இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1161



மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்

(அதிகாரம்:படர்மெலிந்து இரங்கல் குறள் எண்:1161)

பொழிப்பு (மு வரதராசன்): இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான்மறைப்பேன்; ஆனால், இது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் மிகுவது போல் மிகுகின்றது.



மணக்குடவர் உரை: இந்நோயை யான் மறைப்பேன்; மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது.
தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) நோயை யான் மறைப்பேன் - இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும் - நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது.
('அம்மறைத்தலால் பயன் என' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்' என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை'என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக. 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும' என்பதாம்.]

இரா சாரங்கபாணி உரை: இக்காம நோயை பிறர் அறியாமல் நாணி யான் மறைக்கின்றேன். ஆனால் அந்நோய் இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகுகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோயை யான் மறைப்பேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகும்.

பதவுரை: மறைப்பேன்-ஒளிப்பேன், மறைத்துக்கொண்டுதான் இருக்கின்றேன்; மன்-ஒழியிசை(சொல்லாதொழிந்த சொற்களால் பொருளை இசைப்பது); யான்-நான்; இஃதோ-இதுவோ; நோயை-துன்பத்தை, காதல் வருத்தத்தை; இறைப்பவர்க்கு-நீர் இறைப்பவர்களுக்கு; ஊற்றுநீர்-நீர் ஊற்று; போல-ஒத்திருப்ப; மிகும்-பெருகும், மேற்படும்.


மறைப்பேன்மன் யானிஃதோ நோயை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இந்நோயை யான் மறைப்பேன்;
பரிப்பெருமாள்: இந்நோயை யான் மறையா நின்றேன்;
பரிதி: மறைப்பேன் காம நோயை;
காலிங்கர் ('யானிதோர்' பாடம்): தோழி! நம் துணைவரானவர் பிரிந்தவிடத்து நம் துயர் பிறர்க்குப் புலனாகாமை மறைக்குமதுவே நம் பெண்மைக்கு இயல்பு' என்று என்னை நீ இடித்து உரைக்க வேண்டுவது இல்லை; இந்நோயினை யான் பிறர் அறியாமை மறைப்பேன்;
பரிமேலழகர்: (காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்கு ஏலாது என்ற தோழிக்குச் சொல்லிது.) இந்நோயைப் பிறரறிதல் நாணி யான் மறையா நின்றேன்; [இந்நோயை-இக்காமநோயை]
பரிமேலழகர் குறிப்புரை: 'அம்மறைத்தலால் பயன் என' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'இஃதோ செல்வர்க் கொத்தனென் யான்' என்புழிப் போல ஈண்டுச் சுட்டுப் பெயர் ஈறு திரிந்து நின்றது. 'இஃதோர் நோயை' என்று பாடம் ஓதுவாரும் உளர். அது பாடமன்மை அறிக..'

'இந்நோயினை யான் பிறர் அறியாமல் மறைப்பேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'நான் காம நோயை மறைக்க மறைக்க', 'காதலி சொல்லுவது) என் காமநோயை நான் அடக்கி அடக்கிப் பார்க்கிறேன்', 'இந்த நோயைப் பிறர் அறியாதபடி நான் மறைத்தேன்', 'இக்காதல் நோயைப் பிறர் அறியாமல் நான் மறைப்பேன்.' என்ற பொருளில் உரை தந்தனர்.

பிறர் அறிந்துவிடாதபடி நான் மறைக்கிறேன் இந்தக் காமநோயை என்பது இப்பகுதியின் பொருள்.

இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறைப்பவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது.
மணக்குடவர் குறிப்புரை: தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுத்தல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: மறைக்கவும் இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகாநின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகள் ஆற்றாமை கண்டு இதனை இவ்வாறு புலப்பட விடுதல் தகாதென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: மறைத்தாலும் இறைக்க இறைக்க ஊறும் ஊற்றுப்போலும் ஊறும் என்றவாறு.
காலிங்கர்: தோழி! மறைந்த இடத்தும் இறைப்பவர்க்கு ஊற்று நீர் போலத் தானே மிகா நின்றது என்றவாறு.
பரிமேலழகர்: நிற்பவும், இஃது அந்நாண்வரை நில்லாது நீர் வேண்டும் என்று இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகாநின்றது. [நிற்பவும்-காமநோயை மறைத்து நிற்பவும்; நாண்வரை-நாணத்தின் அளவில்]
பரிமேலழகர் குறிப்புரை: 'இனி அதற்கடுத்தது நீ செயல் வேண்டும்' என்பதாம்.

