இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1156பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1156)

பொழிப்பு: பிரிவைப்பற்றித் தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பி வந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

மணக்குடவர் உரை: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின் அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை.
இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.
(அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)

சி இலக்குவனார் உரை: தம் பிரிவினைச் சொல்லும் அன்பற்றவராய் இருப்பாரானால் நாம் ஆற்றமுடியாத் தன்மை அறிந்து வந்து அன்பு காட்டுவார் என்னும் விருப்பம் விடப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அவர் பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் நல்குவர் என்னும் நசை அரிது.


பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின்:
பதவுரை: பிரிவு-செலவு; உரைக்கும்-தெரிவிக்கும்; வன்கண்ணர்-கொடுமையுடையவர்; ஆயின்-ஆனால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின்;
பரிப்பெருமாள்: பிரிவினை யுரைக்கும் வன்கண்மையை யுடையராயின்;
பரிதி: பிரிவுரைக்கும் தறுகண்ணராயின்;
காலிங்கர்: இங்ஙனம் தமது உரைதேறிப் பிரிவின் இயல் அஃது என்று இருந்த நமக்கு இஃது ஒழிந்து பிரிவினையும் நமக்குத் தாம் உரைக்கும் வன்கண்மையும் உடையாராயின்;
பரிமேலழகர்: (தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்;

'பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிவு பேசும் துணிவுடையராயின்', 'நம் அன்பின் மிகுதியை அறிந்த தலைவர் நம்மிடம் பிரிவுபற்றிக் கூறும் நெஞ்சழுத்தம் உடையராயின்', 'தலைவர் பிரிவினை உணர்த்தும் கொடுமையுடையர் என்றால்', 'என் காதலர் மீண்டும் மீண்டும் தாம் பிரிந்து போக வேண்டியிருக்கிற அவசியத்தைப் பற்றியே சொல்லும் கடின சித்தமுடையவராக இருக்கிறார்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் என்பது இப்பகுதியின் பொருள்.

அரிதவர் நல்குவர் என்னும் நசை:
பதவுரை: அரிது-அருமையானது; அவர்-அவர்; நல்குவர்-அன்பு செய்பவர்; என்னும்-என்கின்ற; நசை-விருப்பம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் பிரிந்தானென்று கேட்டவிடத்து நின்னிற் பிரியேனென்ற சொல்லை உட்கொண்டு தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: அவர் மறுத்துவந்து நல்குவரென்னும் ஆசை யில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: 'பிரிதலும் ஆற்ரலும் உலகியல்; என்று நெருங்கிக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நமக்கு இன்பம் தருவர் என்னும் நசை அரிது என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அவர் வந்து தலையளிப்பர் என்னும் பற்றுடைமையும் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.

'வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வந்து அருளுவார் என எதிர்பார்த்தல் பயனற்றது', 'அவர் நம் ஆற்றாமை யறிந்துவந்து அன்பு செய்வர் என்னும் ஆசை கைகூடாது', 'அவர் திரும்பி வந்து நமக்கு அருள் செய்வாரென்னும் ஆசைக்கு இடமில்லை', 'அதனால் அவர் என் விருப்பத்தின்படி போகாமல் இருப்பார் என்ற ஆசையை நான் விட்டுவிட வேண்டியதுதான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

திரும்ப வரும்பொழுது நிறைஅன்பு காட்டுவார் என எதிர்பார்ப்பது வீணான ஆசை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இப்பொழுது கல்நெஞ்சக்காரராக இருப்பவர் திரும்பிவரும்போது மட்டும் கருணையாளராய் இருப்பாரா என்ன? எனக் கேட்கிறாள் தலைவி.

பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் திரும்ப வரும்பொழுது நல்குவர் என எதிர்பார்ப்பது வீணான ஆசை என்பது பாடலின் பொருள்.
'நல்குவர்' என்றால் என்ன?

பிரிவுரைக்கும் என்றதற்கு செலவைச் சொல்லுதல் என்று பொருள்.
வன்கண்ணர் என்ற சொல்லுக்கு கொடியவர் என்பது பொருள்.
ஆயின் என்ற சொல் ஆனால் என்ற பொருள் தரும்.
நசை என்ற சொல் ஆசை என்று பொருள்படும்.

