இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1162



கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1162)

பொழிப்பு: இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை; நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

மணக்குடவர் உரை: இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன். இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.
இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: 'ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயைக் கரத்தலும் ஆற்றேன்-இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்; நோய் செய்தார்ககு உரைத்தலும் நாணுத் தரும் - ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ?
(ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.)

சி இலக்குவனார் உரை: இக்காதல் நோயைப் பிறர் அறியாமல் மறைத்தலும் முடியாதவன் ஆகின்றேன். நோயை உண்டு பண்ணினவர்க்குச் சொல்லலும் நாணினைத்தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இந் நோயை கரத்தலும் ஆற்றேன்நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.


கரத்தலும் ஆற்றேன்இந் நோயை:
பதவுரை: கரத்தலும்-மறைத்தலும்; ஆற்றேன்-செய்யும்ஆற்றலிலேன்-இந்நோயை-இந்தத் துன்பத்தை..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்;.
பரிப்பெருமாள்: இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்;
பரிதி: காமநோயை மறைப்பதும் அறியேன்;
காலிங்கர்: தோழி! இங்ஙனம் பெருகிச் செல்லா நிறைபடா நோயையான் இனிப் பலர்க்குப் புலனாகாமை மறைத்தலும் அறியேன்;
பரிமேலழகர்: ('ஈண்டையார் அறியாமல் மறைத்தல் ஆண்டையார் அறியத் தூது விடுதல் என்னும் இரண்டனுள் ஒன்று செயல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது). இந்நோயை ஈண்டை அறியாமல் மறைத்தலும் வல்லேனாகின்றிலேன்;

'இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'மறைக்க முடியவில்லை', 'இக்காம நோயை இங்குள்ளார் அறியாதவாறு மறைத்தலும் முடியவில்லை', :(என் செய்வேன்?) இந்தக் காம வேதனையை அடக்கவும் முடிவதில்லை ', 'இந்நோயினை மறைக்கவும் எனக்கு முடியவில்லை ',என்ற பொருளில் உரை தந்தனர்.

பிரிவுத் துயரை மறைக்கவும் முடியாதிருக்கிறேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்:
பதவுரை: நோய்-துன்பம்; செய்தார்க்கு-செய்தவர்க்கு; உரைத்தலும்-சொல்லுதலும்; நாணு-வெட்கம்; தரும்-பயக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.
மணக்குடவர் குறிப்புரை: இது குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: இந்நோயைச் செய்தார்க்குச் சொல்லவும் நாணமாகாநின்றது என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவ்வாற்றாமையைத் தலைமகற்குச் சொல்லி விடுவோம் என்று தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: ஈன நோய் செய்தார்க்கு உரைப்பேன் என்றலும் நாணந்தரும் என்றவாறு
காலிங்கர்: மற்று இப்படர் நோய் செய்தார்க்குச் சென்று ஒரு தூது உரைக்கக் கருதின் மற்று அடுவும் பெரியது ஓர் நாணுதலைத் தருமாயிராநின்றது. இனி என வினையும் யான் அறிகிலேன் என்றவாறு.
பரிமேலழகர்: ஆகாக்கால், நோய் செய்தவர்க்கு உரைக்க எனின், அதுவும் எனக்கு நாணினைத் தாரா நின்றது, இனி என் செய்கோ?
பரிமேலழகர்:குறிப்புரை ஒருகாலைக்கு ஒருகால் மிகுதலின், 'கரத்தலும் ஆற்றேன்' என்றும், சேயிடைச் சென்றவர்க்கு இது சொல்லித் தூதுவிட்டால் இன்னும் இருந்தேன் என்பது பயக்கும் என்னும் கருத்தால், 'நாணுத் தரும்' என்றும் கூறினாள்.

'நோய் செய்தார்க்குச் சொல்ல நாண் தரா நின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ';நோய் செய்தாருக்கு நாணம் விட்டு உரைக்கவும் முடியவில்லை', 'இதனை நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணத்தைத் தருகின்றது. ஆதலால் உரைக்கவும் முடியவில்லை', 'இந்த நோயை உண்டாக்கி வைத்த என் காதலருக்குச் சொல்லியனுப்பலாமென்றாலும் வெட்கமாக இருக்கிறது', 'இந்நோயினை உண்டாக்கினவர்க்குத் தூதனுப்பி இதனைத் தெரிவிக்கவும் எனக்கு வெட்கமாயிருக்கின்றது 'என்றபடி பொருள் உரைத்தனர்.

துயர்க்குக் காரணமான என் காதலருக்குச் சொல்வதும் வெட்கத்தைத் தருகிறது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
துயரைச் சொல்லவும் முடியவில்லை., மறைக்கவும் முடியவில்லை எனப் பிரிவால் தலைவி தவிப்பதைக் கூறும் பாடல்.

