இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1176



ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண்
தாஅம் இதன்பட் டது

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1176)

பொழிப்பு (மு வரதராசன்): எமக்கு இந்தக் காமநோயை உண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

மணக்குடவர் உரை: எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் இந்நோயகத்துப்பட்டது மிகவும் இனிது.
இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) எமக்கு இந்நோய் செய்த கண் தாம் இதன் பட்டது- எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது; ஓஒ இனிதே - மிகவும் இனிதாயிற்று.
('ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம்)

நாமக்கல் இராமலிங்கம் உரை: எனக்கு இவ்வளவு காம வேதனையை உண்டாக்கி வைத்த இந்தக் கண்கள் இப்படித் துன்பத்திற் சிக்கிக் கொண்டு தூக்கமின்றி அழுதழுது நீர் வறண்டு தவிப்பது நான் மகிழ்த் தக்கதுதான். படட்டும். நிரம்பப்படட்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.எமக்குஇந்நோய் செய்தகண் தாஅம் இதன்பட் டது ஓஒ இனிதே

பதவுரை: ஓஒ-(மிகுதிப் பொருளில் குறிப்பு); இனிதே-நன்றானதே; எமக்கு-நமக்கு; இந்நோய்-இந்தப் பிணி; செய்த-இயற்றிய, தந்த; கண்-கண்; தாஅம்-தாமும், தாங்களும்; இதன்பட்டது-இப்படித் துன்பப்படுவது, இதன்கண் அகப்பட்டுக் கொண்டது.


ஓஒ இனிதே எமக்குஇந்நோய் செய்தகண் தாஅம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகவும் இனிது எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும் .
பரிப்பெருமாள்: மிகவும் இனிது எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும்;
பரிதி: ஓகோ நல்லதே நமக்கு விரகத்தைக் காட்டித் தந்து பின்பு தாமே;
காலிங்கர்: தோழீ! நான் வியப்ப இனியது ஒன்றே; யாது எனின், முன்னம் தாம் அவரைக் கண்டு பின் எமக்கு இவ்வாறு இடந்தரும் நோய் செய்த கண் தாம்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) மிகவும் இனிதாயிற்று எமக்கு அக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஓ' என்பது மிகுதிப் பொருட்கண் வந்த குறிப்புச்சொல். 'தம்மால் வருத்தமுற்ற எமக்கு அது தீர்ந்தாற்போன்றது' என்பதாம். [தம்மால்-கண்களால்; அது தீர்ந்தாற்போன்றது என்பதாம்-எமக்குக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் துயிலாது வருத்தமுறுதல் அக்காம நோய் தீர்ந்தாற் பொன்றதாம் என்று தலைமகள் கூறினாள் என்பதாம்]

'மிகவும் இனிது, எமக்கு இந்நோயைச் செய்த கண்கள் தாமும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வளவோ மகிழ்ச்சி; எனக்கு இத்துன்பம் தந்த கண்கள் தாமும்', 'மிகவும் இனிதாயிற்று எமக்கு இக்காம நோயினைச் செய்த கண்கள் தாமும்', 'மிகவும் இனிதாயிற்று எமக்கு இந்த நோயை உண்டாக்கிய கண்கள் தாம்', 'மிகவும் இனியதே எமக்கு இக் காதல் நோயைச் செய்த கண்கள் தாமும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஓகோ நல்லாத்தான் இருக்கிறது! நமக்குக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் என்பது இப்பகுதியின் பொருள்.

இதன்பட்டது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோயகத்துப்பட்டது
மணக்குடவர் குறிப்புரை: இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: இந்நோயகத்துப்பட்டது
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நின்கண் கலங்கிற்று; அஃதெனக்கு இன்னாதாயிற்று என்ற தோழிக்கு அது மிகவும் இனிதென்று தலைமகள் கூறியது
பரிதி: கலுழ்ந்து அழுவது. இதற்கு என் செய்வேன் என்றவாறு.
காலிங்கர் ('இடர்ப்பட்டது' பாடம்): இப்பொழுது அழுதும் துயிலாதும் இங்ஙனம் இடர்ப்பட்ட இது என்றவாறு.
பரிமேலழகர்: இத்துயிலாது அழுதற் கண்ணே பட்டது.

