இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1127கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1127)

பொழிப்பு: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால், மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!

மணக்குடவர் உரை: எங்காதலவர் கண்ணுள்ளார்: ஆதலானே கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து.
எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காதலவர் கண் உள்ளாராகக் கண்ணும் எழுதேம் - காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான், கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; கரப்பாக்கு அறிந்து - அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து.
(இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)

சி இலக்குவனார் உரை: காதலர் எப்பொழுதும் என் கண்ணில் உள்ளார் ஆதலான் கண்ணினை மையால் எழுதுவதும் செய்யேன்; எழுதும் வரையும் அவர் மறைதலை அறிந்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காதலவர் கண்ணுள்ளாராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து.


கண்ணுள்ளார் காத லவராகக்:
பதவுரை: கண்-விழி; உள்ளார்-இருக்கின்றார்; காதலவராக-காதலரா ஆகியிருக்க.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எங்காதலவர் கண்ணுள்ளார் ஆதலானே ;
பரிப்பெருமாள்: எங்காதலவர் கண்ணுள்ளார் ஆதலானே:
காலிங்கர்: இங்ஙனம் கண்ணுள் உறைவர் எப்பொழுதும் எங்காதலடுத்தவராக;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆகலான்

'காதலர் எப்பொழுதும் எம் கண்ணின் உள்ளார் ஆதலானே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் கண்ணுள் இருக்கின்றார் ஆதலின்', 'என் காதலர் எப்பொழுதும் என் கண்ணிடத்தே இருக்கிறார் ஆதலின்', 'என் காதலர் என் கண்ணிலேயே இருந்து கொண்டிருப்பதால்', 'காதலர் என் கண்ணிற்குள்ளே இருப்பதால்' என்ற பொருளில் உரை தந்தனர்.

காதலர் கண்ணுள் இருக்கின்றார் ஆதலினாலே என்பது இத்தொடரின் பொருள்.

கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து:
பதவுரை: கண்ணும்-கண்ணையும்; எழுதேம்-எழுதமாட்டோம்; கரப்பாக்கு-மறைதல்; அறிந்து-தெரிந்து.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணும் மையெழுதேம்: அவர் ஒளித்தலை யறிந்து.
மணக்குடவர் கருத்துரை: எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று.
பரிப்பெருமாள்: கண்ணும் மையெழுதேன்2: அவர் ஒளிப்பதனை யறிந்து.
பரிப்பெருமாள் கருத்துரை: உம்மை சிறப்பும்மை. 'கோலம் செய்யாது என்னை' என்ற தோழிக்கு, 'அவர் ஒளிப்பதனை அறிந்து கண்ணும் எழுதேன்; என்னை உறுப்புக் கோலம் செய்யுமாறு என்னை' என்று கூறியது. எப்பொழுதும் நோக்கியிருத்தலால் கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றிலேனென்றவா றாயிற்று. இஃது இன்பத்தை வெறுத்தல் என்னும் மெய்ப்பாடு. இவை ஐந்தும் காதல் மிகுதியால் கூறியவாறு கண்டு கொள்க.
பரிதி: தூரியக்கோல் கொண்டு கண்ணுக்கு அஞ்சனம் எழுதோம். நாயகனைச் சற்று நேரம் காணாமல் இருக்க நேருமே என்றவாறு.
காலிங்கர்: கண்ணும் அஞ்சனம் தீட்டமானோம்; ஏன் எனின், அப்பொழுதுதத்துவரையும் கர்ந்துறைவார் என்னும் பாகுபாட்டைக் குறிக்கொண்டு.
காலிங்கர் குறிப்புரை: எனவே பின்னும் ஏதிலார் என்னும் இவ்வூர் என்று இவனைத்தான் கொடுமை கூறியதே பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: கண்ணினை அஞ்சனத்தால் எழுதுவதும் செய்யேம்; அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து.
பரிமேலழகர் குறிப்புரை: இழிவு சிறப்பு உம்மை மாற்றப்பட்டது. 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர். வருகின்ற 'வேபாக்கு' என்பதும் அது. 'யான் இடை ஈடின்றிக் காண்கின்றவரைப் பிரிந்தார் என்று கருதுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.

'கண்ணுக்கு மை எழுதோம்; அத்துணைக் காலமும் அவர் மறைதலை அறிந்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறுது மறைவார் என்றஞ்சி மையும் தீட்டேன்', 'கண்ணினை மையிட்ட்டெழுதுவதும் செய்யோம். அவ்வமயம் அவர் மறைதலை அறிந்து', 'நான் என் கண்ணுக்கு மை தீட்டுவதை விட்டுவிட்டேன். ஏனென்றால் மை தீட்டும்போது அவர் மறைந்து போவாரே என்ற எண்ணம் வருகிறது', 'அவர் மறையக் கூடுமென்று நினைத்து யாம் கண்ணிற்கு மை தீட்டுவதில்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

கண்ணுக்கு மை எழுதோம்; அவரைச் சற்று நேரம் காணாமல் இருக்க நேருமே என்பது அறிந்து என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
மையெழுதும் சிறு நேரம்கூடத் தலைவனை நினைந்து பாராமல் இருக்கமுடியாது என்கிறாள் காதலி.

காதலர் கண்ணுள் இருக்கின்றார் ஆதலினாலே கண்ணுக்கு மை எழுதோம்; கரப்பாக்கு அறிந்து என்பது பாடலின் பொருள்.
கரப்பாக்கு என்றால் என்ன?

