இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1123கருமணியின் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1123)

பொழிப்பு: என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீ போய்விடும்! யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே!

மணக்குடவர் உரை: என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.

பரிமேலழகர் உரை: (இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம்.
('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: என் கண்ணின் கருமணியில் இருக்கிற பாவையே! நீ தூரப் போ. நான் காதலிக்கிற இந்த அழகான பெண்ணை நீ இருக்கிற இடத்தில் வைக்க விரும்புகிறேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கருமணியின் பாவாய்நீ போதாய் யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை .


கருமணியின் பாவாய்நீ போதாயாம்:
பதவுரை: கரு-கறுப்பு; மணியின்- விழியின் இடத்து; பாவாய்-பாவையே (கருவிழியுள் தோன்றும் படிவமே) நீ-நீ; போதாயாம்- போய்விடுவாயாக.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ அங்கு நின்று போதுவாயாக;
பரிப்பெருமாள்: என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய்! நீ இங்கு நின்று போதுவாயாக;
பரிதி: கண்ணின் கருமணியிலிருக்கும் பாவாய்! நீ போதாய்;
காலிங்கர்: கண்மணியுள் புக்கு உறையும் பாவாய்! நீ அங்கு நின்று என்மாட்டுப் போதுவாயாக;
பரிமேலழகர்: (இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக;

'கண்மணியுள் உறையும் பாவாய்! நீ அங்கு நின்று போய்விடுவாயாக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கருவிழியிற் பாவையே! நீ போய்விடு', 'என் கண்களின் கருமணியில் தங்கி இருக்கும் பாவையே! அங்கிருந்து செல்வாயாக.', 'என் கண்ணின் கருமணியில் இருக்கின்ற பாவையே, நீ வெளியே போ', 'கண்ணில் உள்ள கருமணியின் பாவையே! நீ போவாயாக' என்றபடி உரை தந்தனர்.

கண்ணில் உள்ள கருமணியின் பாவையே! நீ போய்விடுவாயாக என்பது இத்தொடரின் பொருள்.

வீழும் திருநுதற்கு இல்லை இடம்:
பதவுரை: வீழும்-விரும்பப்பட்ட; திரு-அழகு; நுதற்கு-நெற்றி கொண்டவளுக்கு; இல்லை-இல்லை; இடம்-இருக்குமிடம்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.
பரிப்பெருமாள்: எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருத்தற்கிடம் போதாது.
பரிப்பெருமாள் கருத்துரை: இஃது இரண்டாம் கூட்டத்து எதிர்ப்பட்ட தலைமகன் தலைமகளது நாணம் நீங்குதற் பொருட்டு அவளது கவின் தனது கண்ணிறைந்தது என்று தலைமகள் கேட்பச் சொல்லியது.
பரிதி: யாம் விரும்பும் நாயகிக்கு இடமில்லை என்றவாறு.
காலிங்கர்: என்னை காரணம் எனில், யாம் விரும்பும் திருநுதலாட்கு, இவ்வுருபு கொண்டு நிற்றற்கு இடமில்லை இவள் கண்மணி என்றவாறு.
பரிமேலழகர்: போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம்.
(பரிமேலழகர் கருத்துரை: யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.

'எம்மால் விரும்பப்பட்ட அழகிய நுதலினையுடையாட்கு இருக்க இடம் போதவில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர். காலிங்கர் உரை தலைவியின் கருமணியைக் குறிப்பது போலவும் அதில் தன்னுருவம் நிற்க இடமில்லை என்று தலைவன் கூறுவது போலவும் அமைகிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'என் நெற்றியழகிக்கு இடம் வேறில்லை', 'நீ செல்லாவிட்டால் யாம் விரும்பும் அழகிய நெற்றியுடையாளுக்கு இடம் இல்லை', 'யாம் விரும்புகின்ற அழகிய நெற்றியுடையாளுக்கு வேறே இருக்க இடமில்லை', '(போகாதிருந்தால்) யாம் விரும்பும் அழகிய நெற்றியை உடையாளுக்கு இருக்க இடமில்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

யாம் விரும்பும் நெற்றியழகிக்கு இடம் இல்லை என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
அவன் அவளை எந்த நேரமும் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புகிறான் என்பதைச் சொல்லும் கவிதை.

கண்ணில் உள்ள கருமணியின் பாவையே! நீ போய்விடுவாயாக! யாம் விரும்பும் நெற்றியழகி இருக்க இடம் வேண்டும் என்பது பாடலின் பொருள்.
இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள கருமணி தலைவனதா அல்லது தலைவியுடையதா?

கருமணி என்பது கருவிழியைக் குறித்தது.
பாவாய் என்பதற்குப் பாவையே என்பது பொருள். இங்கு பாவை என்பது கண்ணின் கருவிழியில் உள்ள பாவையைக் குறிக்கும்.
போதாயாம் என்பது போய் விடுவாய் என்ற பொருள் தரும். போதாய் என்ற சொல்லாட்சி புதியது (இ சுந்தரமூர்த்தி).

