இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1185உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்புஊர் வது

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1185)

பொழிப்பு: அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலைநிறம் வந்து படர்கின்றது

மணக்குடவர் உரை: எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்; என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய். இஃது அவர் பிரிந்தது
இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) எம் காதலர் உவக்காண் செல்வார் - பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக; என் மேனி பசப்பு ஊர்வது இவக்காண- என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ?
('உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: எம் காதலர் பிரிந்து செல்கின்றார். அங்கே பாராய். அதனால் என் மேனியில் பசப்புப் பாய்தலை இங்கே பாராய்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்.மேனி பசப்புஊர் வது


உவக்காண்எம் காதலர் செல்வார் :
பதவுரை: உவக்காண்எம்-உங்கே; ;எம் காதலர்-என் காதலர்; செல்வார்-போவார்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எங்காதலராகச் செல்கின்றாரை உங்கே பாராய்;
பரிப்பெருமாள்: எங்காதலராய்ச் செல்கின்றாரை உங்கே பாராய்;
பரிதி: அதே, நாயகர் செல்வம்;.
காலிங்கர்: தோழி! கேளாய் அவர் பிரிந்தது பெரிது கொல் என்று கருதவேண்டா; போய் அங்கே காண்; எம் காதலர் இப்பொழுது செல்வாஎ ஆயினார்; .
பரிமேலழகர்: (காதலர் பிரிந்து அணித்தாயிருக்கவும் ஆற்றுகின்றிலை என்ற தோழிக்கு முன் நிகழ்ந்தது கூறியது.) பண்டும் நம் காதலர் உங்கே செல்வாராக;

'எம் காதலர் செல்கின்றா அங்கே பாராய்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் உரை மாறுபாடானது. அவர் காண் என்பதை இடைச்சொல்லாகக் கருதி உங்கே செகிறார் என்று மட்டும் உரை செய்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதோ பார்! காதலர் போகிறார்', 'என் காதலர் சென்றிருப்பது எங்கோ வேறிடத்தில்!', 'தலைவர் உடனிருந்த காலத்திலேயே அவர் ஒரு சிறுது பிரிந்து சென்றால், ', 'அங்கு நம் காதலர் பிரிந்து செல்வாராக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அங்கே (உங்கே) பார் என் காதலர் போகிறார் என்பது இப்பகுதியின் பொருள்.

இவக்காண் என்மேனி பசப்புஊர் வது:
பதவுரை: இவக்காண்-இங்கேயனறோ; என்மேனி- என்உடல்; பசப்பு-நிறம் வேறுபடுதல்; ஊர்வது-மேற்கொள்ளல்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய்.
மணக்குடவர் குறிப்புரை:: இஃது அவர் பிரிந்தது. இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: என்மேனி மேலே பசப்புப் பரப்பதனை இங்கே பாராய்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவர் பிரிந்தது. இப்பொழுதாயிருக்கப் பசலை பரவாநின்றது. அவர் வருமளவும் யாங்ஙனமாற்றுதும் என்று தலைமகள் கூறியது
பரிதி: இதே, என் மேனி பசப்புறுவது பார் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வளவில் இங்குக் காண். என் மேனி ஓர் பசப்பு வந்து ஊர்வது என்றவாறு.
பரிமேலழகர்: என் மேனி பசப்பூர்வது இங்கேயன்றோ? அப்பெற்றியது இன்று பிறிதொன்றாமோ?
பரிமேலழகர் குறிப்புரை: 'உவக்காண்', 'இவக்காண்' என்பன ஒட்டி நின்ற இடைச்சொற்கள், தேய அண்மையாற் கால அண்மை கருதப்பட்டது. 'அவர் செலவும் பசப்பினது வரவும் பகல் இரவுகளின் செலவும் வரவும் போல்வது அறிந்து வைத்து அறியாதாய்போல நீ சொல்லுகின்றது என்ன'? என்பதாம்.

'என்மேனி மேலே பசப்புப் பரவுதலை இங்கே பாராய்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இங்கும் பரிமேலழகர் காண் என்பதை இடைச்சொல்லாகக் கொண்டு இங்கேயன்றோ? என்று மட்டும் உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் '!இதோ பார்! என் மேனி மேல் பசலை படர்கிறது', 'என் மேனி பசந்து போனதோ இங்கே என்னிடத்தில். இது என்ன விந்தை', 'என் உடம்பின்மேலே இதோ வந்துவிட்டேனென்று பசல்லை படர்ந்துவிடும். (அவர் பிரிவுற்ற இக்காலத்திலே அது யாது செய்யாது?', ';என் மேனி பசப்பு ஊர்வது இங்கே யன்றோ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

என் உடம்பில் பசலை படர்வதை இங்கே பார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'இப்பொழுதுதான் பிரிந்து போனார் என் காதலர். அதற்குள் பாராய் என் உடம்பில் பசலை தோன்றுகிறது' என்கிறாள் தலைவி.

