இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1122



உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

(அதிகாரம்:காதற்சிறப்பு உரைத்தல் குறள் எண்:1122)

பொழிப்பு (மு வரதராசன்): இம்மடந்தையோடு எம்மிடையே உள்ள நட்பு முறைகள், உடம்போடு உயிர்க்கு உள்ள தொடர்புகள் எத்தன்மையானவையோ அத்தன்மையானவை.



மணக்குடவர் உரை: உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து, மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு.
நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.

பரிமேலழகர் உரை: (பிரிவு அச்சம் கூறியது.) உடம்பொடு உயிரிடை என்ன அன்ன - உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய? அத்தன்மைய; மடந்தையொடு எம்மிடை நட்பு - இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள்.
('என்ன'? எனப் பன்மையாற் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அதுபொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே?ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்'? எனவும், 'இன்னும்இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்'? எனவும் அவள்மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

வ சுப மாணிக்கம் உரை: உடம்புக்கும் உயிருக்கும் என்ன உறவு அன்ன உறவு இவளுக்கும் எனக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு.

உடம்பொடு-உடம்புடன்; உயிரிடை-உயிரினிடத்தில்; என்ன-எத்தன்மைத்து; மற்று-(அசைநிலை); அன்ன-அத்தன்மைத்து; மடந்தையொடு-மங்கையொடு; எம்மிடை-என்னிடத்தில்; நட்பு-தோழமை.


உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடம்போடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து;
பரிப்பெருமாள்: உடம்பினொடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து;
பரிதி: உடம்புக்கும் உயிர்க்கும் எப்படி நட்பு அதற்கு ஒக்கும்;
காலிங்கர் ('என்னை' என்பது பாடம்): (இது வினவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது) எங்ஙனமெனில் உடம்பொடு உயிரிடை உள்ள நட்பு எத்தன்மையது மற்று அத்தன்மையது;
பரிமேலழகர்: (பிரிவு அச்சம் கூறியது.) உடம்பொடு உயிரிடை உளவாய நட்புக்கள் எத்தன்மைய? அத்தன்மைய; [பிரிவு அச்சம் கூறியது-தலைவன் தலைவியைப் பிரியும் போது உண்டாகிய அச்சத்தைச் சொல்லியது]

'உடம்புக்கும் உயிர்க்கும் எப்படி நட்பு உண்டோ அதற்கு ஒக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடம்புக்கும் உயிருக்கும் உள்ள நட்பு எத்தன்மையனவோ அத்தன்மையனவாம்', 'உடம்பிற்கும் உயிர்க்கும் உள்ள ஒட்டு எப்படியோ அப்படி ஆகும்', 'உடம்புக்கும் உயிருக்கும் என்ன தொடர்போ அத்தகைய தொடர்பினையுடையது', 'உடம்புக்கும் உயிருக்கும் எப்படிப்பட்ட உறவோ' என்றபடி உரை தந்தனர்.

உடம்பொடு உயிரிடை உள்ள நட்பு எத்தன்மையன மற்று அத்தன்மையன என்பது இப்பகுதியின் பொருள்.

மடந்தையொடு எம்மிடை நட்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு.
மணக்குடவர் குறிப்புரை: நின்னிற் பிரியமாட்டே னென்றவாறு. இது தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.
பரிப்பெருமாள்: மடப்பத்தையுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரியலுற்ற குறிப்புக் கண்டு வேறுபட்ட தலைமகளை நோக்கி 'நின்னிற் பிரியேன் பிரியின் ஆற்றேன்' என்று தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது.
பரிதி: நாயகிக்கும் எனக்கும் கூடின இன்பம் என்றவாறு.
காலிங்கர்: எம்மால் காணப்பட்ட மடவாளொடு எம்மிடையுள்ள நட்பு. எனவே எவ்வாற்றானும் இன்றியமையாமை எடுத்துரைத்தான் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இம்மடந்தையோடு எம்மிடை உளவாய நட்புக்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்ன'? எனப் பன்மையாற் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி. தெய்வப் புணர்ச்சியாகலான், அதுபொழுது உணர்ச்சியிலள் ஆகியாள் பின் உடையளாமன்றே? ஆயவழி 'இவன் யாவன் கொல்' எனவும், 'என்கண் அன்புடையன்கொல்'? எனவும், 'இன்னும்இவனைத் தலைப்பெய்தல் கூடுங்கொல்'? எனவும் அவள் மனத்தின்கண் நிகழும், அந்நிகழ்வனவற்றைக் குறிப்பான் அறிந்து, அவை தீரக் கூறியவாறு. 'என்னை' என்று பாடம் ஓதுவாரும் உளர். [தொன்றுதொட்டு -பழைய காலந் தொடங்கி; 'என்ன' என்பதற்கு 'என்னை' என்று பாடம் ஓதுபவர் காலிங்கர்]

