இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1148



நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால்
காமம் நுதுப்பேம் எனல்

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1148)

பொழிப்பு (மு வரதராசன்): அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

மணக்குடவர் உரை: எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல்.
இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும்.
(மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.)

தமிழண்ணல்: பழிச்சொல்லாம் அலரால் காமத்தை அடக்கிவிடலாம் என நினைப்பது எரிகின்ற நெருப்பை நெய்யூற்றி அணைத்துவிடலாம் என எண்ணுவதற்கு ஒப்பாகும். அலர் காமவுணர்வை வளர்க்குமே தவிர, அடக்காது. அடக்க அடக்கக் கூடுதலாகப் பெருகும் என்ற கருத்தும் உளது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கௌவையால் காமம் நுதுப்பேம் எனல் நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்.

பதவுரை: நெய்யால்-நெய்யினால், எண்ணெய் ஊற்றி; எரி-நெருப்பு, தீ; நுதுப்பேம்-அவிப்போம், அணைப்போம்; என்றுஅற்று-என்பதான அத்தன்மைத்தால், என்று கூறுவதை ஒக்கும்; 'ஆல்' அசை; கௌவையால்-அலரால்; காமம்-காதல்; நுதுப்பேம்-தணிப்போம்; எனல்-என்று கருதுதல்.


நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்;
பரிப்பெருமாள்: எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிக்க நினைத்தாற்போலும்;
பரிதி: நெய்யினால் எரி அவிப்போம் என்பதற்கு ஒக்கும்;
காலிங்கர்: பற்றி எரிகின்ற எரியினை நெய்யினைச் சொரிந்து மற்று இதனால் தணிக்கக் கடவேம் என்று கருதிய அத்தன்மைத்து யாதெனில்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். [அவித்தும்-அணைப்போம்]

'எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெய்யூற்றி நெருப்பை நூக்க முடியுமா?', 'நெய்யினால் தீயை அவித்து விடுவோம் என்று கருதுதலோடு ஒக்கும்', 'நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று எண்ணுவதோடு ஒக்கும்', 'நெய்யால் நெருப்பினை அவித்து விடலாம் என்று நினைப்பதோடு ஒக்கும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

நெய்யினால் நெருப்பை அவித்து விடுவோம் என்பதோடு ஒக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.
பரிப்பெருமாள்: அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.
பரிதி: கவ்வையினாலே காமத்தை அவிப்போம் எனல் என்றவாறு.
காலிங்கர்: யாம் உற்ற காம எரியினைச் சிலர் தமது அலர் உரையால் தணிப்பேம் என நினைக்கின்றது என்றவாறு.
பரிமேலழகர்: ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்.
பரிமேலழகர் குறிப்புரை: மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம். நெய்யால் கௌவையால் என்னும் மூன்றனுருபுகள் துணைக் கருவிப் பொருளில் வந்தன; கிளர்தல்-வளர்தல்]

'அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊர்ப்பேச்சால் காமத்தீயை அணைக்க முடியுமா?', 'அயலார் பேசும் அலர்மொழியால் காமத்தீயை அவித்து விடுவோம் என்று கருதுதல்', 'அயலாருடைய அலரால் காமத்தை ஒழிப்போம் என்று எண்ணுதல்', 'அயலார் கூறுகின்ற பழிச்சொல்லால் காதலை அழித்துவிடலாம் என்று கருதுதல்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அலர்மொழியால் காமத்தைத் தணித்து விடுவோம் என்று கருதுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நெய்யினால் நெருப்பை நுதுப்பேம் என்பதோடு ஒக்கும், அலர்மொழியால் காமத்தைத் தணித்து விடுவோம் என்று கருதுதல் என்பது பாடலின் பொருள்.
'நுதுப்பேம்' என்றால் என்ன?

ஊராரின் பழிச்சொல்லால் எங்கள் காதல்தீ கொழுந்துவிட்டு வளர்கிறது என்கிறாள் தலைவி.

‘பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம்’ என்று கருதுதல், ‘நெய்யை நெருப்பின் மேலிட்டு அதை அணைப்போம்’ என்பது போன்றது.
காட்சிப் பின்புலம்:
காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் பழகுவதை ஊரார் அறிந்து அவர்களது மறைவொழுக்கம் குறித்து இழித்தும் பழித்தும் பேசுகிறார்கள். அவ்விதம் ஊர் பேசுவது காதலர்க்குத் தெரியப்படுத்தப்படுகிறது அதாவது அலரறிவுறுத்தப்பட்டது. அலர் தூற்றல் இவர்கள் உறவு மேலும் வலுப்படவே உதவுகிறது.
அலரினால்தான் தன் உயிர் நிலைத்து நிற்கின்றது என்கிறான் தலைவன்; ஆயினும் தன் காதலியின் அருமை அறியாது அவர்கள் உறவு பற்றித் தவறாகப் பேசுகிறார்களே என்று வருத்தமுமுறுகிறான். ஊரெங்கும் அலர் பரவியது தன் நற்பேறுதான் என்றும் அது அவனிடம் கிளர்ச்சியையும் சிலிர்ப்பையும் உண்டாக்குகிறது என்றும் தங்கள் காதல் செய்தி மேலும் பரவட்டும் என்றும் தலைவன் எண்ணுகிறான். அவர்களது காமம் பற்றிய அலர் பெரிதாகப் பேசப்பட்டு விரைவாகப் பரவுகிறது.
ஊரார் பேச்சுப் பற்றிக் காதலி என்ன நினைக்கிறாள்? தலைமகள் 'ஊரார் பேச்சு எருவாகவும், அதுகேட்டு சினந்து தாய் சுடுசொல் மொழிய எம் காதல் நீண்டு வளர்கிறது' என்று கூறிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தங்கள் காதலை ஒழித்துக் கட்டவே அலர் எழுப்பப்படுகிறது என்று கருதுகிறாள் தலைவி. 'இப்படி அலர் பரப்புவது காதல் நெருப்புக்கு நெய் ஊற்றுவது போல' என்று குமுறுகிறாள் அவள். அதாவது 'அலர் காமத்தீயை அணைப்பதற்குப் பதில் அதை மேன் மேலும் எரியச் செய்யும் தன்மையது' எனச் சொல்கிறாள். இவளது கூற்று காதலரது மனம் கலந்துவிட்ட நிலையையும் காதலின் வன்மையையும் தெரிவிக்கிறது.

