இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1183சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1183)

பொழிப்பு: காமநோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார்

மணக்குடவர் உரை: மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்; அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து.
மென்மை- பெண்மை. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையால் கூறியது.

பரிமேலழகர் உரை: ('அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) கைம்மாறா நோயும் பசலையும் தந்து - பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து; சாயலும் நாணும் அவர் கொண்டார் - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.
(எதிர் நிரல் நிறை. 'அடக்குந்தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா', என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: துன்பத்தையும் பசலை நிறத்தையும் எனக்குத் தந்துவிட்டு அவற்றிற்குப் பதிலாக என் அழகையும் நாணத்தையும் அவர் கொண்டு போய்விட்டாரே!


பொருள்கோள் வரிஅமைப்பு:
கைம்மாறா நோயும் பசலையும் தந்து சாயலும் நாணும் அவர்கொண்டார் .


சாயலும் நாணும் அவர்கொண்டார்:
பதவுரை: சாயலும்-மேனி அழகும்; நாணும்-வெட்கமும்' அவர்-அவர்; கொண்டார்-கொண்டு போயினர். .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்;
மணக்குடவர் குறிப்புரை: மென்மை- பெண்மை.
பரிப்பெருமாள்: மென்மையும் நாணமும் அவர் கொண்டு போனார்;
பரிப்பெருமாள் குறிப்புரை: மென்மை- பெண்மை..
பரிதி: அழகும் நாணத்தையும் அவர் கொண்டார்;.
காலிங்கர்: தோழி! மயில்போலும் சாயலும் உயிர் போலும் நாணமும் என் காதலாகியவர் கொண்டு ஏகினார். தாம் அவை கொண்டு ஏகினார்;
பரிமேலழகர்: ('அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) - என் மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போயினார்.

''மேனியழகினையும் நாணினையும் அவர் கொண்டு போனார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். சாயல் என்பதற்குப் மென்மை என்று பொருள் கொண்டனர் மணக்குடவர்/பரிப்பெருமாள்.

இன்றைய ஆசிரியர்கள் 'சாயலையும் நாணையும் எடுத்துக் கொண்டார்', 'பிரிகின்றபோது அவர் என்னிடமிருந்த மேனியழகையும் நாணத்தையும் கொண்டு சென்றார்', 'என் மேனியழகினையும் வெட்கத்தையும் அவர் என்னிடமிருந்து கைப்பற்றிக் கொண்டார்', ' என் மேனியழகினையும் நாணினையும் கொண்டு போயினர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் மேனியழகினையும் நாணினையும் கொண்டு போயினார் என்பது இப்பகுதியின் பொருள்.

கைம்மாறா நோயும் பசலையும் தந்து:
பதவுரை: கைம்மாறா-தலைமாறா; நோயும்-துன்பத்தையும்; பசலையும்-நிறவேறுபாட்டையும்; தந்து-கொடுத்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையால் கூறியது.
பரிப்பெருமாள்: அதற்கு மாறாக நோயையும் பசலையும் தந்து.
பரிப்பெருமாள் குறிப்புரை:. இது தலைமகள் வெருட்சிகண்டு அது பெண்மையும் நாணமும் உடையார் செயலன்றென்று கடிந்து கூறிய தோழிக்கு தலைமகள் ஆற்றா¬மாற் கூறியது.
பரிதி: எனக்கு விரகமும் பசலையும் தந்து என்றவாறு.
காலிங்கர்: அதற்குக் கைம்மாறாக எனக்கு இவ்வுறுதுயரும் பசப்பு என்னும் இவை இரண்டும் ஒருங்கு தந்து என்றவாறு.
பரிமேலழகர்: பிரிகின்ற ஞான்றே அவ்விரண்டற்கும் தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து;
பரிமேலழகர் குறிப்புரை (எதிர் நிரல் நிறை. 'அடக்குந்தோறும் மிகுதலான், நோய் நாணிற்குத் தலைமாறாயிற்று. இனி அவர் தந்தாலல்லது அவை உளவாகலும் இவை இலவாகலும் கூடா', என்பதாம்.

தலைமாறாக இக்காமநோயினையும் பசலையையும் எனக்குத் தந்து என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமத்தையும் பசலையையும் மாற்றாகத் தந்து', ' கைம்மாறாக காம நோயினையும் பசலையையும் எனக்குக் கொடுத்துவிட்டு', 'நோயையும் பசலையையும் எனக்குக் கொடுத்து விட்டு', 'அவற்றிற்கு மாற்றாக பிரிகின்ற பொழுதே காதல் நோயையும் பசலையையும் எனக்குத் தந்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மாற்றாக காதல் துன்பத்தையும் பசலையையும் எனக்குத் தந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துன்பத்தையும் பசலையையும் கொடுத்து என் அழகையும் நாணையும் உடன் எடுத்துக் சென்று விட்டாரே அவர் எனத் தலைவி கூறுகிறாள்.

என் சாயலும் நாணும் கொண்டு போயினார்; மாற்றாகக் காதல் துன்பத்தையும் பசலையையும் எனக்குத் தந்து என்பது பாடலின் பொருள்.
சாயலும் நாணும் எப்படிக் கொண்டு போகமுடியும்?

