இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1234



பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1234)

பொழிப்பு (மு வரதராசன்): துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

மணக்குடவர் உரை: துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடா நின்றது என்றவாறு.
பசுத்த வளை-மரகததினாற் செய்த வளை 'தோள் அழகு அழிதலேயன்றி மெலிவதும் செய்யாநின்றது' என்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.
(பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: துணையாயிருந்த காதலர் இப்பொழுது பிரிந்ததால் பழைய அழகிழந்து வாட்டமுற்ற தோள்கள் பருமன் குறைந்து மெலிவுற்றமையின் அவற்றின்மேல் அணியப்பெற்ற பசுமையான தொடிகள் (வளையல்கள்) கழன்று விழுகின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள் பணைநீங்கப் பைந்தொடி சோரும்.

பதவுரை: பணை-பெருத்தல்; நீங்கி-இழந்து; பைம்-பசும்பொன்னாலாகிய; தொடி-கைவளை, தோள் அணி; சோரும்-கழலும், நெகிழும்; துணை-(இங்கு)துணைவர்; நீங்கி-பிரிந்ததால், நீங்குதலால்; தொல்-முன்னிருந்த, பழைய; கவின்-இயற்கை அழகு; வாடிய-வாட்டமுற்ற; தோள்-தோள். .


பணைநீங்கிப் பைந்தொடி சோரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('பணைநீங்கப் பாடம்): பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடா நின்றது என்றவாறு;
மணக்குடவர் குறிப்புரை: பசுத்த வளை-மரகதத்தினாற் செய்த வளை.
பரிப்பெருமாள்: பெருமை நீங்குதலானே பசுத்த வளைகளைக் கழலவிடா நின்றது என்றவாறு;
பரிப்பெருமாள் குறிப்புரை: பசுத்த வளை-மரகதத்தினாற் செய்த வளை.
பரிதி: பச்சை மூங்கில் போன்ற அழகும் இழந்து வளையும் நீங்கும்;
காலிங்கர் ('பணைநீங்கப் பாடம்): 'பண்டுபோல் இணையொத்து நில்லாது இன்று பசும் பணையானது வேறுபட்டு நிற்ப, மற்று இப்பசும் பொற்றொடிகளும் நட்பு ஒழிந்து நழுவுகின்றன;
பரிமேலழகர்: (இதுவும் அது.) இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல. [அதற்கு மேலே - செயற்கை யழகே அன்றிப் பழைய இயற்கை யழகையும் இழந்ததற்கு மேலே; இவை - தோள்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது.

'பசுத்த வளைகளைக் கழலவிடா நின்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பருமன் நீங்கி வளையல்களைக் கொட்டும்', 'என் கைகளிலுள்ள பசும்பொன் வளையல்கள் தாமாகவே கழன்று விடுகின்றன', 'தமது பருமை குறைந்து பசிய வளையல் கழலப்பெற்றன', 'மெலிந்து பசிய வளையல்கள் கழலுகின்றன', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பருமை இழந்து பசியவளைகள் கழன்றுவிடும் நிலையில் உள்ளன என்பது இப்பகுதியின் பொருள்.

துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் (துணை நீங்கத்' பாடம்): துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள்.
மணக்குடவர் குறிப்புரை: 'தோள் அழகு அழிதலேயன்றி மெலிவதும் செய்யாநின்றது' என்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பரிப்பெருமாள்: துணைவர் நீங்குதலானே பழைய அழகு இழந்ததோள்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'வாடுதலேயன்றி மெலிவதும் செய்யாநின்றன' என்று தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
பரிதி: துணைவராகிய காதலர் பிரிய அழகு வற்றியதோள் என்றவாறு.
காலிங்கர் (துணை நீங்கத்' பாடம்): என்காதல் துணை சிறுது கையகல இதனைத் தூற்றுவேம் அல்லம்' என்னாது தொல்லைக் கவின் வாடிய தோள்களானவை. காலிங்கர் குறிப்புரை: எனவே இது செய்யத் தாமும் தமக்கு அடுத்த வினையும் திருவும் இழந்தமை கண்டு இன்புற்றாள் என்றவாறு.
பரிமேலழகர்: அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம். [அவற்றை-காதலரது அன்பில்லாமையும் பொய்ம்மையையும்]

