இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1158இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1158)

பொழிப்பு: இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது; இனிய காதலரின் பிரிவு அதைவிடத் துன்பமானது.

மணக்குடவர் உரை: தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
(தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)

இரா இளங்குமரனார் உரை: ஒத்த உணர்வுடையவர் இல்லாத ஊரில் இருந்து வாழ்வது துன்பமிக்கது. அதனினும் துன்பமிக்கது இனிய துணைவரைப் பிரிந்து ஆங்கு வாழ்வது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இனன்இல்ஊர் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும்.இன்னாது .


இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல்:
பதவுரை: இன்னாது-இனிதன்று; இனன்-ஒத்த உணர்வுடையவர்; இல்-இல்லாத; ஊர்-நகரம்; வாழ்தல்-வாழ்க்கை நடத்தல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது;
பரிப்பெருமாள்: தமக்கு இனமில்லாதவூரின்கண் இருந்து வாழ்தல் இன்னாது;
பரிதி: தன் உறவின்முறை யில்லாத ஊரிலே வாழ்தல் பொல்லாது;
காலிங்கர்: உலகத்து ஒருவர்க்கு மிகவும் இன்னாதது யாதோ எனின், தமது இன்ப துன்பங்கட்கு உடனுறவொத்த இனம் ஏதும் இல்லாத ஊரின்கண் தனித்து இருந்து வாழ்தலாகின்ற இது பெரிதும் இன்னாது;
பரிமேலழகர்: (இதுவும் அது.) மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது;

'தமக்கு இனமில்லாத ஊரில் இருந்து வாழ்தல் இன்னாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இனன் என்பதற்குப் பரிதி உறவின்முறை என்றும் காலிங்கர் உடனுறவொத்த இனம் என்றும் பரிமேலழகர் தம் குறிப்பு அறியும் தோழியர் என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறவில்லாத ஊரில் வாழ்தல் துன்பம்', 'தம்மிடம் அன்பு செலுத்தும் உறவினர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் தரும்', 'குறிப்பறியுந் தோழியர் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பம் தருவதே', 'தம்மைச் சார்ந்தவர் இல்லாத ஊரில் வாழ்தல் மிகவும் கொடியது' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஒத்த உணர்வுடைய அண்டையர் இல்லாத ஊரில் இருந்து வாழ்வது இனிதன்று என்பது இப்பகுதியின் பொருள்.

அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு:
பதவுரை: அதனினும்-அதனைக் காட்டிலும்; இன்னாது-தீது; இனியார்-காதலர்; பிரிவு-நீங்குதல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
மணக்குடவர் குறிப்புரை: இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.
பரிப்பெருமாள்: இனியாரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிரிவுணர்த்திய தலைமகற்கு இவ்விரண்டு துன்பமும் எங்கட்குளவாமென்று பிரிவுடன்படாது தோழி கூறியது.
பரிதி: அதனினும் பொல்லாது நாயகரைப் பிரிதல் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று இதனினும் சால இன்னாது நெஞ்சே! யாதெனின், கற்புடை மகளிர் தம் காதற் கொழுநரைப் பிரிந்திருக்கும் பிரிவானது; எனவே இவர்க்கு உயிரான கேளிர் இவரல்லது இல்லை என்று தனது ஆற்றாமை கூறினாளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
பரிமேலழகர் குறிப்புரை: தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின், 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.

'அதனினும் இன்னாது இனியாரை/ நாயகரை/காதற் கொழுநரை/ காதலரைப் பிரிதல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்பக் காதலரைப் பிரிதல் பெருந்துன்பம்', 'அதனினும் இனிய கணவரின் பிரிவு துன்பம் தரும்', 'அதைப் பார்க்கிலும் காதலரைப் பிரிதல் துன்பந் தருவதாகும்', 'தமக்கு இனியரான காதலனைப் பிரிதல் அதனினும் மிகக் கொடியது' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதனினும் கொடியது காதற் கொழுநரைப் பிரிந்திருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலரை பிரிந்து இருத்தல் தோழமையுள்ள அண்டையர் இல்லாத இடத்தில் வாழ்வது போன்றது என்னும் பாடல்.

இனன் இல்லாத ஊரில் இருந்து வாழ்வது இனிதன்று; அதனினும் கொடியது காதற் கொழுநரைப் பிரிந்திருத்தல் என்பது பாடலின் பொருள்.
'இனன்' குறிப்பது என்ன?