'இறைப்பவர்க்கு ஊற்று நீர் போல மிகுந்து நின்றது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'அது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போலப் பெருகும்', 'ஆனால் அதுவோ இறைக்க இறைக்க வற்றாத நீரூற்றுப் போல அடக்க அடக்க அதிகப்படுகிறது', 'அஃது ஊற்றிலே தண்ணீர் இறைப்பவர்க்கு மேலும் மேலும் நீர் ஊறுவது போல அதிகப்படுகின்றது', 'ஆனால் அது நீர்வேண்டி இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுமாறு போல மிகுகின்றது' என்ற பொருளில் உரை தந்தனர்.

இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல கூடிக் கொண்டே போகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
பிறர் அறிந்துவிடாதபடி நான் மறைக்கிறேன் இதோ இந்தக் காமநோயை; ஆனால் அது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல கூடிக் கொண்டே போகின்றது என்பது பாடலின் பொருள்.
'இறைப்பவர்க்கு ஊற்றுநீர்' என்றால் என்ன?

பிரிவின் துன்பத்தை காதலி எத்துணை அடக்க முயன்றாலும் அது அடங்காமல் மிகுதிப்படுகிறது.

பிரிவால் உண்டான இந்தக் காமத்துன்பத்தை, பிறர் அறியாதபடி மறைக்கிறேன்; ஆனால், அது இறைப்பவர்க்கு ஊற்று நீரைப் போல மேன்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தலைவன் மனைவியைப் பிரிய நேரிடுகிறது. பிரிவுச் செய்தியைக் கேட்டதும் தலைவியின் உள்ளம் கலங்கத் தொடங்கியது, பிரிவினைத் தாங்க முடியாதவளாகின்றாளென்றாலும் வேண்டா வெறுப்பாக தலைவனுக்கு விடை கொடுத்தும் விட்டாள். இப்பொழுது தலைவி தனியாக இருக்கிறாள். கணவன் உடனிருந்து மகிழ்ந்த காதல் நினைவுகள் தோன்றி அவளைத் துன்புறுத்துகின்றன.

இக்காட்சி:
பிரிவின் துயரை காதலியால் ஆற்றமுடியவில்லை; கணவன் சென்றபின் அவனது நினைவால் தலைவி மிகவும் வாட்டமுறுகிறாள். அதே சமயம் உள்ளம் முழுதும் உணரும் துன்பத்தை மற்றவர் காண நேர்ந்தால் அது அவள் நாணுக்கு ஏற்றதல்ல என்பதையும் உணர்கிறாள். எனவே அத்துன்பத்தை மறைக்க முயல்கிறாள்.
தனிமை பொறுக்காத காதலி தன் தவிப்பைப் பிறர் அறியக்கூடாது என்று நினைத்துத் தன்னைச் சுற்றியுள்ளவர்களிடம் நடக்க முயற்சிக்கிறாள். காதலன் பிரிவால் உள்ளத்தில் ஏற்பட்ட துயரைத்தை யாரும் அறியக்கூடாது என்று தனக்குள் அடக்க முயல்கிறாள். ஆனால் முடியவில்லை. தனக்கு ஆறுதல் சொல்ல மற்றவர் வந்தால் அவள் துயரம் குறைய வேண்டும். ஆனால் மாறாக, துன்பம் மிகையாகிறது. அப்பொழுது அவள் சொல்கிறாள்: 'இதோ யான் மறைக்கின்றேன்; அதுவோ எப்படி இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்துகொண்டே போகிறதோ அப்படி மறைக்க மறைக்க மேலும் மேலும் வெளிப்பட்டு மிகுந்துகொண்டே போகிறதே!'
தலைவியின் வாட்டமுற்ற முகத்தில் முட்டிக்கொண்டு நிற்கும் கண்ணீர்க் காட்சியை இங்கு நாம் காணமுடிகிறது.