உவக்காண் என் காதலர் போகிறார் என் உடம்பில் பசலை படர்வதை இவக்காண் என்பது பாடலின் பொருள்.
உவக்காண், இவக்காண் குறிப்பன எவை?

எம் காதலர் என்ற தொடர் என் அன்பர் என்ற பொருள் தருவது.
செல்வார் என்ற சொல் செல்கிறார் எனப் பொருள்படும்.
என் மேனி என்ற தொடர்க்கு என் உடலில் என்பது பொருள்.
பசப்பு ஊர்வது என்ற தொடர் பசலை படர்வது என்ற பொருளது.

பணி காரணமாகப் பிரிந்து செல்கிறான் தலைவன். தலைவியிடம் விடைபெற்றுச் சிறுது தூரம்தான் சென்றிருக்கிறான். அதற்குள் தலைவியின் உடலில் பிரிவுத் துன்பம் தாங்கமுடியாமல் பசலை படர்ந்துவிடுகிறது. உடனே அவள் சொல்கிறாள். 'அங்கே பார் என தலைவர் செல்கிறார். இங்கே பார் என் உடலில் பசலை படர்வதை' எனத் தலைவி வருந்திக் கூறுகிறாள். இதையே அதோ பார், இதோ பார் என்றும் கொண்டு உரை பகன்றனர்.
காதலர் பிரிவும் எனக்குற்ற துன்பமும் விரைந்து ஒருசேர நிகழ்ந்தன என்பதைத் தலைவி கூற விழைகிறாள். சிறுது நேரம் கூட அவர் பிரிவை அவளால் ஆற்ற இயலாது என்பது கருத்து.

உவக்காண், இவக்காண் குறிப்பன எவை?

அங்கே பார் பிரிந்து போகிறார். இங்கே என் உடம்பில் பசலை படரத் தொடங்கிவிட்டது பார் என தலைவி ஆற்றாமையால் கூறுகிறாள் என்பது இக்குறளின் பொருள். அங்கே, இங்கே என்பவற்றைக் குறிக்க உவக்காண், இவக்காண் என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. அங்கே என்றால் மிகத்தொலைவைச் சுட்டிக் காட்டுவது. இங்கே என்றால் மிக அருகில் என்பதைக் குறிக்கும். உங்கே என்றால் வெகு தொலைவும் இல்லை; மிக அண்மையும் அல்லாத தொலைவு. 'கல்லெறி தூரம்' அதாவது -கூப்பிடு தொலைவில்தான் எனப் பொருள்படும்.
உவக்காண், இவக்காண் என்பனவற்றிலுள்ள காண் என்ற சொல்லைத் தனியே பிரித்து உங்கே பாராய், இங்கே பாராய் என்று பரபரத்துத் தலைமகள் கூறுவதாக மணக்குடவர் நயமாக உரை செய்தார். இதையே பரிதி .'அதே, நாயகர் செல்வம். இதே, என் மேனி பசப்புறுவது பார்' என உரைத்தார். காலிங்கரும் 'போய் அங்கே காண், இங்குக் காண்' என பார் என்ற பொருளிலேயே உரை காண்கிறார். பரிமேலழகர் வேறுபாடாகப் பொருள் கூறுகிறார். இவர் உரைப்படி கண் என்பது இடைச்சொல்லாகக் கருதி அங்கே, இங்கே என்று மட்டும் சொல்கிறார். இரண்டிற்கும் சேர்த்து தேய அண்மையால் கால அண்மை கூறப்பட்டது என்று முடிக்கிறார். இதைவிட மணக்குடவர் முதலான தொல்லாசிரியர்கள் உரைகளே பொருட் சிறப்பு மிக்கன.
உவக்காண், இவக்காண் என்பதற்கு அங்கே பார், இங்கே பார் என்பது பொருள்.

அங்கே (உங்கே) பார் என் காதலர் போகிறார் என் உடம்பில் பசலை படர்வதை இங்கே பார் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவர் பிரிந்து கூப்பிடு தொலைவு போவதற்குள் என் மீது பசப்ப் வந்துவிட்டதே என்று தலைவி ஆற்றமாற்றாமல் கூறும் பசப்புறுபருவரல் பாடல்.

பொழிப்பு

உங்கே பார் என் காதலர் பிரிந்து செல்கின்றார்., என் மேனியில் பசப்புப் படர்தலை இங்கே பார்