இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1174பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1174)

பொழிப்பு: என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டுவிட்டன

மணக்குடவர் உரை: உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை உண்கண்கள் நிறுத்தித் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன.
கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது). உண்கண் -உண்கண்கள்; உயலாற்றா உய்வு இல் நோய் என் கண் நிறுத்து-அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி; பெயலாற்றா நீர் உலந்த - தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.
(நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: மை பூசப்பெற்ற கண்கள் நான் பிழைக்க முடியாத வகையில் தணியாத நோயை என் கண்ணே தங்க வைத்துத் தாமும் அழமுடியாதவாறு கண்ணீர் வற்றி விட்டன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.


பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண்:
பதவுரை: பெயல்-பொழிதல்; ஆற்றா-தாங்கமாட்டாமல்; நீர்-நீர்; உலந்த-வற்றிவிட்டன; உண்-உண்ட; கண்-கண்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உண்கண்கள் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன;
பரிப்பெருமாள்: உண்கண்கள் தாமும் அழமாட்டாவாய் நீருலந்தன;
பரிதி: மழை பெய்வதுபோலக் கண்ணீர் சொரிந்து;.
காலிங்கர்: தோழீ! தாமும் அகத்துள்ள நீர் ஒழிந்தன என மையுண்டு அகன்ற கண்ணானவை
பரிமேலழகர்: (இதுவும் அது).-உண்கண்கள் தாமும் அழுதலை மாட்டாவண்ணம் நீர் வற்றிவிட்டன.

'உண்கண்கள் அழமாட்டாவாய் நீர் உலர்ந்தன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்கள் இனி அழமுடியாமல் வறண்டன', 'என் மையுண்ட கண்கள் தாமும் அழ இயலாதவாறு நீர்வற்றி விட்டன', ' அழுது அழுது கண்ணீரற்று வறண்டு போய்விட்டனவே இந்தக் கண்கள் ', 'என் கண்கள் தாமும் அழுதழுது, நீர் சொரிய முடியாது வற்றிவிட்டன. ', என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலரை உண்ட கண்கள் அழமாட்டாவண்ணம் கண்னீர் வற்றிவிட்டன. என்பது இப்பகுதியின் பொருள்.

உயல்ஆற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து:
பதவுரை: உயல்-தப்புதல்; ஆற்றா-மாட்டா வண்ணம்; .உய்வுஇல்-ஒழிவு இல்லாத; நோய்-துன்பம்; என்கண்-என்னிடத்தில்; நிறுத்து- (நிறுத்தி) நிலை பெறச்செய்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை நிறுத்தி.
மணக்குடவர் குறிப்புரை: கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியவாறு.
பரிப்பெருமாள்: உயல் ஆற்றாத என்மாட்டு உய்வில்லாத நோயை நிறுத்தி.
பரிப்பெருமாள் குறிப்புரை: கண்கள் தாம் நினைத்தது முடித்துத் தொழின்மாறினவென்று கூறியது..
பரிதி: என் ஆவியைக் காமநோய் செய்தது இக்கண் என்றவாறு.
காலிங்கர்: உய்தற்கு ஓர் உபாயம் இல்லாத உறுதுயரத்தை என் கண்ணும் மருவுறுத்தி வைத்து. இனி யாதோ செயத்தக்கது என்றவாறு.
பரிமேலழகர்: அன்று யான் உய்ய மாட்டாமைக்கு ஏதுவாய ஒழிவில்லாத நோயை என் கண்ணே நிறுத்தி;
பரிமேலழகர் குறிப்புரை: நிறுத்தல்: பிரிதலும் பின் கூடாமையும் உடையாரைக் காட்டி அதனால் நிலைபெறச் செய்தல். 'முன் எனக்கு இன்னாதன செய்தலாற் பின் தமக்கு இன்னாதன தாமே வந்தன' என்பதாம்.