இக்குறளிலுள்ள 'இஃதோ' என்பது 'இது' என்ற சுட்டுப் பெயரிலிருந்து தோன்றியதாயினும் இங்குச் சுட்டுப் பொருளைத் தந்திலது' என்று கூறும் சி இலக்குவனார் அச்சொல்லாட்சியின் சுவை குறித்து இப்படிச் சொல்கிறார்: 'இதோ என்பது இஃதோ என வந்துள்ளது. 'இதோ படிக்கின்றேன்' என்றால் உடனே படிக்கத் தொடங்குதலைக் குறிக்கும். 'இதோ ஒடிக்கின்றேன்' என்றால் இவ்வாறு ஒடிக்கின்றேன் என்று உடனே செய்யத் தொடங்குவதையும், செய்யும் முறையையும் உணர்த்தும். இங்கு தோழி தலைவியை நோக்கி 'பிரிவுத் துயரை உன்னால் மறைக்க முடியவில்லையே!' என்று கூறிய ஞான்று தலைவி, 'இதோ பார் யான் மறைக்கின்றேன்; ஆனால் அது மறையாது வெளிப்படுகின்றது. யான் என்ன செய்வேன்!' என ஏக்கமுறுகிறாள்.
பிரிவுத் துன்பமும் நாணமும் முரண்பட்ட நிலையில் தலைவியின் புலம்பல் கூற்றாக வருவது இப்பாடல். தலைவி நாணையும் கருதுவதால் இக்குறளில் அறச்செய்தியும் உண்டு என்பதாகவும் உரையாசிரியர் மொழிவர்.

'இறைப்பவர்க்கு ஊற்றுநீர்' என்றால் என்ன?

இறைப்பவர் என்ற சொல் நீர் இறைப்பவர் அதாவது நீர் எடுப்பவர் என்ற பொருள் தரும். தலைவி தன் காமத்தை எத்துணை மறைப்பினும் அது அடங்காது பொங்கி எழுகிறது. எவ்வாறு ஊற்றுநீரை யுடைய நீர்நிலைகளில் நீர் இறைக்க இறைக்க ஊற்று ஊறி நீர் நிரம்புமோ அவ்வாறே காமத்துன்பத்தை மறைத்தாலும் அது மிகுதியாகவே வெளிப்படும் என்கிறது இப்பாடல்.
கணவன் பிரிந்து சென்றதிலிருந்து தலைவி மிகுந்த துயரத்தில் இருக்கிறாள். தன் காதல் உணர்வுகளை மற்றவர் அறியக்கூடாது என்று அவற்றைத் தனக்குள் அடக்கி மிகவும் விழிப்புடன்தான் நடந்துகொள்கிறாள். காதலைப் பற்றி ஒன்றும் அறியாதவள்போல் பேசுகிறாள்; ஆனாலும் அவளுடைய உள்ளத்தின் துயர் புலப்பட்டு விடுகிறது, துயரத்தை மறைக்க மறைக்க அது மிகுந்து தோன்றுவதால். அதை 'கிணற்றில் உள்ள ஊற்றுநீரை இறைக்க இறைக்க, ஊற்றுப் பெருகுகிறது. நீர் எடுக்க எடுக்க நீர்ப் பெருக்கமே உண்டாகிறது. அதுபோலவே தன் காதல் துன்பத்தைப் பிறர் அறியாமல் மறைக்க மறைக்க, அது மேலும் வளர்ந்து கொண்டேயிருக்கிறது' எனச் சொல்கிறாள் அவள்.
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி... (கல்வி 396) என்ற குறளில் ஆளப்பட்டுள்ள உவமை கருத்தளவில் இப்பாடலுடன் ஒத்துள்ளது.

நாமக்கல் இராமலிங்கம் ''இறைப்பவர்க்கு' என்பதற்கு நீர் வேண்டுமென்றிறைப்பவர்க்கு என்று பொருள் செய்யக் கூடாது. நீரூற்றின் ஊற்றுக் கண்ணை அடைத்தால் ஊறியநீர் பொத்துக்கொண்டு பீறிடும். ஆதலால் என் காமநோயை நான் அடக்க முயல்வேன். அதுவோ ஊற்றுக்கண் நீர்போல அடக்க அடக்கப் பின்னும் வேகமாகத் துன்புறுத்துகிறது என்பது கருத்து' என்று ஊற்றுக்கண் நீர்போல பொத்துக்கொண்டு வரும்' என இக்குறளுக்கு விளக்கம் தருவார்.

'இறைப்பவர்க்கு ஊற்றுநீர்' என்றது இறைக்க இறைக்கப் பெருகிடும் ஊற்று நீர் எனப் பொருள்படும்.

பிறர் அறிந்துவிடாதபடி நான் மறைக்கிறேன் இதோ இந்தக் காமநோயை; ஆனால் இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல கூடிக் கொண்டே போகின்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிவால் உண்டாகும் ஏக்கத்தின் ஊற்றுக் கண்ணை அடைக்கமுடியாமல் தவிக்கும் தலைவியின் படர் மெலிந்து இரங்கல்.

பொழிப்பு

பிரிவுத் துன்பத்தை பிறர் அறியாமல் மறைக்கின்றேன். ஆனால் அது இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகுகின்றது.