இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1150



தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கௌவை எடுக்கும்இவ் வூர்

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1150)

பொழிப்பு (மு வரதராசன்): யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக் கூறுகின்றனர். அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.

மணக்குடவர் உரை: யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார். ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலர்க்கு.

பரிமேலழகர் உரை: (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது.
(எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்¢' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.)

தமிழண்ணல் உரை: திருமணத்திற்குத் தூண்டுமென்று யான் முன்பே விரும்பி எதிர்பார்த்த அலரை இவ்வூர் தூற்றுகின்றது. இனி நம் காதலர் தாமும் அதை விரும்பி எதிர்பார்ப்பவராதலின், விரைவில் நம்மை மணம் முடித்தற்கானவற்றைச் செய்துதவுவார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கௌவை எடுக்கும் இவ்வூர்.

பதவுரை: தாம்-யாம்; வேண்டின்-விரும்பினால்; நல்குவர்-தண்ணளி செய்வர், அருளுவர்; காதலர்-காதலர்; யாம்-நாங்கள்; வேண்டும்-விரும்புவதாகிய; கௌவை-அலர்; எடுக்கும்-எழுப்புகின்ற; இவ்வூர்-இந்த ஊர்.


தாம்வேண்டின் நல்குவர் காதலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('தாம்வேண்டி' பாடம்): ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலர்க்கு;
பரிப்பெருமாள்: ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நம்முடைய காதலார்க்கு;
பரிதி: நாயகர் நமக்கு இன்பந்தருவர்;
காலிங்கர்: நெஞ்சே! நம்மால் காதலிக்கப்பட்ட காரிகையார் இன்னும் தாமே நல்க வேண்டின் நம்மை நல்குவர்;
பரிமேலழகர்: (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது). இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி. [நயப்ப-விரும்ப; அதனை இனிதின் நேர்வர்-உடன்போக்கை இனிதாக ஏற்றுக் கொள்வர்]

பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்குச் சூழ்நிலை உரைத்ததில் வேறுபட்டனர். மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோர் ‘தாம் வேண்டி’ எனப் பாடங்கொண்டு 'பெற்றோர் தாமே விரும்பி காதலர்க்குக் கொடுப்பர்' எனப் பொருள் கூறினர். 'உடன்போக்கை நல்குவர்' எனப் பரிமேலழகர் உரைப்பார் காளிங்கர் தலைமகன் கூற்றாகக் கொண்டதால் ‘காதலர்’ என்பதற்குக் காதலிக்கப்பட்ட காரிகையர் என்று வலிந்து பொருள் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் அலர் விரும்பினால் அருளுவார்', 'ஆதலால், எம் காதலர் தாம் விரும்பும்போது வந்து உதவுவார்', 'இனி காதலர் தாமும் உடன்போக்கினை யாம் விரும்பியபோது எமக்கு அதனையளிப்பர்', 'தாம் விரும்பினால் காதலர் இனிதாக ஒப்புக் கொள்வர். அதனால் இவ்வலர் உடன் போக்குக்குத் துணை செய்ய நன்றாய் வந்துள்ளது' என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலர் நாம் வேண்டியபடி எம்மை அழைத்துச் சென்று அருள்வார் என்பது இப்பகுதியின் பொருள்.

