இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1120



அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்

(அதிகாரம்:நலம்புனைந்துரைத்தல் குறள் எண்:1120)

பொழிப்பு (மு வரதராசன்): அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.

மணக்குடவர் உரை: அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும்.
இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: (உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.
(முள் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற'களையுடைய (அகநா.களிற்.5) வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று.)

இரா சாரங்கபாணி உரை: மென்மையுடைய அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் இப்பெண்ணின் காலடிக்கு நெருஞ்சிமுள் போன்று துன்புறுத்தும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்.

பதவுரை: அனிச்சமும்-அனிச்ச மலரும்; அன்னத்தின்-அன்னப் பறவையினுடைய; தூவியும்-மென் இறகும், சிறுமயிரும்; மாதர்-பெண், (இங்கு) காதலி; அடிக்கு-அடிக்கு; நெருஞ்சிப் பழம்-நெருஞ்சி என்னும் முள், முற்றிய நெருஞ்சி முள்.


அனிச்சமும் அன்னத்தின் தூவியும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும்;
பரிப்பெருமாள்: அனிச்சப்பூவும், அன்னத்தின் தூவியும்;
பரிதி: உலகத்தார் மேன்மை கொடுக்கப்பட்ட அனிச்சப் பூவும் அன்னப்புள்ளின் சிறகும் இரண்டும்;
காலிங்கர்: நெஞ்சே! அனிச்ச மலரும் அன்னத்தின் தூவியும் இரண்டும் சால மென்மை உடையவன்றே;
பரிமேலழகர்: (உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; [உடன் போக்கு-தலைவன் தலைமகளைத் தன் ஊருக்கு உடனழைத்துச் செல்லுதல்; அதனது அருமை-உடன்போக்கின் அருமை]

'அனிச்சப்பூவும் அன்னத்தின் சிறகும்' என்று அனைத்து பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும்', 'அனிச்சப் பூவும் அன்னப்பறவையின் சிறகும்', 'மென்மைக்கு எடுத்துக் காட்டாய் உள்ள அனிச்சப்பூவும்', 'மிகவும் மிருதுவாகிய அனிச்சப் பூவும் அன்னப் பறவையின் சிறுமயிரும்கூட' என்றபடி உரை தந்தனர்.

அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் என்பது இப்பகுதியின் பொருள்.

மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இம்மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவையிற்றினும் மெல்லியது அடி என்று கூறப்பட்டது. இதனுள் இரவும் பகலும் காணப்பட்ட பொருள்களை உவமமாகக் கூறிய அதனால் இயற்கைப்புணர்ச்சியும் நலம் பாராட்டுதலும், பகற்குறியினும் இரவுக்குறியினும் என்று கொள்ளப்படும்.
பரிதி: இரண்டும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் போல வருத்தம் செய்யும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவை தாமும் நம் மாதராள் அடியினது மென்மைக்குச் சில நெருஞ்சிமுள். எனவே அவற்றினை அடியினும் ஆற்றாள் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.
பரிமேலழகர் குறிப்புரை: முள் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற'களையுடைய (அகநா.களிற்.5) வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று. [வெஞ்சுரம்-கொடிய பாலைவனம்]

'மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலியின் அடிக்கு நெருஞ்சி முள்', 'மாதினுடைய பாதத்திற்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்', 'அன்னப்பறவையின் இறகும் மாதர் (காதலி) அடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தம் செய்யும்', '(என் காதலியின் பாதங்களில்) நெருஞ்சி முள்போலக் குத்திவிடக் கூடியவை எண்ணும்படி அவ்வளவு மிருதுவானவை என் காதலியின் பாதங்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

காதலியின் அடிக்கு நெருஞ்சி முள்போல வருத்தம் செய்யும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் காதலியின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தம் செய்யும் என்பது பாடலின் பொருள்.
'நெருஞ்சிப் பழம்' என்றால் என்ன?

மலர்மீது நடந்தாலும் அவள் காலடி புண்ணாகுமே.