இல்ஊர்- என்றதற்கு இல்லாத ஊர் என்று பொருள்.
முதலில் உள்ள இன்னாது என்பதற்கு இனிதன்று என்றும் அடுத்துள்ள இன்னாது என்றதற்கு கொடியது என்றும் பொருள் கொள்ளலாம்.
அதனினும் என்ற சொல்லுக்கு அதைக் காட்டிலும் என்பது பொருள்.
இனியார் என்ற சொல் இனிய அன்பர் என்ற பொருள் தரும்.
பிரிவு என்றது (காதலரைப்) பிரிந்திருத்தல் என்று பொருள்படும்.

தலைவன் கடமை காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவிக்குத் தன் இனிய கொழுநர் பிரிவைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. பணி முடிந்தபின் காதலன் திரும்பி வந்துவிடுவான்தான். ஆனாலும் இப்பிரிவு கொடுமையாக உள்ளதே என்று உணர்கிறாள் எவ்வளவு துன்பந்தருவது என்று எண்ணிப் பார்க்கிறாள். நாம் வாழும் இடத்தில் இனத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தால் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நமக்கு ஏதேனும் சிக்கல் நேர்ந்தால், ஒத்த உணர்வுள்ளவர்கள் அருகில் இருந்தால் அவர்களுடன் உறவாடி ஆறுதல் பெறலாம். அவர்கள் துணையையும் நாடலாம். ஆனால் அப்படிப்பட்ட சுற்றம் இல்லாத சூழலில் வாழ்வது துன்பமாக அமையும். அதைவிடத் துன்பம் தரக்கூடியது சிறிது காலமே ஆனாலும் கணவரைப் பிரிந்து வாழ்வது என்கிறாள் தலைவி.
பரிமேலழகர் இக்குறட்பாவுக்குக் 'தோழி தலைவனைத் தடுத்து நிறுத்தவில்லையே என்று சீற்றம் கொண்டு தன் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது' எனத் தோழிக்குத் தலைவி கூறியதாகக் காட்சி அமைக்கிறார். இவ்வுரை அத்துணைச் சிறப்பாக இல்லை.

இக்குறளுக்கான சக்கரவர்த்தி நாயனார் உரை 'திருமணத்திற்குப் பின், அயலார் வாழ்கின்ற தன்கணவன் ஊருக்குச் செல்லும் பெண்ணுக்கு, அங்கே பலரும் அறிமுகமில்லாதவராக இருப்பதால், அவ்வூர் முன் தான் வாழ்ந்த இடம்போல் மகிழ்வளிக்காது. அவ்வூரில் வாழும் துன்பத்திலும் கணவனைப் பிரிந்து வாழ்தல் அவளுக்கு மிகுந்த துன்பந்தரும்' என்று புதிய இடத்தை இனன் இல்லூர் என்று கூறியது மாறுபாடாக உள்ளது.

'இனன்' குறிப்பது என்ன?

இனம் என்ற சொல்லே இனன் என்று வந்துள்ளது.
உரையாளர்கள் இச்சொல்லுக்கு உற்றார் உறவினர், உறவானவர், சுற்றம், நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர், நன்மை கொடுக்கக்கூடிய நல்லவர், தம்மினத்தைச் சேர்ந்தவர், குறிப்பு அறியும் தோழியர், உடனுறவொத்த இனம், என்று பலவாறாகப் பொருள் கூறினர்.
ஒத்த உணர்வுள்ளவர்கள் இனம் என்று கூட்டாக அழைக்கப்படுவர். 'சிற்றினம் சேராமை' அதிகாரத்தில் இந்தப் பொருளிலேயே இனம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இங்கும் அப்பொருள் கொள்வதே பொருத்தம்.

ஒத்த உணர்வுடைய அண்டையர் இல்லாத ஊரில் இருந்து வாழ்வது இனிதன்று; அதனினும் கொடியது காதற் கொழுநரைப் பிரிந்திருத்தல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

'தம்மவர் ஒருவரும் இல்லாத அயலூரில் வாழ்வதை விடக் கொடுமையானது காதலர் நீங்கிய வாழ்வு என்று பிரிவாற்றமையால் தலைவி கூறுவது.

பொழிப்பு

ஒத்த உணர்வுடையவர் இல்லாத ஊரில் இருந்து வாழ்வது இனிதன்று; அதனினும் கொடியது காதலரைப் பிரிந்திருத்தல்