இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1144



கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1144)

பொழிப்பு (மு வரதராசன்): எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று; அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

மணக்குடவர் உரை: அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்; அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும்.
செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) காமம் கவ்வையால் கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும்.
(அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும் அது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: என் காமம் இவ் ஊராருடைய அலரினால் விரிகின்றது. அஃது இல்லாமல் போனால் அது தன் வலியிழந்து சுருங்கிப்போம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமம் கவ்வையால் கவ்விது அதுவின்றேல் தன்மை இழந்து தவ்வென்னும்.

பதவுரை: கவ்வையால்-அலரால் (வம்புப்பேச்சால்); கவ்விது-அலர்நிரம்பியது; காமம்-காதல்; அது-அது; இன்றேல்-இல்லாவிடில்; தவ்வென்னும்-சுருங்கும்; தன்மை-இயல்பு; இழந்து-கெட்டு.


கவ்வையால் கவ்விது காமம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்;
மணக்குடவர் குறிப்புரை: செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார்.
பரிப்பெருமாள்: அலரினானே அலர்தலை யுடைத்துக் காமம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: செவ்வை யுடையதனைச் செவ்விது என்றாற்போலக் கவ்வையுடையதனைக் கவ்விது என்றார். அலர் அறிவுறுத்த தோழிக்கு இவன் கூறுகின்றது புனைந்துரையாகும் என்று நினைத்துப் பின்னும் களவொழுக்கம் வேண்டித் தலைமகன் கூறியது. இதுவும் ஒரு கூற்று மேலதனோடு இயைபு இன்று.
பரிதி: கவ்வை என்னும் வித்தினாலே என் காமம் உறுதி பெற்றது;
காலிங்கர்: நெஞ்சே! பிறர் கூறும் கவ்வையால் கவ்வுண்டது யாம் வேண்டும் காமம்; அதனால் கவ்வை இன்றாயின் சாலத் தவறுபடும் தன் தன்மை இழந்து என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது) என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று;
பரிமேலழகர் குறிப்புரை: அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார்.

'காமம் அலரினாலே அலர்தலை யுடைத்தாயிற்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். கவ்விது என்பதற்கு 'அலர்தலை உடைத்து' என மணக்குடவரும் பரிமேலழகரும் பொருள் கூறினர். 'உறுதி பெற்றது' எனப் பரிதியும் 'கவ்வுண்டது' எனக் காளிங்கரும் உரைசெய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதல் ஊர்ப்பேச்சால் கவர்ச்சி அடைகின்றது', 'என் காமம் ஊரார் பேசும் அலர் மொழியால் வளர்ச்சி பெற்று மலர்ந்தது', '(எங்களுக்குள்ள) காதல் இந்தப் பரிகாசப் பேச்சால் பலப்படுகிறது', 'என் காதல் இவ்வூர் கூறுகின்ற அலராலே மேன்மேலும் மிகுதலையுடைத்தாயிற்று' என்ற பொருளில் உரை தந்தனர்.

காமம் அலர் மொழியால் பற்றுக் கொண்டது என்பது இப்பகுதியின் பொருள்.

அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும்.
பரிப்பெருமாள்: அவ்வலரில்லை யாயின் தனது தன்மை யிழந்து பொலிவழியும்.
பரிதி: இல்லையாயின் உறுதி பெறாது.
காலிங்கர்: அதனால் கவ்வை இன்றாயின் சாலத் தவறுபடும் தன் தன்மை இழந்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இதிற் கவ்விது என்பது கவ்வியது என்றது. தவ்வென்னும் என்பது தவறுபடும் என்பது.
பரிமேலழகர்: அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும் அது.

'அவ்வலர் இல்லையாயின் தனது தன்மையிழந்து பொலிவழியும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூறினர். பரிமேலழகர் 'தன் இயலபு இழந்து சுருங்கும்' என்றார். ‘தவ்வென்னும்’ என்பதற்கு உறுதி பெறாது என்று பரிதியும், தவறுபடும் என்று காலிங்கரும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது இல்லாவிடின் சிறப்பிழந்து சப்பென்றிருக்கும்', 'அவ்வலர் இல்லையாயின் காமம் தன்னியல் பிழந்து தாழ்ந்து விடும் (சுருங்கும்)', 'இந்தப் பரிகாசப் பேச்சும் இல்லாவிட்டால் காதல் என்பதும் அதன் இன்பத்தை இழந்து சுவையற்றதாகிவிடும்', 'அவ் அலர் இல்லையாயின் தன் தன்மை இழந்து சுருங்கும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அவ்வலர் இல்லையாயின் தன் இயல்பு இழந்து சுவையற்று சப்பென்றிருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அலர் மொழியால் காமம் கவ்விது; அவ்வலர் இல்லையாயின் தன் இயல்பு இழந்து தவ்வென்னும் என்பது பாடலின் பொருள்.
'கவ்விது', 'தவ்வென்னும்' குறிப்பவை யாவை?

அலர் காதலனிடம் கிளர்ச்சியையும் சிலிர்ப்பையும் உண்டாக்குகிறது.

