இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1186விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1186)

பொழிப்பு: விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப்போலவே, தலைவனுடைய தழுவுதலின் நீங்குதலைப் பசலை பார்த்துக் காத்திருக்கின்றது.மணக்குடவர் உரை: விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு.
இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு.
('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.)

வ சுப மாணிக்கம் உரை: இருள் வெளிச்சம் மறைவதை எதிர்பார்க்கும். பசலை தலைவன் தழுவாமையை எதிர்பார்க்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு.


விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் :
பதவுரை:விளக்கு-விளக்கு; அற்றம்-இறுதி; பார்க்கும்-பார்த்து (நெருங்கி) வரும்; இருளே போல்-இருட்டுபோல.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல;.
பரிப்பெருமாள்: விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல;
பரிதி: விளக்குக் கெட இருள் மூடுவது போலும்; .
காலிங்கர்: உலகத்து விளக்கினது அற்றம் பார்க்கும் இருளேபோல.
பரிமேலழகர்: (இதுவும் அது.) விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்;

'விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விளக்கினது இறுதி பார்த்து வரும் இருட்டுப் போல', '(ஓ இப்போது தெரிந்து கொண்டேன், இதன் காரணத்தை)விளக்கு நீங்கினவுடனே உண்டாகிவிடுகிற இருட்டைப்போல்', 'விளக்கு ஒளி குறையும் நேரம் பார்த்துப் படர இருக்கும் இருளே போல', 'விளக்கினது முடிவைப் பார்க்கும் இருளேபோல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விளக்குஒளி மறையும் வேளையை எதிர்நோக்கி இருக்கும் இருளே போல என்பது இப்பகுதியின் பொருள்.

கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு:
பதவுரை: கொண்கன்-கணவன்; முயக்கு-தழுவல்; அற்றம்-முடிவு; பார்க்கும்-எதிர்நோக்கும்; பசப்பு-நிறம் வேறுபடுதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை :இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: என் காதலர் பிரியப் பசலை மூடிற்று என்றவாறு.
காலிங்கர்: தானும் என் நிறம் கவர்தற்கு அவர் முயக்கு அற்றம் பார்க்கும் .
காலிங்கர் குறிப்புரை: பசப்பித்தற்கு ஒரு தீர்வு இல்லையோ என்றவாறு.
பரிமேலழகர்: கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு.
பரிமேலழகர் குறிப்புரை:' பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்

கொண்கன் முயக்கினது இறுதி பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கணவனது தழுவலின் இறுதி பார்த்துப் பசப்பு வரும்', 'காதலருடைய தழுவல் நீங்கியவுடனே தானாக உண்டாகிவிடுகிறது இந்தப் பசப்பு', 'புணர்ச்சி முடிவைப் பார்த்துக் கொண்டிருந்து உடனே படர வருகின்றது இப்பசலை', 'கணவன் கூட்டத்தினது முடிவு பார்க்கும் பசலை நிறம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கணவனது தழுவலின் முடிவு பார்த்து உண்டாகிறது பசப்பு என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
கணவர் என்னை நீங்கியவுடன் ஒளியின் வேகத்தில் பசலை என்னைத் தழுவுகிறது என்று தலைவி கூறுகிறாள்.

விளக்குஅற்றம் எதிர்நோக்கி இருக்கும் இருளே போல, கணவனது தழுவலின் முடிவு பார்த்து உண்டாகிறது பசப்பு என்பது பாடலின் பொருள்.
'விளக்குஅற்றம்-முயக்குஅற்றம்' என்றால் என்ன?

விளக்கு என்ற சொல்லுக்கு இங்கு விளக்கினது ஒளி என்பது பொருள்.
அற்றம் என்ற சொல் இறுதி அல்லது முடிவு என்ற பொருள் தரும்.
பார்க்கும் என்ற சொல்லுக்கு எதிர்நோக்கும் அல்லது பார்த்திருக்கும் என்று பொருள்.
இருள்போல என்ற தொடர் இருள் போன்று என்று பொருள்படும்.
கொண்கன் என்ற சொல் கணவன் என்ற பொருளது.
முயக்கு என்ற சொல் தழுவல் குறித்தது.
பசப்பு என்றது பசலையை.

விளக்கொளி எப்பொழுது மறையுமென்று பார்த்து அப்பொழுதே பரவக்காத்திருக்கும் இருளைப்போல் என் கணவர் தழுவல் நீங்கியவுடனே இந்தப் பசலை என்மேல் வந்து படர்கிறது என்று தலைவி கூறுகிறாள்.

