இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1202எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்

(அதிகாரம்:நினைந்தவர்புலம்பல் குறள் எண்:1202)

பொழிப்பு: தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமற் போகின்றது! அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

மணக்குடவர் உரை: காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின்.
இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.
(புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: எந்த நிலையிலும் காமம் இனியதுதான். பிரிவுக் காலத்திலும் கூட, நம் அன்புக்குரியவரை நினைத்துக் கொண்டிருந்தாலே ஒரு துன்பமும் வராது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்.


எனைத்தொன்று இனிதேகாண் காமம்:
பதவுரை: எனைத்து-எவ்வளவு சிறியது!; ஒன்று-ஒன்று என்னும் எண்; இனிதே-நன்றானதே; காண்- (வியப்புக்குறி) காமம்-காதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமம் யாதொன்றினானும் இனியதே காண்;
பரிப்பெருமாள்: காமம் யாதொன்றினானும் இனியது ஒன்றே;
பரிதி: எல்லாவற்றிலும் இனியது காமம்;
காலிங்கர்: நெஞ்சே! எவ்வாற்றானும் இனியது ஒன்றே காண் இக்காமம் ஆகின்றது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண்.

'எவ்வாற்றானும் இக்காமம் இனியது ஒன்றே காண்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எந்த அளவிற்கும் இனியது காமம்', 'மற்ற எந்தப் பொருளும் அதைப்போல நினைத்தவுடனே இன்பம் உண்டாக்குவதில்லை', '(தலைவன் கூற்று) எவ்வளவு சுருங்கிய கால அளவினதாயிருந்தாலும் காமம் இனிமை பயக்குந் தன்மை யுடையதே', 'ஆதலால் காதல் கூடினும் பிரியினும் இனிமையே தருவது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எவ்வாற்றானும் இனியதாகிறதே காதல்! என்பது இப்பகுதியின் பொருள்.

தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்:
பதவுரை: தாம்-தாங்கள்; வீழ்வார்-விரும்பப்படுபவர்; நினைப்ப-நினைத்தால்; வருவது-நிகழ்வது; ஒன்று-ஒரு (துன்பம்); இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.
பரிப்பெருமாள்: தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லைகாண்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழியை மறுத்துத் தலைமகள் கூறியது.
பரிதி: அஃது எப்படி என்றால் தாம் விரும்பினாரை நினைக்கின் சுகந்தருமாகலின் என்றவாறு.
காலிங்கர்: என்னை எனில் பண்டு எய்திய காலத்து காலத்து இனிமை அன்றி இங்ஙனம் எய்தாக் காலத்தும் தாம் வீழ்வாரை இனிவந்து எய்துவர் என்று இங்ஙனம் நினைப்பவும் அதனாலும் வருவது ஓர் துன்பம் இன்மை என்றவாறு.
பரிமேலழகர்: தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்;
பரிமேலழகர் குறிப்புரை: புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.

தாம் விரும்பப்படுவாரை நினைக்க துன்பம் வருவது இல்லை என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் நினைத்தால் துன்பம் ஒன்றும் வராது', 'காமம் என் காதலரை நினைத்தவுடனே இன்பம் உண்டாக்குகிறது', 'தாம் விரும்புகின்றவரை நினைந்தால் துன்பமொன்றுந் தோன்றுவதில்லை', 'தம்மால் விரும்பப்படும் காதலரைப் பிரிவின்கண் நினைத்தால் நினைப்பவர்க்குப் பிரிவால் வருவதோர் துன்பம் இல்லையாம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தாம் காதல் கொண்டாரை நினைத்தால் துன்பம் ஒன்றும் வராது என்பது இப்பகுதியின் பொருள்.

.

நிறையுரை:
பிரிவில் காதலர் ஒருவரையொருவர் நினைத்து துன்பம் வராமல் பார்த்துக்கொள்கின்றனர். காதல் இன்பம் எவ்வாற்றானும் இனியதே.

எனைத்தொன்று இனியதாகிறதே காதல்! தாம் காதல் கொண்டாரை நினைத்துக்கொண்டால் (பிரிவுகாலத்திலும்) துன்பம் ஒன்றும் வராது என்பது பாடலின் பொருள்.
'எனைத்தொன்று' என்பதன் பொருள் என்ன?

