இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1175படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண்

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1175)

பொழிப்பு: அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள்,இன்று உறங்கமுடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன

மணக்குடவர் உரை: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன.
இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன.
(காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது.

சி இலக்குவனார் உரை: எனக்குக் கடலும் சிறிதாகுமாறு பெரிதாய் காதல் நோயைச் செய்த என் கண்கள் தாமும் துயிலமுடியாதனவாய் துன்பப்படுகின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண்.


படல்ஆற்றா பைதல் உழக்கும்:
பதவுரை: படல்-துயிறல்; ஆற்றாமாட்டா வண்ணம்; பைதல்-துன்பம்; உழக்கும்-வருந்தும்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன;
பரிப்பெருமாள்: தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன;
பரிதி: துயரமாற்றாமல் அழும்;
காலிங்கர்: தோழீ! ஒருபொழுதும் துயில மாட்டாமல் இங்ஙனம் சால உறுதுயர் உழக்கும்; யாவை எனின்;
பரிமேலழகர்: இதுவும் அது) அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன;

'உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூஙகமுடியாது துன்பப் படுகின்றன', 'அக்கொடுஞ் செயலால் தாமும் துயில் கொள்ளாதனவாகித் துயருறும்', ' இமை மூடாமல் விழித்துக் கொண்டிருந்து தாம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனவே.', 'அத்தீவினையாலே தாமும் தூக்கமில்லாது துன்புறுகின்றன', என்ற பொருளில் உரை தந்தனர்.

இமைகள் மூடமுடியாமல் துன்பம் உறும் என்பது இப்பகுதியின் பொருள்.

கடல்ஆற்றாக் காமநோய் செய்தஎன் கண்:
பதவுரை: கடல்-கடல்; ஆற்றாக்-(சிறிதாகும்) பெரிதாகிய; காம-காமமாகிய; நோய்-பிணி; செய்த-இயற்றிய; என்-எனது; கண்-கண்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள்
மணக்குடவர் கருத்துரை: இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள்;
பரிப்பெருமாள் கருத்துரை: இது பிறர்க்கு இன்னாமை செய்தார் தமக்கும் இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது. இவை எல்லாம் ஒன்றின் ஒன்று வந்ததாகக் கொள்ளப்படா. இவ்வதிகாரத்து காமவேதனையால் கண்ணுக்கு உறுவன எல்லாம் கூறப்பட்டது என்றவாறு.
பரிதி: கடலினும் பெரிதாகிய காமநோய் செய்த கண்கள் என்றவாறு.
காலிங்கர்: கடலும் நிறையாற்றாப் பெருவெள்ளம் ஆகிய காமநோய் உற்ற என் கண்களானவை. காலிங்கர் குறிப்புரை: யான் இதற்கு என் செய்யத் தகுவது என்றவாறு.
பரிமேலழகர்: எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்.
பரிமேலழகர் கருத்துரை: காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது.

'கடலினும் மிக்க காமநோயைச் செய்த என் கண்கள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடலினும் பெரிய காமம் தந்து என் கண்கள்', 'கடலைவிடப் பெரிதாய்க் காமநோயைச் செய்த என் கண்கள்', 'சமுத்திரத்தைவிடப் பெரிய காம வேதனையை எனக்கு உண்டாக்கி வைத்துவிட்டு என் கண்கள் ', 'கடலும் ஒப்பாகாது சிறிதாகும்படி பெரிதாகிய காம் நோயை எனக்குச் செய்த கண்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

கடலும் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கடலை நோக்கச் சிறிதாகும் அளவு எனக்குக் காமம் தரவல்ல கண்கள் தாமே ஒருபொழுதும் துயில மாட்டாமல் தவிக்கின்றன எனத் தலைவி கூறுகிறாள்.

கடலும் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் படல்ஆற்றா துன்பம் உறுகின்றன என்பது பாடலின் பொருள்.
'படல்ஆற்றா' என்றால் என்ன?

பைதல் உழக்கும் என்றது துன்பம் உறும் என்ற பொருளது.
கடல்ஆற்றா என்ற தொடர் கடலும் போதாதபடி அதாவது கட;லினும் பெரிது என்ற பொருள் தரும்.
காமநோய் செய்த என்ற தொடர்க்கு காதல் நோய் உண்டுபண்ணிய என்பது பொருள்.
என் கண் என்பது என் கண்கள் குறித்தது.

'கடலினும் பெரிதான காதல் நோயை எனக்குத்தந்துவிட்டுத் தாம் உறங்கமுடியாமல் தவிக்கின்றன என் கண்கள்' என்கிறாள் தலைவி.

பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள காதலர் விரைந்து திரும்பி வந்து சேராமல் இருப்பதால் காதல்நோய் மிகக் கொண்டு தாங்கமுடியாமல் தவிக்கிறாள் தலைவி. அப்பொழுது அவள் தன் கண்களை நினைத்து அவைதானே எங்கள் காதலைத் தொடங்கி வைத்தவை என எண்ணிப் பார்க்கிறாள். ஆனால் அவையும் அவர் வரவை நோக்கித் தூங்காமல் இருக்கின்றன என்பதை உணர்கிறாள் 'எனக்குக் காதல் நோயைச் செய்த என் கண்கள் தாமும் உறங்கமுடியாதனவாய் துன்பத்தில் உழகின்றனவே' எனக் கூறுகிறாள்.

படல்ஆற்றா' என்றால் என்ன?

படல்ஆற்றா என்ற தொடர்க்கு மூட இயலாத என்பது பொருள். இங்கு இமைகள் மூட் இயலாததைக் குறிக்கிறது.

கண்படல் என இயைந்து உறக்கத்தைக் குறிக்கும் எனச் சொல்லி கண்படல் என்பது கண் பொருந்துதல் எனப் பொருள்பட்டு உறக்கத்தைக் குறிக்கும் என படல்ஆற்றா' என்ற தொடரை விளக்குவார் இரா.சாரங்கபாணி..
இத்தொடர்க்கு உரையாளர்கள் உறங்கமாட்டாவாய், துயில்கிலவாய், 'ஒருபொழுதும் துயில மாட்டாமல்' 'தூக்கம் பெறாதனவாய்', 'கண்கள் உறங்குவதற்கு மூடாமல்', ;தூக்கமில்லாதனவாகி' ,'கண்கள் இமைமூடாமல் விழித்துக்கொண்டு' 'தூக்கமின்றி இமைபொருந்த இயலாவாய்', 'கண்கள் தூஙகமுடியாது' , ;துயில் கொள்ளாதனவாகி', 'தூக்கமில்லாது', 'மூடி உறங்குவதற்கும் முடியாமல்', 'துயிலமுடியாதனவாய்', 'இமை பொருந்தாமல்', 'கண்கள் இன்று படமுடியாத துன்பத்தைப் பட்டு, இமைகளை மூடித்தாங்க முடியாது', என்று பொருள் கூறினர் .
படல் ஆற்றா' என்பதற்குக் '''கண்கள் உறங்குவதற்கு) மூட இயலாத' என்பது' பொருள்.

கடலும் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் இமைகள் பொருந்தாமல் துன்பம் உறுகின்றன என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலர் விரைந்து வரவேண்டும் எனற நினைவில் தலைவி உறங்கமாட்டாதவளாய் ஆகிறாள் என்னும் கண்விதுப்பு அழிதல் பாடல்.

பொழிப்பு

கடலும் கொள்ளாத அளவு காமநோயைச் செய்த என் கண்கள் இமைகள் மூடமுடியாமல் துன்பம் உறுகின்றன.