இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1149அலர்நாண ஒல்வதோ அஞ்சல்ஓம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1149)

பொழிப்பு: பார்த்த பலர் நாணும்படி 'அஞ்சாதே' என்று சொல்லிப் பிரிந்தார்; பின் ஏன் ஊரார் பேசுவர் என்பதற்காக அஞ்ச வேண்டும்?

மணக்குடவர் உரை: அலராகுமென்று நாணுதல் இயல்வதோ? அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து.
பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.

பரிமேலழகர் உரை: (வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) அஞ்சல் ஒம்பு என்றார் பலர் நாண நீத்தக் கடை - தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்; அலர் நாணா ஒல்வதோ - நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது.
('நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: 'நின்னிற்பிரியேன் அஞ்சுதலைத் தவிர்' என்று கூறியவர் பலரிடையே நாம் நாணுமாறு நீத்தபோது, அயலார் கூறும் அலருக்கு (பழிக்கு) நாணக்கூடுமோ கூடாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அஞ்சல்ஓம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை அலர்நாண ஒல்வதோ.


அலர்நாண ஒல்வதோ:
பதவுரை: அலர்-ஊர்ப்பேச்சு; நாண-வெட்கப்பட; ஒல்வதோ-கூடுமோ.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அலராகுமென்று நாணுதல் இயல்வதோ?
பரிப்பெருமாள்: அலராகுமென்று நாணுதல் இயல்வதோ?
பரிதி: அலர் ஏசும் நாணடத்திற்கு நோவதோ;
காலிங்கர்: நெஞ்சே! இனிப் பிறர் கூறும் அலர் உரைக்கு நாணத்தகுவது ஒன்றோ?
பரிமேலழகர்: (வரைவிடை வைத்துப் பிரிவின்கண் ஆற்றாளாய தலைமகள். அவன் வந்து சிறைப்புறத்தானாதல் அறிந்து, 'அலரஞ்சி ஆற்றல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் ஏதிலார் கூறும் அலருக்கு நாணக் கூடுமோ? கூடாது.

'அலராகுமென்று நாணுதல் கூடுமோ? கூடாது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊர்ப்பேச்சுக்கு அஞ்சி இருக்க முடியுமா?', 'அயலார் கூறும் அலருக்கு நாண முடியுமா?', 'பலபேர் பரிகாசம் பண்ணுவதற்காக நான் பயந்துவிடலாமா?', 'அயலார் கூறும் அலருக்கு நாம் நாணக்கூடுமோ? கூடாது' என்ற பொருளில் உரை தந்தனர்.

ஊரார் பேசுவர் என்பதற்காக வெட்கப்பட வேண்டுமா? என்பது இப்பகுதியின் பொருள்.

அஞ்சல்ஓம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை:
பதவுரை: அஞ்சல்-நடுங்குதல்; ஓம்பு-அஞ்சாதே என்றார்-என்று சொன்னவர்; பலர்-பலர்; நாண-வெட்கப்பட; நீத்தக்கடை-துறந்தபின்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து.
மணக்குடவர் குறிப்புரை: பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை.
பரிப்பெருமாள்: அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீக்கினவிடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: பலரென்றது தோழியும் செவிலியும் முதலாயினாரை. தலைமகனைக் காணும் பொழுதில் காணாப் பொழுது பெரிது ஆதலால்தான் ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி நினது ஆற்றாமை அலராகின்றது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நெஞ்சே அஞ்சாதே இரட்சிகிறோம் என்ற நாயகர் துறந்தவிடத்து என்றவாறு.
காலிங்கர்: யாம் தம்மோடு கலந்த ஞான்று நீ அஞ்ச வேண்டா, யாம் கடிதாக வரைவோம் என்று சொல்லக் கேட்டவர் தாமே அத்துணையும் உடம்பட்டொழுகப் பெறாராய் பலரும் நாணும்படி நம்மைக் கைவிட்டவிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: தம்மை எதிர்ப்பட்ட ஞான்று 'நின்னிற் பிரியேன் அஞ்சல் ஒம்பு' என்றவர் தாமே இன்று கண்டார் பலரும் நாணும் வகை நம்மைத் துறந்த பின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நாண' என்னும் வினையெச்சம் 'ஒல்வது' என்னும் தொழிற் பெயருள் ஒல்லுதல் தொழிலோடு முடிந்தது. 'கண்டார் நாணும் நிலைமையமாய யாம் நாணுதல் யாண்டையது'? என்பதாம்.

அஞ்சுதலைத் தவிரென்று சொன்னவர் பலரும் நாணுமாறு நம்மை நீங்கினவிடத்து என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்சாதே என்றவர் பலரறியப் பிரிந்தபோது', 'முதலில் கண்டபோது 'உன்னைப் பிரியேன்; அஞ்ச வேண்டா' என்று கூறியவர், இப்பொழுது கண்டார் பலரும் நாணும்வகை நம்மைப் பிரிந்தவிடத்து', 'யார் என்ன சொன்னாலும் நான் இருக்கிறேன் நீ பயத்தை விடு' என்று சொன்ன என் காதலர் இப்போது என்னைப் பிரிந்திருக்கிறார் என்பதால்', 'நடுங்குதல் யொழிக, உன்னைவிட்டுப் பிரியேன் என்ற காதலர் பலரும் நாணும்படி நம்மை விட்டகன்ற பின்னர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பார்த்த பலர் நாணும்படி 'அஞ்சாதே' என்று சொல்லிப் பிரிந்தவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அலர் உருவாகக் காரணமான நிகழ்வு குறிக்கப் பெறும் பாடல்.

