இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1169கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1169)

பொழிப்பு: பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையைவிடத் தாம் கொடியவை.

மணக்குடவர் உரை: கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்.
இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன.
(தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: பிரிந்திருக்கும் இந்நாள்களில் நெடியவாய்ச் செல்லும் இராக் காலங்கள் எல்லாம் பிரிந்து சென்ற கொடியவர் செய்யும் கொடுமைக்கு மேலே கொடுமை செய்கின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இந்நாள் நெடிய கழியும் இரா கொடியார் கொடுமையின் தாம்கொடிய .


கொடியார் கொடுமையின் தாம்கொடிய :
பதவுரை: கொடியார்-கொடுமை புரிபவர்; கொடுமையின்-தீமைக்குமேலே; தாம்-தாங்கள்; கொடிய-கொடுமை செய்கின்றன.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன;
பரிதி: கொடிய நாயகனிலும்;
காலிங்கர்: நெஞ்சே! நமக்கும் பிரிவு என்பதோர் கொடுமை செய்த அக்கொடியாரது கொடுமையினும் தாம் சாலக் கொடியவாய் இருந்தன யாவை எனின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன.
பரிமேலழகர் கருத்துரை: தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.

'கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'பிரிந்த தலைவரினும் கொடுமையுடையன', 'என்னைப் பிரிந்து என் காதலர் எனக்குச் செய்துவிட்ட கொடுமைகளைவிட இந்த இரவு அதிகம் கொடுமை செய்கிறது.', 'பிரிந்து போன கொடியவரது கொடுமையைப் பார்க்கிலும் அதிகக் கொடுமை செய்கின்றன. ', 'கொடியாரது கொடுமையை விடக் கொடியனவாய் உள்ளன. ',என்ற பொருளில் உரை தந்தனர்.

கொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது இப்பகுதியின் பொருள்.

இந்நாள் நெடிய கழியும் இரா:
பதவுரை: இந்நாள்-இந்த நாள்; நெடிய-நீண்டவாய்; கழியும்-செல்கின்ற; இரா-கங்குல்கள்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்.
மணக்குடவர் குறிப்புரை: இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிதி: நெடிய இரா என்றவாறு.
காலிங்கர்: நம்மை ஒருபொழுதும் அறியாது இன்னாவாய் நெடியவாய்ப் பெருகிச் செல்லும் பல யாமங்களை நிலையுறுப்பாக உடைய இந்நெட்டிரா என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: எனவே அன்று நெடுகாமையும் இன்று நெடுகுதலும் கண்டு மெலிந்துரைத்தவாறாயிற்று.
பரிமேலழகர்: காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்;

'இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்போது நேரமாகி விடியும் இரவுகள்', ' (என் காதலர் என்னுடன் இல்லாத) இந்த நாட்களில் இரவும் மிகவும் நீண்ட நேரம் தாமத்து விடிகின்றது. அதனால்', 'பிரிவாற்றாமையால் வருந்தும் இக்காலத்திலே நெடுநேரஞ்சென்று கழிகின்ற இரவுகள் ', 'தலைவரைப் பிரிந்திருக்கும் இந்நாளில் நீண்டனவாய்க் கழிக்கின்ற இரவுகள் 'என்றபடி பொருள் உரைத்தனர்.

இந்நாட்களில் நீண்டதாகச் செல்லும் இரவுவேளைகள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விடியும் நேரம் நெடிதாகிக் கொடுமை செய்கின்றது என்று தலைவி மெலிந்துரைக்கிறாள்.

இந்நாட்களில் நெடிய கழியும் இரா கொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது பாடலின் பொருள்.
'நெடிய கழியும் இரா' என்றால் என்ன?

கொடியார்- என்ற சொல்லுக்கு கொடியவர் என்பது பொருள்.
கொடுமையின் என்ற சொல் கொடுமையைக் காட்டிலும் என்ற பொருள் தரும்.
தாம் கொடிய என்ற தொடர் தாம் கொடியனவாய் உள்ளன எனப் பொருள்படும்.
இந்நாள் என்ற சொல் இந்த நாட்களில் என்ற பொருளது.

பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள காதலர் வரவு நீட்டிதது முகங்காட்டாமையால். அவரைக் கொடியவர் என்று கூறுகிறாள் தலைவி. தனிமையில் தவிக்கும் அவளுக்கு இராக்காலங்களில் தூக்கம் பிடிக்காமல் போவது மட்டுமல்லாமல் இரவுகள் நீண்டு விடிவதற்கு நேரம மிகையாக ஆவது போல் உணர்கிறாள். நெடிய இரவுகள் என்றால் கொடுமையும் மிகை. அன்பு செய்ய காதலன் இல்லாத கொடுமையைவிட நெடிதாகும் இரவுப் பொழுது மேலும் கொடியதாகத் தெரிகிறது தலைவிக்கு.

'நெடிய கழியும் இரா' என்றால் என்ன?

நெடிய கழியும் இரா என்பதற்கு நீட்டித்து முடியும் இரவுகள் என்பது பொருள்.
காதலருடன் கூடியிருந்த காலத்து, நெடுகாமல் விரைந்து கழிந்த இந்த இரவுப்பொழுதுகள், இப்பொழுது அவர் உடன் இல்லாத நிலையில் மிக நெடியவாய் நீண்டு கொண்டே போகின்றன என்கிறாள் தலைவி. எப்பொழுது விடிவெள்ளி முளைக்கும்? எப்பொழுது சேவல் கூவும்? என்று பொறுமையிழந்து இரவுகளைக் கழிக்கிறாள் தலைவி. தலைவன் அருகில் இல்லாத காலத்து இரவின் வரவே கொடுமையானது. அதிலும் இராப்பொழுது நெடியவாய்ப் பெருகிச்சென்றால் என்னாகும்? மிகக் கொடுமையாகிறது. காதலன் நினைவுகளோடு தூங்காத அவளது..கண்ணுக்கு விடியற்காலை விடுதலை அளித்ததுபோல் காட்சி தரும். ஆனால் விடியம் நேரம் நெடியதாகித் தலைவிக்கு மிகக் கொடுமை செய்கிறது .

மனம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நேரமும் காலமும் மிக விரைவாகக் கழிந்துபோகும். ஆனால் உள்ளம் துன்பத்தால் வருந்தும்போது அதற்கு மாறாக, அவை மெல்லச் செல்வதாகத் தோன்றும். இது எல்லார்க்குமுண்டான பொதுவான இயல்பு. காதல்வலி கொண்டதால் தலைவி இரவு வேளைகள் இப்பொழுதெல்லாம நீண்டதாக இருப்பதாக உணர்கிறாள். தலைவருடன் கூடிய நாளில் இன்பஞ் செய்ததால் குறுகியும் அவர்பிரிந்து சென்றதால் துன்பம் மிகுந்திருப்பதால் நீட்டித்தும் நிற்பதாக அவளுக்குத் தோன்றுகிறது இராக்காலங்கள. எனவே "இந்நாள் நெடிய கழியும் இரா" என்கிறாள்.

இந்நாட்களில் நீண்டதாகச் செல்லும் இரவுவேளைகள் கொடியாரது கொடுமையை விடக் கொடியன என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

விடியாத இரவுகள் மிகக் கொடியன என்று தலைவி கூறும் படர் மெலிந்து இரங்கல் பாடல்.

பொழிப்பு

இப்பொழுதெல்லாம் நேரமாகி விடியும் இரவுகள் பிரிந்து சென்றுள்ள கொடியவர் செய்யும் கொடுமையை விடக் கொடியவாக உள்ளன..