'இந்நோயகத்துப்பட்டது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் இப்பகுதிக்கு 'இடர்ப்பட்டது' எனப் பாடங்கொண்டு அழுதும் துயிலாதும் இடர்ப்பட்ட இது' எனப் பொருள் கூறினார். பரிதியும் பரிமேலழகரும் 'அழுதற் கண் பட்டது' என்று உரைத்தனர்

இன்றைய ஆசிரியர்கள் 'அத்துன்பப்படுவது', 'துயிலாமல் துன்பப்பட்டது', 'தூங்க முடியாது. இந்நோயுளகப்பட்டுக் கொண்டது', 'துயிலாமல் அழுதல் துன்பத்தின்கண்ணே பட்டுள்ளன இந்நிலை' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதன்கண் துன்பப்படுவது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஓஒ இனிதே நமக்குக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் அதன்கண் துன்பப்படுவது என்பது பாடலின் பொருள்.
'ஓஒ இனிதே' குறிப்பது என்ன?

'காதலைத் தந்த கண்களின் துன்பத் தவிப்பு இனிமையாகத்தானே இருக்கிறது' என்று சொல்லித் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள முயல்கிறாள் தலைவி.

எமக்கு உயலாற்றாக் காமநோயைத் தரச் செய்த கண்கள், தாமும் துயில் பெறாமல் கலங்கிநிற்றல் காண்பதற்கு மிகவும் இனிதே என்கிறாள் தலைமகள்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தொலைவு சென்றுள்ள கணவர் திரும்பி வருவதை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள் தலைவி. அவரது பிரிவைத் தாங்கமுடியாமல் வருந்தி உடல் மெலிகிறாள்; அவரை நினைக்கும்போதெல்லாம் அவளுக்கு அழுகையாய் வருகிறது. காதல் கணவரை முதன் முதலில் காண்பித்து நோய் உண்டாக்கிய இக்கண்கள் ஏன் அழுகின்றன? எனக் கேட்கிறாள். 'முன்னம் அவரைக் கண்டபோது ஆய்ந்தறியாமல் காதல் உண்டானது. ஆனால் இவ்வளவு நாள் பழகி அவரைப் பற்றி நன்கு புரிந்துகொண்ட பின்னர் அவரைப் பரிவுடன் எண்ணாது இப்பொழுது ஏன் கண்ணீர்‌ உகுத்துத் துன்பப்படுகின்றன?' எனக் கண்களைச் சுட்டிக் கேட்கிறாள். இக்கண்கள்தாம் முதலில் அவரைப் பார்த்த உடனேயே மகிழ்ந்து காதல் கொண்டன. அதே கண்கள் இப்பொழுது கலுழ்வது அவளுக்கு வியப்பாகவும் நகைக்கத்தக்கதாகவும் இருக்கின்றதாம். கணவர் நினைவு கண்முன் தோன்றித் தோன்றி தலைவியின் உள்ளத்தை நிலைகுலையச் செய்ததால் அது பொறுக்கமுடியாமல் கண்கள் அழுதழுது அவற்றின் நீரும் வற்றிவிட்டது. 'எனக்குக் காதல் நோயைச் செய்த என் கண்கள் தாமும் தூங்காமல் துன்பத்தில் உழகின்றனவே' எனக் கூறிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
கடமையிலிருக்கும் தலைவர் இன்னும் இல்லம் திரும்பவில்லை. அவர்‌ வருதல்‌ நீட்டிப்பதால் தலைவி அவரைக் காண்பதைப் பெரிதும் விரும்பினவளாக கண்ணீருடன் இருக்கிறாள். ‌தலைவரை முதன்முதலில் பார்த்த பொழுதில் விரைந்து காதல் கொண்டு செயல்பட்ட கண்கள் இப்பொழுது அவர் வரவை நோக்கிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றன; 'தனக்குத் துன்பம் நேரக் காரணமான கண்கள் அழுது துயிலாமல் இருப்பது கண்டு தனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது' என்கிறாள். காதல்நோயால் வருந்தி உள்ளச்சோர்வின் மேல்எல்லையில் உள்ள தலைவி 'ஆகா! இது நல்லாத்தானே இருக்கிறது; தனக்கு இத்துன்பம் தந்த கண்கள் தாமும் அத்துன்பப் படுவது கண்டு அவற்றிற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' எனக் கூறுகிறாள். அழுது அழுது கண்ணீரால் நிறைந்து அக்கண்கள் படும் தவிப்பைக் கண்டு இவள் ஆறுதல் பெற முயல்கிறாள்.
தலைவரைத் தனக்கு காட்டிய கண்களே தன் காதல்துன்பத்திற்குக் காரணமென்று ஏதோ அவளுக்கும் அவள் கண்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாதது போல் பேசுகிறாள். அவள் துன்பம் சினமாகி, சினம் சினநகையாக மாறுகிறது. காதலரைக் காணமுடியாத சினத்தைக் கண்கள் மீது காட்டுகிறாள். கண்களை நோக்கி 'படட்டும். நன்றாகப்படட்டும். என்னை இப்பாடுபடுத்திய இக்கண்களுக்கு இது வேண்டியதுதான்' அதைக்காண எனக்கு மகிழ்ச்சியே' என்று பழிப்புரை கூறி தன் துன்பத்திற்கு தீர்வு தேடுகிறாள்.