காதலவர் என்ற சொல்லுக்குக் காதலுக்குரியவர் என்று பொருள்.
கண்ணுள்ளாராகக் என்பது கண்ணினுள் என்றும் உள்ளவராக என்ற பொருள் தரும்.
கண்ணும் எழுதேம் என்பதிலுல்ள எழுதேம் என்பதன் பொருள் எழுதுவதும் செய்யேன் என்பது; கண்களுக்கு மையிடவும் மாட்டேன் என்பதைக் குறித்தது.

காதலியின் உள்ளத் துடிப்பை இனிமையாகச் சொல்லும் கவிதை இது. இதனைக் கண்ணும் எழுதேம் என அழகாகச் சொல்கிறாள் அவள். என் காதலர் கண்ணுள்ளேயே இருப்பதால், மையிடும் நேரத்தில் அவர் என் கண்ணினின்று மறைந்தால் எங்ஙனம் அதைத் தாங்குவேன்? என்று எண்ணிக் கண்ணுக்கு மைகூட நான் தீட்டுவதில்லை என்று அவள் பெருமையாகக் கூறுகிறாள்.

தலைவி காதலன் நினைவிலே எப்பொழுதும் வாழ்பவள். அந்த அன்பைப் பல நிலையிலும், பலவகையிலும் வெளிப்படுத்துகிறாள். தன் கருத்திலும் கண்ணினுள்ளும் நீக்கமற நிறைந்துள்ள தலைவனை யாரும், எதுவும் பிரிக்க முடியாது என்று எண்ணுகிறாள் அவள். பெண்கள், தம் கண்களை அழகுபடுத்துவதற்கு மை தீட்டுவது வழக்கம். கண்ணில் மைதீட்டுவதற்கு முன் தலைவி ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கிறாள். அப்படி மையெழுதும்பொழுது, ஒப்பனை நன்கு அமைவதற்காகக் கண்களை மூடி மூடித் திறக்க வேண்டியதிருக்கும். கண்ணை மூடும்பொழுது கண்ணினுள் தங்கி நிற்கும் தலைவன் மை எழுதும் நேரம் வரையும் மறைந்து விடுவாரே என்று அஞ்சுகிறாள். எனவே கண்ணுக்கு மை எழுதத் தயங்குகிறாள்; கண்ணுக்கு மை தீட்டும் அந்தச் சிறிது நேரத்தில் கூட, தலைவன் கண் நிறைவிலிருந்து மறைவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே, கண்ணுக்கு அழகு சேர்க்கும் மை தீட்டுவதையே நிறுத்திவிடத் தீர்மானிக்கிறாள். தலைவன் மீது கொண்ட காதலின் ஆழத்தினை, இமைப்பொழுதும் அவன் தோற்றம் மறைய விரும்பாத காதலியின் உள்ளத்தை, இச்செய்யுள் வெளிப்படுத்துகிறது.

காதலி மை தீட்டமாட்டேன் என்று ஏன் கூறினாள் என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'எப்பொழுதும் காதலனை நோக்கியிருத்தலால் ஒப்பனை செய்தற்கு காலம் பெற்றிலேன்' என்று காதலி சொல்வதாக குறிக்கின்றனர்.
எப்படி காதலன் மறைந்துவிடுவான் என்பதற்கு, 'என் கண்ணில் காதலர் இருக்கும்போது. மை எழுதினால், அந்த மையின் கருநிறத்தால், அவர் தோன்றாமல் மறைந்துவிடுவார் என்பதால் மை தீட்டமாட்டேன்" என்கிறாள் காதலி என்று சிலர் உரை வரைந்தனர்.

பரிப்பெருமாள் இப்பாடல் 'இன்பத்தை வெறுத்தல்' என்னும் மெய்ப்பாடு சார்ந்தது என்று இலக்கணச் சான்று காட்டுகிறார்.
காலிங்கர் உரையில் உள்ள 'அப்பொழுதுதத்துவரையும்' என்னும் சொல்லாட்சி '(மையெழுதும்) அந்நேரம் வரையும்' என்ற பொருள் தரும். இப்பொருளில் இச்சொல் இன்றும் வழக்கில் உள்ளது குறிக்கத்தக்கது.

கரப்பாக்கு என்றால் என்ன?

கரத்தல் என்ற தொழிற்பெயர் பாக்கு விகுதி பெற்று கரப்பாக்கு ஆனது. கரத்தல் என்பதற்கு நேர் பொருள் மறைதல் அல்லது மறைவது ஆகும். 'கரப்பாக்கு' என்பது வினைப்பெயர் என்று பரிமேலழகர் குறிப்பார். இச்சொல் வள்ளுவரின் புதிய ஆட்சியாகும்.

காதலர் கண்ணுள் இருக்கின்றார் ஆதலினாலே கண்ணுக்கு மை எழுதோம்; அவரைச் சற்று நேரம் காணாமல் இருக்க நேருமே என்பது அறிந்து என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலன் நினைவு ஒன்றே அவளுடைய வாழ்க்கையாக அமைகிறது என்னும் காதற்சிறப்பு உரைத்தல் கவிதை.

பொழிப்பு

காதலர் எப்பொழுதும் என் கண்ணிடத்தே இருக்கிறார். ஆதலின் கண்ணிற்கு மையும் தீட்டேன். அவ்வமயம் அவரைக் காணமுடியாது என்பதால்.