இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1151



செல்லாமை உண்டேல் எனக்குஉரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை

(அதிகாரம்:பிரிவாற்றாமை குறள் எண்:1151)

பொழிப்பு (மு வரதராசன்): பிரிந்து செல்லாத நிலைமையாக இருந்தால் எனக்குச் சொல்; பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர் வாழ வல்லவர்க்குச் சொல்,



மணக்குடவர் உரை: காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு.
இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது.

பரிமேலழகர் உரை: (பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) செல்லாமை உண்டேல் எனக்கு உரை - நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை - அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல்.
(தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள், தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்கால மெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன், இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: நீ என்னைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல். அதனை விடுத்துப் பிரிந்துபோய் விரைந்து வருதலைச் சொல்லுவாய் ஆயின், அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்லாமை உண்டேல் எனக்கு உரை; மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை.

பதவுரை: செல்லாமை-(பிரிந்து) செல்லாதிருத்தல்; உண்டேல்-இருப்பதானால்; எனக்கு-என்னிடம்; உரை-சொல், கூறு; மற்று-அவ்வாறன்றி; நின்-உனது; வல்-விரைவாக; வரவு-வருகை(யை); வாழ்வார்க்கு-வாழ்பவர்க்கு; உரை-சொல்.


செல்லாமை உண்டேல் எனக்கு உரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு;
பரிப்பெருமாள்: காதலர் போகாமையுண்டாயின் எனக்குக் கூறு;
பரிதி: நாயகரே! நம்மைவிட்டுப் பிரியாமல் இருப்பீராகில் எனக்குச் சொல்லும்;
காலிங்கர்: தோழி, 'நமக்கு உயிராகிய நம் காதலர் நம்மின் நீங்கிச் செல்லாமை உளதாயின் அதனை எனக்குச் சொல்லுவாயாக;
பரிமேலழகர்: (பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.) நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்; [கடிதின் வருவல்-விரைவில் வருவேன்]
பரிமேலழகர் குறிப்புரை: தலைமகளை ஒழித்து 'எனக்கு' என்றாள்,

'எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச் சொல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரியேன் எனின் எனக்குச்சொல்', '(என்னை விட்டுப் பிரிந்து) போகாதிருப்பதென்றால் என்னிடம் சொல்லுங்கள்', 'பிரிந்து போகாதிருப்பதானால் அதனை எனக்குச் சொல்', 'நீ பிரிந்து போகாமை உண்டானால் எனக்குச் சொல்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பிரிந்து செல்லாதிருப்பதானால் அதனை எனக்குச் சொல் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்கு உரை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு.
மணக்குடவர் குறிப்புரை: இது கடிதுவருவாரென்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமையாற் கூறியது
பரிப்பெருமாள்: பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவினைப் பின்புளராய் வாழ்வார்க்குக் கூறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: பிரிவு உணர்த்தப்பட்ட தலைமகனது வரவு நீட்டிக்கக்கூடும் என்று ஆற்றாளாயது கண்டு, 'கடிது வருவர்' என்ற தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை கூறியது.
பரிதி: அல்லதை,உம்மைவிட்டுப் பிரிந்தும் உயிர்வாழ வல்லார்க்குச் சொல்லும் என்றவாறு.
காலிங்கர் ( (‘மற்றுந்தன் வல்வரவு’ பாடம்): மற்றுந் தனது விரைய வருகின்ற வரவினைப்பின் இருந்து உயிர் வாழ்வார்க்குச் சொல். எனவே யான் உயிர் வாழ்வதில்லை என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அஃதொழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல். [அஃதொழிய-பிரியாமை தவிர]
பரிமேலழகர் குறிப்புரை: தான் அவள் என்னும் வேற்றுமை அன்மையின். அக்கால மெல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லளல்லள்; பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல்: பயன், இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர். [அழுங்குவித்தல்-இரங்கச்செய்தல்; இதனை-இக்குறளை; கூற்றாக்கி-சொல்லாக்கி]

