இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1124வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1124)

பொழிப்பு: ஆராய்ந்த அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள்; பிரியும் போது உயிர்க்குச் சாவு போன்றவள்.

மணக்குடவர் உரை: கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள்.
இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும், நீங்குமிடத்து அதற்குச் சாதல் அன்னள் - பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்;
('எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன. வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தேர்ந்தெடுத்த ஆபரணங்களை அணிந்துள்ள என் காதலி என்னுடன் இருக்கிற வரையிலும் எனக்கு உயிர் இருப்பது போன்றவள். அவள் பிரிந்தால் என் உயிர் பிரிந்தது போன்றவள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள்; நீங்குமிடத்து அதற்கு சாதல் அன்னள்


வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை :
பதவுரை: வாழ்தல்-வாழுதல்; உயிர்க்கு-உயிருக்கு; அன்னள்-ஒத்திருப்பள்; ஆய்-ஆராய்ந்து; இழை-அணிகலம்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்:
பரிப்பெருமாள்: கூடுமிடத்து இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள்:
பரிதி: நாயகியுடனே கூடினநாள் உயிருடன் வாழ்வதற்கு ஒக்கும்;
காலிங்கர்: நெஞ்சே! இவளின் நீங்காது உடன் வாழ்காலத்து அவ்வுடன் வாழ்தல் இவ்வுடலோடு உயிர்வாழ் காலத்தில் வாழ்தல் உயிர்க்கு என்னது, மற்று அன்னள் நமக்கு இவ்வாயிழையாள்:
பரிமேலழகர்:(பகற்குறிக்கண் புணர்ந்து நீங்குவான் சொல்லியது.) தெரிந்த இழையினையுடையாள் எனக்குப் புணருமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும்,
பரிமேலழகர் குறிப்புரை: 'எனக்கு' என்பதும், 'புணருமிடத்து' என்பதும் அவாய் நிலையான் வந்தன.

'கூடுமிடத்து இவ்வாயிழை உயிர் வாழ்தலோடு ஒப்பள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புணருங்கால் உயிர் இருத்தல் போன்றவள்', 'தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு கூடுமிடத்து உயிர்க்கு உடம்போடு கூடி வாழ்தல்போலும்', 'தெரிந்தெடுத்த சிறந்த அணிகலம் உடையாள் சேரும்போது உயிர்க்கு உடம்பில் வாழ்வது எப்படி இன்பமோ அப்படி எனக்கு இருக்கின்றாள்', 'தெரிந்தெடுக்கப்பட்ட நகைகளை உடையாள் எம்மோடு கூடுமிடத்து உயிர்க்கு உடம்போடு வாழ்தலை ஒத்தவள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது என் உயிர் இருத்தல் போன்றவள் என்பது இத்தொடரின் பொருள்.

சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து:
பதவுரை: சாதல்-இறத்தல்; அதற்கு-அதனுக்கு; அன்னள்-ஒத்திருப்பள்; நீங்கும்-நீங்கும்; இடத்து-வேளை.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீங்குமிடத்து அவ்வுயிர்க்குச் சாதலோடு ஒப்பள்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்கானென்று கருதிய தலைமகள் கேட்பத் தலைமகன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: நீங்குமிடத்து சாதலோடு ஒப்பள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரண்டாங்கூட்டத்துப் புணர்ந்து நீங்காநின்ற தலைமகன் தலைமகள் கேட்பத் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: நாயகியைப் பிரிந்தால் உயிர் விடுவதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! இனி உடல் சாதல் இன்னுயிர்க்கு என்னது, மற்று அன்னள் இவள் யாம் ஒருபொழுது இவண் நீங்குமிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: பிரியுமிடத்து, அதற்கு அதனின் நீங்கிப் போதல் போலும்;
பரிமேலழகர் கருத்துரை: வாழும் காலத்து வேற்றுமையின்றி வழி நிற்றலானும், சாகும் காலத்து வருத்தம் செய்தலானும் அவற்றை அவள் புணர்வு பிரிவுகட்கு உவமையாக்கினான்.

'நீங்குமிடத்து சாதலோடு ஒப்பள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரியுங்கால் அது பிரிதல் போன்றவள்', 'பிரியுமிடத்து உயிர்க்கு உடம்பினின்றும் நீங்கிச் சாதல் போலும்', 'அவள் பிரியுங்காலை சாவது உயிர்க்கு எப்படியோ அப்படி அவள் எனக்குத் துன்பந்தருகின்றாள்', 'நீங்கும்போது உடம்பிலிருந்து உயிர் நீக்கிப் போவதை ஒத்தவள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பிரியுமிடத்து உடம்பிலிருந்து உயிர் நீக்கிப் போவதை ஒத்தவள் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
அவளைச் சந்தித்துப் பிரியும் ஒவ்வொரு முறையும் வாழ்ந்து சாகிறேன் என்று காதலன் புலம்பும் கவிதை.