பார்த்த பலர் நாணும்படி 'அஞ்சாதே' என்று சொல்லிப் பிரிந்தார்; பின் ஏன் ஊரார் பேசுவர் என்பதற்காக அஞ்ச வேண்டும்? என்பது பாடலின் பொருள்.
'பலர் நாண நீத்தக்கடை' குறிப்பது என்ன?

அலர் என்றது ஊர்ப்பேச்சைக் குறித்தது.
ஒல்வதோ என்ற சொல்லுக்கு இயலுமோ அல்லது கூடுமோ என்பது பொருள்.
அஞ்சல் என்ற சொல் அஞ்சாதே என்ற பொருள் தரும்.
ஓம்பு என்ற சொல் காத்துக்கொள் என்று பொருள்படும்.

காதலனும் காதலியும் களவொழுக்கம் மேற்கொண்டனர். ஒருநாள் கூடியும் மகிழ்ந்தனர். கடைசியாக அவன் அவளைப் பிரியும்வேளையில் 'அஞ்சவேண்டாம்; உன்னை நன்றாகப் பார்த்துக்கொள்' என்று கூறிச் சென்றான். இதைக் காண நேர்ந்த ஊர் மக்கள் 'யாரோ ஒருவன் இப்பெண்ணிடம் இப்படிச் சொல்லிச் செல்கிறானே' என்று திகைத்து நின்றனர். இங்கிருந்துதான் காதலர் பற்றிய அலர் தொடங்குகிறது.

காதலரைப் பற்றிய இழிவான ஊரவர் பேச்சு விரிந்து பெருகுகிறது. அப்படிப்பட்டப் பேச்சைக் கேட்டாவது காதலர்கள் தங்கள் காதலை அழித்துக் கொள்வார்கள் என என்ணினர் போலும். ஆனால் அலர் உரை கேட்ட காதலி ''பயப்படவேண்டாம்; நானிருக்கிறேன்' என்று ஊரார் முன்னிலையில் என் காதலர் சொல்லிச் சென்றிருக்கும்போது இந்த வம்புப் பேச்சுக்களுக்காக நான் ஏன் வெட்கப்படவேண்டும்? அவர் எனக்குப் பலமான துணையாக நிற்பார்' என்கிறாள். தன் காதலன் அளித்த உறுதிமொழியில் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்ததால்தான் தலைவி 'அலருக்கு நான் ஏன் நாண வேண்டும்' என்கிறாள்.

'பலர் நாண நீத்தக்கடை' குறிப்பது என்ன?

பலர் என்பதற்கு மணக்குடவர் தோழியும் செவிலியும் முதலாயினாரை என்று தலைவியைச் சுற்றியிருப்பவர்களை மட்டும் குறிப்பிட்டார். மற்றவர்கள் எல்லாம் ஊரமக்கள் பலர் என்று எழுதினர். ஊர்மக்கள் பலர் என்பது சரியானாலும் எந்தச் சூழ்நிலையில் பலர் நாணினர் என்பதை விளக்குவதில் உரையாசிரியர்களிடைத் தெளிவில்லை.
நீத்தக்கடை என்ற தொடர்க்கு நீங்கினவிடத்து, துறந்தபின், கைவிட்டவிடத்து, பிரிந்தவிடத்து, பிரிந்தபொழுது என்று பொருள் கண்டனர்.
இவற்றுள் துறந்தவிடத்து, கைவிட்டவிடத்து என்று கொண்ட உரையாளர்கள் 'இன்று என்னைப் பிரிந்திருப்பதால் பலரும் கண்டு எள்ளி நகையாடுகிறார்கள். நான் வெட்கப்பட்டு என்ன பயன்?' என்றும் 'பலபேர் என்னைப் பரிகாசம் பண்ணும்படியாக விட்டுப் பிரிந்திருக்கிறார்' என்றும் 'பயப்படாதே என்று சொல்லிவிட்டுப் பலரும் நாணும்படி என்னைக் கைவிட்டுவிட்டார். இப்போது வதந்திக்கு வெட்கப்படமுடியுமா?' என்றும் இக்குறளுக்குப் பொருளுரைத்தனர். இவ்வுரைகள் பொருத்தமாகப் படவில்லை.
நீத்தக்கடை என்றதற்குக் காதலர்கள் இறுதியாகச் சந்தித்துப் 'பிரிந்த பொழுது' என்று கொள்வதே இக்குறட்கருத்தை விளக்க உதவும்.
எனவே இத்தொடர்க்கு 'ஊர்மக்கள் பலர் வெட்கப்படும்படியாக (திகைக்கும்படியான சொற்களால் உரைத்து விட்டுச் சென்றதால்) என்னைப் பிரிந்தவேளை' என்று கொள்வது பொருத்தமாக அமையும்.

பார்த்த பலர் நாணும்படி 'அஞ்சாதே' என்று சொல்லிப் பிரிந்தார்; பின் ஏன் ஊரார் பேசுவர் என்பதற்காக அஞ்ச வேண்டும்? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

என் காதலர் உரைத்த காப்பு மொழியிருக்க அலருக்கு ஏன் நான் நாணவேண்டும் என்கிறாள் அலர் அறிவுறுத்தல் அதிகாரத் தலைவி.

பொழிப்பு

ஊரார் பேச்சுக்கு வெட்கப்படக் கூடுமா? பார்த்த பலர் நாணும்படி 'அஞ்சாதே, காத்துக்கொள்' என்று சொல்லிப் பிரிந்துள்ளாரே!