இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1210விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1210)

பொழிப்பு: திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

மணக்குடவர் உரை: என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இம்மதி.
பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து. (இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.)

பரிமேலழகர் உரை: (வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) மதி-மதியே; விடாது சென்றாரைக் கண்ணினால் காணப்படாதி - என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.
(கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். 'சென்றாரைக் காண'என்றும் குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகினறாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி'என்பது அசை நிலை)

இரா சாரங்கபாணி உரை: மதியே! என் நெஞ்சை விட்டகலாமல் சென்றவரைக் கண்ணினாற் காணுதற்கு விண்ணில் நீ மறையாமல் விளங்குவாயாக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மதி விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி .


விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி :
பதவுரை: விடாஅது-(நெஞ்சை) விடாது; சென்றாரை-போனவரை; கண்ணினால்-கண்ணால்; காண-பார்க்க; படாஅதி-தோன்றா தொழிவாயாக.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை;
மணக்குடவர் குறிப்புரை: பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து.
பரிப்பெருமாள்: என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை;
பரிப்பெருமாள் குறிப்புரை: பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் காணலாமென்பது கருத்து.
பரிதி: விடாமற் சென்றாரைக் கண்ணினால் காணுமளவு அஸ்தனமாகாமல் விளங்கியிருப்பாய்;.
காலிங்கர்: அகத்து ஒரு காலும் விட்டுப் பிரியாது புறத்துப் பிரிந்த எம் காதலர் இன்று இவ்விடத்தில் சேய்த்தின்கணின்று வருவாராயின் என் கண்ணினால அவரைக் கண்டு இன்புறுவேனாக நீ நின்று ஒளிவிட்டு விளங்குவாய்; மறைவாய் அல்லை;
பரிமேலழகர்: (வன்புறை எதிரழிந்தாள் காமம் மிக்க கழிபடரால் சொல்லியது) என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக.
பரிமேலழகர் குறிப்புரை: கண்ணளவான் எதிர்ப்படுதலாவது: மதி இருவரானும் நோக்கப்படுதலின் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல். முதலோடு சினைக்கு ஒற்றுமை உண்மையின். 'சென்றாரைக் காண'என்றும் குறையுறுகின்றாளாகலின், 'வாழி' என்றும் கூறினாள். இனிப் 'படாது' என்பது பாடமாயின், கனவிடைக் கண்ணினாற் காணுமாறு மதிபடுகின்றதில்லை என அதனால் துயில் பெறாது வருந்துகினறாள் கூற்றாக்குக. இப்பொருட்கு 'வாழி'என்பது அசை நிலை.

'நெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ‘படாஅது’ என்பது இவர்கள் பாடம். பரிதியும் காலிங்கரும் 'அவரைக் காணுமளவு மறையாமல் விளங்கியிருப்பாய்' என்றனர். பரிமேலழகர் 'என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துணிந்து சென்றவரைக் கண்டுபிடிப்பதற்குள் நீ மறைந்து விடாதே!', 'பொறுத்துக் கொள். அவசியத்தைக் கருதிவிடாப் பிடியாகப் பிரிந்து போய் இத்துணைத் துன்பமும் உண்டாக்கிவிட்ட காதலர் வருவார். அவரைக் கண்டவுடன் உன் துன்பமெல்லாம் நீங்கிவிடும்', 'என் மனத்தை விட்டு நீங்காது என்னைப் பிரிந்து போனவரை யான் என் கண்ணாலே காணும்படி நீ மறையாதிரு. (காணாக் காலத்தே மறைந்திரு என்ற குறிப்புணர்க.)', 'என் நெஞ்சில் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவாயினும் எதிர்ப்படும் வகை நீ தோன்றாது ஒழிவாயாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் நெஞ்சை விட்டு நீங்காது பிரிந்து போனவரை என் கண்ணாலே காணும்வரை நீ மறையாமல் விளங்குவாயாக என்பது இப்பகுதியின் பொருள்.

