இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1157துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1157)

பொழிப்பு: என் மெலிவால் முன்கையில் இறைகடந்து சுழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவிக்காமலிருக்குமோ?

மணக்குடவர் உரை: இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள்,
முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ?
(முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்¬யாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)

இரா சாரங்கபாணி உரை: தலைவன் பிரிந்து சென்றமையைப் பிறர் எனக்குக் கூற வேண்டுமோ? என் முன்கை மணிக்கட்டிலிருந்து கழன்று கொண்டிருக்கும் வளையல்கள் அதனைப் பிறர்க்குப் பறைசாற்றாவோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை.


துறைவன் துறந்தமை தூற்றாகொல் :
பதவுரை: துறைவன்-காதலன்; துறந்தமை-பிரியலுற்றமை; தூற்றா-அறிவிக்கமாட்டா; கொல்-(ஐயம்).

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ?
பரிப்பெருமாள்: ('தேற்றாதோ' என்பது பாடம்). துறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ?
பரிதி: )நாயகர் பிரிந்ததை ஒருவரும் அறியார்;
காலிங்கர்: (தேற்றாகொல்' என்பது பாடம்) தோழி! இவை நம் துறைவன் நம்மைப் பிரிந்தமை அறியாவோ?
பரிமேலழகர்: (இதுவும் அது.) துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; எனக்கு அறிவியாவோ?

'தலைவன் பிரிந்தமையை எனக்கு அறிவியாவோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தலைவன் பிரிவை வெளிப்படுத்த வில்லையா?', 'என் தலைவன் போய் விட்டதை ஊராருக்கெல்லாம் தூற்றிவிடும்போல் இருக்கிறது.', 'தலைவன் என்னைப் பிரிந்ததை!', 'தலைவன் பிரிந்தமையைத் தாமே தெரிந்து எனக்கும் பிறர்க்கும் அறிவியாவோ?' என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலர் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா? என்பது இப்பகுதியின் பொருள்.

முன்கை இறைஇறவா நின்ற வளை.:
பதவுரை: முன்கை-கையினது முற்பகுதி; இறை-மணிக்கட்டு; இறவாநின்ற-கழல்கின்ற; வளை-வளையல்கள்..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள்,
மணக்குடவர் குறிப்புரை: முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.
பரிப்பெருமாள்: முன் கையின் இறையைக் கடவாநின்ற வளை
பரிப்பெருமாள் குறிப்புரை: முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று. பிரியாரென அறிவிக்கும் தோழிக்கு 'நீ சொல்ல வேண்டா; யான் அறிந்தேன்' என்று தலைமகள் கூறியது.
பரிதி: நம்முடைய முன்கை வளை கழல எல்லாரும் அறிந்தனர் என்றவாறு.
காலிங்கர்: அறியும்; என்னையோ எனின் முன்கைச் சந்தினின்று நீங்காநின்றன வளை; எனவே தன் தோள் மெலிவு பார்த்துத் தளர்வுற்றாள் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள். அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ?
(பரிமேலழகர்:குறிப்புரை முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்¬யாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.

'முன்கையின் இறையைக் கடவாநின்ற வளைகள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மணிக்கட்டிலிருந்து கழல்கின்ற வளையல்கள்', 'முன்னங்கை ரேகைகளையும் கடந்து கழன்றுவிடுவன போன்ற என வளையல்களுடைய ஓசையே', 'என் முன் கை வளையல் இருந்த இடத்திலிருந்து கழல்வதால், யாவர்க்கும் தெரிவிக்க மாட்டாயோ', 'என் முன்கையின் முன்னிடத்தில் உள்ள கழலும் வளையல்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

முன்கையின் தங்கின இடத்திலிருந்து கழலும் வளையல்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு பக்கம் காதலர் நீங்கிச் செல்கிறார்; மறுபக்கம் இங்கு காதலியின் தோள் மெலிவுறுகிறது என்னும் பாடல்.

முன்கையின் தங்கின இடத்திலிருந்து கழலும் வளையல்கள் துறைவன் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா? என்பது பாடலின் பொருள்.
துறைவன் என்பவர் யார்?

துறந்தமை- என்ற சொல்லுக்குப் பிரிந்தமை என்பது பொருள்.
துற்றாகொல் என்றது தெரிவிக்காமலிருக்குமோ? என்று பொருள்படும்.
முன்கை என்ற சொல் கையின் முன்பகுதி என்ற பொருள் தரும்.
இறை என்ற சொல்லுக்குத் தங்கும் இடம் எனப் பொருள் கொள்வர். இங்கு வளை தங்குமிடமாகிய மணிக்கட்டைக் குறித்தது.
இறவாநின்ற என்றது கழலா நின்றது அதாவது கழல்கின்ற என்பதைக் குறிக்கும்.
வளை என்ற் சொல் வளைகள் எனப் பொருள்படும்.

தலைவன் பணி காரணமாக நீங்கிச் சென்றுவிட்டான். பிரிவைத் தாங்க முடியாத தலைவி உடல் மெலிகிறாள், அவளது தோள் தள்ர்வுற்றதால் முன்கையில் தங்கியிருந்த வளையல்கள் கழல்கின்றன. .அப்பொழுது நினைக்கிறாள் தன் காதலன் பிரிவில் சென்றதை கையிலிருந்து நெகிழும் வளையல்களே அறிவித்துவிடும் போல என்று.

துறைவன் என்பவர் யார்?

இலக்கிய மரபுப்படி துறைவன் நெய்தல் நிலத்தலைவனைச் சுட்டும். சங்கினாற் செய்யப்பட்ட வளை என்பது நெய்தல் நிலக் கருப்பொருள். இவ்விரண்டையும் இயைபு காட்டித் தலைவன் பிரிவை வளை அறிந்ததாக இக்குறள் நயம்படக் கூறுகிறது

'துறைவன் என்ற சொல்லே துறைவன் துரை என்று ஆகிக் கடல் கடந்து வந்துள்ள வெள்ளைக்காரத் தலைவரைக் குறித்தது; பீன்னர் மேல் பதவியில் உள்ள இந்நாட்டவரையும் 'துரை' என்ற சொல்லால் கீழ்ப்பதவியில் உள்ளவர் குறிப்பிடுவது வழக்கமாகி விட்டது. வெள்ளைக்காரர் சென்ற பின்பும் இந்நாட்டவர் இன்றும் துரையென்று அழைக்கப்பட்டு வருகின்றனர்' என்பது சி இலக்குவ்னார் குறிப்பு.

முன்கையின் தங்கின இடத்திலிருந்து கழலும் வளையல்கள் காதலர் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலர் நீங்குகிறார்; காதலியின் வளை கழல்கிறது - பிரிவாற்றமையால் தலைவி உடல்மெலிவதைச் சொல்லும் பாடல்
பொழிப்பு

காதலர் பிரிந்ததைத் தெரிவித்துவிடவில்லையா முன்கை மணிக்கட்டிலிருந்து கழன்று கொண்டிருக்கும் வளையல்கள்?