பிரிவுத் துயரை மறைக்கவும் முடியாதிருக்கிறேன்; துயர்க்குக் காரணமான என் காதலருக்குச் சொல்வதும் நாணுத் தரும்' என்பது பாடலின் பொருள்.
'நாணுத் தரும்' என்றால் என்ன?

கரத்தலும் என்ற சொல்லுக்கு மறைத்தலும் என்று பொருள்.
ஆற்றேன் என்ற சொல் வல்லேன் அல்ல என்ற பொருள் தரும்.
இந்நோயை என்ற தொடர் இந்தத் துன்பத்தை எனப் பொருள்படும்.
நோய் செய்தார்க்கு என்றது துன்பம் தந்தவர்க்கு என்பது குறித்தது.
உரைத்தலும் என்ற சொல் சொல்லுதலும் என்ற பொருளது.

தலைவன் தொழில்முறை காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டான். பிரிவை எண்ண எண்ண தலைவிக்குத் ஒருவேளைக்கு மறு வேளை துயரம் பெருகிக் கொண்டே செல்கிறது. மறைக்க முடியாத அளவு கூடிக் கொண்டிருக்கும் பிரிவின் துயரத்தைக் காதலரிடம் சொன்னால்தான் தீரும் என்று நினைக்கிறாள் தலைவி. . தொலைவில் உள்ள காதலர்க்கு்த் தன் நிலைமையைச் சொல்லிவிடலாமா என்று எண்ணினாலும் பெண்களுக்கே இயல்பான நாணம் அப்படிச் செய்வதைத் தடுக்கின்றது. அப்பொழுது தலைவி இரங்கிச் சொல்வது: 'துயரத்தை மறைக்கவும் முடியவில்லை. துயர்க்குக் காரணமான காதலர்க்குச் சொல்வதற்கும் நாணம் தடுக்கிறது. ஒரு புறம் காதலும், மற்றொரு புறம் நாணமுமாக இருவகை உணர்ச்சிகளுக்கு இடையே அல்லற்பட வேண்டி இருக்கிறதே, ஏது செய்வேன் நான்?

'நாணுத் தரும்' என்றால் என்ன?

நாணுத் தரும் என்ற தொடர்க்கு வெட்கத்தைத் தரும் என்பது பொருள்.
நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் என்பது முழு வாக்கியம். நோய் என்றது காதல்நோயை. காதல் நோய் என்பது இங்கு பிரிவுத் துயரைத்தைக் குறிப்பது. காதலர்கள் எப்பொழுதும் ஒருவரைவிட்டு ஒருவர் அகலாமல் நெருக்கமாக இருப்பதையே விரும்புவர். அவர்கள் பிர்ந்தகாலத்து உறும் மன வேதனையையே நோய் என்ற சொல் குறிக்கிறது. இந்தக் காதல் நோய் தந்த காதலனே அதற்கு மருந்துமாவான் என அவளுக்குத் தெரியும். எனவே பிரிவு வேதனையைத் தனக்கு உண்டாக்கி வைத்துத் தொலைவில் சென்று இருக்கும் அவனுக்குச் சொல்லலாம் என நினைக்கிறாள். ஆனால் உடன் பிறந்த நாண் குணம் அவ்வாறு செய்யவிடாமல் குறுக்கிடுகிறது. நோய் செய்த காதலனுக்கு இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது. எனத் தலைவி சொல்கிறாள்.
தன்னுடைய காதலனிடம் சொல்வது ஏன் வெட்கம் தருகிறது? காதலன் அருகில் இருக்கும்போது அவனை நெருந்ங்கிச் செல்வதுவே ஒரு பெண்ணுக்கு நாணத்தையே தரும். அப்படியிருக்கும்போது அவன் தொலைவில் இருக்குக் சமயம், அவளது இயல்பான நாணத்தை விட்டு, அவனை அவளது அருகில் வந்து இருக்கச் சொல்ல எப்படி முடியும்?. எனவே நோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் என்கிறாள் தலைவி.

பிரிவுத் துயரை மறைக்கவும் முடியாதிருக்கிறேன்; துயர்க்குக் காரணமான என் காதலருக்குச் சொல்வதும் வெட்கத்தைத் தருகிறது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதலரை நினைக்க நினைக்க காதல் நோய் கூடிக்கொண்டே போகிறது என்று கூறும் படர் மெலிந்து இரங்கல் பாடல்.

பொழிப்பு

பிரிவுத் துயரை மறைக்கவும் முடியாதிருக்கிறேன்; துயர் தந்த காதலர்க்கு சொல்வதும் நாண் தருகிறது.