'இம்மடந்தையொடு எமக்குள்ள நட்பு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'என்ன' என்பதற்கு 'என்னை' என்று பாடம் கொண்டவர் காலிங்கர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இப்பெண்ணோடு எமக்குள்ள நட்பு', 'இம்மடந்தையோடு எமக்குள்ள தொடர்புகள்', 'இம் மடந்தைக்கும் எமக்கும் உண்டாகிய தொடர்பு', 'அப்படிப்பட்ட உறவே இந்தப் பெண்ணுக்கும் எனக்கும்' என்றபடி உரை தந்தனர்.

இம்மங்கையோடு எமக்குள்ள நட்பு என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
உடம்பொடு உயிரிடை உள்ள நட்பு எத்தன்மையன மற்று அத்தன்மையன இம்மங்கையோடு எம்மிடை நட்பு என்பது பாடலின் பொருள்.
காதலரிடையே உள்ள உறவு ஏன் நட்பு எனப்படுகின்றது?

அவளில்லாமல் என்னால் உயிர்வாழ முடியாது.

இவ்விளம் மங்கையுடனான எனது நட்பு உடம்புக்கும் உயிர்க்குமிடையான உறவு போன்றது.
காட்சிப் பின்புலம்:
களவுக்காதலில் உள்ள தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் தத்தம் கண்ணிலும் நெஞ்சிலும் வைத்துப் போற்றுகின்றனர். காதல் மிகுதிகொண்ட அவர்கள் இருவரும் சந்திக்காத வேளையில் தனியேயிருக்கும்போது அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். தலைவன் அவளிடம் முன்பு பெற்ற இன்பங்களில் ஒன்றை நினைந்து மகிழ்ந்து கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
தலைவனும் காதலியும் பிரிக்கமுடியாத நெருக்கத்தை அடைந்துவிட்டனர் என்பதைச் சொல்லும் குறட்பா.
'தனக்கும் காதலிக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்' என்கிறான் தலைவன். அவனுக்கும் அவளுக்கும் இடையேயான உறவின் நெருக்கம் பிரித்தறிய முடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டதாக உணர்கிறான்; அவளை விட்டு இனி வாழ்வு இல்லை என்னும் அளவிற்கு அவனது காதல் வளர்ந்துள்ளதாம்; அவனுக்கு அவள் உயிராகின்றாள். அவளுக்கு அவன் உயிராகின்றான். ஒருவர் இறந்தால் மற்றவரும் உயிர் விடுவர் என்றபடி ஒத்த உணர்ச்சியுடையவராய் அவர்களது காதல் நெருக்கம் இறுக்கமானது. அவருள் ஒருவர் பிரிவை மற்றொருவர் பொறுக்கமாட்டார்.
உயிர்க்கும் உடம்புக்கும் உள்ளது போன்ற தீராத பற்று, அவனுக்கு அவளிடம் ஏற்பட்டு விட்டது என்பதை அறிகிறான்.

