இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1236தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1236)

பொழிப்பு: வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றை காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

மணக்குடவர் உரை: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும், நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தொடியோடு தோள்நெகிழ - யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய; அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து நோவல் - அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன்.
(ஒடு - மேல் வந்த பொருண்மைத்து. 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: என் காதலரை நான் கொடியவர் என்று சொல்லிவிட்டதற்கு வருத்தப்படுகிற என் மனம், என்னுடைய கை வளையல்கள் கழன்று விழும் படி என் தேகம் இளைத்துப் போனதற்கு வருத்தப்படவில்லையே!


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து.


தொடியொடு தோள்நெகிழ:
பதவுரை: தொடியொடு-கைவளையோடு; தோள்-தோள்; நெகிழ-மெலிய.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்;
பரிப்பெருமாள்: வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்;
பரிதி: தொடியொடு தோள் வாட;
காலிங்கர்: தோழீ! இங்ஙனம் தொடியுடனே தோளும் கூட நெகிழ அதற்கு யான் உடம்பட்டிருப்பது என் எனின்;
பரிமேலழகர்: (தான் ஆற்றுதற் பொருட்டு இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) யான் ஆற்றவும், என்வயத்தவன்றித் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிய;
பரிமேலழகர் குறிப்புரை: ஒடு - மேல் வந்த பொருண்மைத்து.

'வளையோடே தோள்கள் பண்டுபோல் இறுகாது நெகிழவும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வளையலும் தோளும் நெகிழ்வதால்', 'பிரிவாற்றி இருக்கவும் வளைகழலத் தோள்கள் மெலிவதற்கே யான் வருந்துகின்றேன்', 'வளைகள் கழலும்படி என் கை மெலிவடைந்ததைப் பார்த்து', 'நான் பொறுத்திருக்கவும் வளையல்கள் கழலுமாறு தோள்கள் மெலிய', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் தோள்கள் மெலிந்து அணிகள் கழலவும் என்பது இப்பகுதியின் பொருள்.

நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து:
பதவுரை: நோவல்-நொந்து கொள்வேன்; அவரை-அவரை; கொடியர்-தீயவர்; என-என்று; கூறல்-சொல்லுதல்; நொந்து-வருந்தி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபடத் தலைமகள் சொல்லியது.
பரிப்பெருமாள்: நினக்குச் சொல்லாது யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆற்றாளெனக் கவன்றதோழிக்கு ஆற்றவலென்பதுபட சொல்லியது.
பரிதி: நோவோம். நாயகர் விட்டுப் பிரிந்தால் கொடியர் இவர் என்று சொல்லுதற்கு என்றவாறு.
காலிங்கர்: என்மாட்டு அன்பு உடையவரைக் கொடியர் என்று இவை பிறர்க்கு உரைத்தலை உள்ளுள்ளே பெரிதும் நொந்து என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றைக் கண்டு, நீ அவரைக் கொடியர் எனக் கூறுதலைப் பொறாது யான் என்னுள்ளே நோவா நின்றேன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'யான் ஆற்றேனாகின்றது அவர் வாராததற்கன்று; நீ கூறுகின்றதற்கு' என்பதாம்.

'யானே நோவேன்: நீ அவரைக் கொடியரென்று சொல்லுகின்றதற்கு நொந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரைக் கொடியரெனக் கூறக்கேட்டு வருந்துகிறேன்', 'அதற்காக என் காதலரைக் கொடுமையுடையவர் என்று நொந்து கூறாதே', 'நீ அவரைக் கொடியவரென்று சொன்னதை என்னுள்ளம் பொறுக்கமாட்டாமையால், யான் வருந்துகின்றேன்', 'அவற்றைக் கண்டு நீ அவரைக் கொடியர் என்று கூறுதலைப் பொறாது நான் வருந்துவேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காதலரைக் கொடியரென்று கூறியதற்குப் பொறுக்கமாட்டாமையால் வருந்துவேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தோள்கள் மெலிவதையும் அணிகள் கழல்வதையும் கண்டு, என் காதலரைக் கொடியவர் என்று கூறியதை ஆற்றமாட்டாமல் நான் வருந்துவேன்.

என் தோள்கள் மெலிந்து தோள்அணிகள் கழலவும் காதலரைக் கொடியரென்று கூறியதற்கு உள்ளம் பொறுக்கமாட்டாமையால் வருந்துவேன் என்பது பாடலின் பொருள்.
'நோவல்' என்றது எதற்காக?

தொடியொடு என்றதற்கு வளைகளுடன் என்பது பொருள்.
தோள்நெகிழ என்ற தொடர் தோள்கள் மெலிய என்ற பொருள் தரும்.
அவரை என்ற சொல் அவளது காதலரை என்னும் பொருளது.
கொடியர் எனக்கூறல் என்ற தொடர்க்குக் கொடுமையானவர் என்று கூறியதை என்று பொருள்.
நொந்து என்ற சொல் வருந்தி எனப்பொருள்படும்.

என் தோள்கள் மெலிந்து தோள் அணிகளும் கழன்று விழுவதால் அவரைக் கொடியவர் என்று கூறிவிட்டேனே! அதை நினைத்து வருந்துகின்றேன்.