வாழி மதி:
பதவுரை: வாழி-வாழ்வாயாக; மதி-திங்களே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மதி.
மணக்குடவர் குறிப்புரை: இது மதியுடன் புலந்து கூறியது. இதனாலே நனவினால் வருத்தமுற்றதும் கூறினாளாம்.
பரிப்பெருமாள்: இம்மதி.
பரிதி: மதியே என்றவாறு.
காலிங்கர்: மதியமே! என்றவாறு.
பரிமேலழகர்: மதியே;

'மதியே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'திங்களே! வாழ்க', 'என் அறிவே! உன்னை வாழ்த்திக் கேட்டுக் கொள்ளுகிறேன்', 'அம்புலியே நி வாழ்வாயாக', 'மதியே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

திங்களே! வாழ்க! என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'நிலவே வாழ்வாயாக! நினைவை விட்டு நீங்காராய்ப் பிரிந்து சென்றவரை நான் கண்ணினால் காணும்வரை மறையாது விளங்குவாயாக!' என தலைவி வேண்டுகிறாள்.

திங்களே! வாழ்க! என் நெஞ்சை விட்டு நீங்காது பிரிந்து போனவரைக் கண்ணினால் காண நீ மறையாமல் விளங்குவாயாக என்பது பாடலின் பொருள்.
'கண்ணினால் காண' குறிப்பது என்ன?

விடாஅது என்ற சொல்லுக்கு நீங்காது என்பது பொருள்.
சென்றாரை என்பது போயினவரை என்ற பொருள் தரும்.
கண்ணினால் காண என்ற தொடர்க்கு கண்களால் பார்க்க என்று பொருள்.
வாழி மதி என்ற தொடர் வாழ்க திங்களே எனப்பொருள்படும்.

என் நெஞ்சில் நீங்காது பிரிந்து சென்றவரை நான் காண்பதற்குள் திங்களே! நீ மறைந்து விடாதே! வாழ்க!

கடமை காரணமாகப் பிரிந்து சென்ற காதலன் திரும்பி வருவதை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் தலைவி தனிமைத் துன்பத்தினால் கண்ணுறங்காது, அவனைப் பற்றி எண்ணியே, இரவுகளைக் கழிக்கின்றாள். ஓர் இரவு வானில் நிலா திரிவதைக் காணுகிறாள். உடன் அவள் உள்ளம் கற்பனையில் ஆழ்ந்து விடுகிறது. 'மதியே! என் அகத்தினின்றும் விடாதிருந்தே பிரிந்துபோன என் காதலரை என் கண் பார்க்கும்வரை நீ மறைந்துவிடாது விளங்குவாயாக' என்று தலைவி திங்களை வாழ்த்துகிறாள். தன் நினைவிலிருந்து நீங்காதவனாகத் தலைவன் இருக்கிறான். அந்தத் தலைவனைக் கண்களால் காணமுடியவில்லை. அவனைக் கண்களால் பார்க்கும்வரை நிலவை மறைந்து விடவேண்டாம் என வேண்டுகிறாள் தலைவி. நிலவைத் துணையாகக் கொண்டு அவள் தன்னை ஆற்றிக் கொள்ள முயல்கிறாள்.

இக்குறளைப் பல திறமாக உரையாளர்கள் விளக்கினர்.
மணக்குடவர், என்னெஞ்சை விடாது போனவரைக் கண்ணினாற் காணுமாறு படுகின்றதில்லை இத்திங்கள். பட்டதாயின் என்கண் உறங்கும்; உறங்கினால் அவரைக் கனவில் காணலாம் என்று தலைவி கூறுவதாக உரை கூறுவார். இவர் ‘படாஅது’ எனத் தொடை நயத்துக்கு இசையும் வண்ணம் பாடம் கொண்டார். மேலும் சில உரையாசிரியர்கள் ‘படாஅதி’ என்பதற்கு மறைந்து செல்வாயாக, தோன்றாதிருப்பாயாக எனப் பொருள் கொண்டு உரை கூறினர்.
'விடாமற் சென்றாரைக் கண்ணினாற் காணுமளவு மறையாமல் விளங்கியிருப்பாய். மதியே' என முன்னிலையாகப் பரிதி உரை வரைந்தார்.
பரிமேலழகர், 'மதியே; என் நெஞ்சின் இடைவிடாதிருந்தே விட்டுப் போயினாரை யான் என் கண்ணளவானாயினும் எதிர்ப்படும் வகை நீ படாதொழிவாயாக' என்று உரைத்தார். 'மதி இருவராலும் நோக்கப்படுவதால் இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல்' என விளக்கமும் தந்தார்.
மதிக்கு அறிவெனப் பொருள் கொண்ட நாமக்கல் இராமலிங்கம் 'என் அறிவே! பொறுத்துக் கொள். அவசியத்தைக் கருதிவிடாப் பிடியாகப் பிரிந்து போய் இத்துணைத் துன்பமும் உண்டாக்கிவிட்ட காதலர் வருவார். அவரைக் கண்டவுடன் உன் துன்பமெல்லாம் நீங்கிவிடும்' என உரை செய்தார். ஆனால் இவ்வுரைக்கு ‘கண்ணினாற் காணப்படாதி’ என்பதனோடு இயல்பான பொருட்பொருத்தம் உண்டாகவில்லை.
மதியைக் கண்டால் தலைவன் தலைவியை நினைப்பான் என்ற கருத்தினையும் சிலர் கூறினர்.
பிரிந்து சென்றுள்ள என் காதலர் திரும்பி வரும்வரை நிலவே நீ மறையாமல் வெளிச்சம் தந்து கொண்டிருப்பாயாக எனத் தலைவி வேண்டுவதாக உள்ள பரிதி உரை சிறந்து நிற்கிறது.