'உய்ய மாட்டாத உறுதுயரத்தை என்கண் நிறுத்தி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தப்ப முடியாத நோயை எனக்குத் தந்து விட்டு', 'அன்று தப்பிப் பிழைக்க முடியாத தீராத நோயை என்னிடம் நிலைபெறச் செய்து ', 'சகிக்கமுடியாத ஓயாத காம வேதனையை எனக்கு உண்டாக்கி வைத்துவிட்டு', 'பிழைக்க முடியாதபடி உய்வில்லாத வருந்துகின்ற நோயை என்னிடத்திலே நிறுத்திவிட்டு ' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதனின்று தப்பிப் பிழைக்க முடியாத தீராத நோயை என்னிடம் நிலைபெறச் செய்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தாமும் தப்பமுடியாது அழுது அழுது கண்ணீர் வற்றி எனக்கும் மீள வழி இல்லாமல் செய்து விட்டன என் கண்கள் என்கிறாள் தலைவி.

உயல்ஆற்றா தீராத நோயை என்னிடம் நிலைபெறச் செய்து அழமாட்டாவண்ணம் கண்னீர் வற்றிவிட்டன காதலரை உண்ட என் கண்கள் என்பது பாடலின் பொருள்.
'உயல்ஆற்றா' என்றால் என்ன?

பெயல்ஆற்றா நீர்உலந்த உண்கண் உயல்ஆற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

பெயல்ஆற்றா என்ற தொடர்க்கு பெய்ய முடியாத என்பது பொருள்.
நீர்உலந்த என்ற தொடர் நீர் வற்றிய என்ற பொருள் தரும்.
உண்கண் என்ற தொடர் உண்ட கண்கள் குறித்தது.
உய்வில்நோய் என்றது தப்பிப்பிழைத்தற்கு முடியாத துன்பம் எனப் பொருள்படும்.
என்கண் நிறுத்து என்றது என்னிடம் தந்துவிட்டு எனப்படும்.

தாங்க முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டு தாமும் மீளமுடியாமல் அழுது அழுது நீர் வற்றிப்போயின் என் கண்கள். .

தொழில்முறை காரணமாகப் பிரிந்து போயுள்ள காதலர் எப்பொழுது திரும்பி வருவாரோ என்று ஏக்கத்துடன் காத்து இருக்கிறாள் தலைவி. அவர் நினைவு கண்முன் தோன்றித் தோன்றி அவள் உள்ளத்தை நிலைகுலையச் செய்கிறது. அது பொறுக்கமுடியாமல் கண்கள் கண்ணிர் சொரிந்தன. அவரை முதலில் பார்த்துக் காதல் நோயைத் தன்னிடம் தந்துவிட்டு இந்தக் கண்கள் தாமும் தாங்கமுடியாமல் கண்ணீர் வற்றும் அளவு அழுது தீர்த்துவிட்டன.. என்கிறாள் தலைவி.

'உயல்ஆற்றா' என்றால் என்ன?

'உயல்ஆற்றா என்றதற்கு நேர்பொருள் உய்ய இயலாத அதாவது தப்பிப் பிழைக்க முடியாத என்பது.
உயலற்றா உய்வில்நோய் என்னிடம் தந்து என்றபடி மற்ற பழம் உரையாசிரியர்கள் பொருள் கூறினர். மணக்குடவர் மட்டும் உயலாற்றா என்கண் எனக் கொண்டு கூட்டிப் பொருள் கூறியுள்ளார். இதன்படி தப்பமுடியாத என்னிடம் நோய் தந்து என்றாகிறது. மற்றவர் உரையே சிறப்பாக உள்ளது.
இதற்கு தாங்க முடியாத, உயிர்பிழைக்க மாட்டாத, பொறுக்க முடியாத, சகிக்கமுடியாத, தப்பிப் பிழைக்க முடியாத என்று பிற உரையாளர்கள் பொருள் கூறினர். .
இத்தொடர்க்கு தப்பிச் செல்ல வழியில்லாத என்பது பொருள்.

தப்பிப் பிழைக்க முடியாத தீராத நோயை என்னிடம் நிலைபெறச் செய்து அழமாட்டாவண்ணம் கண்னீர் வற்றிவிட்டன காதலரை உண்ட என் கண்கள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவர் வரவை நினைந்து நினைந்து என் கடைசித் துளிக் கண்ணீரும் தீர்ந்து போனதே எனத் தலைவி கூறும் கண்விதுப்பு அழிதல் பாடல்.

பொழிப்பு

மீட்சி காண இயலாத நோயை என்னிடம் நிலைபெறச் செய்த என் கண்களின் நீர் இன்னும் அழ இயலாதவாறு வற்றிப்போயின.