தலைவன் கடமைக்காகப் பிரிகிறான். அதுபொழுது. தலைவியிடம் விடைபெற்றுச் செல்கிறான். அவன் சென்றவுடன் தலைவி அவன் ப்ரிந்ததன் அதிர்வில் இருந்து மீளமுடியாமல் அவனது செலவு பற்றி நினைக்கிறாள். அப்பொழுது "'சென்று வருகிறேன்' என்று என் முன்நின்று கூறும் அளவுக்குக் கல்மனம் கொண்டவரிடம், நம் ஆற்றாமை அறிந்து திரும்பி வந்து தன்னிடம் முன்போல நிறைஅன்பு காட்டுவாரா" என்று தனக்குத் தானே கேட்டுக் கொள்கிறாள்.,

பிரிதலும் ஆற்றலும் உலகியல்தான் என்பதைத் தலைவி உணரமாட்டாதவள் இல்லை. ஆனாலும் காதலர் தம்மிடம் வந்து பிரிவைச் சொல்லி விடை கேட்கிறாரே? எப்படி அவருக்கு மனது வந்தது? சரி சென்று விட்டார். திரும்ப வரும்போது இளகிய மனதுடன் வந்து என்னிடம் அன்பு செய்வாரா? என்று பலவாறாக நினைக்கத் தொடங்குகிறாள். தன் இளமையினாலும் இல்லறத் தொடக்கநிலையினாலும் காதலொன்றையே கருதித் தலைமகள் கூறியது என்று இக்குறளுக்கு விளக்கம் கூறுவர். ஆனல் இளமை கடந்த நிலையிலும் இல்லறத்தின் முதிர்ந்த நிலையிலும் பிரிவின் ஆற்றாமை தொடர்ந்து கொண்டேயிருக்கும்.என்பதுவே உணமை.

நாமக்கல் இராமலிங்கம் சற்று வேறுபட்ட உரை தருகிறார். அவர் 'என் காதலர் மீண்டும் மீண்டும் பிரிந்து போக வேண்டியிருப்பதைப் பற்றிச் சொல்லும் கடின சித்தமுள்ள்வராக இருக்கிறார். அதனால் அவர் என் விருப்பத்தின்படி பிரியாமல் இருப்பார் என்ற ஆசை நிறைவேறாது. விடை கொடுத்துத்தான் தீரவேண்டும்' என்று வருத்தத்தோடு விடை தருகின்றாள் என இக்குறளுக்குப் பொழிப்பு தருகிறார்..

'நல்குவர்' என்றால் என்ன?

நல்குவர் என்றதற்குத் தலையளி செய்வார் தண்ணளி செய்வார், அருள் செய்வார், அன்பு செய்ய வருவார், பேரன்பு செய்வர், அன்பு செலுத்துவார், இன்பம் தருவர் என்று உரையாளர்கள் விளக்கம் தருவர். இவை அனைத்தும் ஒரே பொருளை உணர்த்துவனவே.
மு கோவிந்தசாமி இச்சொல்லுக்குப் 'பலர்க்கும் பகுத்துண்டு வாழ்தல்' என்று பொருளுரைத்தார். இப்பொருள் பொருத்தமில்லை. காமத்துப்பாலில் நல்குதல்’ என்பது ,தண்ணளி செய்தல் அதாவது நிறைந்த அன்பு காட்டுதல் என்ற பொருளிலேயே பயின்று வரும்.
நல்குவர் என்றதற்கு 'முழுஅன்பு காட்டுபவர்' என்பது பொருள்.

பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் திரும்ப வரும்வேளை அன்பு காட்டுவர் என எதிர்பார்ப்பது வீணான ஆசையா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவரால் எப்படி என்னிடம் வந்து செலவைச் சொல்ல முடிந்தது என்று பிரிவாற்றமையால் வருந்தி வினவுகிறாள் தலைவி.

பொழிப்பு

பிரிவை என்னிடம் கூறும் கொடியநெஞ்சம் கொண்டவராய் இருப்பின், திரும்ப வந்து காதலர் என்னிடம பேரன்பு காட்டுவார் என்று நான் ஆசைப்படலாமா?