காலிங்கர் இக்குறட்கருத்து இவ்வதிகாரத் தலைப்போடு இயையவில்லை என்று கருதினார் என்று தெரிகிறது. அதனால்தான் என்னவோ அவர் இக்குறளை அவர்வயின் விதும்பல் என்ற 127-ஆம அதிகாரத்தில் 6-ஆவது குறளாகக் கொண்டுள்ளார். பழையஉரை ஒன்று 'தலைவன் வரவுணர்ந்து சொல்லல் எனச் சொல்லும்' எனப் பொருள் கூறும்.

'கண்ணினால் காண' குறிப்பது என்ன?

திங்களின் தோற்றத்தின் மீது தன்னுடைய கண்கள் பதியுமாறு போலவே, தன் காதலன் நோக்கும் படிந்து இருவர் கண்ணும் அதன் கண்ணே சேர்தல் அதாவது தலைவனது கண் தொடர்புள்ள மதியினிடத்துத் தன்னுடைய கண் தொடர்பு பட்டிருத்தலையே தலைவி அவனைக் காண்டலாகக் கருதினாள் என்றும்
விடாமற் சென்றாரைக் கண்ணினால் காணுமளவு என்றும்,
மதி அவன் கண்ணில் படாமல் இருந்தால் அவள் முகத்தைக் கண்டு மகிழும் ஆவலுடன் விரைந்து வருவான். ஆதலின் மதி வானில் தோன்றாதிருத்தல் நன்று எனக் கருதி அதனை வேண்டுகின்றாள் 'அவன் பார்க்கத் தோன்றாதே' என்றும்
திங்களைக் கண்ட தலைவி, 'தன்னை வருத்துவதைப் போலத் தனித்திருக்கும் தலைவனையும் இந்நிலவு வருத்தும் அல்லவா? என்று நினைக்கிறாள். அவன் அவ்வாறு வருந்த நேர்ந்தால் தன்னை நினைத்துக்கொண்டு விரைவில் வீடு நோக்கி வருவான் என்று அவள் எண்ணுகிறாள். எனவே அவனுக்குத் தன்னை நினைவுபடுத்தவேனும் இந்நிலவு மறைந்துவிடாமல் ஒளிரவேண்டும் என்பது அவளுடைய விழைவும் விருப்பமுமாகும். அதனால், அவள் 'திங்களே! என் நெஞ்சம் விட்டு நீங்காது என்னைப் பிரிந்து போனவரை என் கண்களால் காணும்வரை மறையாது இருப்பாயாக! வாழ்க! என்று வாழ்த்துகிறாள் என்றும்
'திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்துவிடாமல் இருப்பாயாக!' என்றும் விளக்கம் தந்தனர்
நிலவை நிலைக்களனாகக் கொண்டு படிப்போர் கற்பனைத் திறத்தைத் தூண்டும்படியாக இத்தொடர்மொழி அமைந்தது.

'கண்ணினால் காண' என்பதற்குக் கண்ணினால் காணும் வரை என்பது பொருள்.

திங்களே! வாழ்க! என் நெஞ்சை விட்டு நீங்காது பிரிந்து போனவரை என் கண்ணாலே காணும்வரை நீ மறையாமல் விளங்குவாயாக என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நினைவால் மறையாத காதலரைப் பார்க்க நிலவின் விளக்கத்தை நாடும் தலைவியின் நினைந்தவர்புலம்பல் பாடல்.

பொழிப்பு

திங்களே! வாழ்க! என் நெஞ்சை விட்டு நீங்காது பிரிந்து சென்றவரைக் கண்ணினாற் காணும்வரை நீ மறையாமல் விளங்குவாயாக.