இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1208எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1208)

பொழிப்பு: காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங் கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

மணக்குடவர் உரை: யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்; அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள்.
அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.

பரிமேலழகர் உரை: இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ?
(வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: எத்தனை முறை நினைந்தாலும் காதலர் சினவார்; எனக்கு அவர் காட்டும் பெருமை அவ்வளவு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைத்து நினைப்பினும் காயார்; காதலர் செய்யும் சிறப்புஅனைத்தன்றோ.


எனைத்து நினைப்பினும் காயார்:
பதவுரை: எனைத்து-எவ்வளவு; நினைப்பினும்-எண்ணினாலும்; காயார்-வெகுளார்; அனைத்து-அவ்வளவிற்று.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்;
பரிப்பெருமாள்: யாம் அவரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்;
பரிதி: நாயகரை எப்போது நினைப்பினும் காயார்;
காலிங்கர்: கண்டு எய்திய காலத்திலும் தமது இனிய குணங்களை நினைத்தல் அன்றிப் பின்பு, 'நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்' என்று இங்ஙனம் தெளிந்து அளித்துப் பிரிதலும் ஆற்றலும் வல்லமையிற் 'படிறுடைமையும் பண்பின்மையும் உடையர் ஆயினர்' என்று இங்ஙனம் கொடுமை நினைப்பினும் காய்வது ஒன்று இலர்;
பரிமேலழகர்: (இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்;
பரிமேலழகர் குறிப்புரை: வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல்.

'யாம் காதலரை எவ்வளவு நினைப்பினும் வெகுளார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவரை நான் எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் வெகுளமாட்டார். (கண்முன் தோன்றுவார்)', 'அவர் என்னைப் பிரிந்திருப்பதைப்பற்றி நான் எப்படியெல்லாம் அவரை நொந்துகொண்டு நினைந்தாலும் என் மனத்திலுள்ள அவர் கோபிப்பதே இல்லை', 'எவ்வளவு மிகுதியாக அவரை நினைத்தாலும் அவர் என்னைச் சினக்க மாட்டார்', 'அவரை எவ்வளவு நினைத்தாலும் அதற்காக வெறுக்க மாட்டார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நான் எவ்வளவு நினைத்தாலும் வெகுளமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு.:
பதவுரை: அன்றோ-இல்லையோ; காதலர்-காதலையுடையவர்; செய்யும்-செய்யும்; சிறப்பு-இன்பம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வளவன்றோ அவர் செய்யும் அருள்.
மணக்குடவர் குறிப்புரை: அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
பரிப்பெருமாள்: அவ்வளவன்றோ அன்புற்றார் செய்யும் அருள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அருள் செய்தலாவது குற்றம் கண்டாலும் வெகுளாமை.
தலைமகள் ஆற்றாமை கண்டு 'அருள் இலன்' என்று இயற்பழித்த தோழிக்கு 'யாம் கொடியர் என்று நினைக்கவும் அதற்கு முனியாது நெஞ்சத்தே உறையா நின்றார்; ஆதலால் அருளுடையர் என்று கொள்ளப்படும்' என்று இயற்பட மொழிந்தது.
பரிதி: இதுவன்றோ நல்லோர் செய்யும் குணம் என்றவாறு.
காலிங்கர்: காதலித்து உள்ளுள்ளே உறைவர்; அதனால் நமக்கு நம் காதலர் செய்யும் பெருஞ்சிறப்பு அவ்வளவைத்து அன்றோ? எனவே கண்ணெதிர் நிற்பர்; இன்று கருத்து எதிர் நிற்பர்; இதுவன்றோ நம்மாட்டுத் தலைவர் செய்யும் தலையளி என்றவாறு.
பரிமேலழகர்: காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ?
பரிமேலழகர் குறிப்புரை: தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.

அவ்வளவன்றோ காதலர் செய்யும் அருள்/குணம்/தலையளி/இன்பம் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் செய்யும் சிறப்பு அவ்வளவன்றோ?', 'அதுவல்லவா என் காதலர் எனக்குச் செய்யும் சிறப்பு', 'அவ்வளவுதான் அவர் எனக்குச் செய்யும் நன்மையாகும்', 'காதலர் எனக்குச் செய்யும் சிறப்பு அத்தகையது அன்றோ?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காதலர் செய்யும் சிறப்பு அவ்வளவு அன்றோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'எத்தனை முறை நான் நினைத்துக்கொண்டாலும் அவர் அதற்காகச் சினம் கொள்வதில்லை. எனக்கு அவர் செய்யும் பெருமையின் அளவு அது' என்கிறாள் தலைவி.

நான் எவ்வளவு நினைப்பினும் காயார்; காதலர் செய்யும் சிறப்பு அவ்வளவு அன்றோ? என்பது பாடலின் பொருள்.
நினைப்பதற்காக எதற்குக் காயவேண்டும்?