உள்ளங்கள் கலந்துவிட்டதை விளக்குவதற்கு 'மலரும் மணமும் போல' என்பது போன்று, பொருள்களை வைத்து உவமிக்காமல், உணர்வையும், உறவையும் கொண்டு இக்கவிதையைப் படைத்துள்ளார் வள்ளுவர்.
மனம் ஒன்றிய தலைமக்களது இணக்கத்தை வெளிப்படுத்த உடல்-உயிர் பிணைந்த உவமை இப்பாடலில் ஆளப்பட்டது. உடலும் உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. உடலில்லாது உயிர் இருக்க முடியாது. உயிர் இல்லாது உடல் இயங்க முடியாது. உயிரும் உடலும் ஒன்றையொன்று பிரிந்து தனித்தனியாக இருப்பதில்லை. உடல் துடித்தால் உயிரும் துடிக்கிறது. உடல் துண்டானால் உயிர் போய்விடுகிறது. அது போன்றதுதான் தங்களது காதல் உறவு என்கிறான் தலைவன். ஒருவரின்றி மற்றவர் வாழ இயலாதது என்ற நிலையில் காதலர் வாழ்கிறார்கள். ஒருவனும் ஒருத்தியுமாகக் கூடிக் கலந்து வாழும் விழுமிய உறவை- 'இவ்வொன்று அல்லாது அவ்வொன்று இல்லை' என்பதை- இதனினும் சிறப்பாகக் கூறி விளக்க இயலுமா?
உடம்பொடு உயிரிடை, மடந்தையொடு எம்மிடை என வருவதில் யார் உடல்? யார் உயிர் என்று கூறப்படவில்லை. உடலும் உயிரும் போல் வாழவேண்டிய காதலரிடையே வேற்றுமை ஏது? உயர்வு தாழ்வு ஏது? இக்குறளின் தொடர்களை நிரல் நிறையாக வரிசைப்படி)ப் பொருத்திப் பாராமல் தலைவன் தலைவியர் இருவர்க்கும் பொதுவாகக் கொண்டு பொருள் கொள்ளவேண்டும். உடலும் உயிரும் போன்றவர்கள் என்று கூறும்போது காதலன் உடலானான் காதலி உயிராவாள். காதலி உடலானால் காதலன் உயிராகிறான். உடம்பும் உயிருமாய்க் காதலர் இரண்டறக்கலந்து நிற்கும் ஒருமை நிலையை இவ்வுவமை விளக்கமுற வெளிக்கொணர்ந்தது. உடல்-உயிர் நெருக்கத்தை மட்டுமின்றி ஓருயிருக்கு ஓருடல் என்பதுபோல, ஒரு தலைவனுக்கு ஒரு தலைவியே எனும் செய்தியும் இப்பாடலில் பொதிந்துள்ளமை அறியத்தக்கது.
இப்பாடற்கருத்தோடு பொருந்த உள்ள இன்னொரு குறட்பாவான வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கு மிடத்து (1124 பொருள்: தேர்ந்தெடுத்த அணிகளையுடையவள் என்னோடு இருக்கும்போது என் உயிர் இருத்தல் போன்றவள்; பிரியுமிடத்து உடம்பிலிருந்து உயிர் நீங்கிப் போவதை ஒத்தவள்) என்பது அவளைப் பிரிந்திருப்பதும் சாதலை ஒக்கும் என்கிறது.

14 முதல் 19 வயதுக்கிடையே உள்ள இளம்பெண் மடந்தை என அழைக்கப்படுவதால் தலைவியின் அகவையும் அறியக்கிடக்கிறது.
‘என்ன மற்றன்ன’ என்பதில் உள்ள 'என்ன' என்ற சொல்லைப் பன்மையாகக் கொண்டு பரிமேலழகர் 'என்ன'? எனப் பன்மையாற் கூறியது, இரண்டும் தொன்றுதொட்டு வேற்றுமையின்றிக் கலந்து வருதல், இன்பதுன்பங்கள் ஒக்க அனுபவித்தல், இன்றியமையாமை என்றிவற்றை நோக்கி' எனப் பன்மைக் கூறுகளை விளக்குவார்.

காதலரிடையே உள்ள உறவு ஏன் நட்பு எனப்படுகின்றது?

