இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1209விளியும்என் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1209)

பொழிப்பு: 'நாம் இருவரும் வேறு அல்லேம்' என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைந்து என் இனிய உயிர் அழிகின்றது.

மணக்குடவர் உரை: நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து எனது உயிர் அழியா நின்றது.
இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு)

சி இலக்குவனார் உரை: நாம் இருவரும் வேறு அல்லம் என்று சொல்லுவாரது இரக்கமின்மையை நினைந்து எனது இனிய உயிர் போகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து என் இன்னுயிர் விளியும்.


விளியும்என் இன்னுயிர்:
பதவுரை: விளியும்-கழியா நின்றது; என்-எனது; இன்னுயிர்-இனிய உயிர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எனது உயிர் அழியா நின்றது;
பரிப்பெருமாள்: எனதாகிய இன்னுயிர் அழியா நின்றது;
பரிதி: அவர் சொன்ன சொல்லை நினைந்து அழியாய் நெஞ்சே! ;
காலிங்கர்: தோழீ! யான் என்னை செய்வது! என் இன்னுயிரானது ஒரு காலைக்கு ஒரு காலைக் கழியும்;
பரிமேலழகர்: (தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) எனது இனிய உயிர் கழியாநின்றது.

'எனது உயிர் அழியா நின்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என் உயிர் போகும்', 'என் இனிய உயிர் போய்க் கொண்டிருக்கிறது', 'என் சீவன் குறைகின்றது', 'எனது இனிய உயிர் கழிந்தொழிக்கின்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் இனிய உயிர் நீங்கிக் கொண்டிருக்கிறது என்பது இப்பகுதியின் பொருள்.

வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து:
பதவுரை: வேறு-பிறர்; அல்லம்-ஆகமாட்டோம்; என்பார்-என்று சொல்லுபவர்; அளி-அருள்; இன்மை-இல்லாதிருத்தல்; ஆற்ற-மிகவும்; நினைந்து-எண்ணி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் நினையானென்று தெரிந்து தலைமகள் தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: நம்முள் நாம் வேறல்லேம் என்று சொன்னவரது அருளின்மையை மிகவும் நினைந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகன் நினையானென்று தேறிய தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.
பரிதி: என் விழியும் உன் உயிரும் வேறல்ல என்று இருந்தவர் பிரிந்தார் என்றவாறு.
காலிங்கர்: யாதனால் எனின் அன்று அருளுடன் அளித்து யாம் இருதலைப்புள்ளின் ஓர் உயிர்போல மெய் இரண்டு ஆயினும் உயிர் வேறு அல்ல என்பவர்மாட்டு அதற்கு ஏற்பப் பின்னொரு தண்ணளியில்லாமையை மிகவும் நினைந்து நினைந்து என்றவாறு.
பரிமேலழகர்: முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து.
பரிமேலழகர் குறிப்புரை: அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு.

'நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர் அருளின்மையை மிகவும் நினைந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாம் ஒருவர் என்று சொன்ன காதலரின் கொடுமையை மிக எண்ணி', 'முன்பெல்லாம் நாமிருவரும் ஓருயிர், வேறு இல்லை என்று கூறுவாரது அன்பின்மையை மிக நினைந்து', 'என்னுடன் இருக்கும்போது, உன்னுயிரும் என்னுயிரும் வேறல்ல என்று சொல்லும் என் காதலர் என்னருகில் இல்லாதிருப்பதை நினைந்து நினைந்து', 'முன்பு நாமிருவரும் வெவ்வேறாக மாட்டோமென்று சொன்னவரது இரக்கமில்லாத் தன்மையை மிக நினைத்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நாமிருவரும் வேறுவேறானவர் அல்லர் என்று சொன்னவரது அருளின்மையை மிகவும் நினைந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'நாமிருவரும் ஓருவரே என்று முன்பு கூறியவரது அன்பின்மையை மிக நினைந்து என் இனிய உயிர் போய்க் கொண்டிருக்கிறது' என்கிறாள் தலைவி.

நாமிருவரும் வேறல்லம் என்பார் அருளின்மையை மிகவும் நினைந்து என் இனிய உயிர் நீங்கிக் கொண்டிருக்கிறது என்பது பாடலின் பொருள்.
'வேறல்லம் என்பார்' என்ற தொடரின் பொருள் என்ன?

