இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1159தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடின்சுடல் ஆற்றுமோ தீ

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1159)

பொழிப்பு: நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய்போல் தன்னை விட்டு நீங்கியபொழுது சுடவல்லதாகுமோ?

மணக்குடவர் உரை: தீண்டினாற் சுடுமதல்லது காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ.
தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தொடின் சுடின் சுடலல்லது - தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது; காமநோய் போலவிடின் சுடல் ஆற்றுமோ - காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ!? மாட்டாது.
(சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நெருப்பு தன்னைத் தொட்டால்தான் சுடுமே யன்றிக் காம நோயாகிய தீப்போல நீங்கினாலும் சுட வல்லதோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ.


தொடிற்சுடின் அல்லது:
பதவுரை: தொடின்- தீண்டினால்; சுடின்-சுடுதல்; அல்லது-அல்லாமல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீண்டினாற் சுடுமதல்லது;
பரிப்பெருமாள்: தீண்டினாற் சுடுமதல்லது;
பரிதி: தீயானது தொட்டால் சுடும்;.
காலிங்கர்: தோழி! தன்னைக் கிட்டித் தொட்ட காலத்துப் புறஞ்சுடும் அல்லது;
பரிமேலழகர்: (காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடுமாகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) தீத்தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்லது;'.
பரிமேலழகர் குறிப்புரை: சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தப்பிக்கப்படாதாயின் என்றவாறு.

'தீண்டினாற் சுடுமதல்லது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீ தொட்டால் சுடும்', 'தீ தொட்டால் சுடுவது அல்லது', 'தீயானது தொட்டால் சுடுமே அன்றி', 'நெருப்பானது தொட்டால் சுடுமேயன்றி' என்ற பொருளில் உரை தந்தனர்.

தொட்டால் சுடுவது அல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

காமநோய் போல விடின்சுடல் ஆற்றுமோ தீ:
பதவுரை: காம-காதலாகிய; நோய்-பிணி; போல-போல; விடின்-அகன்றால்; சுடல்-சுடுதல்; ஆற்றுமோ-வல்லதாகுமோ; தீ-நெருப்பு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ.
மணக்குடவர் குறிப்புரை: தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.
பரிப்பெருமாள்: காமநோய்போல, நீங்கினாற் சுடவற்றோ தீ.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைமகன் பிரிந்துழித் தலைமகளாற்றாமை கண்டு தோழி கூறியது.
பரிதி: காமத்தீப் போல விட்டால் சுடவல்லதோ; ஆதலால் பிரியாமலிருப்பதே நல்லது.
காலிங்கர்: காமத்தீப் போல விட்டு நின்ற காலத்து வெவ்விதாகி நின்று உள்ளே சுடுதலை அறியுமோ உலகத்துத் தீ என்றவாறு
பரிமேலழகர்: காமமாகிய நோய் போலத் தன்னை அகன்றால் தப்பாது சுடுதலை வற்றோ! மாட்டாது.
பரிமேலழகர் குறிப்புரை: காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள், வாளா 'சுடல்' என்றாள். அகறல்: நுகராமை. 'சுடல்' என்பது முன்னும் கூட்டப்பட்டது. 'தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை' என்பதாம்.

'காமநோய்போல, நீங்கினாற் சுடவல்லதோ தீ' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமநோய் போல விட்டாலும் சுடுமோ?', 'காமத் தீயைப் போல் தொடுதலை விட்டுச் சென்றால் சுடுகின்ற தன்மையை உடையதாகுமோ? (ஆகாது).', 'காம நோயைப் போலப் பிரிந்தாற் சுடவல்லதோ?', 'காதல் நோய் போல தன்னை நீங்கினால் சுடுதல் கூடுமோ?' என்றபடி பொருள் உரைத்தனர்.

காதல் நோய் போல தன்னை நீங்கினால் சுடவல்லதோ தீ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தலைவன் நீங்கியதும் காதல்தீ இன்னும் மிகுந்து உள்ளே சுடுகிறது என்று தலைவி கூறுவது.

தொட்டால் சுடுவது அல்லது காதல் நோய் போல தன்னை விடின்சுடல் ஆற்றுமோ தீ? என்பது பாடலின் பொருள்.
'விடின்சுடல்' என்றால் என்ன?

தொடின் என்ற சொல்லுக்குத் தீண்டினால் என்பது பொருள்.
ஆற்றுமோ என்ற்து செய்ய வல்லதோ. என்ற பொருள் தரும்.

காதலர் கடமை காரணமாக்ப் பிரிந்து சென்றுவிட்டார். இங்கு காதலி அவனையே நினைத்து உருகுகிறாள். காதல் நெருப்புப் போன்றது என்று சொல்கிறார்களே அது தவறு. சுடும் தன்மையில் இரண்டும் ஒன்றுதான். ஆனால் நெருப்பு தொட்டால்தான் சுடுகிறது. ஆனால் தலைவன் நீங்கிப் போனதால் காதல் நோய் சுடுகிறதே! தொட்டால் சுடுவது; தீ; விட்டால் சுடுவது காதல் தீ என்று நெருப்பில் வதைபடுவதுபோல காமநோயால் வாடும் தலைவி கூறுகிறாள்.

இக்குறட்கருத்தைக் கம்பரும் எடுத்தாண்டுள்ளார். கைகேயின் விருப்பப்படி இராமன் காடேக ஆயத்தமாகிறான். சீதையும் உடன் வருவேன் என்கிறாள். இராமன் அப்பொழுது நெருப்புப் போன்ற வெம்மையோடு கல்லும் முள்ளும் பொருந்திய காட்டில் உன் மலரடியால் நடத்தல் இயலாது. ஆகவே உடன் வரவேண்டாம் என்கிறான். அதற்குச் சீதை 'உன் பிரிவுத் துன்பத்தைக் காட்டிலும் காடு சுடவல்லாதோ என்கிறாள்:
‘பரிவு இகந்த மனத்தொடு பற்று இலாது
ஒருவுகின்றனை; ஊழி அருக்கனும்
எரியும் என்பது யாண்டையது? ஈண்டு நின்
பிரிவினும் சுடுமோ பெருங்காடு? ‘என்றாள்.
(அயோத்தியா காண்டம், நகர் நீங்கு படலம் 221)
பொருள்: உன்னால் வரும் பிரிவுத் துயராகிய வெப்பத்துக்கு ஊழிக்காலத்துச் சூரிய வெப்பமும்நிகராகாது; எனவே, ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு’ என்றாள்.) ‘

'விடின்சுடல்' என்றால் என்ன?

விடின் சுடல் என்பதற்கு நீங்கினால் சுடுதல் என்பது பொருள். காதல் தீயானது காதலர் விட்டுப் போனதும் சுடுகிறது. இது என்ன விந்தை என துயருறும் காதலி வருத்தத்தில் கூறுகிறாள்

தொட்டால் சுடுவது அல்லது காதல் நோய் போல தன்னை நீங்கினால் சுடவல்லதோ தீ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தொட்டால் சுடுவதைவிடப் பிரிந்தால் சுடுவதுதான் கொடுமையானது. என்கிறாள் பிரிவாற்றமையால் வருந்தும் தலைவி

பொழிப்பு

தீ தொட்டால் சுடுமே யன்றிக் காதல் நோய் போல நீங்கினாலும் சுட வல்லதோ?