இக்குறளில் காதல் நட்பெனப் பெயர் பெறுகிறது. நட்பு என்ற சொல்லுக்குத் தோழமை என்றதோடு காதல், உறவு, சுற்றம் என்ற பொருள்களும் உண்டு. காதலரிடையே உள்ள தொடர்பை நட்பு என்று இக்குறளில் வள்ளுவர் குறிக்கிறார். காதலர் ஒத்த உணர்ச்சியுடைய நண்பினர் போல் வாழ்வர் என்கிறார் அவர். மனம் ஒருமித்து நட்புப் பூண்டவர்கள்தாம் காதலர் என்பவர்களாவர். நட்பு என்பது உயிர்த்துணையாக இருக்கவேண்டிய ஒன்றாகும். அக்காதல் நட்பின் நெருக்கத்தினை காதலன் வாயிலாக வெளிப்படுத்துகிறது இக்குறள். காதலர்கள் இருவரும் வேற்றுமை இல்லாமல் இன்ப துன்பங்களைச் சேர்ந்து நுகரக்கூடிய அவ்வளவு நெருங்கிய தொடர்புடையராகிவிட்டனர் எனச் சொல்லப்பட்டது. காதல் கொண்டோர் நண்பர்களாக வாழ்வர் என்பது அவர்களிடை உயர்வு தாழ்வு இல்லாமல் சமஉரிமை கொண்டு பழகுவர் என்பதுமாம். காதலை "நட்பு' என்னும் சொல்லால் குறிப்பிடுவதன் மூலம் காதலின் முதிர்ச்சி கூறப்பட்டது என்பர்.

வள்ளுவர் காலத்துக்கு முந்தைய சங்கப்பாடல்களிலும் காதலர் உறவு நட்பு என்ற சொல்லால் குறிக்கப்பட்டிருக்கிறது.
அகநானூற்றில் நிறைமுடி நெட்டையார் யாத்த பாடலிலும் நட்பு என்ற சொல் ஆளப்பட்டது. இக்குறட்பாவுடன் கருத்து ஒற்றுமை உடையதாகவும் அப்பாடல் உள்ளது. அது:
நோங்கொல் அளியள் தானே யாக்கைக்கு
உயிரியைந் தன்ன நட்பின் அவ்வுயிர்
வாழ்தல் அன்ன காதல்
சாதல் அன்ன பிரிவரி யோளே.
(அகநானூறு 339: 11-12 பொருள்: உடலொடு உயிர் ஒன்றினால் ஒத்த நட்பினையும், அவ்வுயிர் இன்புற்று வாழ்தல் போலும் காதலையும் உடைய, அதற்குச் சாதல்போலும் துன்பினைத் தரும் பிரிதல் அருமையை உடைய நம் தலைவி, வருந்தி யிருப்பாளோ, மிகவும் இரங்கத்தக்காள்). யாக்கைக்கும் உயிர்க்கும் இயைந்த நட்பைப் போன்றது தனக்கும் தலைவிக்கும் உள்ள நட்பு என்கிறான் இப்பாடல் தலைவன்.
குறுந்தொகையில் உள்ள பாடல் ஒன்றும் காதலரிடை உள்ள தொடர்பை நட்பு என்று கூறுகிறது:
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர் அளவின்றே- சாரல்
கருங் கோல் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
(குறுந்தொகை குறிஞ்சி 3 பொருள்: மலைப் பக்கத்தில் உள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு பெரிய தேனை வண்டுகள் செய்தற்கு இடமாகிய நாட்டைஉடைய தலைவனோடு யான் செய்த நட்பானது பூமியைக் காட்டிலும் அகலம் உடையது ஆகாயத்தைக் காட்டிலும் உயர்ந்தது கடலைக் காட்டிலும் அளத்தற்கரிய ஆழம் உடையது) என்று காதலனுடனான நட்பின் உயர்வைச் சொல்கிறாள் தலைவி.

உடம்பொடு உயிரிடை உள்ள நட்பு எத்தன்மையன மற்று அத்தன்மையன இம்மங்கையோடு எமக்குள்ள நட்பு.என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

ஒன்றின்றி ஒன்றில்லை என்னுமளவு வளர்ந்துவிட்ட தலைவன்-தலைவி காதற்சிறப்பு உரைத்தல்.

பொழிப்பு

இம்மங்கையுடன் என் நட்பானது உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு போன்றது.