'அதுவன்றிப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின் அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிந்தால் நின் வேண்டா வருகையை இருப்பார்க்குச் சொல்', 'அதைவிட்டுப் பிரிந்துபோய் சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று சொல்வதானால் நீங்கள் திரும்பி வரும்வரை உயிரோடிருக்கின்றவர்களிடத்தில் வந்து சொல்லிக் கொள்ளுங்கள். (நான் அதுவரை உயிர் தரிக்க மாட்டேன்)', 'பிரிந்துபோய் விரைந்து வருதலை நீ வரும்வரை உயிர் வைத்துக் கொண்டிருப்பார்க்குச் சொல்', 'அங்ஙனமன்றிப் பிரிந்துபோய் விரைந்து வருதலைப்பற்றிச் சொல்வாயானால் அதனை அப்பொழுது உயிர் வாழ்வார்க்குச் சொல்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அப்படியில்லையென்றால், விரைந்து திரும்பிவருதலை நீ வரும்பொழுது உயிருடன் இருப்போர்க்குச் சொல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிரிந்து செல்லாதிருப்பதானால் அதனை எனக்குச் சொல்; அப்படியில்லையென்றால், வல்வரவு நீ வரும்பொழுது உயிருடன் இருப்போர்க்குச் சொல் என்று தலைவி சொல்வது.
'வல்வரவு' என்றால் என்ன?

'பிரிவுச்செய்தியை என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?' -தலைவி.

'பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்; விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் உயிர்தாங்கி நிற்பவருக்குச் சொல்' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தலைவனுக்கும் தலைவிக்கும் இல்வாழ்க்கை புதுவதாகத் தொடங்கிவிட்டது. கணவனும் மனைவியாக மனம் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகின்றார்கள் அவர்கள். அதுபொழுது கடமை காரணமாகத் தலைவன் தலைவியைப் பிரிந்து நெடுந்தொலைவு செல்ல வேண்டியுள்ளது. நீண்ட பிரிவுக்காலம் என்பதை உணர்ந்த தலைவிக்கு அந்நினைப்பையே ஆற்றமாட்டாதவள் ஆகிறாள். பிரிவு தவிர்க்கமுடியாதது என்பதை அறிந்து வைத்திருந்தும், மனதால் காதலனுக்கு நல்விடை கொடுக்க முடியவில்லை.

இக்காட்சி:
தலைவன் -தலைவி இவர்களது இல்லற வாழ்வின் முதன்முதல் நிகழ்ந்த பிரிவைச் சொல்வது போல அமைந்த குறளிது. பிரிந்துசெல்லும் வேளை தலைவன் விடைபெறும் நிகழ்வை எதிர்கொள்ளப் போகும் தலைவியின் மனத்துயரைக் காட்டும் கவிதையாக உள்ளது.
உண்டாக இருக்கும் பிரிவைத் தாங்க முடியாத மனநிலையில் இருக்கிறாள் அவள். பிரிந்து செல்லும் தலைவன், ‘நான் கடிதில் திரும்புகிறேன்; கவலைப்படாதே’ என்றுதான் - பிரிந்து செல்லும் எல்லோரும் கூறுவது போல - வாக்குறுதி தரப்போகிறான் என்றும் உணர்கிறாள். தலைவன் வந்து 'நான் ஒன்று சொல்லப்போகிறேன்' எனத் தொடங்குகிறான். அப்பொழுது அவள் தலைவனை நோக்கி, குமுறலும் வருத்தமுமாகக் கண்ணீர் மல்கச் சொல்கிறாள்: 'பிரிந்து செல்லப் போவதில்லை என்றால் மட்டும் எனக்குச் சொல்லுங்கள். போய் விரைவில் திரும்புகிறேன் என்று சொல்வதாக இருந்தால் நான் அதைத் தாங்க மாட்டேன்; நீங்கள் திரும்பி வரும்வரை வாழ்ந்திருக்கக் கூடியவருக்கு அச்செய்தியைச் சொல்லுங்கள்.'
அவன் பிரிந்தவுடன் அவளது உயிர் அவள் உடலில் தங்காது என்ற பொருளில் கூறுகிறாள். காதலன் பிரிவு என்பது தன் சாவு போன்றதாகவே அவள் உணர்ந்ததால்தான் அவ்விதம் கூறுகிறாள்.