'காதலர்கள் ஊரைப்பற்றிக் நினையாமல் நடந்து கொண்டனரே' என்று ஊர் மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் சமூகஒழுக்கம் காக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் காதலர்கள் செய்தது தவறு என்று அலர் பரப்பலாம். அவர்கள் இவர்களது உறவு பற்றி இழிவான பேச்சில் ஈடுபடுகின்றனர். இப்பேச்சுக்கள் மூலம் காதலுக்கு இடையூறு விளைவித்து அவர்களது காதலை அடக்கிவிட முடியும் என நம்பினர்போலும். ஆனால் அலர்தூற்றலை ஊரார் செய்யச் செய்ய, தலைவனிடம் மலர்ந்த காதல் மேலும்மேலும் வளர்வதாகவே, தலைவி எண்ணுகிறாள்! அலர் காதலைத் தணிக்கச் செய்யாது வளர்க்கவே செய்யும் என்கிறாள் அவள்.
தீயை எண்ணெய் சொரிந்து அணைக்கமுடியுமா? நெய்யால் தீ கூடுமே ஒழியக் குறையாது, ஊதிப்பெரிதாக்கலாமே ஒழிய அவித்துவிட முடியாது என்று தலைமகள் சொல்வதால் அவளது காதலின் உறுதிப்பாடு புலப்படுத்தப்படுகிறது. ஊரார் அலர் என்னும் நெய்யை ஊற்றி அவள் காதல்தீயைத் தணிக்க முயல்கின்றனர்; ஆனால் அவள் காதல் மேலும் மேலும் வளரவே செய்கிறது.
நெருப்பை அணைக்கும் தன்மை கொண்டது நீர். நெய்யும் நீர் போன்று இருப்பினும், அது எரியை அழிக்காது மிகுவிக்கும் இயல்பினது. அதுபோல, பிறரெல்லாம் பழித்துப் பேசினாலும் காதல்தீ பற்றிக்கொண்டு வளருமேயன்றித் தணியாது என்பது உவமானத்தால் காட்டப்பட்டது.

'நுதுப்பேம்' என்றால் என்ன?

'நுதுப்பேம்' என்ற சொல்லுக்கு அவிப்போம், தணிப்பேம், அவித்தும், அடக்குவோம், அடக்கிவிடலாம், அணைக்க முயல்வது, அவித்து விடுவோம், தணித்துவிடலாம், அணைப்போம், ஒழிப்போம், அழித்துவிடலாம், தடுத்துவிடலாம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'நுதுப்பேம்' என்னும் சொல் புதிய வடிவினதாகக் காணப்பெறுகின்றது என்பார் இ சுந்தரமூர்த்தி.
இச்சொல் 'அவிப்பேம்' அதாவது அழிப்போம் என்னும் பொருளில் இங்கு ஆளப்பட்டுள்ளது. இதற்குத் தணிப்போம் என்றும் பொருள் கூறினர்.
இச்சொல் குறளில் மட்டுமே வந்துள்ளது என்றும் இது மற்ற சங்க இலக்கியங்களில் பயிலப்படவில்லை என்றும் கூறுவார் செ வை சண்முகம். மேலும் அவர் நது என்ற தலைச்சொல்லின் கீழ் தமிழில் நந்து (சங்க இலக்கியத்தில் அவிதல் என்ற பொருளில் வந்துள்ளது) என்ற மாற்று வடிவம் பெற்றது; நது என்பதன் மாற்றுவடிவாகப் பேச்சு மொழியில் வழங்கிய நுது என்ற வினையடியாகப் பிறந்த தொழில் பெயர் வடிவமாக நுதுப்பு என்பதை வள்ளுவர் கையாண்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கத் தோன்றுகிறது என்றும் அவர் கருத்துத் தெரிவிப்பார்.
பாடலில் முதலிலுள்ள நுதுப்பேம் என்ற சொல்லுக்கு அவிப்போம் என்றும் இரண்டாவதான நுதுப்பேம் என்றதற்கு தணிப்போம் எனப் பொருள் கொள்ளலாம்.

'நுதுப்பேம்' என்பது அவிப்போம் என்ற பொருளது.

நெய்யினால் நெருப்பை அவித்து விடுவோம் என்பதோடு ஒக்கும், அலர்மொழியால் காமத்தைத் தணித்து விடுவோம் என்று கருதுதல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அலர்அறிவுறுத்தல் பெற்ற தலைவி அலரா காதலை அழிக்கவல்லது? என்று கேட்கிறாள்.

பொழிப்பு

நெய்யினால் நெருப்பை அவித்து விடுவோம் என்பதோடு ஒக்கும், ஊர்ப்பேச்சால் காமத்தைத் தணித்து விடுவோம் என்று நினைப்பது.