யாம்வேண்டும் கௌவை எடுக்கும் இவ்வூர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் (யாம் வேண்டின்', 'எடுத்தது' பாடம்) : யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார்.
பரிப்பெருமாள்: யாம் விரும்பும், அலரை இவ்வூரார் எடுத்தார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: வரைவெதிர் கொள்ளாது தமர் மறுத்துழி ஆற்றாளாகிய தலைமகட்கு. இப்புணர்ச்சியை அயலார் தூற்றா நின்றனர். ஆதலால் குரவர் தாமே விரும்பிக் கொடுப்பர் என்று தோழி தலைமகளை ஆற்றுவித்தது. யாம் வேண்டும் கவ்வை. இவனுக்கு நாம் பெண்டிரானது புறந்தார் அறியவேணும் என்று நினைத்திருந்தவாறாம்.
பரிதி: அந்த இன்பத்தை யாம் கொள்வோமோ என ஊர் அலர் தூற்றியது என்றவாறு.
காலிங்கர்: ஆதலால் இவர்பெயர் நினைந்து இறந்துபடுதற்கு இயையுமிடத்து அவர் பெயர் கொண்டு யாம் கேட்க விரும்பும் கவ்வை எடுத்து உரையாநின்றது இவ்வூர்; எனவே தோழியைப் பிறர்போலக் கொண்டு கூறியது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது. அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது;
பரிமேலழகர் குறிப்புரை: எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம். [மறார்=மறக்க மாட்டார்]

'யாம் விரும்பிய அலரை இவ்வூரார் எடுத்தனர்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவ்வூர் நாம் எதிர்பார்த்தபடி தூற்றுகின்றது', 'யாம் விரும்பும் அலர்மொழியை இவ்வூரார் பேசிப் பரப்பினர்', 'உடன்போக்கின் பொருட்டு யாம் விரும்பும் அலரை இவ் ஊர் பரப்புவதாயிற்று.(இதனால் இவ்வலர் நமக்கு நல்லதே.)', 'யாம் விரும்புகின்ற அலரை இவ்வூர் கூறுகின்றது' என்றபடி பொருள் உரைத்தனர்.

நான் விரும்பியபடி இவ்வூரார் அலர் எடுத்தனர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நான் விரும்பியபடி இவ்வூரார் அலர் எடுத்தனர்; இனி காதலர் நாம் வேண்டியபடி எம்மை அழைத்துச் சென்று நல்குவர் என்பது பாடலின் பொருள்.
'நல்குவர்' தரும் பொருள் என்ன?

இப்பொழுது எங்கள் காதல் உறவு ஊரார் அனைவருக்கும்தான் தெரிந்துவிட்டதே! இனி என்ன? மணவாழ்வுதானே!

யாம் விரும்புகின்ற அலரினை இவ்வூரார் எடுத்தனர்; ஆதலால், எம் காதலரும் நாம் வேண்டியபடி எம்மை அழைத்துச் சென்று அருள்வார்.
காட்சிப் பின்புலம்:
தலைவனும் காதலியும் ஒருவரையொருவர் நினைத்துக்கொண்டு நாணத்தைத் துறந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களது மறைவொழுக்கத்தை ஊரார் அறிந்து கொண்டதால் அது அலராகப் பரவியது. தங்களது களவு ஒழுக்கத்தை ஊரார் இழித்தும் பழித்தும் பேசுவதை அவர்கள் அறியவருகிறார்கள்; அதாவது அலரறிவுறுத்தப்பட்டது. 'என் காதலியின் அருமை தெரியாமல் அவளைப்பற்றி என்னவெல்லாமோ பேசுகிறார்களே' என்று வருந்துகிறான் காதலன். ஆயினும் இவ்வூர் கூறுகின்ற அலரே எம் காதலை மேன்மேலும் மிகுவிக்கிறது. கள்ளைக் களிக்கும்தோறும் மேலும் மேலும் விரும்பப்படுவதுபோல தங்கள் காமம் ஊரார் அறிய அறிய எமக்கு அது மேலும் மேலும் இனிதாகிறது. 'ஊரார் பேச்சு எருவாகவும், அதுகேட்டு வெளமாகத் தாய் சுடுசொல் மொழிய எம் காதல் நீண்டு வளர்கிறது' என்கிறாள் தலைமகள். 'நின்னிற்பிரியேன்' எனக் காதலர் கூறியிருக்க ஊரார் அலர்க்கு நான் ஏன் நாண வேண்டும்? என மன உறுதியுடன் இருக்கிறாள் அவள். காமத்துக்கு எதிராகப் பேசப்படும் கௌவை இவர்கள் காதலை மேலும் கொழுந்துவிட்டு எரியவே செய்தது. அலர் நன்மை செய்ய வந்தது என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இக்காட்சி:
காதலர் களவொழுக்கம் ஊரார்க்குத் தெரியவர தலைவன் தலைவியரின் செயல்களை உற்றுநோக்கி அவை குறித்து அவர்கள் வம்புப்பேச்சுகளில் ஈடுபடுகின்றனர். இதை அறிந்த தலைவி 'களவுக்காதல் செய்தி வெளிப்படையாயிற்று; நான் விரும்பியவாறே ஊர்மக்கள் அலர் எடுக்கின்றனர். ஊர்ப்பழி நல்லதே; அலரும் களவு வாழ்க்கையும் முடிவு பெறும் வேளை வந்துவிட்டது; அவர் வந்து எனக்குத் தண்ணளி செய்வார்' எனத் தலைவி உரைக்கிறாள்.
அலர் எழுந்ததனால். பெற்றோர், குடி மானம் காக்கும் பொருட்டு, தங்களது மணவினைக்கு ஏற்பாடு செய்வர் எனக் காதலர் நினைக்கின்றனர், இந்த நம்பிக்கைக்குக் குறிக்கத்தக்கவையாக இரு விளக்கங்கள் உள்ளன; பெற்றோர் தாங்களே விரும்பி வந்து காதலர்க்கு உதவுவர் (மணக்குடவர்) என்பது ஒன்று; உகந்த வேளையில் காதலர் அருளுவர் அதாவது காதலர் வந்து தன்னூர்க்குக் கூட்டிச் செல்வார் (பரிமேலழகர்) என்பது மற்றொரு விளக்கம். இவற்றுள் முன்னது சிறப்புடையது.

