இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1240கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1240)

பொழிப்பு: காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது,

மணக்குடவர் உரை: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.
('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.)

வ சுப மாணிக்கம் உரை: நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின் பசலையோ வருத்தப்பட்டது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.


கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே:
பதவுரை: கண்ணின்-கண்ணினது; பசப்பு-நிறம் வேறுபடுதல்; ஓ-அசைநிலை; பருவரல்-துன்பம்; எய்தின்றே-உற்றதே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று;
பரிப்பெருமாள்: கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று;
பரிதி: கண்ணீரும் உடம்பிற் பசலையும் கூடி விதனம் செய்யும்;
காலிங்கர்: தோழீ! அவர் பிரிவின்கண் பசந்த பசப்புத் தான் பெரிதும் இடர் உறுகின்றதே காண்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது;
பரிமேலழகர் குறிப்புரை: 'அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம்.

'கண்ணிலுண்டான பசலை துன்பமுற்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முயங்கிய கைகளைத் தளர்த்திய அளவில் மென்காற்று ஊடறுத்து வீசுதலான் வந்த கண்ணின் பசப்பு', 'இது என் கண்களின் மயக்கந்தானோ (அல்லது அவள் உண்மையாகவே இப்போது துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறாளோ)', 'கண்களின் பசப்பு நாணி வருத்தமடைந்தது', '(குளிர்ந்த காற்று நுழைய வந்த) கண்ணின் பசப்போ துன்பம் உற்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது இப்பகுதியின் பொருள்.

ஒண்ணுதல் செய்தது கண்டு:
பதவுரை: ஒண்-மிளிர்கின்ற; நுதல்-நெற்றி; செய்தது-விளைத்தது; கண்டு-நோக்கி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு.
பரிப்பெருமாள்: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை மூன்றினானும் சொல்லியது: 'யான் பிரிவதாக நினைத்து முயக்கத்தின் கண்ணே உடம்பை அகற்ற, அதனை அறிந்து கண் பசந்தது; அதன் பின் முயங்கிக்கொண்டு கிடந்த கைகளை விடுவிக்க நுதல் பசந்தது; அவ்வளவே அன்றி, நுதல் பசந்தபின்பு கண்ணின் பசலை போய், மற்றொன்று ஆம்படி ஆயிற்று; ஆதலான் யான் செல்லும் அளவும் ஆற்றுங்கொல்லோ' என்று வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியவாறு.
இவை அவர்வயின்விரும்பலின் பின் கூறற்பாலது. உறுப்பு நலன் அழிந்தமை கூறிய ஆகலான் ஈண்டுச் சேரக் கூறப்பட்டன என்க. பருந்து விழுக்காடு.
பரிதி: நாயகர் ஒண்ணுதலாளுக்குச் செய்த கொடுமையுடன் கூடி என்றவாறு.
காலிங்கர்: அஃது என்னை எனில், என்னது ஒள்ளிய நுதலானது தனது ஒண்மை இழந்து ஒருங்கு பசப்பு ஊர்ந்தமை கண்டு பொறுக்கல் ஆற்றாது என்றவாறு.
பரிமேலழகர்: தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு.
பரிமேலழகர் குறிப்புரை: 'அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும், யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.

'ஒள்ளியநுதல் விளைத்த பசப்பைக் கண்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனக்குப் பக்கத்திலிருக்கும் ஒளிமிக்க நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு துன்பம் எய்தியது', 'என் காதலி முன் (என்னைப் பிரியும் போதெல்லாம்) படும் துன்பத்தை இப்போதும் பட்டுக் கொண்டிருப்பது போலவே எனக்கு முன் தோன்றி எனக்குத் துன்பமுண்டாக்குகிறது', 'அவளது ஒளி பொருந்திய நெற்றி பார்த்து', 'ஒளி பொருந்திய நெற்றி, பசப்பு அடைந்ததைக் கண்டு' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலியின் மிளிரும் நெற்றியில் உண்டாகிய பசப்பைக் கண்டதால் கண்ணில் உண்டாகியிருந்த பசலை துன்புற்றது என்கிறான் தலைவன்.

ஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது பாடலின் பொருள்.
கண்களின் பசப்பு ஏன் துன்பம் அடையவேண்டும்?

கண்ணின் பசப்போ என்ற தொடர்க்குக் கண்ணால் உண்டான பசலையோ என்பது பொருள்.
பருவரல் என்ற சொல் துன்பம் என்ற பொருள் தரும்.
எய்தின்றே என்ற சொல் எய்தியதே என்ற பொருளது.
ஒண்ணுதல் என்ற சொல்லுக்கு ஒளி பொருந்திய நெற்றி என்று பொருள்.
செய்தது கண்டு என்ற தொடர் விளைத்தது நோக்கி என்ற பொருள் தருவது (இங்கு பசலை உண்டானது குறித்தது).

கைகள் நெகிழ்ந்ததால் நெற்றி பசலை உற்றதைக் கண்டு, குளிர்காற்று ஊடறுத்ததால் பசலை உண்டாகிய கண்கள் வருத்தம் கொள்ளலாயிற்று.

