இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1128நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1128)

பொழிப்பு: எம் காதலர் நெஞ்சினுள் இருக்கின்றார்; ஆகையால் சூடான பொருளை உண்டால் அவர் வெப்பமுறுதலை எண்ணிச் சூடான பொருளை உண்ண அஞ்சுகின்றோம்.

மணக்குடவர் உரை: எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார்: ஆதலானே வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து.
இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காதலவர் நெஞ்சத்தாராக வெய்து உண்டல் அஞ்சுதும் - காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான் உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; வேபாக்கு அறிந்து - அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
('எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.)

இரா சாரங்கபாணி உரை: காதலர் எம் நெஞ்சிலுள்ளார் ஆதலால் சூடாக உண்ணுதலையும் அஞ்சுவோம். நெஞ்சிலுள்ள அவர் சூடுபட்டு வெந்துபோதலுக்கு அஞ்சி.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெஞ்சத்தார் காதலவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.


நெஞ்சத்தார் காத லவராக:
பதவுரை: நெஞ்சத்தார்-உள்ளத்தில் உள்ளார்; காதலவர்-காதலர்; ஆக-ஆகியிருக்க.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எம்மாற் காதலிக்கப்பட்டவர் எம்நெஞ்சத்திலிருக்கின்றார் ஆதலானே;
பரிப்பெருமாள்: என்னால் காதலிக்கப்பட்டவர் எம் நெஞ்சகத்தே இருக்கலானே;
பரிதி: நெஞ்சத்திலே நாயகர் இருக்கையினாலே;
காலிங்கர்: கேளாய்! எங்களே! இவ்வாறு எப்பொழுதும் என் நெஞ்சத்தார் நம் காதலராகவே;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலர் எம் நெஞ்சினுள்ளார் ஆகலான்;

'காதலர் எம் நெஞ்சத்தில் இருக்கின்றார் ஆதலால்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் நெஞ்சில் உள்ளார் ஆதலின்', 'என் காதலர் என்னுடைய நெஞ்சிலேயும் இருந்து கொண்டிருப்பதால்', 'என் காதலர் என் நெஞ்சில் இருக்கின்றார்', 'காதலர் எம் நெஞ்சின் உள்ளாராதலின்' என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலர் என் நெஞ்சில் உள்ளார் ஆதலால் என்பது இத்தொடரின் பொருள்.

வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து:
பதவுரை: வெய்து-வெப்பமாக; உண்டல்-உண்ணுதல்; அஞ்சுதும்-அஞ்சாநின்றேம்; வேபாக்கு-வெப்பமுறல்; அறிந்து-தெரிந்து.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெய்தாக வுண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து.
மணக்குடவர் கருத்துரை: இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது கரணத்து உறவு உரைத்தல்.
பரிப்பெருமாள்: வெய்தாக வுண்டலை அஞ்சா நின்றேன், அவர்க்குச் சுடுமென்பதனையறிந்து.
பரிப்பெருமாள் கருத்துரை: இது நீ உண்ணாததென்னையென்று வினாயதோழிக்குத் தலைமகள் உணவில் காதலில்லை யென்று கூறியது. இது பசியடரநிற்றல்5 என்னும் மெய்ப்பாடு.
பரிதி: சுட்ட சோறு அசமை பண்ணாள் என்றவாறு.
காலிங்கர்: வெய்து ஒன்று உண்டலும் அஞ்சுதும்: என்னை எனில் அதனாலே அவர்மேனி வெம்மை உறுவதோர் கூறுபாட்டினை அறிந்து என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இதனாலும் இன்றியமையாமை இவன் அறிவது பயன்.
பரிமேலழகர்: உண்ணுங்கால் வெய்தாக உண்டலை அஞ்சாநின்றேம்; அவர் அதனான் வெய்துறலை அறிந்து.
பரிமேலழகர் குறிப்புரை: 'எப்பொழுதும் எம் நெஞ்சின்கண் இருக்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறென்னை'? என்பது குறிப்பெச்சம்.

