இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1179



வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1179)

பொழிப்பு (மு வரதராசன்): காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கிடையே என்கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன

மணக்குடவர் உரை: அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள்.
இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: ('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய
('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)

வ சுப மாணிக்கம் உரை: அவர் வராவிடினும் தூங்கா; வரினும் தூங்கா; இருநிலையிலும் கண்கள் பெருந்துயர்ப்பட்டன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்.

பதவுரை: வாராக்கால்-வாராதபோது; துஞ்சா-உறங்கமாட்டா; வரின்-வந்தனராயின், வந்தால்; துஞ்சா-உறங்கமாட்டா; ஆயிடை-(அ+இடை.அகரச் சுட்டு நீண்டு ஆயிடை) அவ்விருவழியும்; ஆர்-அரிய; அஞர்-துயர்; உற்றன-உடையவாயின; கண்-கண்கள்.


வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா:
பரிப்பெருமாள்: அவர் வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா:
பரிதி: நாயகர் வாராக்காலும் நித்திரையில்லை; வந்தாலும் கலவியினால் நித்திரையில்லை என்றவாறு.
காலிங்கர்: என் தோழீ! அவர் இவ்விடத்து வாராத காலத்து எல்லாம் வரவு நோக்கி வருந்தித் துயிலப்பெறா; மற்று இனி ஒருகால் வந்தனராயின் பிரிவர் என்னை என்று அஞ்சித் துயிலப்பெறா;
பரிமேலழகர்: ('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா;

'வாராத காலத்துப் புணர்ச்சி வேட்கையால் துஞ்சா; வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'நாயகர் வாராக்காலும் நித்திரையில்லை; வந்தாலும் கலவியினால் நித்திரையில்லை' என்றார். காலிங்கரும் பரிமேலழகரும் வாராத காலத்து எல்லாம் வரவு நோக்கி வருந்தித் துயிலப்பெறா; வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா' எனப் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் வாராத விடத்தும் அவரை எதிர்நோக்கி என் கண்கள் துயிலா. வந்த விடத்தும் அவர் பிரிந்து விடுவாரோ என அஞ்சித் துயிலா', '(அவரைக் காணாமல் இப்படித் தவிக்கின்ற கண்கள்) அவர் இல்லாத காலங்களில் அவர் இன்னும் வரவில்லையே என்ற ஏக்கத்தால் தூங்குவதில்லை. அவர் வந்துவிட்டாலோ அவரோடு இடைவிடாது இன்பமனுபவிக்க விரும்பி தூங்குவதில்லை', 'என் கண்கள் காதலர் வாராதபோது அவர் வரவினை எதிர்பார்த்துத் தூங்கமாட்டா. வந்தபோது அவருடைய பிரிவினை அஞ்சித் தூங்கமாட்டா', 'காதலர் வராத பொழுது அவர் வருகையை நோக்கிக் கண்கள் துயிலா. வந்தபொழுது அவர் பிரிவு உண்டாதலை அஞ்சித் துயிலா', என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலர் வராதபொழுது அவரை எதிர்நோக்கித் துயிலா; வந்தாலும் தூங்கா என்பது இப்பகுதியின் பொருள்.

ஆயிடை ஆரஞர் உற்றன கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள்.
மணக்குடவர் குறிப்புரை: இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது
பரிப்பெருமாள்: அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நீ உறங்கவேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் இன்றேயல்ல எஞ்ஞான்றும் உறக்கமில்லை யென்றது
காலிங்கர்: இங்ஙனம் இருவாற்றானும் அவ்விடத்து இவ்விடத்து இருந்து அஞர் உற்றன என் கண்களானவை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: ஆரஞர் உற்றன என்பது அரும் துயர் உற்றன என்றது.
பரிமேலழகர்: ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய
பரிமேலழகர் குறிப்புரை: 'ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்.

'அவ்விரண்டிடத்தினும் மிக்க துன்பமுற்றன கண்கள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆகையால் இரண்டு இடத்தும் என் கண்கள் துயிலாமல் துன்பம் எய்தின', 'ஆதலால் இந்தக் கண்களால் எனக்கு எப்போதும் துன்பந்தான்', 'ஆதலால் இருவகையிலும் நிறைந்த துன்பத்தையே அவைகள் நுகர்ந்தன', 'ஆதலால் அவ்விருவழியும் கண்கள் பொறுத்தற்கு அரிய துன்பத்தை அடைந்தன' என்றபடி பொருள் உரைத்தனர்.

