இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1154அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1154)

பொழிப்பு: அருள் மிகுந்தவராய் 'அஞ்ச வேண்டா' என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதி மொழியை நம்பித் தெளிந்தவர்க்குக் குற்றம் உண்டோ?

மணக்குடவர் உரை: நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின் அவர் தெளிவித்த சொல்லைத் தெளிந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ?
தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெவித்த சொல்லை மெய்யெனத் தௌ¤ந்தார்க்குக் குற்றம் உண்டோ?
('தேறியார்' என்¢பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி' என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: அன்பு காட்டிப் பிரிய மாட்டேன் அஞ்சாதே என்று இனிமையாகக் கூறியவர் பிரிந்தால் நம்புமாறு கூறிய அவர் சொற்களை நம்பியவர்க்குக் குற்றம் உண்டோ?


பொருள்கோள் வரிஅமைப்பு:
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்.தேறியார்க்கு உண்டோ தவறு.


அளித்தஞ்சல் என்றவர் நீப்பின்:
பதவுரை: அளித்து-அன்பு காட்டி; அஞ்சல்-அஞ்ச வேண்டா; என்றவர்-என்று சொன்னவர்; நீப்பின்-பிரிந்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின்;
பரிப்பெருமாள்: )நம்மைத் தலையளிசெய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சல் என்றவர் தாமே நீங்கிப் போவாராயின்;
பரிதி: இன்பந்தந்து பிரியோம் என்று உறுதி சொன்ன நாயகர் பிரிந்தார்;
காலிங்கர்: (என்றார் உரைநீப்பின் என்பது பாடம்) முன்னம் தாமே வந்து தலையளித்து 'இனி, நீ யாதும் அஞ்சேல் ஒருகாலும், நின்னிற் பிரியேன்; பிரியின் ஆற்றேன்' என்று ஒரு சூளுறவு போலத தம் உரையால் தெளிவிக்கப்பட்டாரைத் தாமே விட்டு நீங்கின்;
பரிமேலழகர்:(இதுவும் அது.) எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்;

'தலையளிசெய்து உன்னைப் பிரியேன். நீ அஞ்சவேண்டா என்றவர் தாமே நீங்கிப் போவாராயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அணைத்துக் 'கலங்காதே' என்றவர் பிரிந்தால்', 'மிகுந்த அன்பு காட்டி அஞ்சாதே என்று கூறிய துணைவர் பிரிந்து சென்றால்.', 'எதிர்ப்பட்டபோது கருணை கூர்ந்து உன்னைப் பிரியேன், அஞ்சாதேயென்று சொன்னவர் தாமே பிரிவாராயின்', 'எதிர்ப்பட்ட பொழுதே தலையளி செய்து 'உன்னை விட்டுப் பிரியேன்; அஞ்சேல்' என்று கூறியவரே பின் பிரிந்து செல்வாரானால்' என்ற பொருளில் உரை தந்தனர்.

மிகுந்த அன்பு காட்டி அஞ்சாதே என்று கூறிய காதலர் பிரிந்து சென்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு:
பதவுரை: தெளித்த--ஐயம் நீங்க அறிவிக்கப்பட்ட; சொல்-மொழி; தேறியார்க்கு-தெளிந்தவர்க்கு; உண்டோ-உளதோ; தவறு-குற்றம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் தெளிவித்த சொல்லைத் தெளிந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ?
மணக்குடவர் குறிப்புரை: தன்மையைப் படர்க்கைபோற் கூறினார்.
பரிப்பெருமாள்: அவர் தெளிவித்த சொல்லைத் தெளிந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: தன்மையைப் படர்க்கைபோற் கூறினார். பிரிவுணர்த்திய தோழிக்குப் பிரிவு உடன்படாது தலைமகள் வெகுட்சிக் குறிப்பால் கூறியது.
பரிதி: இனி வந்து நன்மை செய்யினும் துன்பமன்றியே இன்பமில்லை என்றவாறு.
காலிங்கர்: தாம் அங்ஙனம் தெளிவித்த சொல்லினை, 'இது நமக்கு ஒரு தீர்வுரை' என்று தேறினவர்க்கு உண்டோ ஒரு தவறு என்றவாறு.
பரிமேலழகர்: அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ?
பரிமேலழகர் குறிப்புரை: தேறியார்' என்¢பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி' என்பது கருத்து.

'அவர் தெளிவித்த சொல்லைத் தெளிந்தவர்க்கு வருவதொரு குற்றம் உண்டோ?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறுதியை நம்பியவர்மேல் குற்றம் உண்டோ?', 'அவர் உறுதியாகச் சொன்ன சொல்லை நம்பி இருந்தவர்க்கு அதனால் குற்றம் உண்டாகுமோ? (உண்டாகாது)', 'நம்பும்படி அவர் சொன்ன சொல்லை நம்பினவர்பாற் குற்றமுண்டோ?', 'அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ?' என்றபடி பொருள் உரைத்தனர்.

ஐயம் நிங்க அவர் தெரிவித்த சொல்லில் ஆறுதல் பெற்றார்க்குக் குற்றம் உண்டோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அஞ்சாதே என்ற அவர் சொல்லில் ஆறுதல் பெற்றது என் தவறா என்று பிரிவில் கலங்கும் தலைவி தனக்குத் தானே முறையிட்டுக் கொள்ளும் பாடல்.

மிகுந்த அன்பு காட்டி அஞ்சாதே என்று கூறிய காதலர் பிரிந்து சென்றால், ஐயம் நிங்க அவர் தெரிவித்த சொல்லில் ஆறுதல் பெற்றார்மேல் தவறு உண்டா? என்பது பாடலின் பொருள்.
என்ன 'தவறு' நிகழ்ந்தது?

