இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1232



நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்

(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1232)

பொழிப்பு (மு வரதராசன்): பசலைநிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வனபோல் உள்ளன.

மணக்குடவர் உரை: முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள்.
இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) பசந்து பனி வாரும் கண் - பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் - நம்மால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன;
இனி நீ ஆற்றல் வேண்டும். சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

சி இலக்குவனார் உரை: பசப்பு அடைந்து நீர் வடிக்கின்ற கண்கள் விரும்பிய காதலர் அன்பு செய்யாமையைப் பிறர்க்கு அறிவிப்பன போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பசந்து பனிவாரும் கண் நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்.

பதவுரை: நயந்தவர்-விரும்பிய காதலர், விரும்பப்பட்டவர்; நல்காமை-அருளாமை (பிரிதல்); சொல்லுவ-உரைப்பன; போலும்-போல நின்றன; பசந்து-நிறவேறுபாடுற்று; பனி-நீர்; வாரும்-சொரியும்; கண்-கண்கள்.


நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோ லாகாநின்றன;
பரிப்பெருமாள்: முன்பு நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவன போலா நின்றன;
பரிதி: கூடிய நாயகர் பிரிந்து வருத்துவித்தார் என்பதைச் சொல்லுதற்கு ஒக்கும்;
காலிங்கர்: தோழீ! நம்வயின் நயம் பெரிது உடையவரை நல்காமை படைத்துச் சொல்லுவனபோலும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நம்மால் நயக்கப்பட்டவரது நல்காமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன; [நல்காமையை-அருள் செய்யாமையை]
பரிமேலழகர் குறிப்புரை: சொல்லுவ போறல்: அதனை அவர் உணர்தற்கு அனுமானமாதல். 'நயந்தவர்க்கு' என்று பாடம் ஓதுவாரும் உளர். [அதனை-நல்காமையை; அவர்-பிறர்; அனுமானம்-உய்த்துணர்தற்குக் காரணம்]

'நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்குச் சொல்லுவ போல நின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரின் கொடுமையைக் காட்டுவன போலும்', 'நம்மால் விரும்பப்பட்ட காதலரது அன்பற்ற கொடுமையைப் பிறர்க்கு அறிவிப்பன போலும்', 'என் காதலர் இன்னும் வரவில்லையென்பதை (நான் சொல்லாமலும்) தாமே பிறருக்கு அறிவிப்பனவாக இருக்கின்றன', 'காதலர் அருள் செய்யாமையைப் பிறர்க்குச் சொல்லுவனபோலும்! ஆதலால் நீ ஆற்றவேண்டும', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விரும்பியவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்கு அறிவிப்பன போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

பசந்து பனிவாரும் கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.
பரிப்பெருமாள்: பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண்ணின் நீர் அலராகா நின்றதென்று அவள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது.
பரிதி: பசலையும் நீர் மாறாத கண்ணும் என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் பசந்து பண்டை நலன் அழிந்து கலுழ்ந்து நீர் சோரும் என் கண்;
காலிங்கர் குறிப்புரை: எனவே அவரைத் தான் இயற்படமொழிந்தமை பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: பசப்பெய்தன்மேல் நீர் வார்கின்ற நின் கண்கள்; [நீர்வார்கின்ற -அழுகின்ற]
பரிமேலழகர் குறிப்புரை: இனி நீ ஆற்றல் வேண்டும்.

'பசப்புற்று நீர்சொரிகின்ற கண்கள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோகை நிறம் பெற்று அழுகின்ற கண்கள்', 'பசப்பு நிறம் எய்தி நீர் பெருக்கும் கண்கள்', 'பசந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிற என் கண்கள்', 'நிறம் வேறுபட்டுக் கண்ணீர் விடுகின்ற நின் கண்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அழகுகெட்டு நீர் பெருக்கும் கண்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அழகுகெட்டு நீர் பெருக்கும் கண்கள், நயந்தவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்கு அறிவிப்பன போலும் என்பது பாடலின் பொருள்.
'நயந்தவர்' யார்?

கண்ணீர்! கண்ணீர்! அழுதழுது தலைவியின் கண்கள் அழகிழந்தன.