இருநிலையிலும் கண்கள் அரும் துயர் உற்றன என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலர் வராதபொழுது அவரை எதிர்நோக்கித் துயிலா. வரின்துஞ்சா; இருநிலையிலும் கண்கள் அரும் துயர் உற்றன என்பது பாடலின் பொருள்.
'வரின்துஞ்சா' குறிப்பது என்ன?

காதலர் இல்லாவிட்டால் உறங்கமுடிவதில்லை; இருந்தால் மட்டும் தூங்கஇயலுமா?

காதலர் வராத போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்காதிருந்தன; வந்தபின்னர் இன்பக் களிப்பில் துஞ்சாதிருந்தன. இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய பெருந்துன்பத்தை அடைந்தன.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத தலைவர் மனைவியைப் பிரிந்து சென்றிருக்கிறார். பிரிவுத் துன்பத்தால் அவள் வருந்திக்கொண்டிருக்கிறாள். உள்ளமும் உடலும் வேதனையுறுகின்றன. உடலுறும் துயரத்தை தூக்கமொழிந்த அவள் கண்களும் தோற்றமும் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.
தான் இப்பொழுது வருந்திக்கொண்டிருக்கும் காதல்நோய் உண்டாவதற்கு தனது கண்கள் காதலரைக் காட்டியதுதானே காரணம். பின் ஏன் அவை இப்பொழுது அழுகின்றன?; முதலில் பார்த்தபின் காதல் கொண்டது தவறாகவே இருக்கட்டும், அதன் பின் அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பின்னரும் அவரைப் பரிவுடன் எண்ணாது இப்பொழுது ஏன் கண்கள் உகுக்கின்றன?; அவரைக் காட்டிக் காதலிக்க வைத்த இக்கண்களே இப்பொழுது கலுழ்வது வியப்பாகவும் நகைக்கத்தக்கதாகவும் இருக்கின்றதே; தப்பிப் பிழைக்க முடியாதவகையில் காதல்நோயை என்னிடம் தந்துவிட்டு தாமும் அழ இயலாதவாறு கண்ணீர் வற்றிவிட்ட கண்களாகிவிட்டனவே; கடலளவு காமநோயை என்னிடத்தே செய்த என்கண்கள் தாமும் துயிலாதபடி துன்பப்படுகின்றன; எனக்குக் காதல் நோயைத் தந்த கண்கள் தாமும் துன்பப்பட்டுள்ளன! என்பது எனக்கு இனிமையாகத்தான் உள்ளது; தாம் விரும்பிவிரும்பி அவரைக் கண்டு நெகிழ்ந்த கண்கள் நீர்வற்றிப் போகட்டும்!; நன்றாக அழட்டும்! அவரைப் பார்க்காமல் அமைதி அடையாவாமே! என்ன வகையான கண்கள் இவை?;
இவ்வாறு தன் கண்களைத் திட்டித் தான் துய்க்கும் துயரத்தைக் குறைக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
வராத காலத்தில் வருவார் வருவார் என்று அவர் வரவு பார்த்துக்கொண்டே கண்கள் உறங்காது இருந்தன. வந்தாலும் என் கண்களைத் தூங்கவிடுவாரோ! என்றுமே அவைகட்கு உறக்கம் இல்லாமலே போகப் போகிறது. எவ்வகையிலும் எஞ்ஞான்றும் என்கண்கள் மிகுந்த துன்பம் உறுகின்றனவே எனத் தலைவி புலம்புகிறாள் இங்கு.
தலைவிக்காக அவளது கண்கள் பிரிந்து சென்ற கணவர் வரும்வரை அவரது வரவை எதிர்நோக்கி வழிபார்த்து தூங்காமல் விழித்திருக்கும். பிரிந்தவர் வந்த பின்பு அவரைப் பார்த்துக்கொண்டே இருப்பதற்காகவும் அவருடன் முழுவதும் சேர்ந்து இருப்பதற்காகவும் இமைகளை மூடாமல் அவை விழித்திருக்கின்றன. தலைவர் வராவிட்டால் அவர் நினைவாலும் வந்துவிட்டால் நேரில் அவரை நோக்கித் துய்க்கவும் என் கண்கள் எப்பொழுதும் உறக்கம் தொலைந்த நிலையில் உள எனக் கண்கள் மீது வைத்துத் தான் உறங்காமல் இருக்கும் இயல்பையும் தன் கண்கள் படும் துயரையும் மொழிகின்றாள் தலைவி.

'வரின்துஞ்சா' குறிப்பது என்ன?