அளித்து என்ற சொல்லுக்குத் -தலையளி செய்து என்பது பொருள். தலையளி நிறைந்த அன்பைக் குறிக்கும்.
அஞ்சல் என்ற சொல் அஞ்சவேண்டாம் என்ற பொருள் தரும்.
நீப்பின் என்றால் நீங்கினால் என்று பொருள்.
தெளித்த சொல் என்றது தெளிவித்த சொல் என்பதைக் குறிக்கும்.
தேறியார்க்கு என்பது தெளிந்தவர்க்கு, அல்லது ஆறுதல் பெற்றவர்க்கு என்று பொருள்படும்.

'உன்னுடனே எப்பொழுதும் இருப்பேன் என்றவர் இப்பொழுது பிரிகிறாரே> அச்சொல்லை ஏற்று நான் தேற்றிக் கொண்டேனே அது என் தவறா'? இப்பொழுது ஏன்னால் பிரிவை ஆற்றமுடியவில்லையே என்று புலம்புகிறாள் தலைவி.

ஆண் பெண் உறவில் பிரிவு அச்சம் எப்பொழுதும் இருவருக்குமே உண்டு. கடமைக்காக பிரிவு நேர்வது உண்டு என்று தெரிந்தாலும் அவர்கள் உள்ளுக்குள் பிரிவை வெறுப்பர். பெண்ணானவள் மெல்லியல்பு கொண்டவள். அவள் எப்பொழுதும் கணவன் தன்னைவிட்டு நீங்கக் கூடாது என்று நினைப்பவள். எப்பொழுதெல்லாம பிரிவச்சத்தைத் தன் கணவனிடம் கூறுகிறாளோ அப்போதெல்லாம் அவன் 'கலங்காதே நானிருக்கிறேன்; என்று சொல்வான். அது ஆறுதலுக்காகச் சொன்ன சொல் என்று அவளுக்கும் தெரியும்தான்.. ஆனாலும் உண்மையில் பிரிவு வருகிறபோது அவள் மனம் பிரிவை ஏற்க மறுக்கிறது. பிரிவு உண்டான நேரத்தில், பிரிவைத் தாங்கமுடியாத சினத்தை யார் மேலாவது காட்டவேண்டும் என்று தோன்றுகிறது. அப்பொழுது 'நானிருக்கிறேன் என்று என்னை ஆறுதற்படுத்திவிட்டு அவர் இப்பொழுது அகன்றுவிட்டாரே. இதில் என் தவறு எங்கே உள்ளது?'. எனப் புலம்புகிறாள்.

தேறியார்' என்பது ஆறுதல்பெற்றவர் என்று படர்க்கை குறிக்கும் சொல். இங்கு தலைவி தன்னையே (தன்மை) தேறியார் என்று சுட்டுவதால் தன்மையைப் படர்க்கைபோற் கூறப்பட்டது என்று மணக்குடவர் குறிக்கிறார்..

என்ன 'தவறு' நிகழ்ந்தது?

தலைவிக்குக் குற்ற உணர்ச்சி உண்டாகிறது. அவர் என்னைத் தேற்றியபொழுது அவர் மொழியை ஏற்றுக் கொண்டது என் குற்றமா? என்கிறாள். ஆனால் தவறு என்று அவள் சொன்னது தலைவன் சொல்லை என்றாலும் உண்மையில் அவள் குறிப்பது தலைவனது பிரிவுக்கு உடன்பட்டதையே யாகும். தலைவன் பிரிந்து செல்ல அனுமதித்தது அவள் செய்த குற்றம் என உணர்ச்சிவசப்பட்டு எண்ணுகிறாள்.
யாரும் அவளைக் குற்றம் சொல்லவில்லை. ஆனாலும் அவளாகத் தான் தவறு செய்துவிட்டோமோ என்று கற்பனை பண்ணிக்கொள்கிறாள். 'தனக்குப் பிரிவு அச்சம் வரும்போதெல்லாம், -நிறைந்த அன்பு.டன் தன்னை அணைத்துக் 'கலங்காதே' என்று ஆதரவாகச் சொன்னவர் பிரிந்தால் அவர் சொன்ன சொல்லைத் தீர்வு என்று தெளிந்த என மீது குற்றம் உண்டோ?' என்று தனக்குத் தானே கேட்டுக்கொள்கிறாள்.
தலைவி தனது காதலன் மொழியை ஏற்றது தவறா என்று கேட்டாலும் அவன் பிரிந்து விட்டானே அப்பிரிவுக்குத் தானும் உடன்பட்டு விட்டோமோ என்ற 'குற்ற உணர்ச்சியால் கூறுகிறாள்.
தலைவி தவறு என்று குறிப்பிட்டது பிரிவு நிகழ்ந்ததைத்தான் என்பதைத் தெளியலாம்.

மிகுந்த அன்பு காட்டி அஞ்சாதே என்று கூறிய காதலர் பிரிந்து சென்றால், ஐயம் நிங்க அவர் தெரிவித்த சொல்லில் தேற்றிக் கொண்டவர் மீது குற்றம் உண்டோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிரிவாற்றமையால் தலைவன் பிரிவுக்கு உடன்பட்டது தன் குற்றம்தானோ எனத் தலைவி புலம்புவதைக் கூறுவது..

பொழிப்பு

அன்பு காட்டிக் ''அஞ்சாதே'' என்றவர் பிரிந்தால் அவர் சொல்லில் தேற்றிக் கொண்டவர்மீது குற்றம் உண்டோ?