'துணைவர் நீங்குதலானே பழைய அழகு அழிந்த தோள் பெருமை நீங்குதலானே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துணைவரைப் பிரிந்து அழகு வாடிய தோள்கள்', 'காதலரைப் பிரிந்த துயரத்தால் முன்னிருந்த அழகையும் மினுமினுப்பையும் வழவழப்பையும் இழந்து மெலிந்து விட்ட', 'துணைவரைப் பிரிந்தமையாற் பழைய இயற்கை யழகுகெட்டு மெலிந்த நின் தோள்கள்', 'துணைவரை நீங்கிப் பழமையாகப் பெற்றுள்ள அழகை இழந்த தோள்கள்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

துணைவர் நீங்கியதால் முன்னிருந்த அழகை இழந்த (தலைவியின்) தோள்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துணைவர் நீங்கியதால் முன்னிருந்த அழகை இழந்த தலைவியின் தோள்கள் பணைநீங்கிப் பசியவளைகள் கழன்றுவிடும் நிலையில் உள்ளன என்பது பாடலின் பொருள்.
'பணைநீங்கி' என்ற தொடர் குறிப்பது என்ன?

துணைவர் நீங்கினார்; உடலழகு குறைவுற்றது.

துணைவரின் பிரிவால் தலைவி தன் பழைய அழகை இழந்தாள்; பருத்த தோள்கள் மெலிந்தன; பசும்பொன் தோள்வளைகள் கைகளை விட்டுக் கழன்று விழுகின்றன.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகக் கணவர் பிரிந்து சென்று நாட்கள் பலவாயிற்று. பிரிவை ஆற்றவொண்ணாமல் தலைவி வாடி வதங்குகிறாள். ஊண், உறக்கம் போதுமானதாக இல்லை.
தலைவரை நினைத்து அழுதலால் கண்கள் ஒளியிழந்து மலர்களைப் பார்க்கவும் நாணுகின்றன; அவை நீர் வடித்து, விரும்பும் கணவர், அன்பு செய்யாமையை வெளியார்க்கு சொல்கின்றன; அவரை மணந்தபின்னர் மகிழ்வால் பெருத்திருந்த தோள்கள் இளைத்து அவர் பிரிவை நன்கு அறிவிக்கின்றனவே!
இவ்வாறு தலைவி எண்ணி வருந்திக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
கணவரது பிரிவின் துயரைத் தாங்கமுடியாமல் இருக்கிறாள். அவரை மணந்தபின்னர் மகிழ்வால் பருத்திருந்த தோள்கள் வாட்டமுற்றன; பிரிவினால் வாடுவதால் தலைவியின் உடல் மெலிந்து இயற்கை அழகு கெட்டுவிட்டது பெருத்திருந்த தோள்களால் கூடிய செயற்கை அழகு மட்டுமன்றி அவளது முன்னிருந்த இயல்பான உடலும் பிரிவால் இளைத்து பொலிவு குன்றியது. இதனால் அவள் உடலில் நன்கு பொருந்தியிருந்த பசுமைமிக்க வளையல்கள் நழுவுகின்றன. அவளது பூரித்த தோள்களில் முன்னிருந்த அழகு இல்லாது மறைந்துவிட்டது.

