இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1125உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1125)

பொழிப்பு: போர் செய்யும் கண்களை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும்; ஆனால், ஒருபோதும் மறந்ததில்லையே!

மணக்குடவர் உரை: மறந்தேனாயின் நினைப்பேன் யான்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.
தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.

பரிமேலழகர் உரை: (ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
(மன் : ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.)

வ சுப மாணிக்கம் உரை: போராடும் கண்களை யுடையவள் குணங்களை மறந்தால் நினைப்பேன்; மறக்கவே இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒள்ளமர்க் கண்ணாள் குணம் மன்யான் மறப்பின் உள்ளுவன்; மறப்பறியேன் .


உள்ளுவன் மன்யான் மறப்பின்:
பதவுரை: உள்ளுவன்-நினைப்பேன்; மன்-(ஒழியிசை); யான்-நான்; மறப்பின்-நினைவொழிந்தால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறந்தேனாயின் நினைப்பேன் யான்;
பரிப்பெருமாள்: மறந்தேனாயின் நினைப்பேன் யான்;
காலிங்கர்: இடைவிடாமல் நினைப்பேன் யான். மறக்கக் கூடுமாயின்;
பரிமேலழகர்:(ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) யான் மறந்தேனாயின், நினைப்பேன்;
பரிமேலழகர் குறிப்புரை: மன்-ஒழியிசைக்கண் வந்தது.

'யான் மறந்தேனாயின், நினைப்பேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யான் மறந்தேனாயின் நினைப்பேன்', 'மறந்தாற்போல் கூட மறக்க முடியவில்லை', 'யான் மறந்தேனாயின், நினைப்பேன்', 'யான் மறந்தால் நினைப்பேன்' என்ற பொருளில் உரை தந்தனர்.

நான் மறந்தேனானால் நினைப்பேன் என்பது இத்தொடரின் பொருள்.

மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்:
பதவுரை: மறப்பு-நினைவு ஒழிதல்; அறியேன்-அறியமாட்டேன்; ஒள்-ஒளி பொருந்திய; அமர்-போர்; கண்ணாள்-கண்களையுடையவள்; குணம்-நற்பண்பு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.
மணக்குடவர் குறிப்புரை: தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று.
பரிப்பெருமாள்: மறத்தலறியேன்: ஒள்ளமர்க் கண்ணாள் குணத்தினை.
பரிப்பெருமாள் கருத்துரை: தோழியிற் கூடிநீங்குத் தலைமகனை நோக்கி எங்களை நினைக்கிலீரோ? என்ற தோழிக்குத் தலைமகன் கூறியது. இது நாணுத்துறவுரைத்தலிற் கூறற்பாலது. காதல் மிகுதி நோக்கிக் கூறுகின்றார் ஆதலின் ஈண்டுக் கூறப்பட்டது. இவை ஐந்தும் தலைமகன் கூற்று. இனிக் கூறும் ஐந்துந் தலைமகள் கூற்று. காதல் மிக்கார்க்குத் தான் காதலிக்கப்பட்டாரை ஒழிவின்றி நினைதலும் அவர் தம்மாட்டு இல்லாத காலத்தினும் கண் முன்னாய்க் காண்டலும் உண்ணாமையும் உறங்காமையும் கோலஞ்செய்யாமையும் உளவாம் அன்றே. அவை ஐந்தும் ஈண்டுக் கூறப்படுகின்றன.
காலிங்கர்: மறப்பு என்பதனை அறியேன்; ஒள்ளிய அமர் செய்யும் கண்ணினை உடையாள் குணத்தை என்றவாறு.
பரிமேலழகர்: ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன்.
பரிமேலழகர் குறிப்புரை: குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.

'ஒள்ளிய அமர் செய்யும் கண்களையுடையாளது குணத்தை ஒருபொழுதும் மறத்தல் அறியேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒளி மிகுந்த அமர் செய்யும் கண்ணினையுடையவள் குணங்களை ஒரு பொழுதும் மறத்தலை அறியேன்; ஆதலால் நினைத்தலையும் அறியேன்', 'ஆசை மூட்டுகின்ற ஒளியோடு கூடிய கண்களையுடைய என் காதலியின் குணச் சிறப்பை எப்போதும் அதை எண்ணிக் கொண்டேயிருப்பேன்', 'ஒளிமிக்க போர்புரியுங் கண்ணை உடையாளது குணங்களை நான் அவற்றை மறத்தலை அறியேன்.', 'ஒளி பொருந்தியனவாய் ஒன்றோடொன்று பொருதலைச் செய்யும் கண்ணையுடையவளது குணத்தை ஒருபொழுதும் மறத்தலை அறியேன். (ஆதலால் நினைத்தலையும் அறியேன்.)' என்றபடி பொருள் உரைத்தனர்.

போராடும் கண்களை யுடையவள் குணங்களை மறத்தலை அறியேன் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
இவளை மறந்தால்தானே நினைப்பதற்கு என்று அவன் சொல்வதாக அமைந்த கவிதை.