பொருள் தேடி நெடுந்தொலைவு பிரிந்து சென்றுள்ள தலைவன் செயல் முடித்து இல்லம் திரும்பும் சமயம் இது. அதுபொழுது தான் தன் காதலியைப் பிரிந்து வரும் நேரத்தில் நிகழ்ந்தனவற்றை நினைக்கிறான். தலைவனும் காதலியும் தழுவி நிற்கின்றனர். இறுக அணைத்த கைகள் சிறுது தளர்ந்தன; அப்பொழுது உடம்பொடு உடம்பு ஒட்ட இருந்தவர்களது நடுவில் இடைவெளி உண்டாகவில்லை. ஆனால் அதற்கே தலைவியின் நுதல் பசப்புற்றது. அடுத்த கணம் கைகள் தளர்ந்து விலகிச் செல்லும்போது குளிர்காற்றை உணர்ந்த தலைவி இடைவெளி உண்டாகியதை அறிந்து அவன் பிரிந்து செல்லப்போகிறானே என வருந்தி அவளது கண் பசலை அடைந்தது. நெற்றியானது தன்னை முந்தி பசலையுற்றதே என எண்ணி கண்ணின் பசலை வருந்தியது. இவ்வாறு தலைவியின் மற்ற உறுப்புக்களும் தான் பிரிந்து வந்த பின்பு ஒன்றை ஒன்று தொடர்ந்து நலனழியத் தொடங்கியிருக்குமோ என அஞ்சிய தலைவன் விரைந்து வீடு திரும்பி தலைவியின் துயர் தீர்க்க வேண்டும் என எண்ணுகிறான்.

தலைவன் பிரிந்தபின் தலைவியின் நெற்றியும் கண்ணும் பசந்து நலனழிந்ததைக் கூறுவது இப்பாடல். இதை முந்தைய இரண்டு குறட்பாக்களையும் ஒருங்கிணைத்துப் பொருள் காண்பது நன்று. அந்த வகையில் இது ஒரு வேறுபாடான குறள். இவ்வதிகாரத்து முந்தைய குறட் கருத்துக்களைத் தழுவியே பரிப்பெருமாளும் பரிமேலழகரும் உரை தந்தனர். 'இறுதி மூன்று குறள்களும் (1238, 1239, 1240) வரிசை மாற்ற முடியாதபடி, ஓர் இயைபுபடத் தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளாக அமைந்துள்ளன' என்பார் தமிழண்ணல்.நாமக்கல் கவிஞர் இக்குறளுக்கான விளக்கவுரையில் 'இந்த மூன்று குறள்ககளின் கருத்துக்கள் என்னவெனில்: 'இறுகத் தழுவிக் கட்டி யணைத்துக் கொண்டிருந்த என் கைகளைத் தளர்த்தினாலுமே என் காதலி பசந்து வருந்துவாளே; இப்போது இவ்வளவு நாளாக என்னைப் பிரிந்த அவள் எப்படி யிருக்கிறாளோ' என்றும், 'நாங்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு படுத்திருக்கும்போது எங்களுக்கிடையில் காற்று நுழையக்கூடிய சந்துண்டாலும் அதை விரும்பாது அழுது மழைபோல் கண்ணீர் விட்டுவிடுவாளே; இப்போது இத்துணை நாளும் என்னைப் பிரிந்த அவள் எப்படியிருக்கிறாளோ' என்றும், 'அவள் இவ்வேளையில் அப்படிப் பசந்து துன்பப்படுவது போல் என் கண் முன்னால் இதோ தோற்றமுண்டாகிறது. அது என் கண்களின் மயக்கமோ அல்லது உண்மையாகவே அவள் அங்கே பசந்து வருந்திக்கொண்டுதான் இருக்கிறாளோ என்னவோ' என்றும் வெளியூரிலிருக்கிற கணவன் நினைக்கிறான்' என உரைத்தார்.

தலைமகன் தனக்குள்ளே சொல்லியதெனப் பரிமேலழகரும் தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது எனப் பரிப்பெருமாளும் தலைமகள் தோழிக்குக் கூறியதாகக் காளிங்கரும் வேறுபடக் கூறினர்.

கண்களின் பசப்பு ஏன் துன்பம் அடையவேண்டும்?

நெற்றி நிறமிழக்கிறது; அதைப் பார்த்துக் கண்களும் வாடுகின்றன என்கிறது பாடல். கண்களின் எதற்காகத் துன்பம் அடைந்தது என்பதற்கு நெற்றியின் பசப்புக்காக கண்ணின் பசப்பு இரங்கி வருந்தியது அதாவது நல்ல நெற்றி பசலை அடைந்ததைப் பார்த்துக் கண்ணின் பசலை வருத்தப்பட்டது என்றும், கண்ணின் பசலை நெற்றியின் பசலையை முந்தவில்லையே என்பதற்காக வருந்தியது என்றும் கண்ணின் பசப்பு தாம் மென்மையற்றிருக்கிறோமே என வருந்தின என்றும் மற்ற உறுப்புகளும் பசப்புறுமே என்பதற்காகவும் துன்பம் உற்றது என விளக்கினர்.
இவற்றுள் 'ஒள்ளிய நுதலானது தனது ஒண்மை இழந்து ஒருங்கு பசப்பு ஊர்ந்தமை கண்டு பொறுக்கல் ஆற்றாது கண் துன்பம் அடைந்தது' என்றது பொருந்தும்.

கண்களின் பசப்பு நெற்றியின் பசப்புக்காக இரங்கி வருந்தியது.

ஒளி பொருந்திய நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணிலுண்டான பசப்போ துன்பம் உற்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கண்ணை முந்திக்கொண்டு நெற்றி உறுப்புநலனழிதல்சொல்லும் பாடல்.

பொழிப்பு

மிளிரும் நெற்றியில் தோன்றிய பசப்பைக் கண்டு கண்ணின் பசலையோ வருத்தப்பட்டது.