'இதன்பட்டது' என்ற சொற்றொடர்க்கு இந்நோயகத்துப்பட்டது, அழுதற் கண்ணே பட்டது, அத்துன்பப் படுவது, துயிலாமல் துன்பப்பட்டது, இப்படி அழுதழுது நீர் வரண்டு தூக்கமின்றி துன்பத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பது, தூங்க முடியாது. இந்நோயுளகப்பட்டுக் கொண்டது, துயிலாமல் அழுதல் துன்பத்தின்கண்ணே பட்டுள்ள இந்நிலை, இத்துன்பத்துள் அகப்பட்டுக் கொண்டது என உரைகாரர்கள் பொருள் கூறினர். இவற்றுள் பரிமேலழகரின் அழுதற் கண்ணே பட்டது என்ற பொருள் சிறக்கும்.
காலிங்கர் 'இடர்ப்பட்டது' எனப் பாடம் கொள்கிறார். 'தாஅ மிடர்ப்பட்டது' என இவர் கொண்ட பாடம் 'தாஅம் இதற்பட்டது' என்பதினும் தெளிவுபயப்பதாயுள்ளது.

.

'ஓஒ இனிதே' குறிப்பது என்ன?

'ஓஒ இனிதே' என்றதற்கு மிகவும் இனிது, ஓகோ நல்லதே, நான் வியப்ப இனியது, மிகவும் இனிதாயிற்று, மிகவும் நல்லதே!, ஓ! நமக்கு மிகவும் இனிதாயுள்ளது!, எவ்வளவோ மகிழ்ச்சி, மிகவும் இனிதாயிற்று, மிகவும் இன்பமானது தான், ஓஓ! மிக இனிமையானதேயாகும், இந்நிலை மிகவும் இனியதே, ஆ! இனிது! இனிது, மிகவும் இனிதாவதே. நல்லதுதான் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எது தலைவிக்கு இனிதாக இருக்கிறது? தனது கண்கள் அழுவதும் துயிலாமல் இருப்பதும் அவளுக்கு இனிதாக இருக்கிறதாம்.
தமக்குத் துன்பம் செய்தவர் அத்துன்பத்தினாலேயே துயரப்படும்படி நேர்ந்தால் சிலர் மகிழ்ச்சி கொள்வர். பிறர் துன்பத்தில் இன்பம் காணும் குணத்தவள் அல்ல தலைவி. இங்கு துன்புறுவதும் அவள்; அதே துன்பத்திற்காக 'மகிழ்வதும்' அவளே. தான் இன்புறுவதாகச் சொல்லித் தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறாள். அவள் கண்கள் படும்பாட்டைப் பார்த்து, அவள் உறும் துயரம் தணியும் பொருட்டு, 'ஓகோ இந்த கண்களும் உறங்கவில்லை! இது நல்லாத்தானே இருக்கிறது! தாம் செய்த பழிக்குத் தாமே நன்றாகப் படட்டும்' என்று அது எவ்வளவோ மகிழ்ச்சி தருவதாகச் சொல்கிறாள்.
ஓ என்பது குறிப்பு மொழி. மிகுதியை உணர்த்த அளபெடுத்துள்ளது. ஓஓ என்பது வியப்பைக் குறிக்கும்; ஓ 'நன்றாக வேண்டும் இந்தக் கண்களுக்கு' என்ற நடையில் அமைந்தது.

ஓஒ இனிதே என்ற தொடர்க்கு ஓகோ இனிதாக இருக்கிறதே என்பது பொருள்.

ஓகோ நல்லதே நமக்குக் காமநோயினைச் செய்த கண்கள் தாமும் அதன்கண் துன்பப்படுவது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தலைவரை விரைந்து காண விரும்பும் கண்கள் தவிப்பது சோர்வடைந்த தலைவிக்கு இனிமை தருகிறது என்னும் கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

ஓகோ! நமக்குக் காதல்நோயினைத் தந்த கண்கள் தாமும் அழுதும் துயிலாமலும் துன்பப்படுவது நல்லாத்தான் இருக்கிறது!