இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1142மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்

(அதிகாரம்:அலர் அறிவுறுத்தல் குறள் எண்:1142)

பொழிப்பு: மலர்போன்ற கண்ணை உடைய இவளுடைய அருமை அறியாமல், இந்த ஊரார் அலர் கூறி எமக்கு உதவி செய்தனர்.

மணக்குடவர் உரை: பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே, இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார்.
எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது - மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது; இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது - இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது.
(அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.)

சி இலக்குவனார் உரை: மலர் போன்ற கண்னை உடையாளது எய்தற்கு அரிய தன்மையை அறியாது இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு என்னைச் சேர்த்து அலர் கூறலை எமக்குக் கொடுத்து உதவியது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது இவ்வூர் அலர் எமக்கு ஈந்தது .


மலர்அன்ன கண்ணாள் அருமை அறியாது:
பதவுரை: மலர்-பூ; அன்ன-போன்ற; கண்ணாள்-கண்களையுடையவள்; அருமை-அரிய தன்மை; அறியாது-அறியாமல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே;
பரிப்பெருமாள்: பூவொத்த கண்ணாளது இற்பிறப்பின் அருமையை யறியாதே;
பரிதி: செங்கழுநீர் மலர் போலும் கண்ணாளின் அருமை அறியாமல்;
காலிங்கர்: நெஞ்சே! மலரை ஒத்த கண்ணை உடையாளாகிய நங்காதலியது அருமை சிறுதும் அறியாதே;
பரிமேலழகர்: (இதுவும் அது.) மலர்போலும் கண்ணையுடையாளது எய்தற்கு அருமை அறியாது;

'பூவொத்த கண்ணாளது அருமையை அறியாதே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். அருமை என்றதற்கு மணக்குடவர்/ பரிப்பெருமாள் 'இற்பிறப்பின் அருமை' என்று கூற பரிமேலழகர் 'எய்தற்கு அருமை' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலர்போல கண்ணாளின் அருமையை அறியாமல்', 'மலர்போலும் கண்களை உடையாளது பெறுதற்கு அருமையை அறியாமல்', 'மலர் போன்ற கண்களை உடைய அவளது அருங்குணத்தை அறியாத', 'மலர் போலுங் கண்ணை உடையாள் பெறுதற்கரியள் என்பதை அறியாது' என்ற பொருளில் உரை தந்தனர்.

மலர் போன்ற கண்களை உடையவளது அருமை அறியாது என்பது இப்பகுதியின் பொருள்.

அலர்எமக்கு ஈந்ததுஇவ் வூர்:
பதவுரை: அலர்-வம்புப் பேச்சு; எமக்கு-நமக்கு; ஈந்தது-உதவியது; இவ்வூர்-இந்த ஊர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார்.
மணக்குடவர் குறிப்புரை: எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லாநின்றா ரென்றவாறு.
பரிப்பெருமாள்: இவ்வூரவர் எங்கட்கு அலரைத் தந்தார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: எளியாரைச் சொல்லுமாறுபோலச் சொல்லநின்றா ரென்றவாறாயிற்று. தமது புணர்ச்சி அலர் ஆயிற்றென்று தோழி கூறியது.
பரிதி: அலரை ஈந்தது இந்த ஊர் என்றவாறு.
காலிங்கர்: அலருரையை மிகச் சொல்லித் தீருகின்றது இவ்வூர் என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) இவ்வூர் அவளை எளியளாக்கி அவளோடு அலர் கூறலை எமக்கு உபகரித்தது.
பரிமேலழகர் கருத்துரை: அருமை: அல்ல குறிப்பாட்டானும் இடையீடுகளானும் ஆயது. 'ஈந்தது' என்றான், தனக்குப் பற்றுக்கோடாகலின், அலர் கூறுவாரை அவர் செய்த உதவி பற்றி 'இவ்வூர்' என்றான்.

'இவ்வூரார் எங்கட்கு அலர் தந்தனர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'எங்களைப் பற்றிப் பழியாகக் கூறுகின்றனர்' என மணக்குடவர்/பரிப்பெருமாள் என விளக்கம் கூறினர். பரிமேலழகரும் இதே பொருளில் உரை கூறி அலர் எங்களுக்கு உதவியானது என்று மேலும் ஒரு குறிப்பு தருகிறார். 'தமது புணர்ச்சி அலராயிற்று' எனத் தோழி கூறியதாகக் குறிப்புத் தருவார் பரிப்பெருமாள்.

இன்றைய ஆசிரியர்கள் 'இந்த ஊர் எனக்கு அலரைத் தந்தது', 'அவளை எளிமையாக நினைதது இந்த ஊர் எம்மை அவளோடு இணைத்து அலர் கூறுதலை எமக்குத் தந்து உதவியது', 'இந்த ஊரார் என்னைப் பற்றிப் பரிகாசம் செய்தார்கள்', 'எமக்கு இந்த ஊர் அவளை அலரால் கொடுத்துதவிற்று' என்றபடி பொருள் உரைத்தனர்.

இவ்வூர் மக்கள் எங்களுக்கு அலர் தந்தனர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என் காதலியின் அருமை அறியாது எங்கள் உறவு பற்றித் தவறாகப் பேசுகிறார்களே என்று உள்ளுர வருந்தும் காதலன் கூற்று.

