இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1171கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாங்கண் டது

(அதிகாரம்:கண்விதுப்பு அழிதல் குறள் எண்:1171)

பொழிப்பு (மு வரதராசன்): தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள் தாமே இப்போது அழுவது ஏன்?

மணக்குடவர் உரை: அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே? பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி?
இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) தண்டா நோய் யாம் கண்டது தாம் காட்ட - இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலான் அன்றோ; கண் தாம் கலுழ்வது எவன் கொல் - அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி?
('காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.

இரா சாரங்கபாணி உரை: தணியாத இக்காம நோயினை யாம் அறிந்தது கண்கள் எமக்குக் காதலரைக் காட்டியதனால் அன்றோ? அங்ஙனம் இருக்க, இன்று அக்கண்கள் அவரைக் காட்டுமாறு எம்மைக் கேட்டு அழுவது ஏனோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
தண்டாநோய் தாம்காட்ட யாங்கண்டது; கண்தாம் கலுழ்வது எவன்கொலோ?

பதவுரை: கண் தாம்-கண்கள்தாம்; கலுழ்வது-அழுவது; எவன்கொலோ.-எதனாலோ?; தண்டா-தணியாத; நோய்-பிணி; தாம்-தாங்கள்; காட்ட-காண்பிக்க; யாம்-நாங்கள்; கண்டது-அறிந்து.


கண்தாம் கலுழ்வது எவன்கொலோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்னர் அக்கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதி?
பரிப்பெருமாள்: பின்னர் கண்கள்தாம் காண்டல் வேட்கையாற் கலுழ்கின்றது யாவர் காட்டுவாராகக் கருதியோ?
பரிதி: கண்டால் அழுவது எவன்கொலோ; .
காலிங்கர்: இன்று இக்கண் தாம் மிகுந்து இங்ஙனம் கலுழ்வது என்னை கொல்லோ;
பரிமேலழகர்: (நின் கண்கள் கலுழ்ந்து தம் அழகு இழவாநின்றன, நீ ஆற்றல் வேண்டும், என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) அன்று அத்தொழிலவாய கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? [கலுழ்ந்து - அழுது; அன்று- காதலர் எதிர்ப்பட்ட அந்நாளில்; அத்தொழிலவாய- காணுதல் தொழிலை உடையவனாய்]

'அக்கண்கள், இன்று எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தந்த கண் இப்போது ஏன் அழுகின்றன?', 'அப்படியிருக்க எனக்கு இந்த வேதனையை உண்டாக்கி வைத்து விட்டு இந்தக் கண்கள் தாம் அழுகின்றனவே என்ன விந்தை!', 'அப்படி நமக்கு நோய் விளைத்த கண்கள் இப்போது அவரைக் காட்டச் சொல்லி அழுகின்றது எதனாலோ? ', 'அங்ஙனமிருக்கவும் இன்று கண்கள் எம்மைக் காட்டச் சொல்லி அழுகின்றது என் கருதி? ', என்ற பொருளில் உரை தந்தனர்.

கண்கள் அவரைக் காணவேண்டி அழுவது எதற்காகவோ? என்பது இப்பகுதியின் பொருள்.

தண்டாநோய் தாம்காட்ட யாங்கண் டது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரைத் தாங்காட்டுதலானே யன்றே?
மணக்குடவ குறிப்புரைர் :இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது
பரிப்பெருமாள்: அமையாத நோயை யாங்கண்டது அந்நோய் செய்தாரை காட்டுதலானே யன்றே?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் காட்டுவாரில்லை யென்று தோழியைக் குறித்துச் சொல்லியது
பரிதி: நோய் செய்து தானே காட்ட யான் கண்டேன் என்றவாறு.
காலிங்கர்: தம்மாலும் நம்மாலும் தடுத்தற்கு அரிய உறுநோய் உறுதற்கு அன்று; அவரைத் தாம் காட்டிற்றாக யாம் கண்டது என்றவாறு.
பரிமேலழகர்: இத்தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலான் அன்றோ; [தாம் - கண்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: 'காட்ட' என்பதற்கு ஏற்ற செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. 'இன்றும் தாமே காட்டுதல் அல்லது யாம் காட்டுதல் யாண்டையது'? என்பதாம்.

'தணியா நோயை யாம் அறிந்தது தாம் எமக்குக் காதலரைக் காட்டலான் அன்றோ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீராத நோயைக் கண்காட்ட நான் பெற்றேன். நோய்', 'எனக்கு இந்த ஓயாத காமவேதனை உண்டானது என்னுடைய கண்கள் அவரை எனக்குக் காட்டி ஆசை கொள்ளச் செய்ததால்தாம்', 'கண்கள் தாமே எனக்குக் காதலரைக் காட்டினமையாலன்றோ யாம் இத் தீரா நோயை துய்ப்பதாயிற்று', 'இந்தத் தணியாத நோயை நாம் அறிந்தது தாம் எமாக்குக் காதலரைக் காட்டலால் அன்றோ?' என்றபடி பொருள் உரைத்தனர்.

'தணியாத காமநோய்உண்டாக்கிய காதலரை இக்கண்கள் காட்டியதால்தானே நான் கண்டேன்' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தணியாத காமநோய்உண்டாக்கிய காதலரை இக்கண்கள் காட்டியதால்தானே நான் கண்டேன்; அக்கண்கள் இப்பொழுது கலுழ்வது எவன்கொலோ? என்பது பாடலின் பொருள்.
'கலுழ்வது எவன்கொலோ' குறிப்பது என்ன?

