஆக' என்ற தொடரின் பொருள் என்ன?

'காதலவரிலர் ஆக' என்பதற்கு அவர் நம்மேற் காதலிலராக, ஆசை அவரிடத்திலே இல்லாதபோது, நினைந்து வந்து அருளுவதோர் காதல் என்பது ஒன்று அவர் இலார், அவர் நம்கண் காதல் இலராகவும், காதலிக்கப்பட்டவர் உன்னிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நம்மேல் காதல் இவருக்கு இல்லாதபோது, அவர் நம்மிடம் காதல் கொள்ளாதவராக இருக்க, காதலராகிய அவர் எம்மொடும் காதல் இல்லாதவராக இருக்க, காதல் வைப்பவர் இங்கே இல்லாதிருக்க, அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், அவருக்குத்தான் நம்மேல் காதல் இல்லையே, அவர் நம்பாற் காதவில்லாதவராகவும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

‘காதலவரிலராக’ என்பதை அவர் காதல் இலராக என மாற்றி 'அவர் நம்கண் காதல் இலராகவும்' அதாவது தன்னைத் தலைவர் நினைக்கவில்லை எனப் பரிமேலழகர் உரை பகன்றார். காலிங்கர் 'நினைந்து வந்து அருளுவதோர் காதல் என்பது ஒன்று அவர் இலார்' என உரை வரைந்தார். பழைய உரை ஒன்று 'அவர் காதல் வைத்து வாராதிருக்கவும்' எனப் பொருள் தரும்.
‘காதலரவர்’ என்பதனை ஒரு சொல்லாகவே கொண்டு காதலர் இங்கே இல்லாதிருக்க எனக் கா சு பிள்ளை உரைப்பர். இப்பொருளும் ஏற்கும். அதற்குக் .... களவின் கண் கன்றிய காதலவர் (286) ..... நுண்ணிய எங்காதலவர் (1126) நெஞ்சத்தார் காதலவராக..... (1128) முதலிய சொல்லாட்சி காண்க ( இரா சாரங்கபாணி).

'காதலவரிலர் ஆக' என்பதற்கு 'நம்கண் காதல் இலராக' என்பதைவிட 'காதலர் இங்கே இல்லாதிருக்க' என்ற பொருள் பொருத்தம்.

என் நெஞ்சே வாழ்வாயாக! காதலர் இங்கே இல்லாதிருக்க நீ அவரை நினைந்து வருந்துவது அறியாமையாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நெஞ்சே! அவர்தான் நம்மோடு இல்லை என்பது உனக்குத் தெரியாதா? ஏன் இன்னும் நினைக்கிறாய் எனத் தலைவி புலம்பும் நெஞ்சோடுகிளத்தல் பாடல்.

பொழிப்பு

என் நெஞ்சே! வாழ்வாயாக! அவர் நம்மோடு இல்லாதிருக்க நீ அவரை நினைத்து வருந்துவது நின் அறியாமை.