இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1187புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில
அள்ளிக்கொள் வற்றே பசப்பு

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1187)

பொழிப்பு: தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவிவிட்டதே

மணக்குடவர் உரை: முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை.
இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது.
('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: முன் ஒரு நாள் காதலரைத் தழுவிக் கிடந்தேன். அப்பொழுது சிறுது புரண்டு படுத்த அளவிலே பசப்பு என்னை அள்ளிக் கொள்வது போலப் பரவிச் சொறிந்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.


புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்
பதவுரை: புல்லிக்-தழுவிக்; கிடந்தேன்-படுத்திருந்தேன்; புடை-பக்கம்; பெயர்ந்தேன்-மாறினேன் .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்;
பரிப்பெருமாள்: முயங்கிக்கொடு கிடந்தேன் புடை பெயர்ந்தேன்;
பரிதி: நாயகரைப் புல்லியிலிருந்து ஒருபுடைப் பெயர்ந்தேன்;
காலிங்கர்: தோழி! அவர் நம்மைப் பிரியாது உடன் வாழ் காலத்து ஒருஞான்று பெரிதும் இறுக இறுகத் தழுவிக் கிடந்தேன். அவ்விடத்து என் கண் சிறிது அயர்ந்தனவாகப் புடை பெயர்ந்தேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்;

'இறுகத் தழுவிக் கிடந்தேன். அவ்விடத்து யான் அறியாது புடை பெயர்ந்தேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தழுவிக் கிடந்த நான் சிறுது தள்ளிப் படுத்தேன்', '(இப்போது நினைவுக்கு வருகிறது). என் காதலனைத் தழுவி அணைத்துக் கொண்டு நெடுநேரம் முயங்கியிருந்துவிட்டு', 'முன் ஒருநாள் காதலரை நெருங்கித் தழுவியிருந்தேன். சிறுது விலகினேன்', 'முன்னொரு பொழுதில் காதலரைத் தழுவிக்கிடந்த நான் அறியாது சிறுது விலகினேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இறுகத் தழுவிக் கிடந்த நான் புரண்டு படுத்தேன் என்பது இப்பகுதியின் பொருள்.

அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு:
பதவுரை: அவ்வளவில்- அவ்வளவிலே; அள்ளி-முகந்து; கொள்வு-கொள்வதை; அற்றே-அத்தன்மைத்து; பசப்பு-நிறம் வேறுபடுதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: அதற்குள்ளே என்மேனி அள்ளிக்கொள்ளப் பசப்பாயிற்று.
காலிங்கர்: அவ்வளவில் என் மேனி மேல் கையினாலே வாரிக் கொள்வதுபோல வந்து பசந்தது பசப்பு. எனவே இன்று இனி உரைப்பது என் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: 'கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ?' என்பதாம்.

'அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ; அவ்வளவிற்கே பசலை கொட்டிக் கிடந்தது', 'அந்தத் தழுவலை விட்டு நீங்கின உடனே என் மேனி நிறத்தைப் பசலை அள்ளிக் கொண்டது போல் இருப்பது வழக்கம். (அதனால்) இந்தப் பசப்பு அவருடைய அணைப்பு இல்லாத போதெல்லாம் தானாகவே உண்டாவது.)', 'அந்த அளவிலேயே பசலை என்னை முழுவதும் வாரிக்கொள்வது போன்று படர்ந்தது', 'அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வதுபோல் வந்து செறிந்தது ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அந்த அளவிலேயே அள்ளிக் கொள்ளும் அளவுக்குப் பசலை கொட்டிக் கிடந்தது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலருடன் தழுவியிருந்த நேரத்தில் புரண்டு படுத்ததன் இடைவெளியிலே பசலை வாரிக்கொள்ளும் அளவில் என் உடலில் நிறைந்து படர்ந்தது என்கிறாள் தலைவி.

இறுகத் தழுவிக் கிடந்த நான் புடைபெயர்ந்தேன்; அந்த அளவிலேயே அள்ளிக் கொள்ளும் அளவுக்குப் பசலை கொட்டிக் கிடந்தது என்பது பாடலின் பொருள்.
'புடைபெயர்ந்தேன்' என்றால் என்ன?