விளியும் என்ற சொல்லுக்கு அழியும் என்பது பொருள்.
என் இன்னுயிர் என்ற தொடர் எனது இனிய உயிர் என்ற பொருள் தரும்.
அளியின்மை என்ற சொல் அருளில்லாத் தன்மை குறித்தது.
ஆற்ற என்ற சொல்லுக்கு மிகவும் என்று பொருள்.
நினனைந்து என்ற சொல் எண்ணி என்ற பொருளது.

'நாம் இருவரும் வேறு வேறு அல்ல' என்பவர் என்னுடன் அருகில் இல்லாமையை எண்ணியெண்ணி என்னுடைய இனிய உயிர் நீங்கிக் கொண்டிருக்கின்றது.

தலைவர் கடமை காரணமாகச் சென்றிருக்கிறார். பின் வருவாராகவே பிரிந்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து இப்பொழுது எந்தச் செய்தியும் இல்லை. தலைவி அவரை எந்நேரமும் நினைத்துக் கொண்டேயிருக்கிறாள். தலைவரே தன்னுடைய உயிர் என்பதைப் போன்று ஒரு நிலையிலே, தலைவி அவன் நினைவுடன் உயிர் வாழ்வதாகச் சொல்கிறாள். இப்பொழுது தலைவரை எண்ணும் போது அவளுக்கு சோர்வும் வெறுப்பும் மிகுந்துவிட்டன. காதலர் முன்பு சொன்ன மொழியும் நினைவுக்கு வருகிறது. 'நாம் இருவரல்ல ஒருவரே' என்று சொன்னவர் இன்னும் திரும்பி வரவில்லை; ஒரு தகவலும் இல்லை. 'அவர் இவ்விதம் அருளற்றுப் போய்விட்டாரே என்று நினைத்து நினைத்து என் உயிரும் தேய்கிறது' எனக் கூறுகிறாள் தலைவி.

'வேறல்லம் என்பார்' என்ற தொடரின் பொருள் என்ன?

'வேறல்லம் என்பார்' என்ற தொடர்க்கு 'நம்முள் நாம் வேறல்லமென்று சொன்னவர்', 'என் விழியும் உன் உயிரும் வேறல்ல என்று இருந்தவர்', 'யாம் இருதலைப்புள்ளின் ஓர் உயிர்போல மெய் இரண்டு ஆயினும் உயிர் வேறு அல்ல என்பவர்', 'முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவார்', 'நாமிருவரும் வேறுவேறு அல்லம்; ஓருயிரானோம் என்று கூறினார்', 'நாம் ஒருவர் என்று சொன்ன காதலர்', 'நாமிருவரும் ஓருயிர், வேறு இல்லை என்று கூறுவார், 'உன்னுயிரும் என்னுயிரும் வேறல்ல என்று சொல்லும் என் காதலர்', 'நீயும் நானும் வேறானவர் அல்லர் என்ற துணைவர்', 'நாமிருவரும் வெவ்வேறாக மாட்டோமென்று சொன்னவர், 'நாம் இருவரும் வேறு அல்லம் என்று சொல்லுவார், 'நீ வேறு நான் வேறு அல்ல என்று அன்று (காதல் மயக்கத்தில்) சொன்னவர்', 'நான் உயிர் என்றும், நீ உடல் என்றும் கூறினார்', 'நாமிருவரும் வேறல்ல என்று சொன்னவர், 'நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவர்', 'நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர். எனக்கூறிய காதலர்' எனப் பலவாறாகப் பொருள் கூறினர். எனினும் அனைத்தும் ஒரே கருத்தையே தருகின்றன.

'வேறல்லம் என்பார்' என்பதற்கு நாம் ஒருவர் என்று சொன்னவர் என்பது பொருள்.

நாமிருவரும் வேறுவேறானவர் அல்லர் என்று சொன்னவரது அருளின்மையை மிகவும் நினைந்து என் இனிய உயிர் நீங்கிக் கொண்டிருக்கிறது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலனே தன்னுடைய உயிர் என்று தலைவி நினைந்தவர்புலம்பல் பாடல்.

பொழிப்பு

நாம் இருவரும் வேறுவேறு அல்லம் என்று சொன்ன காதலரின் அருளின்மையை எண்ணி எண்ணி என் உயிர் போகும்.