மலர் போன்ற கண்களை உடையவளது அருமை அறியாது, இவ்வூர் மக்கள் எங்களுக்கு அலர் தந்தனர் என்பது பாடலின் பொருள்.
'அருமை அறியாது' குறிப்பது என்ன?

மலரன்ன என்ற தொடர்க்கு மலரை ஒத்த என்பது பொருள்.
கண்ணாள் என்றது கண்ணினையுடையவள் என்ற பொருள் தரும்.
அருமை என்ற சொல்லுக்கு அரிய தன்மை என்று பொருள்.
அலர் என்பது வம்புப்பேச்சைக் குறிக்கும் சொல்.
இவ்வூர் என்பது இவ்வூர்மக்கள் என்று பொருள்படும்.

தலைவன் -தலைவி உறவு பற்றிய அலர் ஊருக்குள் பரவத் தொடங்குகிறது. இதைக் கேள்வியுற்ற தலைவன் கூறுகிறான்: "என் காதலி பூப் போன்ற கண்களை உடையவள். ஆனாலும் அவள் பலர் காணும் மலர் அல்ல; எனக்கு மட்டுமே உரியவள். அவளது அருமை தெரியாமல் இந்த ஊரார் எங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் கூறி வருகின்றனர். எனினும் இந்த அலரும் ஒருவகையில் எங்களுக்கு உதவியே செய்யும்."
'ஈந்தது' என்ற சொல்லாட்சி கொண்டு, வாளா 'தந்தது' எனக் கொண்டால் குறட்கருத்து ஒன்றும் கிடைக்காது என்றதால், அது நன்மையைத் தரவல்லது என்ற பொருளில் உதவியது என்று பொருளுரைத்தார் பரிமேலழகர்.

ஊரார்க்கு அவர்களது களவுக்காதல் தெரியவருகிறது. அதுபற்றி வாய் வலிக்க அலருரையைச் சொல்லித் தீர்க்கின்றது. அலர் என்றதால் ஊரில் பலரும் பலவிதமாகப் பேசுவார்கள் என்பது அறிந்ததே. ஆயினும் அவர்களது 'வம்புப்பேச்சு எங்கள் தொடர்பை உறுதிப்படுத்துவதுடன் அதுவே எங்களைச் சேர்த்து வைக்கவும்தான் உதவப் போகிறது; அலர் ஒரு நன்மையாகவே அமைந்தது' என்று விட்டுக் கொடுக்காமல் காதலன் கூறுகிறான். 'இவளது சிறப்பை அறியாமலே அலருரையில் பழிக்கிறார்களே' என்று காதலிக்காக வருத்தமும் கொள்கிறான்.

'அருமை அறியாது' குறிப்பது என்ன?

இக்குறளிலுள்ள 'அருமை அறியாது' என்பதனை வெவ்வேறு வகையில் விளக்கினர்.
பெரும்பான்மையோர் பரிமேலழகர் உரைத்தபடி தலைவியை 'எய்தற்கு அருமை அறியாது' என்று கூறினர். மற்றவர்கள் காதலியின் 'உயர்குடிப்பிறப்பின் அருமை அறியாது', 'அவளது அருங்குணத்தை அறியாத', 'அரிய நலங்களை அறியாமல்', 'இந்தப் பெண்ணின் கற்பு நிலையைத் தெரியாது' என்ற பொருளில் உரை கூறினர்.
அலர் என்பதற்கு அன்பிலொத்த களவு ஒழுக்கத்தைப் பலரறிய வெளிப்படுத்துதல் என்பது பொருள். எனவே தகாத காதலுடையவர்கள் என்ற பொருளில் அமைந்த உரைகள் ஏற்கத்தக்கனவல்ல என்பர் அறிஞர்.
மணக்குடவர் 'இற்பிறப்பின் அருமையை யறியாதே' என்று இத்தொடர்க்குப் பொருள் கூறுகிறார். பரிப்பெருமாள் 'தமது புணர்ச்சி அலர் ஆயிற்றென்று' என்று குறிக்கிறார். அவர்களது புணர்ச்சி அலரான காரணத்தால் வெவ்வேறு இழிவான, திரிபு நிலையில், குறிப்பாகக், காதலியின் குணநலன் பாதிக்கும் வகையில், அலருரை கூறப்பட்டது என்பதும் பெறப்படும். எனவே, நற்குடிப்பிறந்த தலைவியைக் குறை கூறி அலர் பரப்புவதைக் கேள்வியுற்று வருந்தும் தலைவன் பேசுவது போல அமைந்தமை தெரிகின்றது.
அருமை அறியாது என்பது காதலியின் சிறப்பை அறியாது என்று பொருள்படும்.

மலர் போன்ற கண்களை உடையவளது அருமை அறியாது, இவ்வூர் மக்கள் எங்களுக்கு அலர் தந்தனர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தன் காதலி பழிக்கப்படுவதைப் பொறாத தலைவன் வருந்திக் கூறும் அலர் அறிவுறுத்தல் பாடல்.

பொழிப்பு

மலர்போலும் கண்களை உடையாளது சிறப்பான குணநலன்களை அறியாமல், எங்களைப் பற்றிப் பழியாகப் பேசி வருகின்றனரே இவ்வூர் மக்கள்!