வாழ்தல் உயிர்க்கு அன்னள், தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள்; பிரியுமிடத்து உயிர்க்குச் சாதலை ஒத்தவள் என்பது பாடலின் பொருள்.
'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்றால் என்ன?

அன்னள் என்பதற்கு ஒப்பள் அதாவது ஒப்பானவள் என்பது பொருள்.
ஆயிழை என்பது ஆய்+இழை என்று விரியும். ஆய் என்ற சொல் ஆய்ந்து என்ற பொருள் தரும். இழை என்பது அணிகலனைக் குறிக்கும். ஆயிழை என்ற தொடர் இங்கு பொருத்தமான அணிகலன்களைத் தேர்ந்தெடுத்து அணிந்துள்ளவளைக் குறித்தது.
அதற்கு என்பது உயிர்க்கு என்பதை ஈண்டு சுட்டி நிற்கிறது.

'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்றால் என்ன?

'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்பதை 'உயிர்க்கு வாழ்தல் அன்னள்' என்று மாற்றி அமைத்துப் பொருள் கூறுவர் உரையாசிரியர்கள்.
உயிர்க்கு வாழ்தல் அன்னள் 'என்பது' எனக்கு என்பதையும் 'புணருமிடத்து' என்பதையும் அவாவி (வேண்டி) நின்றது என்பது பரிமேலழகர் விளக்கம்.
உயிருக்கு வாழ்தல் என்ற தொடர் உயிரோடிருத்தல் என்ற பொருள் தரும்.
'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்பதற்கு 'உடலோடு உயிர்வாழ் காலத்தில் வாழ்தல் உயிர்க்கு எப்படியோ மற்று அப்படிப்பட்டவள் எனக்கு இவள்' எனப் பொருள் அமையும்.

தலைவி உடன் இருக்கும்போது, உயிர் வாழ்வதாகவும், அவள் நீங்கிச் சென்றுவிட்டால், தன்னுயிர் நீங்கியது போலவும் உணர்கிறான் தலைவன். அவனுக்கு அவள் உயிராக இருக்கிறாள் என்பது கருத்து.
முந்தைய குறளில் (1122) உடம்புக்கும் உயிருக்கும் இடையிலிருந்த நட்பே, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள நட்பு என்றான் தலைவன். அதனை இன்னும் தெளிவாக்குவதற்காகத் தலைவி தனித்து நீங்க அவன் உயிரற்ற உடம்பாவான் என்று இக்குறட்பாவில் கூறுகிறான்.

அவள் கூடவே ஒட்டிக்கொண்டு எந்த நேரமும் இருக்க வேண்டும் என்பதைத்தான் 'காதலியினுடனான தொடர்புதான் என் உயிர். அத்தொடர்பு நீங்கினால் என் உயிர் போய்விடும்' என்கிறான் காதலன். அவன் 'என் காதலியின் பிரிவு என்பது, உயிர்க்குச் சாக்காடு எப்படி இருக்குமோ அப்படித்தான் உள்ளது' என்று அரற்றுகிறான். அவளுடன் வாழ்தலே உயிருடன் வாழ்வது; அவளை நீங்குவது சாவு என்பதாக உணர்கின்றான்.
வாழ்வும் உயிர்ப்பும் போலச் சேர்ந்து உள்ளொன்றியது அவர்களது காதல் என்பதைச் சொல்கிறது பாடல்.
நீங்கும் இடத்து என்பதை மட்டும் சொல்லி, கூடும் இடத்து என்பதை வருவித்துக் கொள்வது போல் அமைந்திருக்கிறது இந்தக் குறள்.

'வாழ்தல் உயிர்க்கு அன்னள்' என்பதை இன்பம் அளிப்பதற்கும் 'சாதல் அதற்கு அன்னள்' என்பதைத் துன்பம் தருதற்கும் விளக்கமாகக் காட்டுவர் சில உரையாசிரியர்கள்.

தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது என் உயிர் இருத்தல் போன்றவள்; பிரியுமிடத்து உடம்பிலிருந்து உயிர் நீங்கிப் போவதை ஒத்தவள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலியோடு உடனிருத்தலையும் பிரிவையும் வாழ்வோடும் சாவோடும் ஒப்பிடும் காதற்சிறப்பு உரைத்தல் பாடல்.

பொழிப்பு

தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது உயிர் உடம்போடு கூடி வாழ்தல்போலும். பிரியுமிடத்து உயிர் உடம்பினின்றும் நீங்கிச் சாதல் போலும்.