இனிதேகாண் என்ற சொல்லுக்கு இனிது காண்! அல்லது இனியதாகிறது பார்! என்பது பொருள்.
காமம் என்ற சொல் காதல் என்ற பொருள் தரும்.
தாம் வீழ்வார் என்ற தொடர்க்குத் தம்மால் விரும்பப்படுவார் என்று பொருள்.
நினைப்ப என்ற சொல் நினைத்துக்கொண்டால் என்ற பொருளது.
வருவதொன்று இல் என்ற தொடர் 'வருகின்றது ஒன்றும் இல்லை' எனப் பொருள்படும். இங்கு 'வருகின்ற துன்பம் ஒன்றும் இல்லை' எனக் கொள்வர்.

பிரிவுக் காலத்தில் தம்மால் விரும்பப்படுபவரை நினைத்துக் கொண்டாலே துன்பம் தெரிவதில்லை. அதனால் காதல் எந்தநிலையிலும் எவ்வளவு கால அளவினதாயிருந்தாலும் இனியதேயாம்.

பணி காரணமாகப் பயணம் சென்றிருக்கிறான் தலைவன். அவனது பிரிவு தாங்கமுடியாத தலைவி வேதனையுறுகிறாள். உடல் மெலிந்து பசலையுற்றுப் பொலிவிழந்து தோற்றமளிக்கிறாள். அவன் உடனிருந்த வேளைகளை நினைவு கொள்கிறாள். மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி உண்டாகிறது. அப்பொழுது தன்னிரக்கமாகக் கூறுகிறாள்: 'காதலர் இல்லாவிடில் என்ன அவர் நினைவே எனக்கு இன்பம் தருகிறதே' என்கிறாள். இதுபோலவே தலைவனும் தலைவியுடன் கழித்த காதல் இன்பங்களை நினைவு கூர்ந்து அந்நினைவாலே இன்பம் கொள்கிறான். உண்மையில் இருவரும் பிரிவாற்றாமையால் புலம்பவே செய்கிறார்கள். ஆனால் பிரிவினால் அடையும் துன்பத்தை மறைத்துத் தங்களுக்குத் தாங்களே ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள். பிரிவினாலும் நினைத்து மகிழ முடிகிறதே என அவர்கள் சொல்லிக் கொள்வதில் உண்மையும் உண்டு.

'எனைத்தொன்று' என்பதன் பொருள் என்ன?

'எனைத்தொன்று' என்றதற்கு யாதொன்றினானும், எவ்வாற்றானும், எத்துணையேனும், எந்த அளவிற்கும், யாதொரு வகையினாலும், எத்துணையானும், வேறு எதைவிடவும், எவ்வளவினது என்றாலும், எவ்வளவு சிறியது என்றாலும், எவ்வளவு சுருங்கிய கால அளவினதாயிருந்தாலும், கூடினும் பிரியினும், எந்த நிலையிலும், எவ்வகையிலும், எத்தனை முறை எனப் பலவாறு பொருள் கூறினர். இவற்றுள் எவ்வாற்றானும், எந்த நிலையிலும், எவ்வளவு கால அளவினதாயிருந்தாலும் என்பன சிறந்தன.
எந்த ஒன்றானாலும் என்னும் வழக்கு நடை ‘எனைத்தொன்றும்’ என இலக்கியத்தில் ஆட்சி பெறுகிறது என்பார் இரா சாரங்கபாணி.

'எனைத்தொன்று' என்ற தொடர்க்கு எவ்வளவு கால அளவினதாயிருந்தாலும் என்பது பொருள்.

எவ்வாற்றானும் இனியதாகிறதே காதல்! தாம் காதல் கொண்டாரை நினைத்துக்கொண்டால் (பிரிவுகாலத்திலும்) துன்பம் ஒன்றும் வராது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதல்கொண்டாரை நினைத்தாலே இனிக்கும் என்னும் நினைந்தவர்புலம்பல் பாடல்.

பொழிப்பு

எவ்வாற்றானும் காதலின்பம் இனியது காண்!; தம்மால் விரும்பப்படுபவரைப் நினைத்தால் பிரிவுத் துன்பமும் தோன்றுவதில்லை.