'வரின்துஞ்சா' என்பதற்கு வந்தால் உறங்கா என்பது பொருள்.
குறளின் தொடக்கத்தில் 'வாராக்கால் துஞ்சா' என்ற தொடர் உள்ளது. அதற்கு வராதபொழுது உறங்கா என்பது பொருள். காதலர் தொலைவில் உள்ளார். பிரிவின் துயர் தாங்காது அவள் வருந்திக் கொண்டிருக்கிறாள். அவள் கண்கள் அவரையே தேடிக் கொண்டிருக்கின்றன. தலைவன், தலைவி இருவரும் பிரிந்து இருந்தால் தூக்கம் வராது என்பது இயல்பு. எனவே வாராக்கால் கண்கள் உறக்கம் கொள்ளவில்லை என்பது புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் தலைவன் வந்தபின் அவள் நிம்மதி அடைந்து தூங்கலாமே. பின் ஏன் அவன் வந்தபின்பும் அவள் கண்கள் தூங்கா என்கிறாள்?

'வரின்துஞ்சா' என்ற தொடர் விளக்கப்பட்ட உரைகளிலிருந்து சில:

  • அவர்வந்த நாட்களிலும், அவரைக் கண்ட மகிழ்ச்சிப் பெருக்கால் அவை உறங்கவில்லை.
  • வந்த காலத்துப் பிரிவாரென்று அஞ்சித்துஞ்சா.
  • வந்தாலும் கலவியினால் நித்திரையில்லை.
  • வந்துவிட்டாலும் அவரோடு இடைவிடாது இன்பமனுவிப்பதை விரும்பி உறங்குவதில்லை.
  • அவர் வந்து விட்டாலும் இன்ப ரசனையிலும், 'எங்கே திரும்பவும் போய் விடுவாரோ?' என்ற பயத்திலும் விழித்துக் கொண்டிருக்கின்றன!.
  • வந்தாலும் தூங்கா! அவரையே பார்த்துக்கொண்டு இருக்கும்!
  • வந்த பின்பு அவருடன் முழுவதும் சேர்ந்து இருப்பதற்காகவும் விழித்திருக்கிறது.
  • அவன் வந்தபிறகும் அவள் தூங்கவில்லை. ஏன்? அவன் தூங்க விடவில்லை!
பரிதி தவிர்த்த தொல்லாசிரியர்கள் அனைவரும் பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்துஎன் நெஞ்சு (நெஞ்சோடுபுலத்தல் 1295 பொருள்: காதலரைப் பெறாமைக்காக வருந்தும்; பெற்றகாலத்துப் பிரிவினை நினைந்து அஞ்சும்; ஆதலால் என் நெஞ்சம் எப்போதும் தீராத துன்பத்தை யுடையது) என்னும் குறளை நினைந்து மீண்டும் பிரிவு ஏற்படுமே என்ற கலக்கத்தால் கண்கள் துஞ்சா என எழுதினர். இன்றைய ஆசிரியர்கள் பலரும் அவ்விதமே உரை செய்தனர். இத்தொடர்க்கு 'வந்தபொழுது எப்பொழுது பிரிந்துவிடுவாரோ என்று தூங்காமல் இருக்கிறது' என்பதே பலரும் கூறிய பொருள். பரிதி இத்தொடர்க்குக் கலவியினால் நித்திரை இல்லை எனப்பொருள் கூறினார். உறக்கமின்மை கூறிக் கண்கள் உறும் துன்பத்தைப் புலப்படுத்தலே இக்குறளின் நோக்கம். அத்துன்பம் பிரிவஞ்சி துங்காததால் வந்ததாகலாம்; அல்லது கூடிக்களித்ததினால் உறக்கம் தொலைந்ததனாலாகலாம்.
பிரிந்தவர் வந்தபின்பு தலைவரையே பார்த்துக்கொண்டும் அவருடனே இரவுமுழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தலைவி விரும்புவதால் அவள் கண்கள் துயில்வதில்லை. தலைவரும் அவளை எங்கே தூங்கவிடப்போகிறார்? இதுவே 'வரிந்துஞ்சா' என்பது குறிப்பது.

'வரின்துஞ்சா' என்ற தொடர் தலைவர் வரவால் உண்டான களிப்பால் கண்கள் தூங்குவதில்லை என்ற பொருள் தரும்.

காதலர் வராதபொழுது அவரை எதிர்நோக்கித் துயிலா. வந்தபொழுது வந்தபின்னர் இன்பக் களிப்பில் துஞ்சாதிருந்தன. இருநிலையிலும் கண்கள் அரும் துயர் உற்றன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவர் வாராத காலத்தும் வந்தபின்பும் துஞ்சா கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

காதலர் வாராதபொழுது அவரை எதிர்பார்த்து உறங்கா; வந்தாலும் தூங்கா. இங்ஙனம் இருவழியும் என் கண்கள் கொடுந்துயர் உற்றன.