ஒள்ளமர்க் கண்ணாள் குணங்களை நான் மறந்தேனானால் நினைப்பேன்; அவற்றை மறத்தலை அறியேன் என்பது பாடலின் பொருள்.
'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்றால் என்ன?

உள்ளுவன் என்ற சொல்லுக்கு நினைப்பேன் என்பது பொருள்.

'போராடும் கண்களை யுடைய காதலியின் குணங்களை மறந்தாலல்லவா நினைப்பேன். அவளது குணநலங்கள் எப்பொழுதும் என் நினைவில் இருந்துகொண்டே இருக்கிறது; அவற்றை மறக்க இயலாது' என்று தலைவன் இப்பாடலில் கூறுகிறான். காதல் மிக்க அவன் அவளையும் அவள் குணங்களையும் ஒழிவின்றி நினைதலைச் சொல்கிறான்.

தான் எஞ்ஞான்றும் காதலியின் குணங்களை மறக்க அறியேன் என்று தலைவன் எப்போது கூறுகிறான்? மணக்குடவர் தொடங்கி உரையாசிரியர்கள் பலரும் இதை விளக்கும்போது இப்பாடல் 'ஒருவழித் தணத்தல்' துறை சார்ந்தது என்றனர். ஒருவழித் தணத்தல் என்பது காதலரது களவுச் சந்திப்பைப் பலர் அறிந்து பழித்துப் பேசுதல்.அடங்குமாறு சிலநாள் ஓரிடத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து வாழ்தலைக் குறிக்கும். காதலியின் தோழி வந்து காதலனிடம் 'பிரிந்த காலத்தில் (தணந்த காலத்து) எங்களை நினைத்தாவது பார்த்தீர்களா?' என்று வினவியபோது அதற்கு இவ்வாறு பதில் சொல்வதாக உரையாளர்கள் வரைவர்.
தலைவியின் இயல்புகளை நினைந்து பார்க்கும் வாய்ப்பினைத் தலைவனுக்கு பிரிவு நல்குகிறது. அவள் குணங்களைத் தன் நெஞ்சிலேயே மறவாமல் வைத்து இருக்கிறான். அவளுடைய பண்புகளை யான் மறந்ததே இல்லையே, எப்படி நினைக்க முடியும்" என்று பெருமையுடன் கூறுகிறான்.

'யான் மறப்பின் உள்ளுவன்' என்ற கூற்றில் உள்ள நயம் எண்ணி மகிழத்தக்கது. அவளை மறத்தல் இல்லாத நிலை இருப்பதால் அவளை நினையாமை என்கிற ஒன்று நிகழ்வதில்லை என்பது கருத்து.

'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்றால் என்ன?

ஓள் என்பதற்கு ஒளி மிகுந்த என்பது பொருள். அமர் என்பது போர் என்ற பொருள் தரும். 'ஒள்ளமர்க் கண்ணாள் குணம்' என்ற தொடர்க்கு நேர் பொருள் ஒளிமிக்க போர்புரியுங் கண்ணை உடையாளது குணங்கள் என்பது.
அவன் அவளை எந்த நேரமும் நினைகிறான்; அவள் குணங்களை அவனால் மறக்க முடியவில்லை. குணங்கள் என்பதற்குப் பரிமேலழகர் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின என்று சொல்கிறார். முதலாயின என்று சொல்லப்பட்டதால் அவளிடம் காணப்படும் எல்லா வகையான நற்பண்புகள் என்று கொள்ளலாம்.

போர்புரியும் கண்கள் எனச் சொற்களை இவ்விடத்தே ஏன் பெய்தார் வள்ளுவர்?
உரையாசிரியர்கள் எழுதியபடி காதலியின் தோழி வந்து வினவியதற்குக் காதலன் பதிலாக இப்பாடல் அமைகிறது. தோழி வினவாமல் காதலியே நேரே அவனை நோக்கிக் கேட்பதுபோல் அமைந்தால் காட்சியின் சுவை இன்னும் கூடும் என்று தோன்றுகிறது. அக்காட்சியில், போர்க் குணம் கொண்ட ஒளிமிகுந்த கண்களைக் கொண்ட காதலி, அவனை நோக்கி, மிகுந்த உரிமை கொண்டு, 'பிரிந்திருந்த காலத்தில் எம்மை நினைத்தீரோ?' என்று வினவுகிறாள். அதற்குக் காதலன் தரும் பதிலில் அவளையும் அவள் குணங்களையும் மறந்தால்தானே அவற்றை நினைப்பதற்கு.என்கிறான். அவள் அவனிடம் உரிமையுடன் போராடும் குணமும் அவனுக்கு அவளிடம் ஈர்ப்பை மிகுவிக்கிறது என்பது குறிப்பு.

போராடும் கண்களை யுடையவள் குணங்களை நான் மறந்தேனானால் நினைப்பேன்; அவற்றை மறத்தலை அறியேன் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

என் நினைவெல்லாம் அவளே என்று அவன் பெருமையுடன் காதற்சிறப்பு உரைத்தல் பாடல்.
பொழிப்பு

போராடும் கண்களை யுடையவள் குணங்களை நான் மறந்தால்தானே நினைப்பதற்கு; அவற்றை மறக்கவே இல்லை.