அவனது பிரிவால் எந்த அளவுக்கு அவள் பாதிக்கப்படுவாள் என்பதனை அவளே இங்கு கூறுகிறாள். காதலன் பிரிந்து செல்லப்போகிறான் என்றதும் தலைவிக்கு உயிர் நில்லாது நீங்கியது போன்றே தோன்றுகிறது. தலைவனுக்கு விடை கொடுக்க மனமின்றித் தன் உணர்வுகளைக் கொட்டித் தீர்க்கிறாள் அவள். ‘தலைவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்திருக்க இயலாது’ என்பது அவள் சொல்ல வருவது. விடை பெறும் நேரத்தில் "பிரிந்தால் நான் உயிர் வாழமாட்டேன்" என்று சொல்ல விரும்பாமல் துயரத்தை அடக்கிக் கொண்டு, "யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் விரைவில் திரும்புகிறேன் என்று சொல்லுங்கள்" என்கிறாள் அவள். பிரிவு நேரத்தில் தலைவியின் மனநிலையை விவரிப்பதோடு, தலைவன் தலைவியிடையே காணப்படும் அன்பின் பிணைப்பையும், 'ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை' எனும் உயர்ந்த குறிக்கோளுடன் அவர்கள் வாழ்வதையும் இப்பாடல் காட்டுகிறது.

இக்குறட்கருத்தமைந்த சங்கப் பாடல் ஒன்று உள்ளது. அது:
.......வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ........... இருக்கிற் போர்க்கே (அகநானூறு 387: 3-20 பொருள்: நீர் (விரைவில்) வந்துவிடுவீர் ஆதலைக் கூறுமின்......., அதுவரை ஆற்றியிருக்க வல்லார்க்கு .(ஆற்றியிரேன் என்பது குறிப்பு.) )

பாடலில் முதலில் வரும் 'உரை' எனக்குரை என்ற சீரின் பகுதியாக வந்து விரைவைப் புலப்படுத்தும் வண்ணம் (என்னிடம்) உடனே சொல் என்ற குறிப்பையும், அடுத்து வரும் 'உரை' தனிச் சீராக அமைந்து மெல்ல, வேகம் இன்றி, தணிந்த குரலில், (உயிரோடு இருப்பவரிடம்) சொல் என்று உணர்த்துவதற்காக இட நிறுத்தம் (Space) கொண்டு இந்த குறள் அமைந்துள்ளது என நயம் கூறுவார் செ வை சண்முகம்.

நீ என ஒருமையில் தலைவி கூறியது அன்பின் மிகுதியால் என்பார் சி இலக்குவனார்.
மணக்குடவரும் பரிப்பெருமாளும் இக்குறள் தோழிக்குத் தலைவி ஆற்றாமையால் கூறியது என்பர். காலிங்கரும் இவ்வாறே தலைவி தோழிக்கு உரைத்ததாகக் கூறுவர். இளம்பூரணராரும் பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி கூறியது என்கிறார். பரிமேலழகர், பிரிந்து கடிதின் வருவல் என்ற தலைமகனுக்குத் தோழி சொல்லியது என்பார். இதைத் தலைமகன் காதலியிடம் நேரடியாகச் சொல்லத்தயங்கி, தலைவியின் தோழியை எடுத்துரைக்குமாறு சொல்லுவதாக அவர் உரை உள்ளது. மேலும் இவர் 'இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்' என்று சொன்னதால் தலைமகள் கூற்றாகக் கொள்வதும் ஏற்புடைத்து எனலாம். ஆனால் தொல்லாசிரியர்களில் பரிதி தலைவி தலைவனை நோக்கி நேரே சொல்வதாக உரை வரைந்தார். 'பிரிவின் வருத்தம் மிகுதியாக தலைவி இரங்கிக் கூறல்'- இது நச்சினார்க்கினியர் உரை.
‘நின் வல்வரவு’ என்னும் பாடத்துக்கு மணக்குடவர் தோழிக்குத் தலைவி கூறுவதாக உள்ளது பொருந்தாது; மற்றுந்தன் வல்வரவு’ என்கிற காலிங்கர் பாடம் தோழிக்குத் தலைவி கூறுவதாக இருத்தல் பொருந்தும். இன்றைய உரையாசிரியர்களில் பெரும்பான்மையோர் தலைவனிடம் தலைவி நேரடியாகச் சொல்வதாகக் கொள்வர்.
தலைவி->தோழி, தோழி->தலைமகன், தலைவி->தலைவன் என்பதான மூன்று வகை விளக்கங்களும் பொருந்தும் என்றாலும் தலைவி தலைவனிடம் உரைப்பதாகக் கொள்வது காதலியரின் பிணைப்பை சிறப்புற உணர்த்தும்.