மிக மென்மையான அனிச்ச மலரும், அன்னப் பறவைகளின் மெல்லிய தூவியும், இவளது காலடியில் பட்டால் நெருஞ்சிபோல மிகுந்த துன்பத்தைச் செய்யும்.
காட்சிப் பின்புலம்:
புணர்ச்சியின்பம் பெற்றதால் அளவில்லா மகிழ்ச்சியடைந்த தலைவன், தான் நெருக்கமாக உணர்ந்த, காதலுக்குரியவளின் உறுப்பு நலன்களை எண்ணி, தன் நெஞ்சோடு பேசுவது போலவும், மலர், நிலவு இவற்றை விளித்து அவற்றுடன் விளையாட்டாக உரையாடுவது போலவும் புனைந்து மகிழ்கிறான். கண், இடை, நிறம், சிரிப்பு, நறுமணம், முகப்பொலிவு, உடலழகு, அடி எனத் தலைமுதல் கால்வரையான உறுப்புக்களின் அழகு நலங்களைப் புனைந்துரைத்துக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
காதலியின் மற்ற எல்லா நலங்களையும்விட அவளிடம் உணரப்பெற்ற மென்மைத் தன்மை அவனது உள்ளத்தில் உறைந்து நிற்கிறது. அவளது மேனி முழுவதும் மென்மைதான். இங்கு அவளது அடியின் மென்மையைப் போற்றுகிறான் தலைவன். இட்ட அடி நோவ, எடுத்த அடி கொப்பளிக்க நடப்பவள் அவள். மிக மெல்லியவையான அனிச்சப்பூ, அன்னத்தின் அடிவயிற்று மென்மயிர், இவற்றைத் தூவிய பரப்பில் நடந்தால் கூட அவை அவளது உள்ளங்காலில் பட்டால் முள்ளு முள்ளாக இருக்கற நெருஞ்சிப்பழம்போல் உறுத்தித் துன்பம் தரும் என்கிறான். அவற்றினும் மெல்லியதாம் அவள் அடிகள்.
மென்மை என்றதும் வள்ளுவரின் நினைவுக்கு முதலில் வருவது அனிச்சப்பூ தான்.
அன்னப்பறவையின் உட்சிறகும் மென்மையானதே. காதல் உணர்ச்சி மிக்க அன்னங்கள் கூடும் புணர்ச்சிக் காலத்தில் அன்னச் சேவல் உதிர்த்த மயிர்கள் மிகவும் மென்மையானது என்று பழம் நூல்கள் பாடுகின்றன:
துணைபுண ரன்னத் தூநிறத் தூவி இணையணை மேம்படப் பாயணை யிட்டு (பத்துப்பாட்டு, நெடுநல்வாடை 132-133 பொருள்: அச்சேக்கைக்கு மேலாகத் தம்பேட்டைப்புணர்ந்த அன்னச்சேவலின் தூய நிறத்தையுடைய மென்சூட்டு மயிர்கள் அடைத்த மென் திண்டு மெத்தைகள் இரண்டு.)
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள், துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ(கலித்தொகை - மருதக் கலி 72 பொருள்: உயர்ந்த நீலப்பட்டாற்செய்த மெல்லிய படுக்கையிடத்துக்கிடந்த துணையோடேகூடிய அன்னத்தின் (3) தூவியாற் செய்த மெல்லிய அணையைச் சார்ந்திருந்து.)
இத்தூவியை அடைத்துச் செய்யப்பட்ட படுக்கை அணையே மிக மென்மையானது என்று கருதப்பட்டதால் அன்னத்தின் தூவி மென்மைக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டானது.

முகர்ந்தாலே வாடிவிடும் அனிச்சப்பூவும், அன்னப்பறவையின் நுண்மையான தூவியும் பெண்ணொருத்தியின் காலடிக்கு முள்ளாக அமையும் என்ற கருத்தாக்கமே புதுமையானது. காதலியின் மலரடி மிகவும் மென்மையானது என்பது அழுத்தமான நடையில் கூறப்பட்டது.

'நெருஞ்சிப் பழம்' என்றால் என்ன?

இக்குறளில் வள்ளுவர் பெய்திருக்கும் புதிய சொல் 'நெருஞ்சிப் பழம்' என்பது. நெருஞ்சிமுள் என்று வழக்கிலுள்ளதையே மாறுபாடாக நெருஞ்சிப் பழம் எனக் குறிக்கப்பெறுகிறது. நெருஞ்சி என்பது ஒருவகை முள் செடி. அதன் பூ இளங்காயாக மாறும்போது அதன் நுனியில் முள் தோன்றும். ஆயினும் குத்தாது. ஆனால் அது முற்றிய காயாகும்போது முள் கூர்மை பெறுவதால் குத்தினால் பெருவலி உண்டாக்கும். காய் முற்றினால் கனி என்று பெயர் பெறும். ஆனால் முற்றிய நெருஞ்சிக்காய் நெருஞ்சி முள் என்று வழக்கில் சொல்லப்படுகிறது. குறள் மட்டுமே நெருஞ்சியின் முற்றிய காயினை 'நெருஞ்சிப் பழம்' என்பதால் வள்ளுவர் ஒருவர் மட்டுமே 'நெருஞ்சிப் பழம் தந்துள்ளார்' என்பர் ஆய்வாளர்கள். நெருஞ்சிமுள் வள்ளுவரிடம் நெருஞ்சிப் பழம் ஆகிறது. நெருஞ்சிப் பழம் என்றது உண்ணப்படும் தன்மைக்காகஅன்றி முள்ளுடைமை பொருட்டே குறிப்பிடப்பட்டது. நெருஞ்சி முள் கடுமையான வலியும் காயமும் ஏற்படுத்தக்கூடிய ஒன்று,
நெருஞ்சிமுள் என்று வெளிப்படையாகக் குறிப்பிடாமல் 'பழம்' எனக் குறித்தது ஏனெனில் 'முள்' என்ற சொல் கூடக் காதலியின் அடிகளை நோகடிக்கும்; அவளுக்கு வலி தருமென்பதால்தான் என்பது நயஉரை.
நெருஞ்சி முதிர்ந்த நிலையில் நெல்லிக் கனிபோலப் பசுமஞ்சள் நிறங்கொள்ளுமாதலால் அதைக் குறள் 'பழம்' என்கிறது என்றும் விளக்கினர்.

நெருஞ்சிச் செடியில் உள்ள முட்களைவிட அதன் பழத்தின் மேலுள்ள முட்கள் மிகவும் வலிமை உடையவை; முள்ளுடன் கூடிய நெருஞ்சிப் பழம் மிகவும் வருத்தும் தன்மையது.

அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் காதலியின் அடிக்கு நெருஞ்சி முள்போல வருத்தம் செய்யும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மென்மையினும் மென்மையான பொருளும் காதலியின் காலடி பட்டால் முள்ளாக உறுத்தும் என்னும் நலம்புனைந்துரைத்தல்.

பொழிப்பு

அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் காதலியின் அடி பட்டால் நெருஞ்சி முள் போன்று துன்புறுத்தும்.