'வெய்தாக உண்டலை அஞ்சாநின்றோம், அவர்க்குச் சுடும் என்பதனை அறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வெந்து போவார் என்று சூடாக உண்ணேன்', 'சூடான உணவுகளை உண்ண அஞ்சுகிறேன். ஏனெனில் அது அவரைச் சுட்டுவிடுமோ என்று எண்ணுகிராள்', 'அவர்க்குச் சூடான உணவினால் மேனி வருந்துமென்று எண்ணிச் சூடான உணவை உட்கொள்ள அஞ்சுவேன்', 'அவர் சுடப்படுதலை அறிந்து சூடாக உண்ணுதலை அஞ்சுகின்றோம்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அவர் வெம்மை உறுவார் என்பதால் சூடான உணவை உட்கொள்ள அஞ்சுகிறேன் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
நெஞ்சில் நிறைந்தவர்க்கு ஊறு நேருமானால் உணவும் உட்கொள்ளேன் எனக் காதலி கூறுகிறாள்.

காதலர் என் நெஞ்சில் உள்ளார் ஆதலால் சூடான உணவை உட்கொள்ள அஞ்சுகிறேன்; அவர் வேபாக்கு அறிந்து என்பது பாடலின் பொருள்.
வேபாக்கு என்றால் என்ன?

நெஞ்சத்தார் என்ற சொல் நெஞ்சத்தின் கண்ணே உள்ளார் என்ற பொருள் தரும்.
காதலவர் என்பதற்குக் காதலர் என்பது பொருள்.
வெய்துண்டல் என்பது வெப்பமானதை அதாவது சூடானதை உண்ணுதலைக் குறிக்கும்.
அஞ்சுதும் என்றால் அஞ்சுகின்றேன் என்ற பொருள் குறித்தது.

களவில் இன்பம் காணும் காதலர் சந்தித்துப் பிரிவது வழக்கம். தலைவனது சிறு பொழுது பிரிவையும் தாங்கமுடியாத காதலிக்கு உணவும் செல்லவில்லை. அதுசமயம் யாரையோ பார்த்துச் சொல்லுவதைப் போன்று கற்பனை செய்து தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள்: "என் நெஞ்சத்திலே காதலர் உறைந்திருக்கிறார்; அவரை வெப்பம் காய்ச்சுமே என்று அஞ்சி சுடச்சுட உண்பதை விட்டுவிட்டேன்." என விளையாட்டு உள்ளத்துடன் கூறுகிறாள். காதலன் நினைவாகவே இருப்பதால் அவளுக்கு எந்த உணவுமே உண்ணப்பிடிக்கவில்லை. ஆனாலும் இங்கு வெந்த உணவுபற்றிப் பேசி தன் உள்ளத்துள் காதலன் உறைந்திருப்பதை வெளிப்படுத்துகிறாள்.

பரிப்பெருமாள் இப்பாடல் 'பசியடநிற்றல்' என்னும் மெய்ப்பாடு சார்ந்தது என்பார். பசியட நிற்றல் என்பது பசிவருத்தவும் அதனைக் களைய முற்படாமல் உணவை வெறுத்திருத்தலைக் குறிக்கும்.

வேபாக்கு என்றால் என்ன?

வேபாக்கு என்பது வெய்துறல்- வெப்பமுறுதல்-'வெம்மை உறுதல் - சூடுறுதல் அதாவது வெந்து போதல் என்று பொருள்படும். முந்தைய குறளில் கூறப்பட்ட கரப்பாக்கு என்ற சொல் போல் இதுவும் 'செய்பாக்கு' என்ற வடிவத்தைப் பெற்றுள்ள மற்றொரு சொல். இதுவும் வள்ளுவரின் புதிய ஆட்சி ஆகும். வெய்தல் என்ற தொழிற்பெயர் பாக்கு விகுதி பெற்று வேபாக்கு ஆனது.

காதலர் என் நெஞ்சில் உள்ளார் ஆதலால் அவர் வெம்மை உறுவார் என்று அஞ்சி சூடான உணவை உட்கொள்ளேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நெஞ்சில் குடியிருக்கும் காதலருக்காக வெய்துண்டலை வெறுக்கும் தலைவியின் காதற்சிறப்பு உரைத்தல் பாடல்.

பொழிப்பு

காதலர் என் நெஞ்சில் உள்ளார் ஆதலால் அவர் வெம்மை உறுவார் என்று அறிந்து சூடாக உண்ண அஞ்சுகிறேன்.