'நல்குவர்' தரும் பொருள் என்ன?

'நல்குவர்' என்ற சொல்லுக்குக் கொடுப்பர், இன்பந்தருவர், நல்குவர், இனிதின் நேர்வர், உதவுவார், விரைவில் நம்மை மணம் முடித்தற்கானவற்றைச் செய்துதவுவார், அருளுவார், வந்து உதவுவார், வந்து சேர்வார், பயனாகும், அளிப்பர், மணம் முடிப்பார், எளிதில் ஒப்புக் கொள்வர், மகிழ்ந்து உடன்படுவர், அடைந்து விடுவார், தண்ணளி செய்வர், அருளுவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நல்குவர் என்பதற்கு வழங்குவர், கொடுப்பர் என்பது பொதுவான பொருள். ஆனால் காமத்துப்பாலில் ‘நல்குதல்’ என்பது அருளுதல், தண்ணளி செய்தல் என்ற பொருளிலேயே பயின்று வந்துள்ளது. இக்குறளிலும் அப்பொருள் கொள்வதே பொருத்தமாகும். காதலர் தாமே இசைந்து வந்து என் விருப்பத்தை நிறைவேற்றுவார் என்பது கருத்து.

'நல்குவர்' என்ற சொல் தண்ணளி செய்வர் எனப் பொருள்படும்.

யாம் விரும்புகின்ற அலரினை இவ்வூராரே எடுத்தனர்; ஆதலால், எம் காதலரும் நாம் வேண்டியபடி எம்மை அழைத்துச் சென்று அருள்வார் என்பது இக்குறட்கருத்து.

களவு ஒழுக்கம் முடிவு பெறுகின்றது. தலைவன் - தலைவி மணம் நடந்தேறுகிறது. இச்செய்தி குறளில் எங்கும் கூறப்படவில்லை. ஆனால் இவ்வதிகாரத்தை அடுத்து கற்பியல் தொடங்குவதால் அதை உய்த்துணர முடிகிறது.



அதிகார இயைபு

அலர் அறிவுறுத்தல் களவுக் காதலை மண உறவில் கொண்டு சேர்க்கும் .

பொழிப்பு

நான் விரும்பியபடி இவ்வூரார் அலர் எடுத்தனர்; நாம் வேண்டியபடி எம் காதலர் எமக்குத் தண்ணளி செய்வார்.