கணவர் தொழில் காரணமாகத் தலைவியைப் பிரிய நேரிடுகிறது. பிரியும் வேளை காதல் உணர்ச்சியுடன் அவளைக் கட்டித் தழுவுகிறான். முயக்கத்தை விட முடியாமல் நெடுநேரம் தழுவுகிறான். பின் அவளிடம் விடைபெற்றுச் செல்கிறான். அவன் நீங்கிய மறுகணமே மின்னல் வேகத்தில் தலைவிக்கு பசலைநோய் வந்துவிடுகிறது.
ஒளியின் வேகத்தித்கு இணையாக இருளின் வேகம் இருக்கிறது. விளக்கின் ஒளி குறையக் குறைய இருட்டு வந்து சூழும். இரண்டும் ஒரே சமயத்தில் நிகழ்வதால். ஒளி மறைவதையும் இருள் வந்து மூடுவதையும் பிரித்து அறியமுடியாது. அதுபோல தலைவன் - தலைவி தழுவல்) நீங்கிக் கொண்டிருக்கும்போதே பசலையும் தலைவியிடம் தோன்றத் தொடங்கிவிடுகிறது..
.இக்காட்சியானது நாளும் கணவருடன் தழுவிப் பிரிதலைக் குறிக்காமல் அவர் பணி கார்ணமாக அவளிடம் விடை பெற்றுப் பிரிவதற்கு முன் தழுவிக் கொள்வதைச் சொல்வதாகக் கொள்ளவேண்டும்.
இன்றைய ஆய்வாளர்கள் பசப்பு என்ற சொல்லுக்குப் புதுப்பொருள் காண்கின்றனர். அவர்கள் 'காதலனின் பிரிவினால் காதலியின் மேனியில் நிறம் மாறுவது உலக இயல்பல்ல' என்று கூறி பசலை என்பது அழுது நீர் சொரிவதை அல்லது கண் கலங்கி நிற்பதைக் குறிக்கும் என்பர். அவர்கள் கூற்றுப்படி இக்குறளுக்கு என் காதலர் என்னைத் தழுவும் போதெல்லாம் என் கண்ணை மறைத்திருந்த கண்ணீர் விலகி அவர் தழுவதலை விட்ட போதெல்லாம் கண்ணீர் மூடி என் கண்ணை மறைக்கிறது என்று பொருள் கொள்ளவேண்டும். .

'விளக்குஅற்றம்'-முயக்குஅற்றம் என்றால் என்ன?

விளக்குஅற்றம் என்ற தொடர்க்கு நேர் பொருள் விளக்குஒளி குறையும் வேளை என்பது. அதுபோல முயக்குஅற்றம் என்பது தழுவல் நீங்கும் நேரத்தைக் குறிப்பது.
விளக்கு மறையக் காத்திருக்கும் இருள் போல தலைவன் - தலைவி தழுவல் நீங்குவதைப் பார்த்திருக்கும் பசலை என்ற ஓர் ஒப்புமையைக் குறிக்க இத்தொடர் பயன்படுத்தப்பட்டட்து. முயக்கு அற்றம் எனும் தொடர் தலைவியைப் பிரிந்து செல்லும் வரை கணவர் அவளைத் தழுவிக் கொண்டே இருந்தார் என்பதையும், மெல்ல மெல்லத் தழுவதில் இருந்து நெகிழ்ந்தான் என்பதையும் அணைப்பு முற்றிலும் நீங்கியவுடன் அவள் உடல் நிறத்தில் கலங்கல் உற்றுத் துன்புற்றாள் என்பதையும் நயம்பட விளக்குவதாகும்.

விளக்குஒளி மறையும் வேளையை எதிர்நோக்கி இருக்கும் இருளே போல, கணவனது முயக்கத்தின் முடிவு பார்த்து உண்டாகிறது பசப்பு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கணவரது தழுவல் நீங்கக் காத்திருந்தது பசலை எனத் தலைவி சொல்லும் பசப்புறு பருவரல் பாடல்.

பொழிப்பு

விளக்கினது இறுதி பார்த்து வரும் இருட்டுப் போலக் கணவரது தழுவலின் இறுதி பார்த்துப் பசப்பு தோன்றியது.

பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னர் பதிப்பிக்கப்படும்.