அன்று எனக்கு அவரைக் காட்டிய கண்கள் இன்று அவரைக் காணவேண்டி அழுகின்றனவே.

இக்கண்கள் அவரைக் காட்டியதால்தான் தணியாத இக்காமநோயை நான் பெற்றேன்; இன்று ஏன் அழுகின்றன இவை?
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தொலைவு சென்றுள்ள கொழுநர் விரைவில் வீடு திரும்பவேண்டும் என்ற வேட்கையுடன் காத்திருக்கிறாள் தலைவி. பிரிவின் ஆற்றாமையால் உடல் மெலிந்து வருந்திக் கொண்டிருக்கிறாள். தூக்கமின்மையாலும் அழுகையை அடக்கமுடியாததாலும் நீர் நிறைந்த அவள் கண்கள் அவள் உறும் பிரிவுத் துன்பத்தை ஊரறியப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. அவன் எப்பொழுது திரும்பி வருவான் என்று அவனைக் காணத் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
காதலன் நினைவு வந்தவுடன் அவள் கண்கள் கண்ணீரால் நிறைந்து நிற்கின்றன. அவள் அழுகிறாள். அப்பொழுது அவனை முதன் முதலில் கண்ட நிகழ்வுகள் உள்ளத்தில் தோன்றுகின்றன. துயரமும் சினமும் மாறிமாறி அவளை ஆட்கொள்கின்றன. இவ்வுணர்ச்சிகளை சுமக்க முடியாமல் வெளியே சொற்களைக் கொட்டுகிறாள். 'இதே கண்கள்தாமே இந்தக் காதல்நோயைத் தந்த காதலவரை அப்பொழுது காண்பித்தன? தாமே குற்றம் செய்துவிட்டு இப்பொழுது தாமே ஏன் அழுகின்றன?' எனக் கண்களைக் குற்றம் சாட்டுகிறாள்.

'கலுழ்வது எவன்கொலோ' குறிப்பது என்ன?

'கலுழ்வது எவன்கொலோ' என்ற தொடர் 'அழுவது எதனால்'? என்ற பொருள் தருவது.
அவன் எப்பொழுது திரும்பி வருவான்; மீண்டும் எப்பொழுது அவனைக் காண்போம் என எண்ண எண்ண தலைவிக்குக் கண்ணீர் பெருகின்றது. அவள் கண்கள் நிறைந்துவிட்டன. பாடலின் 'கண்கள் அழுவது எதனால்' என்ற பகுதிக்கு உரையாளர்கள்:
'எனக்கு இந்தக் காதல் நோய் செய்தவை இந்தக் கண்களே ஆகையால் இவை இவ்வாறு துன்பப்பட்டது மிகப் பொருத்தமானதே',
'காதலனைக் காட்டு' என அவனைக் காணும் வேட்கையால் அழுது புலம்புகின்றன',
'இப்பொழுதும் கண்கள் தாமே எமக்குக் காதலரைக் காட்டவேண்டும் யாம் அக்கண்களுக்கு அவரைக் காட்டுவது எவ்வாறாம் என எண்ணி அழுகிறாளாம்'
'இந்தத் தீராத காதல்நோய் வந்தது இக்கண்களால். ஏனிந்தக் கண்கள் இன்று அழுகின்றன? இது என்ன விந்தை!'
'காதலரைக் கண்டதால்தான் தலைவிக்குக் காமநோய் உண்டாயிற்று. இந்த நோய்க்குக் காரணம் கண்தான். கண் இல்லையென்றால் இந்த நோய் உண்டாகாது. நோயை எனக்குக் கொடுத்துவிட்டுக் கண் ஏன் வருந்துகிறது? நான் அல்லவோ கண்ணைப்பார்த்து வருந்தவேண்டும் என்று தலைவி கேட்கிறாள்'
'அவையே பார்த்தன; அவையே ரசித்தன; இப்போது அவையே காதலரைக் காட்டச் சொல்லி அழுகின்றனவே! காரணம் விளங்கவில்லையே!'
என்றவாறு விளக்கினர்.

தன் கணவர் தந்த பிரிவுத் துயருக்குக் காரணம் தன் கண்களே என்பதாக, ஆற்றாமையால், தன் கண்களிடம் சினம் கொள்ளுகிறாள் தலைவி. தாமே குற்றம் செய்துவிட்டு, காதல்கணவர் பிரிந்து போனதும், தாமே அழுவது ஏன் எனக் கண்களைச் சாடுகிறாள். 'அவரைப் பார்க்கச் செய்ததும், காதல் உணர்வைத்தூண்டியதும், இவ்விதம் எல்லாவற்றையும் செய்து என்னை இந்தத் துயரத்தில் ஆழ்த்தி விட்ட கண்களே! பிரிந்து சென்றவரைப் பார்க்கத்துடித்து, அழுதுஅழுது இன்னும் என்னை ஏன் வருத்துகிறீர்கள்?' இவ்வாறு தலைவி நொந்து கூறுகிறாள்.

தணியாத காமநோய் அறியச் செய்த காதலரை இந்தக்கண்கள் காட்டியதால்தானே நான் கண்டேன்; அக்கண்கள் இப்பொழுது அழுவது எதற்காகவோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எப்பொழுது அவரைக் காண்பேனோ என என்னை அழவைப்பது கண்கள் தாமே என்னும் தலைவியின் கண்விதுப்பு அழிதல்.

பொழிப்பு

தணியாத காமநோய் அறியச் செய்த காதலரை இந்தக் கண்கள் காட்டியதால் நான் கண்டேன்; அதே கண்கள் இன்று அழுவது எதனால்?

பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னரே பதிப்பிக்கப்படும்.