இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1170உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1170)

பொழிப்பு: காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

மணக்குடவர் உரை: அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின், வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா.
இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா.
(அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன'¢ ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அவர் இடத்துக்கு என் மனம் போவதுபோல், கண்களும் போக முடியின் கண்ணீரில் நீந்தா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்.


உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் :
பதவுரை: உள்ளம்-நெஞ்சம்; போன்று-போல; உள்-உள்ளதாகிய; வழி-இடம்; செல்கிற்பின்-செல்லமுடியுமானால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின்;
பரிப்பெருமாள்: அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின்;
பரிதி: நாயகன் மேலே வைத்த மனம் எனக்கு வசப்படாமல் நாயகனைப் பற்றிச் செல்வதுபோல;
காலிங்கர்: தோழி! எனது உள்ளமானது அவர் உள்வழிச் சென்று, என்மாட்டு வருதலின் மற்று அதுபோல;
பரிமேலழகர்: (நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின்,

'அவருள்ளவிடத்து நெஞ்சினைப்போல என் கண்கள் செல்லவல்லனவாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'மனம் போலக் காதலருள்ள இடத்திற்கு விரைவில் செல்லவல்லன ஆயின்', ' (என் கண்கள் அழ ஆரம்பித்துவிட்டன) என் மனம் என் கண்ணைப் பின் தொடர்ந்து போயிருக்கிற மாதிரி என்னுடைய கண்களும் அவர் இருக்கும் இடத்திற்குப் போனால்)', 'மனம்போல, என் கண்கள் தலைவர் இருக்கின்ற இடத்திற்கு விரைந்து செல்லக் கூடியனவாயிருப்பின் ', 'என் கண்கள் மனம்போல, காதலர் உள்ள இடத்திற்குச் செல்லவல்லன ஆயின் ',என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலர் உள்ள இடததுக்கு நெஞ்சினைப் போல செல்ல முடியுமானால் என்பது இப்பகுதியின் பொருள்.

வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண்:
பதவுரை: வெள்ள-வெள்ளமாகிய; நீர்-நீர்; நீந்தல-நீந்தமாட்டா; மன்னோ-(ஒழியிசை) என்-எனது; கண்-விழி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா.
மணக்குடவர் குறிப்புரை: இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: வெள்ளமாகிய நீரின்கண் புகுந்து நீந்தா.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது காண்டல் விருப்பினால் தலைமகள் கூறியது
பரிதி: கண்ணே! உள்ளத்துடனே கூடி நாயகனைக் காண்பதன்றியே கலுழ்ந்து நீர் கரைவது என்னோ என்றவாறு.
காலிங்கர்: தாமும் ஆண்டுச் சென்று கண்டு கண்டு ஓடிவருகற்பின் அங்ஙனம் அழுது அழுது பெருவெள்ளம் கோத்தநீர் நீதுதலைச் செய்யல, காலிங்கர் குறிப்புரை: என்னோ என் கண்களானவை. அதனால் என் நெஞ்சு போலத் தாமும் அவரைக் கண்டு மீளப்பெறாத கடுந்துயரினால் கலுழ்கின்றன என்றவாறு.
பரிமேலழகர்: என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா.
பரிமேலழகர் கருத்துரை: (அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன'¢ ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.

'என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' என் கண்கள் தம் வெள்ளமாகிய நீரிற் கிடந்து நீந்தா', 'பிறகு இப்படி வெள்ளம் போலக் கண்ணீரைக் கொட்டி அழுது கொண்டிருக்க மாட்டா. (அவரைக் கண்டால்தான் என் துயரம் தீரும்', 'கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருக்க மாட்டா', 'வெள்ளமாகிய தம் நீரை நீந்த வேண்டாம் 'என்றபடி பொருள் உரைத்தனர்.

என் கண்கள் கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்க மாட்டாவே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் கண்கள் காதலனைக் காணத் துடிக்கின்றன என்கிறாள் தலைவி.

காதலர் உள்ள இடததுக்கு உள்ளம்போன்று செல்ல முடியுமானால், என் கண்கள் கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்க மாட்டாவே என்பது பாடலின் பொருள்.
'உள்ளம்போன்று' குறிப்பது என்ன?

உள்ளம்போன்று என்றது மனம் போல என்ற பொருள் தரும்.
உள்வழிச் செல்கிற்பின் என்றது உள்ள இடத்திற்குச் செல்ல முடியுமானால் எனப் பொருள்படும்.
வெள்ளநீர் என்ற சொல்லுக்குப் பெருக்கெடுத்து ஓடும் நீர் என்று பொருள்.
நீந்தல என்பது நீந்த மாட்டா என்ற பொருளது.
என்கண் என்ற தொடர்க்கு என்னுடைய கண்கள் என்பது பொருள்.

தொழில் காரணமாகப் பிரிந்து சென்ற துணைவரைத் தலைவி எந்த நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறாள். எனவே அவனிடத்து தலைவியின் நெஞ்சம் எப்பொழுதும் இருக்கிறது.- நாட்குறித்துச் சென்றிருந்தாலும் அவனை இப்பொழுதே நேரில் காண மிக விரும்புகிறாள். அவன் அருகில் இல்லாததை நினைத்து நினைத்துக் கண்ணீர் சொரிகிறாள். கண்களில் கண்ணிர் கோத்து வெள்ளமாகக் காட்சியளிக்கிறது. அப்பொழுது அவள் சொல்கிறாள்: நான் நினைத்த நேரத்தில் என் மனம் காதலனிடம் சென்றுவிடுகிறது; ஆனால் அதுபோல என் கண்கள் சென்று அவனை நேருக்கு நேர் காணமுடியவில்லையே. அதனால்தான் இங்கே அவை என்னுடனேயே தங்கி என் கண்ணில் பெருகும் கண்ணீர் வெள்ள்த்தில் நீந்தமுடியாமல் மிதந்து கொண்டிருக்கின்றன எனச் சொல்கிறாள்..
கண்கள் காதலரைக் காண முடியாமல் வருத்தமுறுகின்றன என்பது கருத்து.

'உள்ளம்போன்று' குறிப்பது என்ன?

மனம் எண்னிய நேரததில் இப்பரந்த உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்லும். எந்தப் பொருளானும் சென்று பற்றும். ஆனால் உடம்பாலும் அதில் அடங்கியிருக்கும் உறுப்புக்களாலும் அங்ஙனம் முடிவதில்லை. காதலன் இருக்கும் தூரம் எவ்வளவானலும் அவள் எண்ணங்களுக்கேற்ப அவள் உள்ளம் நீண்டு கொண்டே செல்லமுடியும் . ஆனால் அவளது புறக் கண்களால் அவ்விதம் சென்று தலைவனை எட்டமுடியாது. உள்ளம் போன்று கண்களுக்கு ஆற்றல் இல்லையே என இர்ங்குகிறாள் தலைவி..

காதலர் உள்ள இடததுக்கு நெஞ்சினைப் போல செல்ல முடியுமானால், என் கண்கள் கண்ணீராகிய வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருக்க மாட்டாவே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலனைக் காண முடியாதிருக்கிறதே என்று கண்ணீர் கோத்து நிற்கும் கண்களுடன் தலைவி வருந்துவதைக் காட்டும்படர் மெலிந்து இரங்கல் பாடல்.

பொழிப்பு

காதலர் உள்ள இடததுக்கு என் மனம் போவதுபோல், கண்களும் போக முடியுமாயின் அவை கண்ணீராகிய வெள்ள நீரில் நீந்தா.