அவர்கொண்டார் என்ற சொல்லுக்கு அவர் கொண்டு சென்று விட்டார் என்பது பொருள்.
கைமாறா என்ற சொல் மாற்றாக என்ற பொருள் தரும்.
நோயும் என்ற சொல் துன்பமும் எனப் பொருள்படும்.
பசலையும் என்ற சொல்லுக்கு பசப்பையும் என்று பொருள்.
தந்து என்ற சொல் கொடுத்துவிட்டு குறித்தது.

தன்னை விரும்பிய காதலர் பணி காரணமாகப் பிரிய நேரிட்டபொழுது விடை கொடுத்த தலைவி அதை நினைத்து வருந்துகிறாள். என் குற்றம்தானே அவர் பிரிய உடன்பட்டது. இப்பொழுது இதை யாரிடம் போய்ச் செல்வேன் என்கிறாள். பிரிவுத் துன்பம் வாட்டுகிறது. உடல் மெலிகிறது. இரவில் உறக்கம் கொள்வதில்லை. கண்கள் சோர்ந்து நீர் மல்குகிறது. அழகு கெட்டுவிட்டது. அவளிடமிருந்து நாண் அகன்று சென்றுவிட்டது. துன்பம் பெருகுகிறது. பசலை படர்ந்துவிட்டது. அப்பொழுது அவள் உள்ளுக்குள் உணர்வதை இப்படி வெளியீடுகிறாள்:. இந்தப் பிரிவுத் துன்பத்தையும் பசலையையும் எனக்குத் தந்துவிட்டு என் மென்மைத் தன்மையையும் நாணினையும் கொண்டு சென்றுவிட்டாரே. இரண்டுக்கு இரண்டு என்று இதை மாற்றாகச் செய்து விட்டாராக்கும் என்று ஆற்றமாட்டாமல் பரிதவிக்கிறாள்.
பெண்மைக்குரிய மென்மையையும் உயிர்னும் மேலான நாணினையும் அவர் கவர்ந்து கொண்டு சென்று விட்டார். . இதற்கு எதிர் ஈடாக அவர் எனக்கு பிரிவாற்றாமைத் துன்பத்தையும். பசலை-என்ற நிற வேறுபாட்டையும் தந்திருக்கிறார்.எனத் தலைவி சொல்கிறாள். என் அழகும் நாணும் தொலைந்தன; ப்திலுக்கு பிரிவுத் துன்பமும் உடல் பசலையும் பெற்றேன் என்பது கருத்து.

தலைமகள் வெருட்சி கண்டு அது மென்மையும் நாணமும் உடையார் செயல் அன்று என்று கடிந்து கூறிய தோழிக்கு அவள் ஆற்றாமையால் கூறியது என்று பின்னணி அமைப்பார் மணக்குடவர். அழகும் நாணும் அழியாமல் நீ ஆற்றல் வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது. என்று காட்சி அமைப்பார் பரிமேலழகர்.

சாயலையும் நாணையும் எப்படிக் கொண்டு போகமுடியும்?

சாயல் என்ற சொல்லுக்கு மென்மை, அழகு, நிறம், போன்ற பல பொருள் உண்டு. இங்கு மென்மை அல்லது அழகு என்று கொள்வர். சாயல்-மென்மை. மென்மை-பெண்மை.:என்று மணக்குடவர் பதவுரையும் விளக்கமும் தந்தார். நாணும் என்ற சொல் வெட்கம் என்ற பொருள் தரும் மயில்போலும் சாயலும் உயிர் போலும் நாணமும் என் காதலாகியவர் கொண்டு ஏகினார். என உரை பகர்வார் காலிங்கர்.
என் அழகையும் நாணத்தையும் காதலர் பிரிவின் போது எடுத்த்க் கொண்டு போய்விட்டார் என்கிறாள் தலைவி. அவள் என்ன சொல்ல வருகிறாள்? அழகும் நாணமும் பெண்கள் இழக்க முடியாதன. சாயல் என்ற மென்மை பெண்ணுக்குரிய தனி இயல்பு. காதலரைப் பிரிந்திருக்கும் துன்பத்தால் தலைவியின் முகம் வாட்ட்முற்றுத் தோன்றுகிறது. தன்னை அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவள் நினைக்கவில்லை. இதனால் அவள் சாயல் அதாவது அழகு கெடுகிறது.. நாணும், பெண்ணுக்குரியது. காதலரை நினைத்து அழுது கொண்டிருப்பதால் ஊரார் அவளது காதல்நோயை அறியும்படி ஆயிற்று. இதனால் அவள் நாணும் இழந்தாள் என்றாகிறது. எனவே சாயலும் நாணும் காதலர் எடுத்துச் சென்று விட்டதாகக் கூறுகிறாள் தலைவி. அவள்து உடலும் உள்ளமும் அவருடன் சென்றுவிட்டன என்றும் அவர் திரும்பி வந்தால்தான் அழகும் நாணும் திரும்பும் என உணர்த்தி நின்ராள்.

என் மென்மையையும் நாணினையும் கொண்டு போயினார்; மாற்றாகக் காதல் துன்பத்தையும் பசலையையும் எனக்குத் தந்து என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சீரான சாயல், நாண் என்ற இரண்டை என்னிடமிருந்து கவர்ந்துகொண்டு துயரான பிரிவி, பசலை என்ற இரண்டைத் தந்தார் எனத் தலைவி கூறும் பசப்புறுபருவரல் பாடல்.

பொழிப்பு

துன்பத்தையும் பசலையையும் மாற்றாகத் தந்து என் மென்மையையும் நாணத்தையும் கொண்டு சென்றுவிட்டார்.