காதலர் பிரிந்து சென்றிருக்கிறார். ஊண் உறக்கம் இன்றி வருந்திக் கொண்டிருக்கிறாள் தலைவி. அவரையே நினைத்துக் கொண்டிருந்ததால் உடல் மெலிந்தாள். அவர் வரவு நீட்டித்துக்கொண்டே போவதாக இப்பொழுது அவள் உணர்கிறாள். அவளால் பொறுக்கமுடியவில்லை. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள் (குறள் 1235) என்று முந்தைய பாடலில் தனது மெலிந்த உடலும் அதனால் அதிலிருந்து நழுவி நழுவி விழும் தோள்அணியும் கொடியார் கொடுமை உரைக்கும் என்று ஆற்றாமல் மொழிந்தாள். தன் காதலனைக் ‘கொடியவர்‘ என்று இவளே பலமுறை தனக்குள் எண்ணி எண்ணி நொந்தது உண்டு. இப்பொழுது ஏன் அப்படி அவரைக் கொடியர் என்று பழித்து கூறினோம் என்று வருந்துகிறாள். இப்படி ஒரு சொல்லை உதிர்த்து விட்டோமே என அவரைப் பழித்துச் சொன்னதை நினைத்து வேதனை அடைகிறாள். மிகையான வருத்தத்தில் உண்டான அவளது முரண்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடுகள் இவை.

பெரும்பான்மை உரையாசிரியர்கள் தலைவன் கொடுமையினை தோழி சுட்டிக் காட்டுவதாகவும் தலைவி, 'தலைவன் பிரிவினை யான் ஆற்றவும், என்வயமில்லாமல் தொடிகள் கழலுமாறு தோள்கள் மெலிகின்றன. அவற்றைக் கண்டு நீ அவரைக் கொடியர் எனக்கூறலைப் பொறாமல், யான் என்னுள்ளே வருந்தா நிற்கின்றேன்' என்று கூறி, தன் தோழியினையும் தலைவன் பொருட்டாகக் கடிகின்ற தலைவியின் பெருமையினையும் அருமையினையும் அறிகின்றோம் என்ற வகையில் உரை செய்வர். தன்னை வருந்த விட்டதற்காக வருந்தாமல் தன் காதலனைக் கடிந்துரைப்பதைக் கேட்டு வருந்துவதால் தன்னினும் மேலாகத் தன் தலைவனைக் கருதும் இயல்பு வெளிப்படுகின்றது என்பர். 'யான் ஆற்றேனாகின்றது காதலர் வராததிற்கன்று; நீ அவரைக் குறைகூறுகின்றதற்கே யென்பதாம்' எனவும் கூறுவர்.
தொடியொடு தோள் நெகிழ நோவல் (நோகின்றேன்) அவரை நொந்து கொடியரெனக் கூறல் (கூறாதே) எனப் பெரிதும் கிடந்தாங்கே வைத்துப் பொருள் கூறிய மு ரா கந்தசாமிபிள்ளை உரை சிறப்புடையது.’ என்பார் இரா சாரங்கபாணி.

'நோவல்' என்றது எதற்காக?

'நோவல்' என்ற சொல்லுக்கு நோவேன், நோவோம், யான் உடம்பட்டிருப்பது, நோவா நின்றேன், நோகின்றேன், வருந்துகிறேன், நோகவில்லை, வருந்திக் கூறாது விடுக, வருந்துகின்றேன், வருந்துவேன், வருத்தம் மேலிடுகிறது, நொந்து போகிறேன், நொந்துகொள்ள வேண்டியிருக்கிறது என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'நோவேம் இவர்தாம்’ என்று பரிதியும் ‘நேர்வல்’ என்று காளிங்கரும் பாடங்கொண்டனர். ‘நோவல் என்பதற்கு நோகவில்லை என்று நாமக்கல் இராமலிங்கம் உரை செய்தார்.
புள்ளி இட்டெழுதும் வழக்கமின்மையால் தோன்றிய பாட வேற்றுமைக்கு இக்குறள் ஓர் எடுத்துக்காட்டு, ‘தொடியொடு தோள் நெகிழ நோவல்’ என்னும் இக்குறட்பகுதியில் ‘நோவல்’ எனப் பரிமேலழகர் கொள்ள, ‘நேர்வல்’ எனக் காளிங்கர் கொள்வர். ‘நோவல்’ எனும் பாடமே பொருட் சிறப்பினது (இரா சாரங்கபாணி).

தாமே அவரைக் கொடியார் எனக் கூறிவிட்டோமே என தலைவி தன்னைத்தானே கடிந்து அதற்காக நோவல் - நோகின்றேன் என்கிறாள்.

என் தோள்கள் மெலிந்து தோள்அணிகள் கழலவும் காதலரைக் கொடியரென்று கூறியதற்கு உள்ளம் பொறுக்கமாட்டாமையால் வருந்துவேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தோள் உறுப்புநலனழிதல் அவரைக் கொடியர் என்று கூறும்படி ஆயிற்றே!

பொழிப்பு

தோள் மெலிந்து தோள்வளையும் நெகிழ்வதால் காதலரைக் கொடியர் என்று கூறியதற்குப் பொறுக்கமுடியாமல் வருந்துவேன்.