தொடி, வளை ஆகிய அணிகள் காமத்துப்பாலில் பன்முறை குறிப்பிடப்படுகின்றன. தொடி என்பது தோளோடு தொடர்புபட்டு வரும் இடங்களில், தோள்வளையைச் சுட்டும். பைந்தொடி என்ற சொல்லுக்கு மணக்குடவர் பசுத்த வளை எனப் பதவுரை தந்து பசுத்த வளை என்பது மரகதத்தினாற் (emerald) செய்த வளை என்று விளக்கம் செய்கிறார். பரிமேலழகர் பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி எனப் பொருளுரைத்தார்.
இப்பாடலிலுள்ள துணை என்ற சொல் துணைவரை அதாவது கணவரைக் குறித்து வந்தது. துணை என்பது இங்கு இணை என்னும் பொருள் தருகிறது. அதாவது கணவர்-மனைவி இவர்களில் மேல் கீழ், உயர்வு தாழ்வு இல்லை. இருவருக்கும் உரிய ஒப்புரிமையை -அவன் அவளவன்தானே- என்பதை நிலைநாட்டும் வகையில் இக்குறளில் துணை என்ற சொல் ஆளப்பட்டது. இதனால் வள்ளுவர் பெண்ணடிமை பேணுபவரல்லர் என்று புலனாகிறது என்பர்.
இதற்கு அடுத்த குறளின் (1235) இரண்டாம் அடியும் இப்பாடலின் 'தொல்கவின் வாடிய தோள்' என்ற ஈற்றடியை மாறாமல் அப்படியே கொண்டுள்ளது.

'பணைநீங்கி' என்ற தொடர் குறிப்பது என்ன?

'பணைநீங்கி' என்ற தொடர்க்குப் பெருமை நீங்குதலானே, பச்சை மூங்கில் போன்ற அழகும் இழந்து, பசும் பணையானது வேறுபட்டு நிற்ப, பெருமை இழந்து, பருத்த தன்மை கெட்டு மெலிந்து, பருமனை இழந்து, பருமன் நீங்கி, பருமன் குறைந்து, மூங்கிலின் தன்மை போன்ற மினுமினுப்பும் வழுவழுப்பும் போய், பருமை நீங்கி, மெலிந்து, செழிப்பு குறைந்து, பெருமைகுன்றி என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பணை-பணைத்தல்-பருத்தல் என்ற பொருள் தருவது. பணைநீங்கி என்ற தொடர் பருமை குறைந்து அதாவது மெலிந்து எனப் பொருள்படும்.
‘பணை’ என்பதற்கு மூங்கில் எனப் பொருள் கொண்டு பரிதியும் காலிங்கரும் உரை செய்தனர். நாமக்கல் இராமலிங்கம் 'பணை-மூங்கில். பணை நீங்கி-மூங்கிலின் தன்மை போன்ற மினுமினுப்பும் வழுவழுப்பும் போய். பெண்களின் கைகளை மூங்கிலுக்கு ஒப்பிடுவதே வழக்கம்' எனக் கூறுவார். இத்தொடர்க்கு மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோரைப் பின்பற்றிப் பரிமேலழகர், 'பெருமை இழந்து' எனப் பொருள் கொண்டு, 'பெருமை இழத்தல் - மெலிதல்' என விளக்கவும் செய்கிறார். இவர் உரை கணவரது பிரிவால் தலைவி பெருமைப் படக்கூடிய தன்னுடைய உடல் அழகினை இழந்துள்ளாள் எனப் பொருள்படுகிறது.
பணை என்றதற்கு இங்கு பருமை என்ற பொருள் சிறக்கும்.

'பணைநீங்கி' என்ற தொடர்க்குப் பருமை நீங்கி அதாவது மெலிந்து என்பது பொருள்.

துணைவர் நீங்கியதால் முன்னிருந்த அழகை இழந்த தலைவியின் தோள்கள் பருமை குறைந்ததால் பசிய வளைகள் கழன்றுவிடும் நிலையில் உள்ளன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவரது பிரிவால் பழைய அழகு நீங்கின தலைவியின் தோள் உறுப்புநலனழிதல்.

பொழிப்பு

துணைவரைப் பிரிந்து முன்னிருந்த அழகு குறைந்த தலைவியின் தோள்கள் பருமன் நீங்கி தோள்வளைகள் கழன்று விடுவதுபோல் உள்ளன.