இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1178பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1178)

பொழிப்பு: உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார். அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை

மணக்குடவர் உரை: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ? நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவும் உளவோ?

பரிமேலழகர் உரை: ('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?
(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)

இரா சாரங்கபாணி உரை: மனத்தால் விரும்பாமல் காதலித்தவர் உள்ளார் எனினும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியுறவில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண்.


பேணாது பெட்டார் உளர்மன்னோ:
பதவுரை: பேணாது-விரும்பாமல்; பெட்டார்-விழைந்தவர்; உளர்-இருக்கின்றனர்; மன்னோ-(ஒழியிசை)..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?
பரிப்பெருமாள்: விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?
பரிதி: பேணாது துயரமுறுத்தவராகிய; .
காலிங்கர்: தோழீ! இதற்கு என்னை காரணம்? உலகத்து தம்மை விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ? எங்கும் கண்டது இல்லை;.
பரிமேலழகர்: ('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.) நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்;
பரிமேலழகர் குறிப்புரை: செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது,

'விரும்பத்தகாததனை விரும்புவாரும் உளரோ?' என்றும் 'விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ?' என்றும் 'நெஞ்சால் விழையாது சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்' ;என்றும் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனமின்றியே காதலித்தார் ஒருவர் உளர் ', ' என்மீது உண்மையான காதல் இல்லாமல் என்னுடன் பொய்யுறவு காட்டியவர் (என்னைப் பிரிந்து) எங்கோ இருக்கிறாராம்!', 'நெஞ்சால் விரும்பாது சொல்லால் மாத்திரம் விருப்பங் காட்டினவர் இருக்கின்றார். (அவரால் என்ன பயன்?) ', ' நெஞ்சால் விரும்பாமல் சொல்லால் மாத்திரம் விரும்பியவர் இவ்விடத்தே உளர்', என்ற பொருளில் உரை தந்தனர்.

தம்மை விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றவர்க் காணாது அமைவில கண்:
பதவுரை: மற்று-ஆனால்; அவர்-அவர் காணாது-காணாமல்; அமைவு- போதும் என்று அமைதல்; இல-இல்லாதவை; கண்-கண்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்மைக் கண்டால் விருப்பமின்றிப்போன அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவும் உளவோ?
பரிப்பெருமாள்: நம்மைக் கண்டால் விருப்பமின்றிப் போனவரைக் காணாது இமைக்கின்றில என் கண்கள்: இதனை ஒழியப் பிறவும் உளவோ?
பரிதி: நம் நாயகரைக் காணாமல் கண் துயிலாது என்றவாறு.
காலிங்கர்: (கொண்கணை' என்பது பாடம்) தோழீ! இவ்விடர் இரக்கத்திற்கு ஏதுவாகிய கொண்கனைப் பின்னுங் காணாவாயின் வாழாவாய் விட்டன இக்கண்களானவை. .
பரிமேலழகர்: அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?
பரிமேலழகர் குறிப்புரை: மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை.

'விருப்பமின்றிப்போனாலும் அவரைக் காணாது அமைகின்றில என் கண்கள்' என்றும் 'கொண்கனைப் பின்னுங் காணாவாயின் வாழாவாய் விட்டன இக்கண்களானவை' என்றும் 'அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லை; என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ';அவரைப் பாராது கண்கள் தூங்கா', 'அவரைக் காணாமல் (உறக்கமின்றி அழுது) தவிக்கின்றன. என்னுடைய கண்கள். என்ன வஞ்சனை', 'அவரைக் காணாமற் கண்கள் அமைதி யடையமாட்டா.', ' அவரைக் காணமுடியாமல் கண்கள் வருந்துகின்றன' என்றபடி பொருள் உரைத்தனர்.

அவரைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையமாட்டா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வீரைந்து திரும்பி வராத அவரைப் பார்க்காமல் என் கண்கள் அமைதியுறாவாமே! என்ன வகையான கண்கள் இவை? என்கிறாள் தலைவி.