ஊராரின் பழிச்சொற்களாலே காமமும் நன்றாக விரிகின்றது. அது இல்லையானால், என் காதலும் தன் வலியிழந்து சுருங்கிப்போம் என்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
களவொழுக்கத்திலுள்ள காதலர் இடையீடுகளால் பிரிந்து நிற்கின்றனர். அவர்களது உறவு பற்றி அறிந்துகொண்ட ஊரார் அவர்களைப் பழித்துப் பேசுகின்றனர். உரிமையுடன் காதல் கொள்பவனாக இருப்பதால், இந்த அலர் காதலனைச் சிறுதும் அசைக்கவில்லை. மாறாக ஊராரின் வம்புப்பேச்சுக்களாலே தலைவன் உயிர் வாழ்வதாகச் சொல்கிறான். அலராலேயே தான் தன் காதலியைத் துணைவியாக அடைந்துவிட்டது போன்ற உணர்வு உண்டாகிறது எனவும் கூறுகிறான்.

இக்காட்சி:
அவனது காமமும் அலரினாலே பற்றுக்கொண்டது என்றும் அலர் இல்லையென்றால் காதல் தாழ்ந்து சப்பென்றாகிவிடும் என்று இங்கு சொல்கிறான் தலைவன். அதாவது தங்களது காதலுக்கு அலர் சுவையூட்டுகிறது என்கிறான். தூற்றத் தூற்றக் கெடுவதற்குப் பதிலாக வளர்வது காதலின் இயல்பு; அலரானது காதலை மேலும் பலமுள்ளதாக ஆக்குகிறது. ஊரார் பழித்துப் பேசுவதால் எங்களுடைய காதல் உறுதிப்படுகிறது; அப் பேச்சுகள் இல்லையென்றால் காதல் என்பது அதன் இயல்பை இழந்து இன்பமற்றதாகிவிடும் எனக் கூறுகின்றான் தலைவன்.

'கவ்விது', 'தவ்வென்னும்' குறிப்பவை யாவை?

கவ்விது:
கவ்விது என்ற சொல் வள்ளுவரின் புதிய ஆட்சி என்பார் இ சுந்தரமூர்த்தி. இச்சொல்லுக்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'அலர்தலை யுடைத்து' என்று பொருள் கூறினர். (அலர்தல் என்ற சொல்லுக்கு விரிவுறுதல்; மலர்தல்; பரத்தல்; பெருத்தல்; விளங்குதல்; சுரத்தல் என்பன பொருள்.) பரிதி 'உறுதி பெற்றது' என்று உரை கூறினார். காலிங்கர் 'கவ்வுண்டது' என்றும் உரை கண்டு 'கவ்விது என்பது கவ்வியது' என்றும் குறிப்பு தருகிறார். பரிமேலழகரும் மணக்குடவர் கொண்ட பொருளான 'அலர்தல்' என்றே கூறினார். மேலும் அதற்கு 'மேன்மேல் மிகுதல்' என்ற பதவுரையும் தருகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் கவ்விது என்ற சொல்லுக்குக் கவர்ச்சி அடைகிறது, கிளர்ச்சி பெறுகிறது, வளர்ச்சி பெற்று மலர்கிறது, விரிகின்றது, பற்றிக் கொள்கிறது என்று பொருள் கூறுவர். இவற்றுள் கவ்வியது அதாவது பற்றுக்கொண்டது என்னும் காலிங்கர் பொருள் பொருத்தம். அலர்க் கூற்றுப் பரவுதலைக் 'கவ்விது' என்ற சொல் குறித்தது.

தவ்வென்னும்:
'தவ்வென்னும்' என்பதற்கு மணக்குவரும் பரிப்பெருமாளும் 'பொலிவழியும்' என்று பொருள் கூறினர்; பரிதி 'உறுதி பெறாது' என்றார். காலிங்கர் தவ்வென்னும் என்பது 'தவறுபடும் என்பது' என்று விளக்கினார். பரிமேலழகர் சங்கப்பாடலை மேற்கோள் காட்டி சுருங்கும் என்று பொருள் கொள்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் சுவையற்றதாகிவிடும், சப்பென்றிருக்கும். தாழ்ந்து விடும் (சுருங்கும்) சலிப்பு வந்துவிடும் என்ற பொருளில் உரை செய்தனர். சுவையற்று சப்பென்றிருக்கும் என்ற பெரும்பான்மை உரையாளர்களின் கருத்து பொருத்தமாகத் தோன்றுகிறது.

'தவ்வென்னும்' என்றது சுருங்கும் அல்லது தாழ்ந்துபோம் என்ற பொருள் தரும்.

அலர் மொழியால் காமம் கவ்வியது; அவ்வலர் இல்லையாயின் தன் இயல்பு இழந்து சுவையற்று சப்பென்றிருக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அலர் அறிவுறுத்தலால் காதலன் புத்துணர்ச்சி பெறுகிறான்.

பொழிப்பு

அலரால் காமம் பற்றிக்கொண்டது; அவ்வலர் இல்லையாயின் தன் இயல்பு இழந்து சப்பென்றிருக்கும்.