எனைத்து நினைப்பினும் என்ற தொடர்க்கு எவ்வளவு நினைத்தாலும் என்பது பொருள்.
அனைத்தன்றோ என்றது அவ்வளவு அல்லவோ என்ற பொருள் தரும்.
காதலர் செய்யும் சிறப்பு என்ற தொடர்க்கு காதலர் எனக்குச் செய்கின்ற பெருமை என்று பொருள்.

காதலரை நான் எவ்வளவு நினைத்தாலும் சீறமாட்டார். அவர் செய்யும் சிறப்பு அவ்வளவு அல்லவா?

பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள தலைவரை மறக்கமுடியாமல் மனத்திற்குள் வைத்து அவரையே நினைத்து அந்த நினைவிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறாள். ஆனால் எப்பொழுதும் அல்லவா அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஒரு சமயம் அவளுக்கு எண்ணம் தோன்றுகிறது நாம் இவ்விதம் அடிக்கடி அவரை நினைப்பதால் தன்னுள் உறையும் அவர் தன்மீது சினம் கொள்வாரோ? ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை. 'திரும்பத் திரும்ப என்முன் தோன்றி நற்காட்சி தருகிறார். எத்துணை முறை நினைத்தாலும் தலைவர் என்மீதுசினம் கொள்வதில்லை. எப்பொழுது நினைத்தாலும் அதற்குட்பட்டவராய் என் நெஞ்சினுள் வந்து குடி புகுகின்றாரே. அவர் என்மீது வெகுண்டு நெஞ்சிலிருந்து வெளியேறுவதில்லை. அந்த அளவு என்மீது அன்பு கொண்டிருக்கிறார். அதனாலேயே அச்சிறப்புச் செய்கிறார்' எனப் பெருமிதமாகச் சொல்கிறாள்.

காதலர் செய்யும் சிறப்பு என்பதற்குக் 'காதலர் நம்மாட்டு அருள்' என்று மணக்குடவர் கூற 'காதலர் செய்யும் குணம்' என்றும் பரிதி பாடங் கொண்டார். பரிமேலழகர் 'வெகுளாமை: அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள்' என உரை வரைந்தார்.

நினைப்பதற்காக எதற்குக் காயவேண்டும்?

எனைத்து நினைப்பினும் காயார் அதாவது எத்தனை முறை நினைத்தாலும் வெகுளமாட்டார் என்று தலைவி கூறுகிறாள். தன் தலைவனை நினைத்தால் அதற்காக அவன் ஏன் அவள் மீது வெறுப்புக் கொள்ள வேண்டும்?
எப்பொழுது அவர் திரும்பி வருவார் என்று ஆற்றாமையால் வருந்திக் கொண்டிருந்தாலும் அவரது கடமைச் சுமையையும் உணர்ந்தே இருக்கிறாள். தான் நினைப்பதே அவன் கடமைக்கு இடையூறாக இருக்கும் என நினைக்கிறாள். தான் நினைப்பதால் அவருக்குத் தும்மல் வரலாம் அல்லது தான் நினைக்கிறோம் என்ற உள்ளுணர்வு அவருக்குத் தோன்றலாம். தம் நினைவு அவருக்கு வந்து விட்டால் அவர் பணி தடைபடும். பணி தடைபடுவதால் சினம் வரலாம். ஆனாலும் அவன் தன்மீது சினம் கொள்ளாமல் எனக்குக் காட்சி தருகிறார். தன் மீது கொண்ட காதல் காரணமாக அவ்வாறு சினம் காக்கிறார் தலைவர். அந்த அளவிற்குத் தனக்குச் சிறப்புச் செய்கிறார் என்ற பெருமிதம் அவளுக்கு உண்டாகிறது.
தலைவர் அவள் உள்ளத்துள்ளே உறைகிறார் என்று அவள் கருதுகிறாள். அவர் விரைந்து திரும்பி வராமல் 'கொடுமை' செய்வதை நினைத்து நினைத்து அவரை நொந்துகொண்டாலும் அது நெஞ்சில் உள்ள அவருக்குத் துன்பம் செய்யலாம். அதனால் அவர் அவள் மீது சினம் கொள்ளலாம். ஆனல் தன்மீதுள்ள அன்பு காரணமாக அப்படி அவர் சினம் கொள்வதில்லை; அன்று கண்முன் நின்றார்; இன்று கருத்துள் நிற்கிறார் என்கிறாள் தலைவி என்றபடியும் விளக்கம் உள்ளது.

நான் எவ்வளவு நினைத்தாலும் வெகுளமாட்டார்; காதலர் செய்யும் சிறப்பு அவ்வளவு அன்றோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

என் உள்ளத்திலிருந்து நீங்காமல் காதலர் எனக்குச் சிறப்புச் செய்கிறார் எனக்கூறும் தலைவியின் நினைந்தவர்புலம்பல் பாடல்.

பொழிப்பு

எத்தனை முறை நினைத்தாலும் வெகுளமாட்டார்; எனக்கு அவர் காட்டும் பெருமை அவ்வளவு.