பேணாது பெட்டார் உளரோ? விரைந்து வராதவராயிருந்தாலும் காதலரைக் காணாமல் என் கண்கள் அமைதியுறா என்பது பாடலின் பொருள்.
'பேணாது பெட்டார்' என்றால் என்ன?

உளர்மன்னோ என்றது இருக்கின்றார்களா என்ன? எனப் பொருள்படும்.
மற்று அவர் என்ற தொடர் பின் அவர் குறித்தது.
காணாது என்ற சொல்லுக்குப் பாராது என்பது பொருள்.
அமைவுஇல என்ற சொல் பொருந்தி இருப்பதாக இல்லை என்ற பொருள் தருவது.
கண் என்றது கண்கள் எனப்படும்.

என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொழுநரைத் தாம் காணாது அமைதி பெறுகின்றதில்லை.

செயல் காரணமாகக் காதலியைப் பிரிந்து சென்றிருக்கிறான தலைவன். அவன் திரும்பி வரும் காலம் நீட்டிப்பதாக உணர்கிறாள் காதலர்க்குத் தம் மீது விருப்பம் இருந்தால் விரைந்து திரும்பிவந்து தண்ணளி செய்திருப்பாரே! அவர்க்கு தன்மேல் விருப்பம் இல்லாமல் இருப்பதால்தானே உடன் வீடுதிரும்பவில்லை என்று அவளாகவே உண்மைக்கு மாறான ஒரு காரணம் கற்பித்துக் கொள்கிறாள். ஆனாலும் அவனைக் காணாமல் அவள் கண்கள் உறக்கம் கொள்ளாது அலை பாய்கின்றன எனவும் கூறுகிறாள். இப்படிக் காதலர் ஒருவர் விரும்பி விரைந்து தம்மைக் காணத் துடிக்காதிருக்கத் தாம் மட்டும் அவரைக் காண விழைவார் உலகத்தில் இருப்பார்களா என்ன'? எங்கும் கண்டது இல்லை எனச் சலிப்புடன் கூறுகின்றாள் தலைவி..

'பேணாது பெட்டார்' என்றால் என்ன?

பேணாது என்ற சொல்லுக்கு விரும்பாது என்பது பொருள். பெட்டார் என்ற சொல் நண்பர் அல்லது காதலித்தவர் என்ற பொருள் தரும்.
'பேணாது பெட்டார்' என்பதற்கு உரையாளர்கள் விரும்பத்தகாததனை விரும்புவார், விரும்பாதவரைத் தாம் விரும்புவார், -நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல் மாத்திரத்தால விழைந்தவர், மனமின்றியே காதலித்தார், மனத்தால் விரும்பாமல் காதலித்தவர், உள்ளன்பு இல்லாமல் உறவு கொண்டவர், பேணும் விருப்பமில்லாமலே பேணும் விருப்பமிருப்பதாகக் காட்டியவர், நெஞ்சால் விரும்பாமல் சொல்லால் மாத்திரம் விரும்பியவர், விருப்பத்தை உண்டாக்கிவிட்டு அதைப் போற்றாதவர் என்று பொருள் கூறினர்.
இவற்றுள் காலிங்கரது 'விரும்பாதவரைத் தாம் விரும்புவார்' என்ற பொருள் பொருத்தமாக உள்ளது.

தம்மை விரும்பாதவரைத் தாம் விரும்புவாரும் உளரோ? விரைந்து வராதவராயிருந்தாலும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியுறா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உள்ளத்தில் அன்பிருந்தால் காதலர் கண்களுக்குக் காட்சி அளிக்காமல் காலம் தாழ்த்துவாரா எனத் தலைவி கேட்கும் கண்விதுப்பு அழிதல் பாடல்.

பொழிப்பு

விரும்பி விரைந்து திரும்பாதவரைக் காதலிப்பார் உள்ளார்களா என்ன? எனினும் அவரைக் காணாமல் என் கண்கள் அமைதியுறல் இல்லை.