விரும்பியவர் திரும்பிவந்து அருள் செய்யாமையை அழகுகெட்டு நீர் சொரியும் கண்களே பிறர்க்குக் காட்டிக் கொடுத்துவிடும் போல்வனவாக உள்ளன.
காட்சிப் பின்புலம்:
கணவர் கடமை காரணமாக நெடுந்தொலைவு சென்றிருக்கிறார். தலைவிக்கு அவரது பிரிவு பொறுக்கமுடியாததாக இருக்கிறது. எந்த நேரமும் அவரையே நினைந்து அழுது கொண்டிருந்ததால் கண்கள் ஒளியிழந்து வாட்டமுற்றிருக்கின்றன. முன்பு மலர்கள் தன் கண்களைப் பார்த்து வெட்கப்படும் அளவு அழகாயிருந்தன. இப்பொழுது அம்மலர்களைப் பார்க்க தன் கண்கள் நாணுகின்றனவே என வேதனை நிறைந்த மனநிலையிலிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
தலைவர் பிரிந்து சென்ற நாளிலிருந்து அவர் நினைவாலேயே இருந்ததால் தலைவிக்குத் தூக்கம் தொலைந்தது. பொழுதெல்லாம் கணவரையே எண்ணி எண்ணி அழுததால் தலைவியின் கண்களிலே சோகை படிந்தது. அவரை நினைந்து கலுழ்ந்து நீர் சொரிந்துகொண்டே இருக்கின்றன கண்கள். 'விரும்பித்தானே என்னை மணந்தார். இப்பொழுது ஏன் விரைந்து இல்லம் திரும்பி அருள் செய்யாமல் இருக்கிறார்' எனக் கேட்டு வருந்திப் புலம்புகிறாள் தலைவி. கண்களின் நிற மாற்றமும் அவற்றிலிருந்து தொடர்ந்து பொழியும் கண்ணீரும் நம்மை விரும்பிய தலைவர் அன்பு செய்யாமையை அனைவருக்கும் உரைப்பன என அவள் வேதனைப்படுகிறாள்.

நல்காமை என்ற சொல்லுக்கு அருளாமை என்பது பொருள். அகத்திணைப் பாடல்களில் ‘நல்காமை’ என்பது அருளாமையைக் குறிக்கும். கணவர் பணி முடித்து விரைவில் திரும்பாமல் இருப்பதை அவள் அன்பு செய்யாமை எனக் கருதுகிறாள். அப்படியே பிறரும் எண்ணுவர் என்று அவள் நினைக்கிறாள். பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் (பசப்புறுபருவரல் 1190 பொருள்: நயமாகப் பேசிப் பிரிவிற்கு என்னை இணங்கச் செய்த காதலரது அருளாமையை ஊரார் தூற்றார் என்றால் பசப்பே ஆயினாள் என்று பெயர் பெற்றாலும் நல்லதே) என்ற பாடலிலும் நல்காமை என்ற சொல் அருள்செய்யாமை என்ற பொருளிலேயே ஆளப்பட்டது.

'நயந்தவர்' யார்?

'நயந்தவர்' என்றதற்கு நம்மை விரும்பினவர், நம்வயின் நயம் பெரிது உடையவர், நம்மால் நயக்கப்பட்டவர், விரும்பி மணந்தவர், காதலர், நம்மால் விரும்பப்பட்ட காதலர், நான் நயந்தவர்-நான் ஆசை கொண்டவர், நம்மை விரும்பிய துணைவர், விரும்பிய காதலர், விரும்பி அணைந்தவர், நம்மால் விரும்பப்பட்டவர், விரும்பிய காதலர், நான் விரும்பியவர், விரும்பியவர் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நயந்தவர் என்றதற்கு நம்மால் நயக்கப்பட்டவர் என்பதினும் நம்மை விரும்பியவர் என்னும் பொருள் பொருந்தும். இச்சொல் கணவர் குறித்து வந்தது.

'நயந்தவர்' என்ற சொல்லுக்கு விரும்பியவர் என்பது பொருள்.

அழகுகெட்டு நீர் பெருக்கும் கண்கள் விரும்பியவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்கு அறிவிப்பன போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிவுத் துயர் காரணமாக சொரியும் நீரால் தலைவியின் கண் உறுப்புநலனழிதல்.

பொழிப்பு

பசப்பு அடைந்து நீர் பெருக்கும் கண்கள் நம்மை விரும்பினவர் நமக்கு அருளாமையைப் பிறர்க்கு அறிவிப்பன போலும்