புல்லிக் கிடந்தேன் என்ற தொடர்க்கு தழுவிக்கொண்டு இருந்தேன் என்பது பொருள்.
அவ்வளவில் என்ற சொல் அதற்குள் என்ற பொருள் தரும்.
அள்ளிக்கொள்வற்றே என்ற தொடர் அள்ளிக் கொள்ளும் அளவிற்கு செறிந்தது எனப் பொருள்படும்.
பசப்பு என்பது பசலை குறித்தது.

பணி காரணமாகத் தலைவன் தலைவியிடம் விடைபெற்றுக் கொண்டு பிரிந்து சென்று கொண்டிருக்கிறான். அவன் உங்கே இருக்கிறான் அதாவது கூப்பிடு தொலைவில்தான் இருக்கிறான். அதற்குள் அவன் திரும்பி வரும்வரை பிரிவை எப்படி எதிர்கொள்ளப் போகிறோமோ என்ற அச்சம் அவளுக்குள் வந்துவிடுகிறது. அப்பொழுது அவளுக்குப் பிரிவுக்கு முன் படுக்கையில் காதலனைத் தழுவியதும் தழுவலிலிருந்து விலகியதும் நினைவுக்கு வருகிறது.
பிரிவுக்குச் சற்று முன்னர், அப்படிக் காதலரைத் தழுவிக் கிடந்தபோது சிறுது புரண்டு படுத்தாள். அவ்வளவுதான். அந்தச் சிறு பொழுதிலேயே அவள் உடலெங்கும் பசலை வாரி அள்ளிக்கொள்ளும் அளவிற்குப் கொட்டிக் கிடந்தது அப்புடை பெயர்ச்சிக்கே அந்த அளவு பசலை படர்ந்ததென்றால் தலைவன் திரும்பி வரும்வரை உள்ள பிரிவின் கண் என்னாகுமோ என்ற வருத்தம் அவளை வாட்டத் தொடங்கியது. தழுவலின் இறுக்கத்தில் வரப்போகும் பிரிவை உணர்ந்த பசலை புடைப்பெயர்ச்சி வேளையைப் பயன்படுத்தி நெருங்கி ஊர்ந்தது என்கிறாள் தலைவி.

'புடைபெயர்ந்தேன்' என்றால் என்ன?

'புடைபெயர்ந்தேன்' என்றதற்கு சிறுது விலகினேன் என்று பெரும்பாலான உரையாளர்கள் பொருள் கூறினர். மற்றவர்கள் சிறுது புரண்டு படுத்தேன், சிறிது அகன்றேன், ஒரு சிறிது தள்ளிப்படுத்தேன், சற்றே தள்ளிக் கிடந்துறங்கினேன், ஒரு சிறுது அவரைப் பிரிந்தேன், கொஞ்சம் விலகினேன் என்றபடி பொருள் கூறினர். புரண்டு படுத்தேன் என்பது பொருத்தம்.
ஒருவர் தூங்கும்போது புரண்டு படுத்தல் இயல்பு. இங்கு தலைவி தலைவனுடன் தழுவிப் படுத்திருக்கும்போது பக்கம் மாறிப் படுக்கிறாள். அப்பொழுது தழுவலிலிருந்து சிறுது விலகியே ஆக வேண்டும். அப்புடைப் பெயர்ச்சி அவள் அறியாமல் நிகழ்ந்தது. ஆனால் நொடியில், அவனை மீண்டும் தழுவிக் கொண்டாள். இந்தச் சிறுபொழுதான இடைவெளியில் பசலை வந்துவிட்டது எனச் சொல்கிறாள்.

இறுகத் தழுவிக் கிடந்த நான் புரண்டு படுத்தேன்; அந்த அளவிலேயே அள்ளிக் கொள்ளும் அளவுக்குப் பசலை கொட்டிக் கிடந்தது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புடைப்பெயர்ச்சியிலேயே பசலை திரண்டு வந்தது, தலைவன் பிரிவில் என்ன ஆகப்போகிறதோ என்று தலைவி மருண்டு கூறும் பசப்புறு பருவரல் பாடல்.

பொழிப்பு

இறுகத் தழுவிக் கிடந்த நான் புரண்டு படுத்தேன்; அவ்வளவிற்கே பசலை அள்ளிக்கொள்ளும் அளவு கொட்டியது.