'வல்வரவு' என்றால் என்ன?

'வல்வரவு' என்றதற்குப் பிரிந்தார் நீட்டியாது விரைந்து வருவாரென்று சொல்லுகின்ற வரவு, தனது விரைய வருகின்ற வரவு, பிரிந்துபோய் விரைந்து வருதல், பிரிந்து சென்று விரைந்து வருதல், 'யான் பிரிந்து சென்று, பொருளீட்டி விரைந்து வருவேன்' என்பது, நின் வேண்டா வருகை, பிரிந்துபோய் விரைந்து வருதல். பிரிந்துபோய் சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்று சொல்வது, பிரிந்து விரைவில் வருவேன் என்பது, பிரிந்துபோய் விரைந்து வருதல், விரைவில் திரும்பிவிடுவேன் என்ற கொடுஞ்சொல், பிரிந்து விரைந்து வருவேன் என்ற சொல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

வல்வரவு என்ற தொடர் விரைந்து (திரும்பி)வருவது என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. வரவு’ என்று மட்டுமே சொல்லாமல் ‘வல்வரவு’ என்று ஏன் சொல்கிறாள் தலைவி? தலைவியை விட்டுப் பிரிந்து செல்லும் தலைவன், ‘நான் கடிதில் திரும்புகிறேன்; கவலைப்படாதே’ என்று வாக்குறுதி கொடுக்க இருக்கிறான் என்பதை உணர்கிறாள் அவள். பிரிந்து செல்லும் எல்லோரும் இவ்வாறு கூறுவது இயல்புதான். ஆனால் அவனை விட்டு ஒரு கணம் கூட பிரிந்து இருக்க விரும்பாத தலைவியின் மனநிலை, விரைவில் வருகிறேன் என்ற உறுதி மொழியையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது என்பது இங்கு உணர்ச்சிகரமாகக் காட்டப்படுகின்றது. காதல் கொண்டவர்கள் எப்பொழுதும் இணைந்தே இருக்க விரும்புவர். எப்போழுதாவது வரும் சிறிய பிரிவு கூட அவர்களைப் பெரிதும் வருத்தும். தலைவன் மீது தலைவி கொண்டுள்ள காதலின் ஆழமும் அவளது சொற்களின் மூலம் வெளிப்பட்டது.

'வல்வரவு' என்ற தொடர் விரைந்து வருதல் எனப் பொருள்படும்.

'பிரிந்து செல்லாதிருப்பதானால் அதனை எனக்குச் சொல்; அப்படியில்லையென்றால், விரைந்து வந்துவிடுவேன் என்பதை நீ திரும்பி வரும்பொழுது உயிருடன் இருப்போர்க்குச் சொல்' என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

துயர் உள்ளடக்கிய மென்சொற்களால் பிரிவாற்றமையை உரைக்கும் கவிதை.

பொழிப்பு

பிரியேன் என்றால் அதை எனக்குச் சொல்; சென்று விரைவில் திரும்பி வருகிறேன் என்பதை அதுவரை வாழ்ந்து இருப்பார்க்குச் சொல்.