கண்ணில் உள்ள கருமணியின் பாவையை நோக்கித் தலைவன் 'நீ போய்விடுவாயாக; அழகிய நெற்றியையுடைய, யாம் விரும்பும், தலைவி இருக்க இடம் வேண்டும்' என்று தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
இங்குள்ள 'யாம்' நாடக முறையில் தலைவனைச் சுட்டி நிற்கிறது.
கண் விழிப்படலத்தின் நடுவில் துளை ஒன்று அமைந்து கருமையான வட்டம் போன்று தோன்றுவதுவே பாவை என அழைக்கப்படுகிறது. பாவை என்பதை இன்றைய வழக்கில் பாப்பா என்றும் சொல்வர். ஆங்கிலத்தில் pupil எனப்படுவது இது. கண்மணி அதாவது கருமணியில் உள்ள கண்பாவைதான் கண்ணிற்குள் நுழையும் ஒளியை ஒழுங்குபடுத்திப் பார்வை அளிக்க உதவுகிறது.
அவன் அவளைத் தன் கருமணியின் பாவைபோல் கருதுகின்றான். கருமணியிற் பாவை இடத்தில் அவளை நிலையாக வீற்றிருக்கச் செய்ய விரும்புகின்றான். அப்பொழுதுதான் அவளுடைய அழகிய வடிவம் தன் கண்ணைவிட்டு நீங்காது என்று நினைக்கிறான். ஆகவே, அவ்விடத்திற்குரிய பாவையைப் போகச் சொல்கின்றான். அவளே எஞ்ஞான்றும் அவனது கண் நிறைந்து இருக்கவேண்டும் என்பது கருத்து.

பாவை என்பது பழமையான பெண்ணியப் பெயரும் ஆகும். கண்ணின் பாவையை அதன் இடத்திலிருந்து நீங்கச் செய்து இப்பாவையை அங்கு இருக்கச் செய்து பார்க்கின்ற பொருள்கள் எல்லாம் அவளாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கிறான்.என்பது நய உரை.
சிவன் தன் துணைவிக்கு இடப்பாகம் தந்தான். திருமால் மார்பைத் தந்தான் திருமகளுக்கு. நான்முகன் தன் நாவில் இருத்தினான். வள்ளுவரின் காதலனோ, தன் காதலிக்குத் தன் கண்ணை-கண்ணினுள் உள்ள கருமணியை-அக்கருமணியில் ஆடும் பாவையை இடமாகத் தர விரும்புகிறாள் என்று கவி பாடி வள்ளுவர் முன்னைய தொன்மங்களையும் விஞ்சுகிறார் என்பார் தமிழண்ணல்.
என் கண்களின் கருமணியிற் தங்கியிருக்கும் பாவையே நீ என் கண்களிலிருந்து போகாவிட்டால் யாம் விரும்பும் நெற்றியுடையாளுக்குத் தங்கும் இடம் இல்லையாகிவிடும் என்பதால் போய்விடு' என்று இதனை ஒரே வாக்கியத்தில் ஆக்கியிருக்கலாம். ஆனால் வேகத்தையும் விறுவிறுப்பையும் அதனால் கவித்துவத்தையும் கொண்டு வருவதற்காகவே 'செல்லாவிட்டால்' என்பதைக் கெடுத்து இரண்டு வாக்கியங்களில் - இப்பாடலை வள்ளுவர் ஆக்கியுள்ளார் என்பார் ச அகத்தியலிங்கம்.

கருமணி இல்லையேல் உலகத்தில் உள்ள ஒரு பொருளையும் காணமுடியாது. அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் காதலியை வைக்கவேண்டுமென்று கருதுகிறான் என்றும் தலைவி கண்ணில் இருந்தால் பிரிவு என்பதே இல்லையே என்றும் அவன் தன் காதலியை அப்பாவை இருந்த இடத்தில் வைத்துக் காக்கப் போகின்றானாம் என்றும் இக்குறளுக்கு விளக்கங்கள் உள்ளன.

இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள கருமணி தலைவனதா அல்லது தலைவியுடையதா?

காலிங்கர் உரைப்படி இப்பாடல் தலைவியின் கண்ணிற்பாவையை நோக்கித் தலைவன் கூறுவது என்றபடி உள்ளது. இது தலைவிக்கே உரிய பொருளெனப் பேராசிரியரும் கூறுவார். ஆனால் இக்குறள் தலைவன் நோக்கில் தலைவி புகுந்தது.என்று கொள்வதே பொருத்தமானதாகும்.
பின்வரும்
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக் கறிந்து
(அதிகாரம்: காதற்சிறப்பு உரைத்தல்: குறள் எண்: 1127 - பொருள்: எம் காதலர் கண்ணினுள் இருக்கின்றார், ஆகையால், மை எழுதினால் அவர் மறைவதை எண்ணிக் கண்ணுக்கு மையும் எழுதமாட்டோம்!)
என்ற செய்யுள் தலைவியின் கண்ணுள் தலைவன் புகுந்ததைச் சொல்வது என்பது நோக்கத்தக்கது.

கண்ணில் உள்ள கருமணியின் பாவையே! நீ போய்விடுவாயாக! யாம் விரும்பும் நெற்றியழகி இருக்க இடம் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

அவளே எஞ்ஞான்றும் அவனது கண் நிறைந்து இருக்கவேண்டும் என்று காதலன் காதற்சிறப்பு உரைத்தல் கவிதை.

பொழிப்பு

என் கண்களின் கருமணியில் தங்கி இருக்கும் பாவையே! நீ போய்விடுவாய்! யாம் விரும்பும் அழகிய நெற்றியுடையாளுக்கு இடம் இல்லை என்பதால்.